“தன் அம்மாதானா?” என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. அதிர்ச்சியாகக் கூட இருந்தது. வியப்பையும் அதிர்ச்சியையும்விட வருத்தமாக இருந்தது.
சில மாதங்களாகவே அலுவலகத்திலிருந்து வந்த மகனுக்கு டீ போட்டுத் தருவதில்லை. இருக்கட்டும், டின்னர் என்னாச்சுமா என்றால் ஸ்விகி ஆப் உன்னிடம் இல்லையா எனக் கேட்கிறாள். அப்பாவோ வழக்கம் போல இரவுணவை வெளியே முடித்துவிட்டு வருகிறார். இல்லாவிட்டாலும் அவருக்கு இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரமிருக்கிறது?
பெரும்பாலும் அவன் மாலையில் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் அம்மா தன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்திருப்பாள். இப்போதும் அப்படித்தான். ஆனால் வித்யாசம். முன்பெல்லாம் டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்து தருவாள். அவனோடு விடாமல் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ பேசுவாள். பெரும்பாலும் அவள் அக்கா வீட்டுக் கதை, அலுவலகத் தோழியர்கள் விவகாரங்கள், வீட்டில் செய்ய வேண்டிய ரிப்பேர் வேலைகள், அபூர்வமாக ஏதாவது நாவல் அல்லது திரைப்படம். அம்மா அதிகம் தொலைக்காட்சி பார்க்கமாட்டாள். அதனால் தொலைக்காட்சித் தொடர் எதுவும் பேச்சில் வராது.
இவன் “ம், ம்,” “இல்லம்மா,” “நாளைக்குப் பண்ணிடறேன்,” “சரி சரி” என்று ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வான். சில சமயம், “அம்மா, இன்னிக்கு வேல அதிகம், தலை வலிக்குது” என்று அலுத்துக்கொண்டு தன் அறைக்குப் போய்விடுவான். இப்போதோ எல்லாமே மாறிவிட்டது.
ஒரு வாரமாக அம்மா தன்னைக் கவனிக்காமல் அப்படி என்னதான் செய்கிறாள் என்று பார்த்தான். மாலையில் அவன் வரும் நேரங்களில் அவள் மாடியிலிருக்கிறாள். மாடியில் போட்டிருக்கும் மர நாற்காலியில் அல்லது பூச்செடிகளருகே கீழே அமர்ந்திருக்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன் மாடியில் யாருடனோ மொபிலில் பேசிக்கொண்டிருந்தாள். அப்பாவுடன் அவள் பேசும் அதே சின்னக் குரல். அவன் வந்து நின்றதை அவள் கவனித்தமாதிரி தெரியவில்லை. “அம்மா” என்று முதலில் மெதுவாக அழைத்தான். பிறகு இரண்டு முறைகள் சத்தமாக. மூன்றாவது முறை அழைத்தபோது தான் கத்துவதாக அவனுக்குப் பட்டது.
“என்னடா” என்றாள் அம்மா மென்மையாக.
“டின்னருக்கு என்ன டிஃபன்மா? பசிக்குது” என்றான்.
“பேசிட்டிருக்கேன், தெரியல?” அம்மா மொபிலின் ரிசீவர் பகுதியை மூடியபடி மெல்லிய குரலில் பதில் சொன்னாள். அதாவது எதிர்ப் புறத்தில் இருப்பவருக்குக் கேட்கக் கூடாது. ஆக, மென்மை அவனுக்கானது அல்ல. அவன் அவளை முறைத்ததில் என்ன தவறிருக்க முடியும்?
“பசிக்குதுனு சொன்னேன்” என்றான் குரலை உயர்த்தி. சொ-வுக்கு அவன் தந்த அழுத்தத்தில் அவள் உடனடியாகத் தன் உரையாடலை நிப்பாட்ட வேண்டும். கீழே இறங்கி வர வேண்டும்.
அவளோ சாவகாசமாக “வரேண்டா, போ” என்றபடி எழுந்து சற்றுத் தள்ளிப் போய் உட்கார்ந்தாள். உரையாடலைத் தொடர்ந்தாள்.
மாடிப்படியில் மொட்டை மாடிக்கு மேலேறி வந்தவுடன் வைக்கப்பட்டிருக்கும் நந்தியாவட்டைச் செடியில் அருகே அமர்ந்திருந்தவள் இப்போது ரோஜாச் செடித் தொட்டி வைக்கப்பட்டிருக்கும் வலது மூலைக்குப் போயிருந்தாள். அவன் ஒரு கணம் திகைத்துப் போனான். அம்மாவிடம் போய் சண்டை போடலாம் என்று நொடி யோசித்தவன் அதன் அபத்தம் தெரிந்து கீழே இறங்கி வந்துவிட்டான். அதன்பின் ஒரு மணி நேரத்துக்கு அம்மா இறங்கி வருவாளா என்று பார்த்துக்கொண்டிருந்தான். வரவில்லை. ஸ்விகியில் பிட்சா ஆர்டர் செய்து தின்றுவிட்டுப் படுத்தான்.
இன்று மாலை மீண்டும் அதே காட்சி. “பசிக்குதுனு சொன்னேன்,” “வரேண்டா போ.” ஆனால் இன்று வேறொன்றும் நடந்தது. ரோஜாச் செடியருகே அமர்ந்திருந்த அம்மா செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு ரோஜா மொட்டோடு தன் முகத்தை ஒட்டி வைத்துக்கொண்டிருந்தாள். எரிச்சல், சந்தேகம், கோபம் எல்லாம் ஒரே நேரத்தில் வந்தது அவனுக்கு. சின்னப் பெண்ணைப் போல என்ன இது? சின்னப் பெண்ணாக அம்மா இருந்திருக்கும் காலத்தை அவன் நினைத்துப் பார்த்ததில்லை. நினைத்துப் பார்க்கத் தோன்றியதில்லை. அவனுக்கு அம்மா எப்போதும் அம்மா வயதுதான். ஆனால் இப்போது அவள் வயது குறைந்திருப்பதாக அவனுக்குப் பட்டது. இல்லை, குறைத்துக் காட்டியிருக்கிறாள். இப்போது யாருக்காக இந்த செல்ஃபியை எடுக்கிறாள்? அதுவும் திருமணமாகி, திருமணத்துக்குத் தயாராக ஒரு மகன் இருக்கும்போது.
கிடுகிடுவென கீழே இறங்கிவந்து தொலைக்காட்சியின் முன் அமர்ந்தான். சானல்களை நொடிக்கொரு தரம் மாற்றினான். ஆனால் அவன் கண்கள் என்னவோ மாடிப்படியிலேயே இருந்தன. எல்.கே.ஜி வகுப்பில் அவன் அமர்ந்திருப்பதைப் போன்றதொரு எண்ணம். அப்போதெல்லாம்தான் மணி எப்போது அடிக்கும், அம்மா எப்போது வருவாள் என்று அந்தச் சின்னப் பள்ளிக்கூடத்தின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பான். சமயத்தில் ஒன், டூ, த்ரீ, ஃபோர், …டென், ஒன், டூ, த்ரீ, ஃபோர்,… டென் என்று டீச்சர் அவனைத் திட்டும் வரை திரும்பத் திரும்பச் சொல்வான். ஒரு டென் –னில் அம்மா வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை. ஆனால் இருபத்தைந்து வயதில் அம்மாவை எதிர்பார்க்கும் பாலகனாகத் தான் மீண்டும் மாறுவதென்றால் எப்படி? அம்மா என்ன எழவுக்காக அவனை அப்படி மாற வைக்கிறாள்?
அப்பா இன்னும் வரவில்லை. பிந்தித்தான் வருவார். இன்று அவன் ஸ்விகியில் உணவை ஆர்டர் செய்யவில்லை. பசி மந்தித்துப்போய் விட்டிருந்தது. தலை வலித்தது. இதுதான் கடைசி என்று எண்ணியபடி மாடிப்படியைப் பார்த்தான். அம்மா இறங்கிவந்துகொண்டிருந்தாள்.
“சாரிடா, ஜெயந்தி கூப்டிருந்தா. பேசிட்டிருந்தேன். ரெண்டு பேரும் ஒரே எடத்துல ரோஜாச் செடி வாங்கினோம். கடைக்காரன் ஏமாத்திட்டான்னு புகார்.”
அவன் பதில் சொல்லவில்லை.
“நம்ம வீட்ல நல்லாத்தானேடா வருது. இத்தோட டஜன் பூ பூத்திருக்கும்.”
தேவையில்லாமல் அம்மா பேசிக்கொண்டிருக்கிறாள். பொய் சொல்பவர்கள்தான் வேண்டாத, அதிகத் தகவல்களைத் தருவார்கள்.
“அவ செடியை ஃபோட்டோ எடுத்து அனுப்பியிருக்கா. பாரேன், செடி வாடிப் போயிருக்கு. அவ தண்ணி ஊத்தலனு விசிபிளா தெரியுது.”
மொபிலை அவன்முன் நீட்டினாள். பார்த்தும் பார்க்காமலும் ஆவலைக் காட்டிக்கொள்ளாதபடி ஆவலோடு பார்த்தான். அவன் சந்தேகம் தீர்ந்துவிடும் நேரம் வந்துவிட்டது. வாடிய செடி தெரிந்தது.
“அஞ்சு நிமிஷத்தில தோசை சுட்டுர்ரேன். ரெண்டு பேரும் சாப்டுரலாம்,” சொல்லிக்கொண்டே சமையல்கட்டுக்குள் சென்றாள். “ரொம்ப பசிக்குதா?”
செடியைப் பார்த்த கணத்தில் தான் பெயரைப் பார்க்கத் தவறியதை உணர்ந்தான். திரும்பப் போய்க் கேட்கலாமா? அம்மா தன் பசியில் அக்கறை காட்டியதைப் போலத் தானும் அந்தச் செடியில் அக்கறை காட்டக்கூடாதா? பாவனை ஒருவருக்கு மட்டுமானதா என்ன?
“ஒங்க ஃப்ரண்ட் செடியை கொன்னே போட்டாங்களா, காட்டுங்கம்மா” என்று அடுப்பருகே போய் நின்றான்.
“பாருடா,” மேடையில் அடுப்பருகேதான் ஃபோன் இருந்தது. இதை நெருப்பில் தள்ளிவிட அவனுக்கு ஒரு நொடியாகாது.
பார்த்தான். Jay என்ற பெயர் மேலே மூலையில் தெரிந்தது. ப்ரொஃபைல் படத்தைப் பார்த்தான். கறுப்பு-வெள்ளை. ஒரு அட்டைப்படம். ”Being and Nothingness.” புத்தகம் மாதிரி தெரிந்தது.
“இந்தா, சாப்டுடா. பொடி வைக்கவா?”
”ம்.” தட்டை வாங்கிக்கொண்டே வாங்கிக்கொண்டே மொபில் திரையில் கண்ணை ஓட்டினான். ரோஜா மொட்டுடன் செல்ஃபி, வாடிய செடியின் படம், அவற்றுக்கு மேலே ”phone edukka mudiyala, pls call now.” அம்மா அனுப்பிய மெசேஜ். அம்மா எப்போது இதை அனுப்பியிருக்கிறாள், எப்போதிலிருந்து பேசுகிறார்கள்…அதற்குள் அம்மா “தோசை ஆறிடும், சாப்டுடா” என்றபடி மொபிலைப் பறித்துக்கொண்டாள்.
அம்மாவின் சிநேகிதி ஜெயந்தியாகத்தான் இருக்கமுடியும். எந்த ஆண்பிள்ளை செடி வாடிப் போயிருக்கிறதென்று கண்ணீரும் கம்பலையுமாக ஃபோட்டோ எடுத்து அனுப்பப் போகிறான்? ஆனால் அந்த ப்ரொபைல் படம், புத்தகம்? அவசர அவசரமாகத் தோசையைத் தின்றுவிட்டு கூகிளில் தேடினான்.
Being and Nothingness. புத்தகத்துக்கு சப் டைடில் இருந்தது. An Essay in Phenomenological Ontology. சொல்லிமுடிப்பதற்குள் நான்கைந்து கூழாங்கற்கள் வாய்க்குள் உருண்டுவிடும். யாரோ பிரெஞ்சுக்காரன் எழுதியிருக்கிறான். தத்துவ நூல் மாதிரி தெரிந்தது.
அம்மாவுடைய தோழி ஜெயந்தி இதெல்லாம் படிப்பாளா? சில வருடங்களுக்குமுன் ஒரு முறை ஷாப்பிங் போனபோது ஃபீனிக்ஸ் மாலில் அவளைப் பார்த்திருக்கிறான். ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய முகமோ, உடல்வாகோ, பேச்சோ இல்லை. அவளோடு அன்று அம்மாவும் அவனும் ஐஸ்க்ரீம் தின்றார்கள். கோன் ஐஸைத் தின்னத் தெரியாமல் மேலே போட்டுக்கொண்டாள். அம்மாவும் அவனும் அவளை அதற்காக ஓட்டினார்கள். அவள் எப்படி பிரெஞ்சுக்காரனை, அதுவும் வாயில் நுழையாத தத்துவத்தைப் படிக்கப் போகிறாள்?
ஒருவர் என்ன புத்தகம் படிப்பார்கள் என்பதை அவர்கள் ஐஸ்க்ரீம் தின்னும் விதத்தை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுசெய்துவிட முடியுமா? அன்றைய நாளை கவனத்தோடு நினைவில் கொண்டுவரப் பார்த்தான். இப்படி ஒரு புத்தகத்தைப் படிக்க ஏதோ ஒரு குணாம்சம் ஜெயந்தியிடம் இருக்க வேண்டும். அவர்கள் சந்தித்த அன்று
(1) ஜெயந்தி மால் எஸ்கலேட்டரில் பயந்துகொண்டே கால் வைத்தாள்.
(2) ஜெயந்தி மூன்றாவது தளத்தில் ரேமண்ட்ஸ் ஷோ ரூம் எதிரே தடுக்கிவிழப் பார்த்தாள். அவள் செருப்பு அறுந்துவிட்டிருந்தது. “பழைய செருப்ப மாத்தவே மாட்டியாடி?” அம்மா விமர்சித்தாள்.
(3) மாலிலிருந்து வெளியே வருகையில் அம்மா ஜெயந்தியின் கையைப் பற்றியபடி ”இன்னும் அடிக்கிறாரா? பத்திரமா இருடி” என்றாள். ஜெயந்தி பதில்சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டாள்.
இப்படியான ஞாபக ஓட்டத்தில் ஜெயந்தி என்ற பெண்—ஐஸ்க்ரீமைத் தின்னத் தெரியாத, எஸ்கலேட்டரில் ஏறத் தெரியாத, செருப்பு அறுந்து கீழே விழுகிற, கணவனிடம் அடிவாங்குகிற நடுவயதுப் பெண்—ஒரு பிரெஞ்சுத் தத்துவ நூலைப் படிப்பாள் என்பதற்கான எந்த சமிக்ஞையுமே அவனுக்குக் கிடைக்கவில்லை.
இரவு ஒரு மணிக்கு ’ஜெய்’ ஜெயந்தியாக இருக்க சாத்தியமேயில்லை என்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை ஜெயசங்கர், ஜெயகுமார், ஜெயச்சந்திரன், ஜெயசூரியன், ஜெயபாரதி… யோசனையில் சிக்குற்றிருந்தவனுக்கு தூக்கம் வரவில்லை. காலையில் அம்மாவிடமே கேட்டுவிடலாமா? ஆனால் ஜெயந்தி என்று சொல்லிவிட்ட அம்மா இப்போது மட்டும் பயந்துபோய் மாற்றிக் கூறுவாளா என்ன? இரவு இரண்டு மணிக்கு ’ஜெய்’ ஜெயந்தியில்லை என்பது அவனுக்கு உறுதியாகிவிட்டது.
தூங்கினால்தான் எழுந்திருக்க? அம்மா ஆறு மணிக்கே எழுந்துவிடுவாள். பொதுவாக எல்லா அம்மாக்களையும் போல காலையில் டீ போடுவது அவள் வேலைதான். ஆறேகாலுக்கு சமையலறைக்குள் சென்றான்.
அம்மா அதற்குள் குளித்து முடித்திருந்தாள். ஈரத்தலையோடு இருந்தாள். புது நைட்டி போல. இப்போதும் அவள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். டீ நிரம்பிய கப்பை வலது கையில் பிடித்தபடி இடது கையால் மொபிலை உயர்த்தியபடி.
“அம்மா, எழுந்திட்டீங்களா, என்ன செல்ஃபியா” எனக் கேட்டுக்கொண்டே அருகே சென்றான். அவன் குரல் அவனுக்கே அபத்தமாக ஒலித்தது. “ஜெயந்திக்கா அனுப்பறீங்க?”
“ஜெயபிரகாஷுக்கு” என்றாள் அம்மா.
இரவு அந்தப் பெயர் அவனுக்கு நினைவில் வந்திருக்க வேண்டும்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
- உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
- கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
- குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
- சிறுகதை: அழகு - பெருந்தேவி
- சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
- குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
- குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
- பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
- போகாதே-பெருந்தேவி
- விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
- ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
- படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
- ஜானுவும் ராமும்- பெருந்தேவி
- நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
- துச்சலை- பெருந்தேவி
- கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
- பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
- 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
- அத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
- பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
- சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
- பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்