பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்

குழந்தையின் இருமல்

அவன் நண்பன்—அவன் ஒரு மருத்துவன் – தன் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு எட்டுமாதக் குழந்தையின் இருமலைப் பற்றி அவளிடம் தொலைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தான். “நாலு நாளா அப்டி இருமுது, வார்டுக்குள்ள நுழையவே கஷ்டமா இருக்கு.” சின்னக் குழந்தை இருமும் என்று  தெரியும், ஆனால் குழந்தைக்கு அப்படித் தொடர்ந்து இருமுவதற்கு அதன் உடலில் வலு இருக்குமா என்ற கேள்வி அவளுக்கு வந்தது. “குழந்தையால எப்படி நாள் கணக்கா தொடர்ச்சியா இரும முடியும்?” என்று அபத்தமாகக் கேட்டு வைத்தாள். “நீங்க வேற, அது முழு ஆள் மாதிரி இருமுது. கண்ணெல்லாம் பிதுங்கி வெளிவரா மாதிரி இருமல், மூக்கு செவந்து. இருமலுக்கு நடுவுல ஒரு நிமிஷம் விடாம அழுகை” என்றான். ”அதற்கு கதீட்டர் போட்ருக்கோம். குழந்தை இருமறப்ப சமயத்தில யூரினை ஹோல்ட் பண்ணிடும். அது இன்னொரு பிரச்னை.” அதற்கு மேல் அவளுக்கு அவன் பேசியது எதுவும் காதில் விழவில்லை.

செத்துப்போய்விட்ட அவள் அம்மாவுக்கு சளியில்லாத தொடர் வறட்டு இருமல் இருந்திருக்கிறது. பொட்டலம் பொட்டலமாக வீட்டில் கடுக்காய் கிடக்கும். கடுக்காய்த் துண்டை வாயில் அடக்கிக்கொள்வாள். இருமல் மருந்து சிரப் வாங்கக்கூட குடும்ப வருமானம் அப்போது ஒத்துழைக்கவில்லை. அம்மா இருமும்போது அவள் கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் கண்ணீரும் தண்ணீருமாய் வரும். சுங்கிடிப் புடவையின் முந்தியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு இருமுவாள். தன் வாழ்க்கையிலிருந்த வறட்சியைத்தான்  இருமி இருமி வெளியே தள்ள அவள் முனைகிறாளோ என்று தோன்றும். சமயத்தில் அவள் இருமும்போது உள்பாவாடையில் மூத்திரம் கசிந்துவிடும். இருமியபடியே பாத்ரூமுக்கு ஓடிப் போவாள்.

அவள் அம்மா ஒரு முழு ஆள். ஆனால் குழந்தை அப்படியில்லை.  அவள் அம்மாவைப் போன்ற  முழு ஆளுக்கு  அமைந்து, பிறகு வறண்டுபோய் ஏமாற்றிவிடக்கூடிய எந்த வாழ்க்கையும் இதுவரை அதற்குக் கிட்டவில்லை.  முழு ஆளுக்கான எந்தச் சுகத்தையும் சோகத்தையும் குழந்தை அனுபவித்திராதபோதும் முழு ஆளைப் போல அதுவும் எதையோ வெளியே தள்ளப் பார்க்கிறது. சின்ன நெஞ்சிலிருந்து  இருமித் தள்ளி அத்தோடு போராடுகிறது. ஒரு முழு ஆளுக்கான இருமலை, வாழ்க்கையையே தொடங்காத ஒரு குழந்தை இருமுவது அநீதி என்று அவளுக்குப் பட்டது. ஆனால் இந்த அநீதிக்காக யாரிடம் போய் முறையிட முடியும்?

இதையெல்லாம் நினைத்தபடி அவள் இரவு முழுக்கத் தூங்காமல் உட்கார்ந்திருந்தாள். ஒரு குழந்தை எப்படி முழு ஆளைப் போல இரும முடியும் என்பது  அவளுக்குப் புரிபடவில்லை.

ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?

நகரத்தில் நோய்த் தொற்று அபாயம் அதிகரித்தது.  லட்சக்கணக்கானவர்களோடு கைகோர்த்தபடி மரணத்தின் விளிம்பில்  நின்றுகொண்டு உள்ளே எட்டிப் பார்ப்பதைப் போலத் தோன்றியது கல்பனாவுக்கு.  எந்த நேரத்திலும் உள்ளே தள்ளப்பட்டு விடலாம்.

மரண பயத்தில் இருப்பவருக்கு அவர் உயிரை அதன் முளையில் இழுத்துக் கட்டிவைப்பதாக ஒன்றுதான் இருக்கிறது. அவர் மீது அடுத்தவர் வைத்திருக்கும் பிரியம் பற்றிய நிச்சயம்தான் அது. கல்பனாவுக்குத் தன் காதலனுக்குத் தன்னிடம் பிரியம் உண்டா இல்லையா என்பதைப் பற்றிச் சந்தேகம் வந்தது. நேர்ப்பேச்சில் கேட்டால் சிரிப்பான்.  இதற்கெல்லாம் வாட்ஸ் அப்தான் ஒரே வழி.

கல்பனாவின் காதலனுக்கு ஒரு பழக்கம் இருந்தது.  அவனிடம் ஆமாம், இல்லை என்ற பதில்களில் ஒன்றைக் கூறச் சொல்லிக் கேட்டால்,  ஆமாம் என்பதற்கு இல்லை என்பான். இல்லை என்பதற்கு ஆமாமுக்கும் இல்லைக்கும் இடைப்பட்ட விதத்தில் குழப்பிச் சொல்வான்.  ஆமாமுக்கும் இல்லைக்கும் நடுவில் அவன் தத்தளித்தால் மட்டுமே ஆமாம் என்பான். மேலும், பெரும்பாலான சமயங்களில் இப்படிப் பதில் சொல்வது அவன் வழக்கமென்றாலும், விதிவிலக்காக மேற்படி பதில்கள் அப்படியே தலைகீழாகி விடுவதும் உண்டு.

எனவே நேரடியாகக் கேட்டால் மனக்குழப்பமே மிஞ்சும் என்பதால் சுற்றி வளைத்து அவனுக்கு ஒரு மெசெஜைத் தட்டிவிட்டாள்.

“பிரியமானவர்கள் சேர்ந்து வாழ முடியாவிட்டாலும் சேர்ந்து சாகிறார்கள். நாம்?”

அவன் உடனடியாக ஒரு மெசேஜை அனுப்பினான்:

“சேர்ந்து வாழ்கிறோம். சேர்ந்து சாகிறோம்.”

கல்பனா அதை வாசித்தாள். முதலில் அவள் முகம் இருண்டது. அவன்  இப்போது கல்பனாவோடு வாழவில்லை, வேறொருத்தியோடு வாழ்கிறான். தான் இப்போது சேர்ந்து வாழ்பவளோடுதான் சேர்ந்து சாகப்போகிறேன் என்று அவன் தெரிவிக்கிறானோ என்று அந்த மெசேஜ் முதல் வாசிப்பில் அர்த்தம் தந்தது.

அதே நேரத்தில், இரு வாக்கியங்களுக்கும் இடையே ஒரு முற்றுப்புள்ளி இருந்தது. கல்பனா அந்த முற்றுப்புள்ளியைச் சில நொடிகள் உற்றுப்பார்த்தாள். அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் புள்ளி விரிந்து நீண்டு ஆழம்கொண்டு தாண்ட முடியாத ஒரு அகழியாக வாக்கியங்களுக்கு நடுவே ஓடியது. மீண்டும் ஒரு முறை சத்தமாக அந்த மெசேஜை வாசித்தாள், ”சேர்ந்து வாழ்கிறோம். பீரியட். சேர்ந்து சாகிறோம்.”

அவனிடமிருந்து வந்த மெசேஜுக்கு வேறொரு அர்த்தத்தை பீரியட் இப்போது தந்தது. அவன் வேறொருத்தியோடு சேர்ந்து வாழலாம். பீரியட். அந்த வாழ்க்கை முடிந்துவிட்டது. இப்போது கல்பனாவோடு சேர்ந்து சாகப் போவதாக அவன் சொல்கிறான்.  இந்த வாசிப்பு கல்பனாவுக்குத் திருப்தியைத் தந்தது. தன் முந்தைய வாசிப்பு பிழைபட்ட வாசிப்பு என்று பட்டது. சேர்ந்து சாகிறோம் என்ற வாக்கியத்தை அவளுக்கானதாக மட்டும் அர்த்தப்படுத்திக்கொண்டதன் மூலம் தன் காதலனின் பிரியத்தை  அவள் உறுதிப்படுத்திக்கொண்டாள்.

கல்பனாவைப் பொறுத்தவரை பிடித்த வாசிப்பு என்பதற்கும் சரியான வாசிப்பு என்பதற்கும் பெரிய வித்யாசமில்லை. மேலும் இரண்டும் ஒன்றாக இருந்து பிரியத்தை உறுதிப்படுத்தும்போது  சாவதற்கு அவள் அச்சப்பட வேண்டியதில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
 2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
 3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
 4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
 5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
 6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
 7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
 8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
 9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
 10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
 11. போகாதே-பெருந்தேவி
 12. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
 13. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
 14. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
 15. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
 16. துச்சலை- பெருந்தேவி
 17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
 18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
 19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
 20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
 21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
 22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
 23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்