சுருங்கிப்போன பல தினுசிலான  சிறிய பைகளை ஏறுமாறாகக் குவித்து வைத்ததைப் போல் கிழவி—அவள் பெயர் கௌரி—படுக்கையில்  கிடந்தாள். அவள் படுக்கைக்கருகே கிழவன்—அவன் பெயர் ராஜசேகர்—அமர்ந்தபடி  குடித்துக்கொண்டிருந்தான்.  கிழவன் அவளுக்கு இரவு உணவைத் தந்துவிட்டான். இனி விடிகாலை வரை அவன் குடிக்கலாம். அதன் பின் சில மணி நேர உறக்கம். காலை எட்டு மணிக்கு எழுந்து கிழவிக்குத் தேநீர் தந்தாக வேண்டும்.

கிழவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். என்ன பாடு படுத்தியிருக்கிறாள் இவள்? அவர்களுக்குத் திருமணமான புதிதில் ராஜசேகர் ஒரு இரவு நண்பர்களோடு குடித்தபடி ஆற அமரப் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வந்தான். இத்தனைக்கும் அவன் அவ்வப்போது சோஷியலாகக் குடிப்பதுண்டு என்று திருமணத்துக்கு முன்பே அவளிடம் சொல்லி வைத்திருந்தவன். ஆனாலும் அவன் குடித்துவிட்டு வந்த அன்று முகத்தைப் பானையாகத் தூக்கிவைத்துக்கொண்டாள் கௌரி. அதன் பின்னர் பல நாட்களுக்கு அவர்களிடையே பேச்சுவார்த்தை சுமுகமாக இல்லை.

ராஜசேகர் அந்த ஒரு இரவோடு  குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.  பிறகு எப்போது குடித்தாலும் குடித்த அன்று ஓட்டலில் அறை போட்டுத் தங்கிக்கொள்வான். கௌரியிடம் அலுவலகத்தில் இரவு தங்கிக்கொள்வதாகக் கூறிவிடுவான். உத்யோகத்தில் மிகப் பெரிய பொறுப்பில் அவன் இருந்ததால் அலுவலகத்தில் வேலையை முன்னிட்டுச் சில சமயம் இரவில் தங்குவது அவன் வழக்கம் என்பதால் கௌரிக்கு அது பெரிதாக உறுத்தவில்லை.

ஆனால், ராஜசேகரோ தான் அவ்வப்போது குடிப்பது கௌரிக்கு எப்படித் தெரியாமலிருக்க முடியும் என்று நினைத்தான். அலுவலகத்தில் தங்குவதாக அவன் கூறியதை அவள் என்றுமே நம்பவில்லை என்றும் அவன் மனம் சொன்னது.  ஒரு வார்த்தை கூட அது குறித்து அவள் கேட்காதிருந்தது முதலில் அவனுக்கு நிம்மதியைத் தந்தது, பிறகு அதுவே அவளது அன்பின் மீதான சந்தேகமானது. பிறகு அது வருத்தத்தைத் தரத் தொடங்கியது. வருத்தம் பகையுணர்வாக மாறியது.  வீடு என்பதைத் தன்னுடைய இடமாக அவள் கருதுகிறாள், எனவே அங்கே அவன் குடித்துவிட்டு வரக் கூடாது என்று அவனை வெளியே நிறுத்தி வைக்கிறாள், அதனால்தான் ஒரு தடவை குடித்துவிட்டு வந்ததற்கு அவள் அத்தனை ஆத்திரப்பட்டாள் என்று எண்ணினான்.   மற்றபடி தான் சீரழிவது குறித்தெல்லாம் அவளுக்கு கடுகளவு அக்கறையுமில்லை.  இதைப் பற்றி அவளிடம் அவன் பேசியதில்லை.  என்றாலும், ராஜசேகர் மனதில் அவள் நடந்துகொண்ட விதம் விஷ முள்ளாய் இருந்தது. முட்செடியாய் வளர்ந்தது.

ஆனால், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்போதும்போல் நீரோடையாகச் சென்றது. அவர்களுக்குக் குழந்தையில்லை. எனவே ஒரு சிறிய கவனச் சிதறலுமின்றி ராஜசேகரை கௌரி போஷித்தாள்.  இப்போது அவன் முறை. வேறு வழியில்லை. எழுபத்தெட்டு வயதில், நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு விஷயத்தை இப்போதாவது கௌரிக்குத் தெரியப்படுத்த வேண்டுமென ராஜசேகர் தீர்மானமாக இருந்தான். அந்த வீடு அவன் வீடும்தான், அங்கே அவன் உரிமையாகக் குடிப்பான், என்னவும் செய்வான். அவனுக்கான உரிமையை அவள் சாவதற்குள் உணர்ந்துகொள்வாள், உணர்ந்துகொண்டே ஆகவேண்டும். அது நடக்குமென அவன் மனம் நம்பியபோது மட்டுமே அவன் குடித்துக் குடித்து ஏற்றிக்கொண்ட போதை இறங்காமலிருந்தது.  மேலும், வீட்டில் அவன் குடிப்பது பற்றி அவளுக்கு எந்த விமர்சனம் இருந்தாலும்  அவளது இப்போதைய உடல்நிலை இரண்டு வார்த்தைகளுக்கு மேல் சொல்ல அவளை அனுமதிக்காது,  ஓரடி எடுத்துவைக்க முடியாத அவளால் வேறெந்த வகையிலும் அவனைக் கட்டுப்படுத்தவும் முடியாது என்ற குரூர மகிழ்ச்சி அவனை வந்தடைந்திருந்தது.

கிழவன் தன் கையிலிருந்த வோட்காவோடு எலுமிச்சைச் சாறு கலந்திருந்த கிளாஸை சற்று உயர்த்தி அதன் வழியாக அவளைப் பார்த்தான். அழுக்குப் படிந்த, மங்கிய கண்ணாடித் தொட்டியில் செத்து மிதக்கும் இரண்டு மீன்கள். கிழவியும் அவனைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். செத்துப் போன மீன்கள் கண்ணாடித் தொட்டியிலிருந்து நம்மைப் பார்க்கும்போது என்ன எண்ணிவிடப் போகின்றன என்று ஏளனமாக அவன் நினைத்தான். பிறகு தன் மன ஓட்டம் அவளுக்குத் தெரிந்துவிடுமோ என்று, ஏளனத்தைச் சட்டென மாற்றிக்கொண்டு தான் இயல்பாக இருப்பதைத் தெரிவிக்கும் வகையில் அவளைப் பார்த்து விளையாட்டாகக் கண்ணடித்தான். அவள் உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

கிழவிக்குத் தங்கள் வீட்டில் ஏன் அவன் குடிக்க ஆரம்பித்தான் என்று முதலில் புரியவில்லை. அதுவும் அவள் படுத்திருக்கும் அறையில். வேண்டுமானால் ஹாலில் உட்கார்ந்துகொண்டு அவன் குடிக்கலாம். அவர்களது விஸ்தாரமான வீட்டில் இன்னொரு அறைகூட இருக்கிறது. அந்த இன்னொரு அறையில் அவள் உருவாக்கிய அழகான தோட்டத்தை நோக்கிய சிட்-அவுட்கூட இருந்தது. தன் முன்னால் அமர்ந்துகொண்டு அவன் குடிப்பது ஒருவேளை தன்னை வெறுப்பேற்றுவதற்காகவோ என்று சந்தேகம் வந்தது.

அவன் அலுவலுகத்தில் தங்கிக்கொள்வதாகச் சொன்ன நாட்கள் பெரும்பாலும் அவன் தன் சகாக்களோடு குடித்துக் கொண்டாட்டமாக இருந்த நாட்களே என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எத்தனை பெருந்தன்மையுடன் அதைக் குறித்து அவள் கேட்காமலிருந்தாள்! அப்படிப்பட்டவளை, அதுவும் அவள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவன் சங்கடப்படுத்தலாமா?

ஆனால், கிழவிக்கு அவன் வீட்டில் குடிப்பதைப் பற்றிய தன் சந்தேகம் சரிதானா என்ற யோசனையும் இருந்தது.  அவள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதால், அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் அவன் குடிக்கிறானோ, அவள் கண்ணைவிட்டு ஒரு நொடிகூட அகலாமல் இருப்பதற்காகவே, ஒரு மாலைப் பொழுதுகூட வெளியே சென்று குடிக்காமல், அவளோடு அவள் பார்க்க, அவள் படுத்திருக்கும் அறையிலேயே குடிக்கிறானோ என்று தோன்றியது. நாள் போகப்போக, அவளிடத்திலான அவன் பாசம் பற்றிய நல்லெண்ணமே அவளுக்கு வலுத்தது. அவன் அவளை கணமும் பிரியாமலிருந்தது அத்தனை நோவிலும் சற்று ஆறுதலை அவளுக்குத் தராமலில்லை.

அவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்த கணத்தில் சட்டென ஐம்பது வருடங்கள் அவள் வயதில் குறைந்தன. வயது போன காலத்தில் அவளிடத்தில் அவன் அன்புகூர்ந்து குலாவினான் என்பதே அவளுக்கு உற்சாகம் தரப் போதுமானதாக இருந்தது. சொல்லப்போனால், அதற்குச் சற்று முன் அவள் சீக்கிரத்திலேயே தான் இறக்கப்போவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள். அவள் போனபின் அவன் வாழப்போகும் மிச்ச நாட்களிலும் அவள் பிரிவைத் தாங்காமல் அவன் குடிப்பான், அப்போது அந்த அறையில் தளர்ந்து போய், எங்கோ வெறித்தபடி குடிக்கப்போகும் அவனோடு ஒரு ஜீவன்  இருக்கப் போவதில்லை என்பதை எண்ணி மருகிக்கொண்டிருந்தாள்.

ராஜசேகர் கண்ணடித்தபோது தன் கன்னங்களில் வெட்கத்தின் சாயை தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே இருபத்தாறு வயது கௌரி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
  2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
  3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
  4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
  5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
  6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
  7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
  8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
  9. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
  10. போகாதே-பெருந்தேவி
  11. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
  12. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
  13. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
  14. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
  15. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
  16. துச்சலை- பெருந்தேவி
  17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
  18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
  19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
  20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
  21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
  22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
  23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்