ஒரு காலத்தில்

விரும்பிய காலத்துக்குச் செல்லும் டைம் மெஷின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அதன் முன்னோட்டமாக ’ஒரு காலத்தில்’  என்ற லிமிடட் எடிஷன் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.   சிப் சைஸில் வடிவமைக்கப்பட்டிருந்த எந்திரம் அது. வாசனையை மட்டும் மையப்படுத்தியதாக அது இயங்கியது. அதை உடலில் பொருத்திக்கொண்டு ஒருவர் முன்பு  ‘ஒரு கால’த்தில்  நுகர்ந்த வாசனையை நினைத்துக்கொண்டால் போதும், அந்த வாசனைக்குப் போய்விடலாம். எந்திரத்தைப் பொருத்திக்கொள்வதும் பெரிய வேலை இல்லை. முழங்கையிலோ கணுக்காலிலோ சும்மா ஒட்டிக்கொண்டாலே அது வேலை செய்யும்.  வடிவமைப்பு எளிமையாக இருந்ததால் பலரும் அதை ஒட்டிக்கொண்டு தினந்தோறும் அவ்வப்போது ’ஒரு கால’த்துக்குச் சென்று வந்தார்கள்.

பலரும் குழந்தைப்பருவத்தில் உணர்ந்த தத்தம் அம்மாக்களின் புடவை மடி வாசனையைத் தேர்வு செய்து அதற்கு அடிக்கடி சென்று வந்தார்கள். முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள்  காப்பி இடைவேளை போல இந்த எந்திரத்தையும் ஸ்ட்ரெஸ் பஸ்டராகப் பயன்படுத்தினார்கள்.  சிறு குழந்தைகளையும் முதியோர்களையும் தவிர மக்கள் அனைவருமே கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களாக இருந்ததால், எந்திர விற்பனை சட்டெனச் சூடு பிடித்தது.

வேலைக்கிடையே கிடைத்த ஓய்வு நேரங்களில் மக்கள் தத்தம்  காதலிகள், காதலர்களின் அக்குள், தலைமுடி, கழுத்து மடிப்பு, பிறப்புறுப்பு போன்றவற்றின் வாசனைகளுக்குச் சென்று வந்தார்கள். இதில் ஒரு பிரச்சினை இருந்தது. பெரும்பாலானவர்களுக்கு ஒருவரது வாசனையை நினைக்கும்போது வேறு சிலருடைய வாசனைகளும் நினைவுக்கு வந்ததால், இந்தத் தேர்வு பல சமயம் குளறுபடியாக முடிந்தது. எந்திரத்தைத் தயாரித்த நிறுவனம் இதைச் சீர்செய்ய முயன்றது பயனளிக்கவில்லை. மேலும்,  கவனத்தைக் குவித்து நினைத்தவர்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுத்த வாசனைகள் ஒரு முறைக்கு மேல் ஈர்க்கவில்லை. தங்கள் ஞாபகங்களே, சில வாசனைகளைக் கவர்ச்சிகரமாகக் காட்டி ஏக்கப்பட வைக்கின்றன எனப் புரிந்துகொண்டார்கள்.

உணவுப் பிரியர்கள் பலர் வருடத்துக்கு ஒரு முறை ஊழியர்களுக்கான ரிட்ரீட்களில் அளிக்கப்படும் மீன் குழம்பு, மட்டன் சுக்கா, பொரித்த கூட்டு போன்றவற்றின் வாசனைகளுக்கு இரவு டின்னருக்கு முன்பு செல்வதை ஒரு சடங்காக வைத்துக்கொண்டார்கள்.  பின் சரிவிகிதத்தில் வைட்டமின்களும் சத்துக்களும் நிறைந்த கேப்ஸ்யூல்களை விழுங்கிவிட்டு வேலையைத் தொடர்ந்தனர்.

தொண்டுக் கிழங்களாகிவிட்ட முதியவர்கள் சிலர் தாங்கள் இளமையில் தேடி வாங்கிய புதிய அச்சுப் புத்தகங்களின் தாள்களை நுகர விரும்பினார்கள். இப்படி புத்தகங்களின் ’ஒரு கால’த்துக்குச் சென்றவர்கள் அந்தத் தாள்களுக்குளேயே இருக்க விரும்பி  மீண்டும் மீண்டும் அங்கே சென்றுகொண்டிருந்தார்கள். இதனால் அவர்களது இயல்பான வாழ்க்கையும் அவர்களுக்கு பணிக்கப்பட்டிருந்த வேலைகளும் தடைப்பட்டன.  எனவே அரசாங்கம் ’ஒரு கால’ எந்திரத்தில்  எச்சரிக்கையைப் பொறித்தது: “புதிய புத்தகத் தாள் வாசனை நல்வாழ்க்கைக்குக் கேடு!” சில சமயம் இவ்வகை பயண போதையிலிருந்து வெளிவர கவுன்சலிங் தரப்பட்டது.  கடுமையான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. காலப்போக்கில் நாட்டின் நலன் கருதி புத்தகத் தாளின் வாசனைக்கான பயணம் எந்திரத்தின் மென்பகுதியிலிருந்து நீக்கப்பட்டது.

ஒரு கொழுத்த பணக்காரர்  இளம் வயதில் நுகர்ந்த தனது ‘ரத்த’ வாசனைக்கு அடிக்கடி பயணம் செய்தார். முகச் சவரம் செய்துகொண்டபோது  ஏற்பட்ட ஆழமான வெட்டுக் காயத்தால் ஏற்பட்ட ரத்தம் அது.   தொடர் உபயோகத்தின் காரணமாக அவர் வைத்திருந்த நான்கு ’ஒரு காலத்தில்’ எந்திரங்களும் ஒரே நேரத்தில் பழுதாகிப் போயின. உடனடியாகப் புதியவற்றுக்கு ஆர்டர் செய்தார். ஏதோ கோளாறால் அவை அவர் இருப்பிடத்துக்கு வந்து சேர அரை மணி நேரம் பிடித்தது. ஆனால் ஒரு நிமிடத்துக்கு மேல்  பொறுக்க முடியாமல், அவர் தன் தாடையை ரேசரால் வெட்டிக்கொள்ள ஆரம்பித்தார். அவரது இறப்பு அப்படித்தான் நிகழ்ந்தது.

காதலனின் மனைவி

அவளுக்கு ஒரு மனக்குறை இருந்தது. அபூர்வமாகக்கூட அவள் கனவில் அவளுடைய காதலன் வருவதில்லை. இதைத் தன் சிநேகிதி ஒருத்தியிடம் வருந்திக் கூறியபோது அவள் “உன்னை நினைச்சுக்கறவங்கதான் உன் கனவில வருவாங்க” என்றாள். தன் காதலன் தன்னை நினைப்பதில்லையோ என்று அவளுக்கிருந்த சந்தேகம் வலுத்தது.

அன்றைக்கு யதேச்சையாக பல முறை ஃபார்வர்ட் செய்யப்பட்ட வாட்ஸாப் தகவல் ஒன்று அவளுக்கு வந்தது. நமக்கு யார் கனவில் வரவேண்டுமோ அவர் புகைப்படத்தைத் தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டால் அந்த நபர் கனவில் வந்தே தீர்வார் என்றது அந்தத் தகவல். அதன்படி அவள் தன் காதலனின் புகைப்படத்தை ஒரு ப்ரிண்ட் எடுத்து தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு இரவு தூங்கினாள். அன்றும் அவன் கனவில் வரவில்லை. மாறாக, நாற்பது வயதிருக்கும் ஒரு பெண் வந்தாள்.  ரொம்ப நாளாகப் பழகியவளைப் போல சிநேக பாவத்தோடு அவள் கையைப் பற்றிக்கொண்டவள்  தன்னை அவளது காதலனின் மனைவி என்று இவளிடத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டாள். ஆதூரமாக இவளைப் பார்த்து  ”நீ ரொம்ப நல்லவள். ஐ லைக் யு வெரி மச்” எனப் பாராட்டினாள். அவள் தன் காதலனின் மனைவியை அதற்குமுன்  பார்த்ததில்லை.  கனவில் வந்தவளுக்குப் பூசிய மாதிரி உடல்வாகு. தடித்த புருவங்கள். மெல்லிய சரிகையிட்ட சிறிய சரிகைப் புட்டாக்களுடன் பிங்க் நிறத்தில் மைசூர் சில்க் புடவையை அந்தப் பெண்மணி அணிந்திருந்தாள்.

“வெளியே போகணும்னா ஐப்ரோ பென்சிலில் ஐப்ரோ தீட்டிப்பாங்களா?” என்றாள் மெதுவாக. அதை அவன் ரசிக்கவில்லை. அவர்கள் உறவு குறித்து அவன் மனைவிக்கு ஒருமாதிரி தெரிந்துவிட்டிருந்ததால் அவன் வீட்டில் உரசல்கள் சண்டைகளாக மாறத் தொடங்கியிருந்தது. இரண்டு பெண்கள் பொதுவானவன் என்ற பாவனையோடு ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் பேசுவதை அவன் தவிர்ப்பவன். அதை இன்று மீறிவிட இவள் காரணமாக இருந்ததைப் போல அந்தக் கேள்விக்குப் பின் சிடுசிடுப்பைக் காட்டினான்.

சீக்கிரமாகவே ரெஸ்டரண்டிலிருந்து கிளம்பிவிட்டார்கள். அவள் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் இருளோ என்றிருந்தது. பக்கத்து அபார்ட்மெண்ட்டில் யாரோ தேவையற்ற பொருள் எதையோ வெளியே வைத்திருந்திருக்க வேண்டும். நன்றாக இடித்துக்கொண்டாள். வலி தலைக்குள் ஏறியது.

ஹேண்ட் பேக்கில் துழாவி சாவியை எடுத்துத் திறந்தாள். உள்ளேயும் இருட்டு. அவள் காதலன் அவளை நினைத்துக்கொள்ளாவிட்டாலும் அவன் மனைவிக்குமா இவளைப் பற்றிய எண்ணமில்லை? தன்னைக் கசந்து கூடவா யாரும் நினைப்பதில்லை?  கனவில் வந்தது அவன் மனைவியாக இல்லாத பட்சத்தில் அவள் யாராக இருக்க முடியும்? ஒருவேளை என்று யோசித்தவள் அதற்குப் பின் பல நாட்கள்  தூங்கவில்லை.