பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்

உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்

அவன் எழுபதுகளில் வாழ்ந்த கவிஞன். கதுப்புக் கன்னமும் சுருள்முடியும் நீள்நாசியும் கொண்ட அழகன். ஒரு பெண்ணைக் காதலித்தான். அவளிடம் சொல்லக்கூட இல்லை. கூச்ச சுபாவி. கவிதைகளில்கூட அவளைப் பற்றி நேரடியாகவோ, சுட்டியோ எழுத கூச்சம் தடுத்தது. தவிர, அவள் தன்னைக் காதலிக்க வேண்டுமென்பதைவிட, தான்கொண்ட காதலே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. எப்போதாவது அவன் பக்கம் வீசப்படும் அவள் பார்வை.  அது உயிருக்கு மாத்திரமின்றி இருப்புக்கும் ஊட்டம் தந்தது.

அவள் வழக்கமாகப் போகும் லைப்ரரிக்குத்தான் அவனும் செல்வான். கதை நடப்பது எழுபதுகளில் இல்லையா? அப்போது காப்பி கஃபேக்களில், பார்களில் சந்திப்பதெல்லாம் நடைமுறையில் இல்லை. லைப்ரரியில் யாரும் எடுக்காத புத்தகங்கள் நிரப்பப்பட்டிருந்த ரேக்குகள் இருந்த மூலையில் ஒரு நாள் மாலையில் இருவரும் எதிர்பாராமல் சந்தித்தனர். என்ன நடக்கிறதென்று எண்ணி முடிப்பதற்குள் அவள் அவன் கையைப் பற்றி உள்ளங்கையில் ஒரு முத்தமும் தந்துவிட்டாள்.

அந்த முத்தம் உலகத்தின் எல்லா இனிமையையும் ஒன்றாகத் திரட்டி அவன் கைக்குள் தந்ததாக இருந்தது. கவிஞன் என்பதால் நமக்கு அன்றாடத்தில் பழக்கமான மனிதர்கள் மாதிரி திரும்ப அவளை முத்தமிடவோ அல்லது அவளிடம் பேசவோகூட அவன் முற்படவில்லை. உடனடியாக ஒரு பஸ்ஸைப் பிடித்தான். முத்தம் கிடைத்த உள்ளங்கையால் பஸ் கம்பிகளைப் பிடிக்காமலும் டிக்கட் எடுக்க பர்ஸுக்கு அந்தக் கையை விட்டுத் துழவாமலும் அந்தக் கைமீது பேண்ட் பட்டு முத்த ரேகையை அழிக்காதிருக்க கையை உடலிலிருந்து பத்து செண்டிமீட்டர் தள்ளிவைத்துக்கொண்டும் இரண்டு பஸ்கள் மாறி பயணம் செய்து தன்னுடைய நண்பன் வீட்டுக்கு வந்தடைந்தான்.

அப்போது இரவு பத்து, பத்தரை இருக்கும். நண்பன் குடும்பி. இரவு உணவு முடிந்தபின் விளக்குகளை அணைத்துவிட்டு வெளிக்கதவைப் பூட்டிவிட்டு படுக்கத் தயாராகிக்கொண்டிருந்தான். கவிஞன் அந்த நேரத்தில் கதவைத் தட்டினான். கதவைத் திறந்தவனிடம் “பார், பார், இங்கேதான் பூத்தது அபூர்வமான அந்த ரோஜாப்பூ.” உள்ளங்கையைக் காட்டினான். “தொட்டுவிடாதே,” பதறினான்.

நண்பனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் கவிஞனுடைய குண ஆவேசங்கள் புரியுமென்பதால் “உள்ளே வா முதலில்” என்றான். கவிஞன் தன் நண்பனிடம் அவளைப் பார்த்ததையும் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தையும் நெக்குருகி ஒருவழியாகச் சொல்லி முடித்தான். அன்றிரவு முழுக்க அவன் தூங்கவுமில்லை. தெய்வத்தின் ஆளுகைக்குள் வந்துவிட்ட பகுதியாக அந்தக் கையைப் பார்த்துப் பார்த்துப்  பரவசமடைந்தபடியிருந்தான்.

கவிஞனின் நண்பன்தான் இச்சம்பவத்தை எனக்குச் சொன்னது. கவிஞன் இறந்துபோனபின் பத்து பன்னிரெண்டு வருடங்கள் சென்றுவிட்டிருந்தன. இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த கவிஞனின் நண்பன் அறுபது வயதைத் தொட்டிருந்தார். அவர் என்னிடம் இதைச் சொல்லி இருபத்தைந்து ஆண்டுகள் போய்விட்டன. ஆண்டுக் கணக்குகளை  முன் ஜாமீன் எடுப்பதைப் போலச் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. கவிஞனைப் பற்றித் தெரிந்த என் நண்பர்கள் சிலர் இக்கதையில் பிழைகளைக் காணலாம். வருடம் செல்லச் செல்ல நினைவுகள் புனைவுகளாகிவிடும் என்பதோடு இது வெறும் கதை, வெறும் கதையில் அவர்கள் நடந்த கதையைத் தேடக் கூடாது.

அன்று அன்று அவரிடம் விடைபெற்றுக்கொள்ளும்போது “அந்தக் கையை அப்புறம் என்னதான் செய்தார்?” என்று ஆவலுடன் கேட்டேன். ”அது இன்னொரு கதை. கையில் ரோஜாப் பூ பூப்பதைப் பார்க்கும் ஒருவனுக்கு என்ன நடக்குமோ அதுதான் நடந்தது.” கவிஞன் அல்பாயுசில் செத்துப்போனவன். சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தோம். பின்னர் அவர் நடந்ததைக் கூறினார்.

“அந்தப் பெண் வீட்டில் அவர்கள் காதலை ஏற்காததால் அவள் பிரிந்துபோனாள்.அவன் தொழில் நொடித்துப் போனது. அப்புறம் பல வருடங்களுக்குப் பின் ஒரு மாலை நேரத்தில் மெரினா கடற்கரைச் சாலையில் தன் தோழிகளோடு அவள் நடந்துவருவதைத் தூரத்திலிருந்து அவன் பார்த்தான். அவளைப் பார்த்த கணத்தில் அவன் வானத்தை நோக்கித் தன் கைகளை உயர்த்திக் கத்தினான். அன்றுதான் அவன் மனச் சிதைவு முதலில் வெளிப்பட்டது. அது முன்பே அவனுக்கு இருந்திருக்க வேண்டும்…”

எனக்கென்னவோ வானத்தை நோக்கி அவன் தன் கையை உயர்த்தியபோது அதில் பூத்திருந்த ரோஜாவை யாரோ பறித்துவிட்டார்கள் எனத் தோன்றியது. காலத்தின் ஒரு புள்ளியில் உறைந்துபோயிருந்த அவனது நினைவுகளின் சேகரமாக இருந்த அந்த ரோஜாவை நைஸாகப் பிடுங்கிக்கொண்டிருக்க வேண்டும்.  அவன் தற்கொலையை ஒரு பொல்லாத கை அந்தக் கணத்தில் நிர்ணயித்தபோது, அவன் விழப்போகும் கிணறு பெருமூச்செறிந்து நாட்களை எண்ணத் தொடங்கியிருக்கும்.

***

கொசு

சாப்பாட்டு மேஜையில் ஹாட் பேக்கில் எண்ணெய் இiல்லாத சப்பாத்திகளும் ஒரு கிண்ணத்தில் கீரை தாலும் இன்னொன்றில் தயிரும் வைக்கப்பட்டிருந்தன. வேலையை முடித்துவிட்டு சமையல்காரம்மா சென்றுவிட்டிருந்தாள்.

மேஜையில் நானும் அவளும் எதிரெதிராக உட்கார்ந்திருந்தோம். அறுவருக்கான மேஜை. இறந்துவிட்ட என் அம்மாவும் அப்பாவும் இந்த நாற்காலிகளில்தான் அமர்வார்கள். நானும் அவளும் அப்பாவை அடுத்திருக்கும் நாற்காலிகளில் அமர்வோம். எங்கள் மகனும் மகளும் எதிர்சாரியில் என் அம்மா அருகே அமர்வார்கள். பிள்ளைகள் இப்போது தூர தேசங்களில் வசிக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கொரு முறை வரும்போதும் எங்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட வாய்ப்பதில்லை.

அவள் மூன்று சப்பாத்திகளை எடுத்து தன் ப்ளேட்டில் போட்டுக்கொண்டாள். கீரை நான்கு கரண்டி ஊற்றிக்கொண்டாள். அவனுக்கு அருவருப்பாக இருந்தது. “ஒவ்வொன்றாகப் போட்டுக்கொள்ள மாட்டாள். தீனிப் பண்டாரம்.” அவள் ரொம்ப குண்டாக இருந்தாள். அங்கங்கே சதைகள் பிதுங்கின. “நாற்காலியில் ஒரு குண்டிக்குத்தான் இடமிருக்கும்” என்று முணுமுணுத்தான். அவனது நாற்காலியிலும் அவனது ஒரு குண்டிதான் இருந்தது. அவன் அதை உணராதவனில்லை. ஆனால் அருவருப்பு என்னவோ அடுத்தவர் குறித்துத்தான் தோன்றுகிறது!

இருவருக்கும் பேச எதுவுமில்லை. சப்பாத்தியை, கீரையை, தயிரை எடுக்கும் கரண்டிகள் பாத்திரங்களில் மோதும் சத்தம்,  கடகடக்கத் தொடங்கிவிட்ட பழைய மின்விசிறியின் சத்தம்.

அவன் கடைசிச் சப்பாத்தியைத் தின்னத் தொடங்கியபோது ஒரு பெரிய கொசு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவன் இடது கையால் அதை விரட்டினான். அவளிடம் அது சென்றது. அவள் இடது கையால் அதை விரட்டினாள். மீண்டும் அவனிடம் வந்தது. இப்படி நான்கைந்து சுற்றுகள் அது சுற்றிவந்தவுடன் அவன் பொறுமை மீறியவனாய், பாய்ந்து சென்று எதிரே ஹாலில் டீப்பாயின் மீதிருந்த கொசு பேட்டை எடுத்து வந்தான். அப்போது கொசு அவள் முகத்தருகே பறந்தது. அது அவள் கன்னத்தில் அமர்ந்த கணம், பேட்டால் ஒரு அடி நச்சென்று வைத்தான். கொசுவைக் காணோம். ஆனால் அவள் அலறினாள். ஒருவேளை லைட்டாக ஷாக் கூட அடித்திருக்கலாம்.

அவன் பேட்டை ஒரு நாற்காலியில் வைத்துவிட்டு மீண்டும் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் அது அவன் முகத்தருகே பறக்க ஆரம்பித்தது. விருட்டென்று எழுந்த அவள் அந்த பேட்டால் அதை அடித்த சமயத்தில் அவன் தாடையில் அது உட்கார்ந்திருந்தது. அவன் அப்போது அலறினான்.

அவள் மீண்டும் தன் நாற்காலியில் அமர்ந்தாள், இப்போது கொசு அவளிடம் ஈர்க்கப்பட்டு பறந்து வந்தது. என்ன நடந்திருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. திரும்ப அவனிடம் வந்தது.  திரும்ப அவளிடம். அலறல்கள் விட்டுவிட்டுத் தொடர்ந்தன.

பல ஆண்டுகள் கழித்து அந்த வீட்டில் அவன் குரலை அவளும் அவள் குரலை அவனும் இப்படித்தான் கேட்டுக்கொண்டார்கள்.

                **

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
 2. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
 3. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
 4. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
 5. சிறுகதை: அழகு - பெருந்தேவி
 6. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
 7. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
 8. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
 9. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
 10. போகாதே-பெருந்தேவி
 11. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
 12. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
 13. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
 14. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
 15. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
 16. துச்சலை- பெருந்தேவி
 17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
 18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
 19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
 20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
 21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
 22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
 23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்