பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்

நரகத்தின் காத்திருப்பு அறையில்

அவர்கள் அனைவரும் ஒரே நீண்ட அறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். நரகம் அவர்களுக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்தது. நரகத்துக்கான கூட்டம் சில மாதங்களாகப் பெருத்துவிட்டிருந்ததால், இறப்புத் தேதியைப் பொறுத்து, அதை அடிப்படையாகக் கொண்ட வரிசையில், சேர்ந்திருந்த பெரிய கூட்டத்தைச் சின்னச் சின்னக் கூட்டங்களாகப் பகுத்திருந்தனர்.  சின்னக் கூட்டங்களை   ஒவ்வொன்றாக வரிசையாக வைக்கப்பட்ட அடுப்புகளில் தகதகத்து ஓங்கியெரியும் தழல்களுக்குள் தள்ள ஏற்பாடு.

அந்த நீண்ட அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சின்னக் கூட்டத்தில் அவளது ஏழெட்டு வயதில்  பள்ளியில் கூடச் சேர்ந்து படித்த சிலர் இருந்தார்கள். அவர்களது நோட்டுப் புத்தகங்களை, அவர்களது ஜியாமெட்ரி பாக்ஸிலிருந்து  கேம்பஸ், பென்சில் போன்றவற்றை அவள் திருடியிருந்ததால் அவர்கள் அவளைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அந்தச் சின்னக் கூட்டத்தில் அவள் பதின்பருவத்தில் சேர்ந்து சுற்றிய சிலர் இருந்தார்கள்.  பள்ளி இறுதித் தேர்வுகளில் அவர்களது மதிப்பெண்களைக் கணிசமாக அவள் திருடியிருந்ததால் அவர்கள் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அங்கிருந்த இன்னும் சிலர் அவளது இருபதுகளிலிருந்து ஐம்பதுகள் வரை நெருக்கமாகப் பழகியவர்கள். அவர்களில் சிலரது காதலர்களையும் சிலரது கணவர்களையும் அவள் திருடியிருந்தாள். அவர்கள் நியாயமான எரிச்சலோடு அவளை முறைத்துப் பார்த்தனர்.

அவளுக்கு முதிய வயதில் அறிமுகமான அவள் வயதொத்தவர்கள் அந்த அறையில் இருந்தனர். அவர்களுக்கு அவள் மீது எந்தப் புகாருமில்லை. ஆனால் அவள் இறந்த தேதிக்கு சில தேதிகளுக்கு முன்பு இறந்தவர்களுக்கான அறைகளில் அடைக்கப்பட்டு நிற்க வேண்டியவர்கள் அவர்கள் என்று அவள் சந்தேகித்தாள். அவள் வாழ்விலிருந்து சில நாட்களை அவர்கள் திருடியிருந்ததால், அவர்கள் கூப்பிடக் கூப்பிட கண்டும் காணாமலும் அவர்களை அவள் கடந்து சென்றாள்.

உட்பக்கம் பூட்டியிருந்த வீடு

கிராமமாகவும் இல்லாத நகரமாகவும் இல்லாத ஊரின் வட திசையில் அந்த வீடு இருந்தது.  உட்பக்கமாக ஒரு வாரமாகப் பூட்டியிருந்தது. பால் பேக்கட்களும் செய்தித்தாள்களும் குவிந்திருந்தன. அந்த வீட்டினர் உபயோகப்படுத்தும் கார்களும் நிறுத்தப்பட்ட இடத்திலேயே நின்றிருந்தன.

சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர்தான் காவல்துறையை அழைத்திருக்க வேண்டும்.  காவல்துறையினரின் உதவியோடு உட்பக்கமாகப் பூட்டியிருந்த பூட்டு உடைக்கப்பட்டது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஹாலில் ஒரே வெட்டாக வெட்டப்பட்டதைப் போல் ஒரு பெண்ணின் தலை  கிடந்தது. ஒரு மீட்டர் இடைவெளியில் அவள் உடல் கிடந்தது. ஹாலிலிருந்து தள்ளி உள்ளே இருந்த அடுக்களை மேடையில் ஒரு ஆண்குறி கிடந்தது. கேஸ் சிலிண்டரின் மீது சாய்ந்திருந்தாற் போல் விழுந்திருந்த ஒரு ஆணின் கைகள் அவன் தொடைகளுக்கிடையிலிருந்தன. வீட்டுக்குள் குற்றம் நடந்த சீன்களில் காணப்படுவது போல ஆங்காங்கே கரும் ரத்தத் திட்டுகள், ரத்தம் காய்ந்த தடங்கள் காணப்பட்டன என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.  அடுக்களைக்கு எதிரே இருந்த படுக்கை அறையில் இரட்டைக் குழந்தைகள் போலத் தோற்றமளித்த குட்டிப் பையன்கள் அணைத்தபடி இறந்து கிடந்தார்கள். இருவருக்கும் மூன்றோ நான்கோ வயதிருக்கலாம்.

அந்த வீட்டுக்குள் யாரும் வந்துவிட்டுப் போன தடயமில்லை. ஒரு குட்டிப் பையனின் உடலில் கடித்த தடங்கள் இருந்தன. அவன் கை ரேகை இன்னொரு குட்டிப் பையனின் நெரிக்கப்பட்டக் கழுத்தில் இருந்த கை ரேகையோடு ஒத்துப்போனது. மொத்தக் குற்றத்தையும் கடிதடங்கள் இருந்த குட்டிப்பையனின் கணக்கில் எழுதலாமா, அல்லது அவன் தன்னைக் கடித்த இன்னொரு குட்டிப் பையனைத் தடுக்கத்தான் அவன் கழுத்தை நெறித்தானா, குட்டிப் பையன்கள் கூட்டாகக் கொலை செய்தார்களா, குட்டிப் பையன்களில் ஒருவனுக்கோ இருவருக்குமோ தம்பதிகளில் ஒருவர் கூட்டாளியாக இருந்தாரா, கணவன் தனியாகவோ, குட்டிப் பையனின் அல்லது குட்டிப் பையன்களின் கூட்டாளியாகவோ ஒரே வெட்டாக மனைவியை வெட்டியிருந்தால் அதன் பின் அவனது ஆண்குறியை மனைவி தனியாகவோ, கூட்டாளியாகவோ எப்படி அறுத்திருக்கமுடியும்,  மனைவி தனியாகவோ அல்லது கூட்டாளியாகவோ அவள் தலை வெட்டப்படும் முன்பு கணவனின் குறியை அறுத்திருந்தால், உயிர்நிலையில் கொட்டும் ரத்தத்தோடு கணவன் தனியாகவோ,  கூட்டாளியாகவோ அவள்  தலையை எப்படி வெட்டியிருக்க முடியும், வெட்டப்பட்டோ அறுக்கப்பட்டோ ஒருவர் ஒரு அறையிலிருந்து முப்பது அடி  தள்ளி இருக்கும் இன்னொன்றுக்கு எப்படி வந்து சேர முடியும்  போன்ற கேள்விகளைக் காவல்துறையினர் தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். அந்த வீடு பூட்டித்தான் இருக்கிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
 2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
 3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
 4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
 5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
 6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
 7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
 8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
 9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
 10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
 11. போகாதே-பெருந்தேவி
 12. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
 13. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
 14. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
 15. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
 16. துச்சலை- பெருந்தேவி
 17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
 18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
 19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
 20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
 21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
 22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
 23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்