குறுங்கதை:

துச்சலை- பெருந்தேவி

”கொழவிக் கல்லத் தூக்கி வயித்தில குத்திக்கிட்டா என்ன ஆவும், கர்ப்பம் கலையும்” என்று சட்டெனச் சொன்னாள் கிழவி. ஓட்டு வீட்டு சிமிண்டுத் திண்ணையில் டேப் ரெகார்டரைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த இளம் பெண் அதையும் டேப்பில் பதிவு செய்துகொண்டாள். இளம் பெண் மகாபாரதத்தில் வரும் சிறிய பெண் கதாபாத்திரங்களைப் பற்றி  பிச்.டி ஆய்வு செய்யும் மாணவி.

திண்ணையிலிருந்து வெயில் நகர்ந்து வெகு தூரம் போயிருந்தது. அமாவாசை இரவு வேகமாக வந்து கவ்வப்போகும்  அந்திப் பொழுதின் இறுதித் தருணம். மதியத்திலிருந்தே அவர்கள் கதைகளைச் சொல்ல, இளம் பெண்  கேட்டுப் பதிவு செய்துகொண்டிருந்தாள். பெருந்திருவா, அல்லி, சுபத்ரா, இப்போது துச்சலைக்கு வந்திருந்தார்கள். திண்ணையில் டேப் ரெகார்டருக்கு முன்னால் இரண்டு கிழவர்கள் அசௌகரியமாக அமர்ந்திருந்தார்கள்.  கிழவி கீழே நடையில் அமர்ந்திருந்தாள். அக்கம்பக்கத்தில் யாருடைய குழந்தையோ, ஒரு சின்னக் குழந்தை  இளம் பெண்ணோடு இழைந்தபடி அவள் மீது சாய்ந்திருந்தது.

இளம் பெண் திண்ணையிலிருந்த கிழவர்களிடம் துச்சலையைப் பற்றிக் கேட்டவுடனேயே ”செயத்திரதன் பொண்டாட்டியத் தானே கேக்கறே” என்று உரையாடலுக்குள் நுழைந்தாள் கிழவி.

“தெரியும் பாட்டி, அவ எப்படி பொறந்தா? துரியோதனாதிகளோட தங்கைதானே அவ?”

“அவ பொறப்பப் பத்தினா காந்தாரியோட ஆங்காரத்தப் பத்தித் தெரிஞ்சிக்கணும்” என்றார் திண்ணையில் சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த முதல் கிழவர்.

“ஆமா, குந்திக்கு முன்னாடி கர்ப்பமானா அவ. ஆனா பன்னெண்டு மாசமாயும்  கொழந்த பொறக்கல. அவளுக்கு அஸ்தினாபுரத்துல துரியோதனன் பொறக்கறதுக்கு முன்னாடி காட்ல குந்திக்குத் தருமன் பொறந்துட்டான்.”

“காந்தாரிக்கு ஓரகத்திப் பொறாமை வந்திடுச்சி,” என்றார் முதல் கிழவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த இரண்டாவது கிழவர்.

“காந்தாரிக்கு ஆங்காரம் தாங்க முடியல. இந்த  விதிக்கா கொட்டற மழைல அவசர அவசரமா பலா முனியச் சேர்ந்தோம்னு நினைச்சா…” என்றார் முதல் கிழவர்.

உடனே கதையில் அவசரப்பட்ட காந்தாரியை விட அவசரமாக இளம் பெண் கேட்டாள்:

“பலா முனியா, அது யாரு புதுசா, காந்தாரியோட புருஷன் திருதராஷ்டிரன்தானே?”

“அவசரப்படாத, ஒரே நாள்ள எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியுமா, இதுக்குத்தான் நாலு நாள் இங்க தங்கி இருந்துட்டுப் போனு சொல்றோம். தங்கினா பலா முனி என்ன, எல்லா முனியப் பத்தியும் சொல்றோம்,” என்று சிரித்தபடி மீண்டும் புகுந்தாள் கிழவி.

“இரும்மா நீ வேற குறுக்க குறுக்க. துச்சலை கதைய மொதல்ல  கேட்டுக்க. பன்னெண்டு மாசமாயும் பொறக்காத சிசு இருந்தா என்ன போனா என்னனு அம்மிக் குழவிய எடுத்து வயித்துல குத்திக்கிட்டா காந்தாரி”

முதல் கிழவர் இப்படிக் கூறியவுடன் “என்ன ஆச்சு?” என்று இளம் பெண் கேட்டாள். அதற்குக் கிழவி தந்த பதில்தான் இந்தக் கதையின் தொடக்கம்.

அதன் பின்னர் முதல் கிழவர் குழவிக் கல்லால் குத்திக்கொண்ட காந்தாரியின் கரு கலைந்துவிட்ட பின்பும் அவளுக்குக் குழந்தைகள் பிறந்ததைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

“உதிரமும் பிண்டமுமாத் தரையில விழுந்ததும் காந்தாரிக்கு மனசு கலங்கிப்போச்சி. அப்பதான் வியாச பகவான் வந்தாரு. வியாசரு அரண்மனைக்காரங்க கிட்ட நூறு மண் பாண்டங்களை கொண்டாறச் சொன்னாரு. கீழே கட்டியா உதிரத்தோட விழுந்த கருப்பிண்டத்தப் பிய்ச்சி ஒவ்வொரு பாண்டத்திலயும் போட்டாரு. அழுதிட்டிருந்த காந்தாரியாண்ட நீ கவலப்படாத, ஒனக்கு நூறு புள்ளங்க மண்பாண்டத்திலேந்து பொறக்கும்னாரு. அப்டிப் பாண்டத்துலேந்து மொதல்ல பொறந்தவன்தான் துரியாதனன்.  அவனுக்கு வஜ்ர தேகம்…”

“சரி தாத்தா, அப்ப துச்சலை?”

“அந்த நூத்துல ஒண்ணுதான் துச்சலை.”

“கதைய ஒழுங்காச் சொல்லுப்பா. நூறு பாண்டத்திலேந்து பொறந்தவங்க நூறு அண்ணன் தம்பிங்கதான்,” இடைமறித்தார் இரண்டாவது கிழவர்.

“சும்மாக் கெட. அதெல்லாமில்ல. தொண்ணூத்தொம்பது அண்ணன்தம்பி, ஒரு தங்கச்சி.”

“ஒனக்குத்தான் கூறுகெட்டுப் போச்சு. துரியோதனாதிங்க தொண்ணூத்தொம்பதா நூறா, ஒளர்றான்,” இரண்டாவது கிழவர் கோபப்பட்டார்.

“இரு நான் சொல்றேன்” என்று மீண்டும்  நுழைந்தாள் கிழவி.

“அதாவது நூறு பாண்டத்தில வியாசன் எடுத்துப் போட்டான்ல. மண்ணில ஒட்டிக்கிட்டு கொஞ்சம் பிண்டம் இருந்தது. அதை ஒரு சில்வர் கிண்ணத்தில வாரிப் போட்டான், கிண்ணத்திலேந்து துச்சல பொறந்தா.”

“ஆமா, கீழே கலீஜா கொஞ்சம் கெடந்தது. அதிலேந்துதான் பொம்பளப் புள்ள பொறந்தது,” என்று அவளையொட்டிப் பேசினார் முதல் கிழவர்.

“கலீஜு, நீ ரொம்பக் கண்டே. அவ மிச்சமிருந்த பிண்டத்திலேந்து பொறந்தா.  கலீஜுங்கறே. அவளா கலீஜுலேந்து பொறந்தா. நீதான் பொறந்தே கலீஜுலேந்து” என்று கிழவி சூடாக முதல் கிழவரை மறுத்தாள்.

“நான் ஒண்ணுத்தயும் காணல, நீதான் எல்லாத்தையும் கண்டே,” என்றபடி துண்டை உதறித் தோளில்போட்டுக்கொண்டு கடுப்போடு திண்ணையிலிருந்து இறங்கிப் போனார் முதல் கிழவர்.

“அவன் ஆரம்பத்திலேந்தே தப்புத் தப்பாத்தான் சொல்லிட்டிருந்தான். ஒளறுவாயன்,” என்று முதலாமவருக்குச் சான்றிதழ் தந்தபடி திண்ணையிலிருந்து இறங்கினார் இரண்டாம் கிழவர்.

“ஆமா, கலீஜாம் கலீஜு. சொல்ல வந்துட்டான். துச்சல ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு பொறந்தா. நூத்துவன் மத்தியில ஒத்தப் பொம்பளப் புள்ள, கண்ணில வச்சி அவள வளத்தாங்க. அரண்மனல,” என்றாள் கிழவி. அவளும் அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.

“சரி, போய்ட்டு வரேன்,” என்றாள் இளம் பெண்.

“நாஞ் சொன்னத நல்லாக் கேட்டுக்கிட்டியா? கலீஜெல்லாம் இல்ல.  மிச்சமிருந்த உதிரத்திலேந்து பிண்டத்திலேந்து பொறந்தா. கடைசி உதிரம், கடைசிப் பிண்டம். அவ அண்ணன் தம்பிங்கள்ளாம் செத்துப் போனதுக்கப்புறமும்  ராசாத்தியா கடைசி வரைக்கும் இருந்தா. அப்டி  பொஸ்தவத்துல எழுது”

“அப்டியே எழுதறேன்,” என்று  விடைபெற்றுக்கொண்டாள்.

“போய்ட்டு வா, ராசாத்தியா இரு,” என்று கிழவி வாய் நிறையச் சொன்னாள்.

“கும்மிருட்டாயிருச்சி. பஸ் ஸ்டாண்டுக்குத் தனியாலாம் போவ வேணாம். பாதைல பூச்சியெல்லாம் நடமாடுது, நான் ஒன்ன வுட்டுட்டு வரேன்,” என்று அவளோடு நடக்கத் தொடங்கினாள் கிழவி.

மண் சாலையில் அவர்களுக்குப் பின்னால் பக்கப் புதர்களிலிருந்து சரசரவென சப்தம் கேட்டது. இளம் பெண் அதைச் செவிகொண்ட கொஞ்ச நேரத்திலேயே காலடிச் சப்தமாக அது மாறியது. சப்தம் சப்தங்களாக பெருகின.  அவர்கள் நடந்து செல்லச் செல்ல அவை வலுத்தன. பேரோசையாகின. ஒருவேளை தன் பிரமையோ என்று இளம் பெண்ணுக்குத் தோன்றியது. கிழவி “ஒர்த்தன் ரெண்டு பேரு இல்ல. நூறு பேரு வரானுங்க உன் தொணைக்கு” என்றாள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
 2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
 3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
 4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
 5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
 6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
 7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
 8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
 9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
 10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
 11. போகாதே-பெருந்தேவி
 12. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
 13. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
 14. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
 15. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
 16. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
 17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
 18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
 19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
 20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
 21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
 22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
 23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்