1. மனம் எடுக்கும் முடிவு

அப்பா போனபின் அவர் மூக்குக் கண்ணாடி, அவர் உபயோகித்த இரும்பு மேஜை, இரண்டு பேனாக்கள், வேட்டிகள்,  கைப்பிடியற்ற சாய்வு நாற்காலி, ஒரு குட்டி மர டெஸ்க் எல்லாம் இருந்தன. காரியம் முடிந்தபின் இரும்பு மேஜையையும் வேட்டிகளையும் அவரைப் பார்த்துக்கொண்டிருந்த ஆண் நர்ஸிடம் தந்துவிட்டோம். சாய்வு நாற்காலியை அப்பா ஞாபகமாக அத்தை எடுத்துக்கொண்டு போனாள். வந்தவர்கள் போனவர்கள் என்றிருந்த கூட்டத்தில் மூக்குக்கண்ணாடி எங்கோ தவறிவிட்டது.  பேனாக்கள் வேலை செய்யவில்லை.  குட்டி மர டெஸ்க் அரதப் பழசு.  யாரும் அதை வேண்டாம் என்றதால் ஒரு சனிக்கிழமையன்று பரணில் ஏற்றினோம். ஒட்டடை படிந்த பரண். வீட்டுக்கு வந்திருந்த ஒரு நண்பரோடு சற்று நேரம் கழித்து டைனிங் ஹாலில் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு சத்தம். டெஸ்க் பரணிலிருந்து விழுந்து உடைந்து கிடந்தது. தனியாக இருக்கப் பிடிக்காததால் தற்கொலை செய்துகொண்டுவிட்டது என்றார் நண்பர்.

2. முடிக்கற்றை

அவளோடு அவனுக்குச் சில மாதங்களாகத்தான் பழக்கம். அவன் அலுவலகத்துக்கு எதிர் அலுவலகத்தில் பணியாற்றுகிறாள்.  வளாகத்தின் எல்லா அலுவலகங்களுக்கும் பொதுவான சிற்றுண்டிச் சாலையில் ஓரக்கண்களால் பார்த்து, பின் நேராகப் பார்த்து, புன்னகைத்து, சிரித்து, பேசி, தனியாகச் சந்திக்கத் தொடங்கி என்று வழக்கத்தை மீறாத காதல் கதை. கொஞ்ச நாட்களாக அவளிடம் அவனுக்குப் பிடிக்காதவை எனச் சில தெரிய ஆரம்பித்திருக்கின்றன. அதில் முதன்மையானது அவள் நெற்றியிலிருந்து தொடங்கி கன்னத்தின் வழியாகப் பாதி கழுத்து வரை இறங்கும் முடிக்கற்றை. அது சரியாக அவள் வலது கண்ணை மறைத்தது. கண்களைப் பார்க்காமல் காதலர்கள் பேசிக்கொள்ள முடியுமா? அவளிடம் பேசும்போது சில சமயம் அந்த முடிக்கற்றையைக் கொஞ்சம் எடேன் என்று கேட்டாலும் அவள் காதில் வாங்குவதாக இல்லை. இன்று வழக்கத்தைவிட அதிக உற்சாகம் அவளைத் தொற்றியிருப்பதாகத் தெரிந்தது. யாருமற்ற ஐஸ்க்ரீம் பார்லரின் மேசையில் எதிரெதிரே அமர்ந்திருக்கும்போது அந்த இம்சைக் கற்றையை  ஸ்டைலாகச் சுண்டி அகற்றுகிறான். வெள்ளை விழியில் ஓட்டை. ஓட்டையேதான். “இதன் வழியாக என் ஆன்மாவைப் பார்” என்கிறாள். அதன்பின் இருவரும் அவரவர் அலுவலகத்துக்கு வரவில்லை.

3. பக்கத்து வீடு

எப்போதும் ஒரே இரைச்சல் கேட்டுக்கொண்டிருக்கிறது. இரவுமுழுக்க நாற்காலி மேஜைகளை நகர்த்தும் சத்தம். பகலிலோ சில நேரங்களில் திடீர் ஓலம். சில சமயம்  சிங்கமோ புலியோ வீட்டுக்குள் நுழைந்துவிட்டதைப் போல அலறல். இல்லாவிட்டால் கூர்ந்து கேட்கவைக்கும்  ராட்சசக் கிசுகிசுப்புக் குரல். நடுநடுவே கலங்க வைக்கும் கிறீச்சொலி. எத்தனை சொல்லியும் கேட்பதாக இல்லை. அபார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் குற்றப் பத்திரிகை வாசித்தாயிற்று. நேற்று உறுதியாக எழுத்துபூர்வமாக தெரிவித்துவிட்டார்கள். போலிஸுக்குப் போவார்களாம் நான் காலிசெய்யாவிட்டால்.

4. ஒரு எழுத்தாளனின் சுயசரிதை

நான் எப்போதுமே இரவில்தான் எழுதுவது. பகல் வெளிச்சத்தை என் கண்களால் தாங்கிக்கொள்ள முடியாததால் ஒரு குகைக்குள் சென்றுவிடுவேன். அதன் மிகப் பழைய மேற்கூரை என் தலையைத்  தொடுமளவுக்கு உயரம் குறைந்திருப்பதால் நான் கவனமாக இல்லாத சமயத்தில் இடித்துவிடும். அதனால் பகல்பொழுது முழுக்க என்னை ஒரு பாம்பாக மாற்றிக்கொண்டுவிடுவது வழக்கம். அதனால் பகலில் யாரையும் சந்திப்பதில்லை. ஒரு முறை இதைப் பற்றிக் குறை கூறிய என் சிநேகிதர்கள் இருவரைப் பகலில் பார்க்க அழைத்தேன். சிறிது நேரம் இருந்துவிட்டுப் போனவர்கள்தாம். அதன்பின்  நான் எழுதிய கதை எதில் வெளிவந்தாலும்  ஒரு தடியோடும் ஒரு டார்ச் லைட்டோடும் அதன் முன்பு நிற்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லை, எனக்குப் பிடிக்காத சுண்டெலிகள் மாட்டியிருக்கும் எலிப்பொறிகளைச் சில சமயம் அவர்கள் எடுத்து வருவதுதான் கொஞ்சம் அருவருப்பாக இருக்கிறது. இதை அவர்களிடம் யார் சொல்வது?

5. காதலன்

அவள் இணையம் வழியாக ஆர்டர் செய்த நிறுவனம் ரொம்பக் காக்க வைக்கவில்லை. அவன் சீக்கிரமாக வந்துவிட்டான். பிரிந்துவிட்ட அவள் காதலனைப் போலவே கூரிய மூக்கு, அளவான அழகான உதடுகள், ஆண்மை ததும்பும் முகத்தில் ஒரு சின்ன குறையாகச் சற்று உள் வளைந்த காதுகள். கிட்டத்தட்ட இருநூறு புகைப்படங்கள் அனுப்பியிருந்தாள். அவற்றில் அவன் காதுகள் பிரதானமாக இருந்தவை பன்னிரெண்டாவது இருக்கும். பிற பகுதிகளையும் கண்களால் பரிசோதித்தாள். கொடுத்த காசுக்குத் திருப்தி. அன்றிரவு நிதானமாக மனம் ஊன்றிக் குளித்தாள். அவனுக்கு—அதற்கு  என்று சொல்லக்கூடாதென்பது அவள் தீர்மானம்—பிடித்த  உடைகள். விளக்கில்லாத இருள் அறையில்—அவனுக்கு  அது பிடிக்காது—படுத்திருந்தவனைக்  கட்டிப் பிடித்தாள். நீண்ட உறவு. அவளுக்கு வியர்த்து உடல் தொப்பமாய் நனையும் அளவுக்கு. அவனருகே தூங்கினாள். திரும்பிப் படுக்காத அவனுடைய கை அவளைத் தழுவியும் தழுவாமலும் இருந்தது. சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போவதற்காக விழித்துக்கொண்டவள் கட்டிலிலிருந்து இறங்கும்முன் எதையோ யோசித்து அவன் ஆண்குறியைப் பார்த்தாள். சுகம் தரும் புள்ளிகள் பதிந்திருந்த ஆணுறையை அதிலிருந்து நீக்கினாள். வெள்ளைத் திரவத்தின் ஒரு சொட்டு அவள் புறங்கையில் விழுந்தது.

6. காட்சி

அந்த அபார்ட்மென்டில் ஒரு இளம்பெண் மேஜையில் தலையைப் புதைத்திருக்கிறாள்; ஒரு இளைஞன் அந்த மேஜையைச்  சுற்றிக்கொண்டு வருகிறான்.

அவன் அவள் தோள்களை உலுக்குகிறான்; அவள் அவன் கைகளை உதறி எழுந்திருக்கிறாள்.

அவள் ஜன்னலருகே வந்து அதைத் திறக்கிறாள்: அவன் மெல்ல அவள் பின்னால் வருகிறான்.

  1. அவள் ஜன்னல் வழியாகக் குதிக்கிறாள்; பின்தொடர்ந்து அவன் குதிக்கிறான்.
  2. அவன்ஜன்னல் வழியாகப் பெண்ணைக் கீழே தள்ளுகிறான்; அவள் விழுந்துகொண்டிருக்கிறாள்.

இவர்களை எதிர்ச் சாரியில் நின்றபடி  பார்க்கத் தொடங்கியிருந்த கண்களில் ஒரு வேகக் காற்று புழுதியை அப்புகிறது.

அவனும் அவளும் மாடிப்படிகளில் இறங்கி வருகின்றனர்.

7. ஆப்பிள்

நாற்பது நாட்கள் விடாமல் தீ பற்றி எரிந்தது. வசிப்பிடங்களும் மலைகளும் காடுகளும் ஏன் சில கடல்களும்கூடக் கருகிச் சாம்பலாயின. தீ பற்றத் தொடங்கும்முன்  குகைகள் நிரம்பிய மலைவாசஸ்தல இடம் ஒன்றுக்குச்  சுற்றுலா வந்திருந்த ஒரு கூட்டத்தில் வழிதவறிப் போய்விட்ட ஒரு பெண் மாத்திரம் தீயிலிருந்து தப்பித்தாள். விலங்குகளுக்கு அஞ்சியவளாக உள்ளடங்கிய ஒரு குகைக்குள் ஒடுங்கி நடுங்கி அவள் தஞ்சமடைந்திருந்தாள். குகைக்குள் இறந்துபோய்க் கிடந்த சில முயல்களின் பச்சை மாமிசமே அவள் உணவாக இருந்தது.

பின்னர் மழை ஓய்ந்த வெளிறிய வானத்தில் வானவில் போல ஒன்று தோற்றம் தர, கலம் போன்ற எந்திரம் ஒன்று அவள் நின்ற இடத்துக்கருகே வந்திறங்கியது. முக்கோண முகம் கொண்ட ஓர் உருவம் அதிலிருந்து இறங்கியது. அவளை நோக்கி வந்த அதன் உடலில் கை போல் முளைத்திருந்த உறுப்பில்  ஒரு கனி இருந்தது. “எங்கள் கிரகத்தின் நடுவில் வளர்ந்திருக்கும் பெரிய விருட்சத்தின் கனி” என்றது உருவம். உண்மையில் அது பேசியது அவளுக்குப் புரியவில்லை. அது மனிதர்கள் பேசும் மொழியாகவே இல்லை.  ஆனால் அந்தக் கனி பார்க்க இன்பம் தருவதாகவும் இச்சிக்கப்படத் தக்கதாகவும் இருந்தது. அதை ஆவலோடு தின்றவள் அந்த உருவத்தின் பின்னால் கட்டுண்டவளாகச் சென்றாள். அந்த உருவம் வந்த எந்திரக் கலத்தில் படிக்கட்டுகள் இல்லை. இருவரும் ஊர்ந்து ஏறினர்.

8. புரிந்துகொள்ளல்

ஹாலில் இருவரும் மௌனமாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ் அப்பில் ஒரு பறவை கீச்சொலிக்கிறது. பரபரப்பைக் காட்டிக்கொள்ளாது பார்க்கிறாள். சில நிமிடங்கள் கழித்து அவனைச் சாப்பிட அழைக்கிறாள். இருவரும் மௌனமாகச் சாப்பிடுகிறார்கள்.  ஹாட் பேக்குகளில் இருக்கும் ரொட்டியையும் சப்ஜியையும் அவனுக்குப் பரிமாறிவிட்டு தனக்கும் பரிமாறிக்கொள்கிறாள். அவன் அலைபேசி குறுஞ்செய்திக்காக ஒலிக்கிறது. அவன் அசுவாரசியமாக என்பதைப் போல நிதானமாக எடுத்துப் பார்க்கிறான். “இன்று வெயில் அதிகம்” என்கிறான். “ஆமாம், இங்கேயும் ஏ.சி வைக்கவேண்டும்.”

அவன் மீண்டும் ஹாலுக்குச் சென்று  சற்று நேரம் தொலைக்காட்சியில் கண்ணை ஓட்டுகிறான். அவள் தட்டுகளை சிங்க்கில் போட்டுவிட்டு படுக்கையறைக்குச் செல்கிறாள். போர்வைக்குள்ளிருந்து சில மெசேஜ்களைத் தட்டச்சுகிறாள். கவனமாக அவற்றை அழித்துவிட்டு அலைபேசியை அணைக்கிறாள். சற்று நேரத்தில் அவன் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு ஹால் சிட்-அவுட்டுக்கு அலைபேசியோடு போகிறான். சில நிமிடங்கள் மென்மையான குரலில் பேசுகிறான். படுக்கையறைக்கு வருகிறான். அவள் தூக்கம் கலையாதபடி படுக்கையில் தன் பக்கத்துப் பகுதியில் ஏறி  மெதுவாகப் படுக்கிறான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
  2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
  3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
  4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
  5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
  6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
  7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
  8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
  9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
  10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
  11. போகாதே-பெருந்தேவி
  12. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
  13. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
  14. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
  15. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
  16. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
  17. துச்சலை- பெருந்தேவி
  18. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
  19. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
  20. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
  21. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
  22. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
  23. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி