புதுமைப்பித்தனுக்குச் சிலை

பெருந்தேவி

“கி.ராவுக்கு செல வைக்கப்போறாங்க, தெரியுமா?” என்றேன். வந்தவர் “ஆறி அவலாப் போயிருக்கு” என்று குறைசொல்லியபடி எடுத்துக் குடித்தார்.

“தெரியும், தெரியும், நைனாவே வந்து சொன்னாரு” என்றார்.

“அதென்ன, நீங்களும் நைனாங்கறீங்க. ஒங்களவிடச் சின்னவர் இல்லியா அவர்” என்று ஆட்சேபித்தேன்.

“செத்துப் போறப்ப என்ன வயசோ நிரந்தரமா அதான் வயசு” என்றார் கண் சிமிட்டியபடி.

“அப்போ நான் ஒங்களவிடப் பெரியவ?” என்று கடுகடுத்தேன்.

“பின்ன?” புன்னகைத்தார்.

“ஒங்களுக்கும் செல வைக்கணும்னு லஷ்மி மணிவண்ணன் சொல்லியிருக்காப்டி” என்றேன். அவர் எந்தக் காலத்தில் ஃபேஸ்புக்குக்கு வந்து லக்ஷ்மி மணிவண்னனைப் படிக்கப் போகிறார்? வர வர போட்டுவைத்த காப்பியைக் குடிக்கவே நேரத்துக்கு வர முடியவில்லை.

“வேறெதும் தொடுப்பு இருக்கும், அதான் வரலனு யோசிக்கிறியா?” புன்னகை மேலும் விரிந்தது.

நாம் ஒன்றை நினைக்கும்போதே ஆவிகளுக்குப் புரிந்துவிடுகிறது. நாம்தான் ஆவி என்பதை மறந்துவிடுகிறோம்.

“அது இருக்கட்டும், உங்களுக்கு எங்க செல வைக்கறதாம்? திருநெல்வேலினு  உங்கள தள்ளிகினு போயிருவாங்களோனு பதைபதைப்பா இருக்கு.”

“ஒன் நெனப்பு என்னவோ.”

“மகாமசானம் நடக்கற எடத்துல மவுண்ட் ரோட்ல நீங்க நிக்கணும். அந்த மாம்பழக் கூடைக்காரிங்க நின்ன எடத்துல. அதான் என் ஆசை.”

“அண்ணா சாலைனு சொல்லு. சரி, அங்க நின்னு?”

எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால், திருநெல்வேலிக்கு அவரை விட்டுக்கொடுப்பதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. முகம் வாட்டமுற்றதைப் பார்த்துவிட்டார் போல.

“நான் தான் பிரம்மா, சிருஷ்டிகர்த்தா. பிறகு எனக்கெதற்கு சிலை?”  கடுகடுத்த குரலில் நாடகீயமாகக் கேட்டார். “செல வைக்கக் கேட்டா இதச் சொல்லு.”

“சிருஷ்டித் தெய்வத்துக்கு கோயில்ல வைக்கறதில்லியா. அத மாதிரிதான்.” அவர் கதையிலிருந்து திருடிய வார்த்தைகள்.

“திதி தெவசம்னாட்டு மாலை, பத்தி ,சாம்பிராணி சடங்கு சாங்கியம். மத்த நாள்ள காக்கா எச்சம்.” வாய்விட்டுச் சிரித்தார்.

தமிழின் எதிர்காலம் அந்தச் சிரிப்பில் தெரிந்தது.

சிலை அப்படியொரு கம்பீரம்.

அந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன.

எங்கள் முன்னோடி, எங்கள் முன்னோடி என்ற எதிரொலிப்பு. நூற்றுக் கணக்கில் தொடங்கிய சாயைகள் லட்சக் கணக்கில் பெருகுகின்றன.

”ஆயிரம் காப்பிக்கு மேல போட்டிருக்கக்கூடாது. ஐம்பது பெர்சண்ட் டிஸ்கவுண்ட் கொடுத்தாலும் போகமாட்டேங்குது.” பின்னட்டையில் வேறெங்கோ பார்க்கும் புதுமைப்பித்தனை முறைத்துக்கொண்டிருந்தார் தென் தமிழகத்தில் ஒரு பதிப்பாளர். “வெறைப்புக்கு ஒண்ணும் கொறைச்சலில்ல.”

2. கழுவேற்றப்பட்டவள்

பெருந்தேவி 

கொஞ்சம் கொஞ்சமாக அவள் இறந்துவிட்டதும் மேல் லோகத்துக்கு வந்து சேர்ந்திருப்பதும் அவளுக்குப் புரிபடத் தொடங்கியது. அவள் ஒரு சிறிய மரக் குச்சியின்மீது அமர வைக்கப்பட்டிருந்தாள். குச்சி வினோதமான வண்ணத்தில் திரவமிருக்கும் ஒரு கோப்பைக்குள்ளிருந்தது. கோப்பை முக்கால் பங்குக்கு நிரம்பியிருந்தது. அல்லது அவள் அப்படி நினைத்துக்கொண்டாள். கீழே குனிந்து பார்க்க பயமாக இருந்தது. தான் உருண்டையாக வழவழப்பாக இருப்பதையும்  காக்டெயில் ட்ரிங்கில் செர்ரியாக வைக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்துகொண்டாள். கண்ணை உருட்டி உருட்டிப் பார்த்தாள். கையில் கோப்பையை வைத்திருந்தவர் ஆழ்ந்த யோசனையில் இருந்தது போலிருந்தது.

இவர் கடவுளாக இருக்க வேண்டும். தான் எதற்காகக் கழுவேற்றப்பட்டிருக்கிறோம் என்று அவளுக்குப் புரிபடவில்லை. அன்பே உருவான கடவுள் எதற்குக் கழுவேற்றப் போகிறார், ஒருவேளை இது யமனோ, எருமைமாட்டைத் துரத்திவிட்டுவிட்டு அவர் நவீனமான விஷயமே பூமிக்கு வரவில்லையே.

அவள் தொண்டையைக் கனைத்துக்கொண்டாள். அவள் கனைத்துக்கொண்டது அவருக்குக் கேட்கவில்லை. அவரது பிரம்மாண்டமான உதட்டுக்கு அருகில் தான் ரொம்பச் சின்ன பூச்சியாக இருப்பது புரிந்தது. எத்தனை பூச்சிகள் இப்படி நம்மைப் பார்த்துக் கனைத்திருக்கும்? நாம் காதுகொடுத்து கேட்டோமா என்ன?

கையில் கோப்பையை வைத்திருந்தவர் உதட்டை அசைத்தார். யாரிடமோ பேசினார். அவளுக்குப் புரியாத மொழி. உதட்டுக்கு வெகு அருகே என்பதால் பெரும் இரைச்சலாக வேறு இருந்தது. பேசி முடித்தவர் கோப்பையைக் கையில் வைத்தபடியே இருந்தார். புகைப்படத்துக்கு ஏதும் போஸ் கொடுக்கிறாரோ? சற்றுப் பொறுத்து தலையாட்டிக்கொண்டவர் கோப்பையை மேஜையில் வைத்துவிட்டு எழுந்து சென்றார்.

இப்போது குச்சி கோப்பையின் எதிர்ப்புறத்துக்கு வந்து விட்டிருந்தது. நல்ல பெரிய அறை. அறையா என்றுகூடத் தெரியவில்லை முடிவில்லாமல் போய்க்கொண்டிருந்தது. கண்ணைச் சுழற்றிப் பார்த்தாள். எல்லாப் பக்கமும் அறையின் பரிமாணம் நீண்டுகொண்டே சென்றது. மயக்கம் வரும்போலிருந்தது. கண்ணை மூடிக்கொண்டாள்.

மயக்கத்தின் நடுவிலும் அவளுக்கு ஒன்று புரிந்தது. கடவுள் ஓரளவுக்கு அன்பானவர்தான். அவள் குச்சியில் செருகப்பட்டிருந்த போதிலும் குதத்துக்கு ஒரு குஷன் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் கடவுளே தன்னை ஒரு செர்ரிப் பழமாக காக்டெயிலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் சும்மாவா?

கடவுளின் பற்களில் அரைபடுவதற்குள் இப்படி நூறு முறை தன்னைக் குறித்து அவள் பெருமைப்பட்டுக்கொள்ள நேரமிருந்தது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
 2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
 3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
 4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
 5. சிறுகதை: அழகு - பெருந்தேவி
 6. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
 7. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
 8. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
 9. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
 10. போகாதே-பெருந்தேவி
 11. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
 12. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
 13. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
 14. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
 15. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
 16. துச்சலை- பெருந்தேவி
 17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
 18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
 19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
 20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
 21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
 22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
 23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்