ஃபாகி பாட்டம் மெட்ரோவில் அவள் ஆரஞ்சு லைன் இரயிலைப் பிடித்தபோதே நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது. வியன்னா மெட்ரோ நிலையத்தில் இறங்கியபோது இரவு ஒரு மணி ஆகிவிட்டது. இரயில் நிலையத்துக்கு எதிர்ப்புறச் சாலையில் வேகமாக எட்டு வைத்தால் சில நிமிடங்களில் வீட்டுக்குப் போய்விடலாம். மாணவ உதவித்தொகையில் மாதக் கடைசியில் ஒரு வேளை காப்பி குடிக்கவே திண்டாட்டமாகிவிடுகிறது. இதில் டாக்ஸிக்கு வேறு கொடுத்தால் மாதக் கடைசியில், மூன்று வேளையும் சீரியல் உண்ண வேண்டிவரும். இரவு ஒரு வேளை உண்ணும் நல்ல உணவும் திண்டாட்டமாகிவிடும்.

வசந்தத்தை மொட்டவிழ்த்து மலர்த்திய ஏப்ரல் முதல் வாரக் காற்று. அவள் கையில் ஒரு பெரிய ப்ளம் கேக் இருந்தது. அவள் சிநேகிதியின் திருமணம் அன்று மாலை நடந்தது. அதற்குப்பின் ஓட்டலில் நடந்த பார்ட்டியில் நண்பர்களுடன் குடித்துக் கொண்டாடியதில் நேரம் போனதே தெரியவில்லை. பதினோரு மணி வாக்கில் கிளம்பும்போது சிநேகிதி அவள் கையில் ஓரடி விட்டத்தில் பெரிய ப்ளம் கேக்கை பிளாஸ்டிக்கில் சுற்றிக் கொடுத்திருந்தாள். இரண்டு நாட்கள் சாப்பாட்டுக்குக் கவலையில்லை என்று உள்ளுக்குள் மகிழ்ந்தபடி வாங்கிக்கொண்டாள். அவளுடைய அறையில் தங்கியிருக்கும் சின் யுங்குக்கு ப்ளம் கேக் மிகவும் பிடிக்கும். அவர்கள் மத்தியில் உணவுப் பரிமாற்றம் நடப்பதுண்டு.  நாளையோ மறு நாளோ அவள்  நூடில்ஸ் செய்யும்போது இவளுக்குத் தராமலிருக்க மாட்டாள்.

கடைசி இரயில் நிலையமான வியன்னா மெட்ரோ வெறிச்சோடியிருந்தது.  அவளோடு சேர்த்து மூவர் மட்டுமே இறங்கினார்கள். கனத்த புத்தகங்கள் இருந்த முதுகுப் பையோடு கேக்கைத் தூக்கி நடப்பது சற்று சிரமமாக இருந்ததால்,  கேக்கை பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் பெஞ்சில் வைத்துவிட்டு சற்று நின்றாள். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு நிமிர்ந்து பார்த்தால் அவளோடு இறங்கிய இருவர் எங்கோ மாயமாய் மறைந்துவிட்டிருந்தார்கள்.

இரயில் நிலையத்திலிருந்து அவள் ஒருத்திதான் வெளியே வந்தாள்.  அந்நேரத்திலும் ஜெகஜ்ஜோதியாக அத்தனை மின் விளக்குகள். ஆனால் இரவில் யாருமற்ற இடத்தில் எத்தனை விளக்குகள் எரிந்தாலும் அத்தனையும் கும்மிருட்டைச் சுட்டிக் காட்டி பயமுறுத்துவதாகவே எரிகின்றன. பழகிய இடம்தான், ஆனால் நடுராத்திரியில் இதற்குமுன் வந்திறங்கியதில்லை என்பதால் மனம் கொஞ்சம் பதறியது. சரி, பார்த்துக்கொள்ளலாம் என்று இரயில் நிலையத்தில் எதிர்ப்புறத்துக்கு வந்தாள்.

அப்போது மூன்று உருவங்கள் அவள் முன் தோன்றின.  இருவர் ஒரு பக்கத்திலிருந்தும் இன்னொருவர் எதிர்ப்புறத்திலிருந்தும் அவளை நோக்கி வந்தார்கள். அவள் பதறிப் போனாள். சில மாதங்கள் முன்புதான் அவளோடு படிக்கும் ஒரு பல்கலைக் கழக மாணவி அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத ஒரு நபரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டார். அது இந்த இரயில் நிலையத்துக்கு முந்தைய நிலையத்துக்கு அருகில்தான் அது நடந்தது. ஒரு நொடியில் அது அவள் நினைவில் வந்து போனது.

மூவரும் அவளை நெருங்கிவிட்டிருந்தார்கள். மூவரும் நெற்றியை  மூடிய வகையில் ஹூட் ஜாக்கட் அணிந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் வேகமாகக் கையை உயர்த்தியபோது அவள் சட்டெனக் கூறினாள்: “இன்று மாலை என் சிநேகிதியின் திருமணம், இந்த கேக்கை நீங்கள் வாங்கிக்கொண்டால் மகிழ்வேன்,” என்று கேக்கை நீட்டினாள்.  அந்த நேரத்தில் கையை உயர்த்தியபடி தாக்க வந்த முதலாமவனை அருகில் இருந்தவன் தடுத்தான். மூன்றாமவன் சிரித்துக்கொண்டே கேட்டான், “உன் சிநேகிதியின் திருமணத்துக்கு வேறென்ன தரப்போகிறாய்?” ”நான் ஒரு மாணவி. என்னிடம் இருபது டாலர் இருக்கிறது. ஒரு பழைய ஃபோன் இருக்கிறது,” என்றாள். பயத்தில் அவள் குரல் குழறியது. “கேக் பார்க்கச் சுவையாக இருக்கிறது,” என்றான் இரண்டாமவன். “அவள் பையைப் பிடுங்கு,” என்றான் முதலாமவன். அவள் முதுகுப் பையைக் கழட்டப் போனாள். “வேண்டாம், முதலில் இருபதை எடு,” என்று மூன்றாமவன் கையை நீட்டினான். “நல்ல பெண்ணாகத் தெரிகிறாள், இன்றிரவுக்கு கேக் போதும்” என்றான் இரண்டாமவன். முதலாமவன் எரிச்சலோடு அவளைப் பார்த்தபடி முணுமுணுத்தான்.  “உன் தோழிக்கு சிறந்த மண வாழ்க்கை கிடைக்கட்டும்” என்றான் இரண்டாமவன். மூன்றாமவன் கேக்கை வாங்கிக்கொண்டான். அவளைக் கடந்து மூவரும் விரைந்து சென்றார்கள்.

சில மீட்டர்கள் சென்றபின் அவள் திரும்பிப்பார்த்தாள். அதை எதிர்பார்த்ததைப் போல் இரண்டாமவனும் அதே நேரத்தில் திரும்பி அவளைப் பார்த்தாள். நட்பாகச் சிரித்தான். அவன் பற்கள் கோர்த்திருந்த மணிமணியான சின்னஞ்சிறு விளக்குகள் போல மின்னின. இவை வேறு, கும்மிருட்டைச் சுட்டிக் காட்டிப் பயமுறுத்தும் மின் விளக்குகள் இல்லை. அவள் தங்கியிருந்த வீட்டுக்கான, அத்தனை வெளிச்சமில்லாத சாலையில் அந்தக் குட்டி விளக்குகள் அவளோடு வருவது போலிருந்தது. ஒரு பழைய தமிழ்ப் பாடலை மெதுவாக விசிலடித்தபடி உற்சாகத்தோடு வேகமாக அவள் நடந்து போனாள்.