பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்

கண்ணிலே என்ன உண்டு?

நாங்கள்  மௌனித்திருந்தோம். லேப் திறக்க இன்னும் நேரமாகும். திறந்துவிட்டால் அதன் பின்னர் நள்ளிரவு வரை வேலை தொடரும். நள்ளிரவுக்குப் பின் கதவை இழுத்திச் சாத்தும் வரை எங்கள் பதிவுகளை எங்களிடமிருந்து எடுக்கும் வேலை தொடரும்.

‘வேலை’ என்கிறேன். உண்மையில் நடப்பதென்னவோ பறிமுதல்.

எங்கள் காட்சிகளைப் பறித்து வேறேதோ இடங்களில் ஒட்டுவதே இங்கே நடப்பது.

எங்கள் காட்சிகள் என்றால் நாங்கள் கண்டவை. நாங்கள் கண்கள்.

ஒவ்வொரு கண்ணாடிக் குடுவையிலும் பழுப்பு நிறத் திரவத்தில் ஜோடியாக இருக்கிறோம். எங்களை வைத்திருந்தவர்கள் இறக்கும் தறுவாயில் அல்லது இறந்தவுடன் பறிக்கப்பட்டு குடுவையில் இடம்மாற்றப்பட்டிருக்கிறோம். விழிமாற்று அறுவைச் சிகிச்சைக்கான தேவையெல்லாம் முடிந்துவிட்ட காலத்தில், கோலிக்குண்டுகள் கணக்காகக் கண்கள் சந்தையில் கிடைக்கும் காலத்தில் என்றாலும் எங்கள் மதிப்பு இந்த மட்டுமாவது உள்ளது. அதாவது நாங்கள் கண்ட நாள் முதல் பதிந்துகொண்ட காட்சிகளுக்கான மதிப்பு.

ஒரு கேள்வி வரலாம். காட்சிகளைக் கண்கள் கண்டாலும் பதிவதென்னவோ மூளைதானே, கண்கள் வெறும் உறுப்புதானே எனலாம். ஆனால் இப்போது விஞ்ஞானிகள் வேறொன்றைச் சொல்கிறார்கள். மூளைக்குள் கடத்தப் படுவதற்குள் எங்களிடமும், எங்கள் கருந்திசுப் பரப்புக்கு அடியில் தடமாக ரேகையாக காட்சி பிம்பங்களாகச் சேகரமாகும் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் உங்கள் தர்க்கக் கணக்குக்குள், இன்று நீங்கள் புரிந்துகொண்டிருப்பதற்குள் அடங்காது. இல்லாவிட்டால் குடுவைக்குள்ளாவது கண்களாவது அடைபட்டிருப்பதாவது என்று கதையிலிருந்து இந்நேரம் நகர்ந்திருப்பீர்களே!

  எங்கள் தடம் மசமசத்த ஒரு பிரதேசத்திலிருந்து தொடங்குகிறது.  வெடிப்புப் பூவாகப் பூத்த பெண் உறுப்போ மருத்துவமனையின் டிஸ்டெம்பர் உதிர்ந்துகொண்ட சுவரோ, இவை இவைதாம் எனப் பின்னாளில் நாங்கள் அறிந்தது. பிறந்த சில மாதங்களுக்குப் பின் மஞ்சள் கொழகொழப்பு, மலம் என்று இதையும் பின்னால்தான் தெரிந்துகொண்டோம். சற்றுப் பின் எங்களை எங்களைப் போன்ற ஒரு ஜோடிக்குள் பார்த்த கணம். ஐயோ, அவை நாங்கள் இல்லையா! எங்கள் அம்மாவின் கண்கள் எங்களுடையவை அல்ல. அப்போது தெரிந்துகொண்டோம். பதைப்பில் மூடிக்கொண்டோம். பின் ஒவ்வொரு உறுப்பையும் பார்த்துத் தெரிந்துகொண்டோம். கால், கை, வயிறு, முட்டி, பெயர்களெல்லாம் அப்போது தெரியாது. வெறுப்பையும் மோகத்தையும் கோபத்தையும் தாபத்தையும் சங்கடத்தையும் அச்சத்தையும் இவை போன்ற பல உணர்வுகளைக் காட்ட, பிரதிபலிக்கக் கற்றுக்கொண்டோம். இளமையில்  மதமதப்பு, இளம் முதுமையில் நாசுக்கு, முதுமையில் ஏமாற்றம், முதுமை முற்ற விரக்தி,  சமயத்தில் ஆசை, எப்போதுமே அச்சம். கடைசியாக அந்த நிறுத்தம். இரண்டு அச்சப் புள்ளிகளே நாங்களாகத் தங்க.

எங்கள் பதிவுத் தடங்களை ஒரு ரெகார்டரிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுவதாக சல்லிசாக மாற்றுகிறார்கள் எனப் புரிந்தது. பக்கத்துக் குடுவையில் ஜோடிக் கண்கள் நேற்று வரை பேசிக்கொண்டிருந்தவை. இன்று உயிரற்றதிலும் உயிரற்று கிடக்கின்றன. நாளையோ நாளை மறுநாளோ எங்கள் தடங்களும் எங்களிடமிருந்து மாற்றப்பட்டுவிடும். முழுக்க அகற்றப்பட்ட பின் குடுவையில் கொஞ்ச நாள். பின் குப்பையில் கொட்டப்பட்டுவிடுவோம்.

எங்களிடமிருந்து மடைமாற்றிய காட்சிகளை வேறு கண்களுக்கு மாற்றுவதாக லேப்பில் பேசிக்கொண்டிருந்ததை நேற்று கேட்டோம். நேற்றிரவு லேப் பூட்டப்பட்டதற்குப் பிறகு யாருடைய கண்கள் இதனால் பயன்பெறலாம் என எங்கள் பின்வரிசையில் அமர்ந்திருக்கும் குடுவைகளோடு விவாதித்துக்கொண்டிருந்தோம். எங்கள் காட்சிப் பிம்பங்கள் எல்லாம் ஹார்மோன்கள் உதவியால் ஒரு வயதுக்குள்ளாகவே வளர்ந்தவர்களாகிவிடுபவர்களுக்கு மாற்றப்படுவதாக ஒரு ஜோடிக் கண்கள் கூறின. பிறந்தவுடன்  நாட்டின் ஆட்சியாளர்களாக வேண்டி, அதற்கான தகுதியை வளர்க்கவோ, வளரவோ நேரம் தராமல்,  அனுபவங்களை எல்லாம் உடனடியாக ஸ்வீகரிக்கச் செய்யப்படும் ஏற்பாடு என்றும் அவை அலுத்துக்கொண்டன. இன்னொரு கண் ஜோடியோ எங்கள் காட்சிகளை ரோபோக்களுக்குள் மாற்றுகிறார்கள் என யூகித்தது. ரோபோவின் மனிதத் தன்மையைக்  கூட்டுவதற்கு, மனித அனுபவங்களை அவற்றுக்கு நிதர்சனமாக்குவதற்கு என்று அது காரணம் கூறியது.

பின்வரிசையில் சற்றுத் தள்ளியிருந்த குடுவையில் இருந்த ஜோடி சொன்னதுதான் எங்களுக்குச் சற்று சங்கடத்தைத் தந்தது. எங்களிடத்தில் சேகரமான காட்சிகள் மிருகங்களுக்கு மாற்றப்படுவதாகத் தெரிவித்தது அந்த ஜோடி. மனிதக் கண்களில் பதிந்த உணர்வுத் தடங்கள் மிருகங்களுக்கு மாற்றப்படும் பரிசோதனைகளே அந்த லேப்பில் நடப்பதாகவும் அந்த ஜோடி கூறியது. வழக்கமாக அபூர்வமாகவே எங்கள் உரையாடலில் பங்குபெறும் ஜோடி அது. ஆன்மிக ஞாபகமோ என்னவோ எப்போதும் செருகியபடியே காட்சி தரும் ஜோடி. அதன்பால் இதர ஜோடிக் கண்களிடத்தில் நிரம்ப மரியாதை உண்டு. எனவே அதன் வார்த்தைகளை எல்லாரும் மரியாதையோடு கவனித்தோம்.

அதன் பேச்சைக் கேட்டபின் எங்களிடத்தில் ஆழமாகச் சேகரமான ஒரு பிம்பம்  சங்கடத்தை உண்டுபண்ணியது. வருடக் கணக்கில் காதலோடு பார்த்த ஒரு பெண் மெல்லிய ஆடை அணிந்தபடி வேறொருவனோடு ஒரு ரெஸ்டரண்டில் நெருக்கமாக அமர்ந்திருந்தபோது அவளது முலையைக் கவ்வி, சாய்த்து வன்புணர வேண்டும் என்ற ஆசையில் சேகரமான பிம்பம். மிருகம் என்று மனக்குரல் கண்டிக்க அவளிடமிருந்து திருப்பப்பட்டோம். ஒரு முறை அல்ல, பல முறை. ரெஸ்டரண்ட் மட்டுமில்லை. பல இடங்கள். அந்தப் பிம்ப நினைவு நிஜமாகவே ஒரு மிருகத்துக்கு, புலிக்கோ ஓநாய்க்கோ எலிக்கோ, மாற்றப்பட்டால்? உருவகமாகப் பொய்யாகக் கூறப்படுவது அந்த மிருகத்தின் குணமாக உண்மையிலேயே ஆகிவிட்டால்?

ஆனால் நாங்கள் ஆறுதல் கொள்ள ஒன்றுள்ளது. எங்கள் சங்கடமெல்லாம் நாளையோ நாளை மறுநாளோ குடுவைக்குள் இருக்கும் வரைதான்.

*********

உன்னைப் போல் ஒருவன்

அச்சு அசலாக உன் குரல் தொனிக்கிறது அவன் குரலில். இதெல்லாம் எப்படிச் சாத்தியமெனப் புரியவில்லை. உன்னைச் சந்திப்பேன் என்று நினைத்தேனா என்ன? நாம் சந்தித்தது, பழகியது எல்லாம் இன்னும் வினோதமாக இருக்கிறது.  உன்னைப் போல ஒருவனை மீண்டும் சந்திக்க முடியும் என்றால்? ஒரு வினோதம் தன்னைப் பிரதியெடுத்துக் கொள்ளும்போது எப்படி வினோதமாக இருக்க முடியும்? அவன் குரலைக் கேட்டு முதலில் நான் அதிர்ந்துதான் போனேன். உன் குரலைப் போலவே குழைந்த நளினம். உச்சரிப்பில் கடைசி எழுத்துகளின் விடுபடல். ஏதோ நினைப்பில் யாருடனோ பேசுவதாகப் பேச்சு. திடீரெனக் கொக்கி போட்டிழுப்பதாகச் சிரிப்பு.

தொடர்ந்த உரையாடல்களில் அவன்தான் பேசினான். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். ”பதில் சொல்லமாட்டீங்களா?” என் மௌனத்தில் நீ இருப்பதை  எதற்குக் காட்ட வேண்டும்?

அவனை முதன்முதலில் பார்த்தது என் வீட்டருகேதான். ஒரு மாலில். ரெடிமேட் கடை ஷோ ரூமில். அதற்கெதிரே மினி சரவண பவன் ஓட்டலிருந்தது. அன்று மாலுக்குச் செல்வதற்கு என்னை நன்கு தயார் செய்துகொண்டேன். உனக்குப் பிடித்த மாதிரி தொங்கல் காதணிகளை அணிந்துகொண்டேன். உனக்குப் பிடித்த மாதிரி அழுத்தமான நிறத்தில் நகப்பூச்சு இட்டுக்கொண்டேன். உனக்குப் பிடித்த மாதிரி கண்ணில் மை வரைந்துகொண்டேன். சிறிய குருவி வால். அவன் கைக்கு எட்டாத படிக்குச்  சிறியது.

நீ ஆச்சரியப்படுவாயா என்று தெரியாது. உன் நிறம்தான் அவனுக்கும். குட்டி கோன் ஐஸை நினைவூட்டும் கூரிய மூக்கு. சிரிக்கின்ற கண்கள். அதே குள்ளமுமில்லாத உயரமுமில்லாத உயரம்.

வலக்கண் புருவத்துக்கும் காதுக்கும் இடையில் அதேபோன்ற சிறிய ஓவல் வடிவ மச்சம். எப்படிச் சாத்தியம்?

இன்றும் மாலில்தான்.

அவன் பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தான்

“அஞ்சு நிமிஷம்தான் லேட்.” சிரித்தான்.

உன்னைப் போலவே தளுக்கு. அரை மணி நேரத்தை ஐந்து நிமிடமாக நம்ப வைக்கும் சாதுரியம். அந்தப் பெண் பதிலுக்குச் சிரிக்கிறாள்.

“வேறு யார்ட்டயாவது சொல்லு. நம்புவாங்க.” அவள் கண்ணில் மை. நீளமான குருவிவால். லேசாக முயன்றால் பிடித்துவிடலாம்.

அவனை நான் உற்றுப் பார்ப்பது அவளுக்குத் தெரிந்துவிட்டதோ? அவர்கள் காதலில் சிக்கலை உண்டுபண்ணிவிடக் கூடாது. மெல்ல அங்கிருந்து எதிர்ப் பக்கமாகப் படிக்கட்டை நோக்கி நகர்கிறேன்.

என் முதுகின்மீது அவன் கண்களை உணர முடிகிறது.

“சேச்சே. வேறு யாரு ஒன்ன மாதிரி என்ன நம்பப் போறாங்க?” அவன் குரலை உயர்த்துகிறான்.

திரும்பிப் பார்க்கிறேன். கருகருவென நறுக்கு மீசை. உன்னைப் போலவே.

இல்லை. நீயேதான்.

”உட்கார்ந்திருக்கறது இங்க என்னோட. ஆனா ஒன் கவனமெல்லாம் வேறெங்கியோ.”

என் குரலில் சிடுசிடுப்பு ஏறுகிறது. நீ முகம் கறுக்கிறாய். உன் கவனம் வேறெங்கோ செல்வதும் நான் சிடுசிடுக்கத் தொடங்கிவிட்டதும். இது வெகுநாளைக்கு நல்லபடியாகத் தொடரப்போவதில்லை. நாம் பார்த்துக்கொள்ளாத காலம் சீக்கிரத்திலேயே வரும்.

கண்ணைக் கணம் மூடித் திறக்கிறேன். அலைபேசி ஒலிக்கிறது.

”நான்தா பேசறேன்…” அச்சு அசலாக உன் குரல் தொனிக்கிறது.

**

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
 2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
 3. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
 4. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
 5. சிறுகதை: அழகு - பெருந்தேவி
 6. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
 7. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
 8. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
 9. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
 10. போகாதே-பெருந்தேவி
 11. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
 12. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
 13. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
 14. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
 15. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
 16. துச்சலை- பெருந்தேவி
 17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
 18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
 19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
 20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
 21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
 22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
 23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்