பயணம்: பாடம்
துறவிகளுக்கே உரிய ஆடை, உடல்மொழி, முகபாவங்களோடு, துறவிகளுக்கே இருப்பிடமாகக் கருதப்படும் குகையொன்றில் குரு அமர்ந்திருந்தார். ஆண்மையையும் பெண்மையையும் மறக்கடிக்கும் தேஜஸ். தன் சீடனிடம் ஒரு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும்விதத்தைப் பற்றி அறிவுறுத்திக்கொண்டிருந்தார்.
“பயணத்தில் கால்களைவிடவும் செவிகளுக்கும் கண்களுக்கும் வேலை அதிகம். பார்க்க வேண்டிய நேரத்தில், இடத்தில் பார்ப்பது, கேட்க வேண்டிய நேரத்தில், இடத்தில் செவிகூர்வது நல்லது. ஆனால், அதை விடவும் பார்க்க வேண்டாத நேரத்தில், இடத்தில் பார்க்காதிருப்பது, கேட்க வேண்டாத நேரத்தில், இடத்தில் செவிகூராதிருப்பது சிறப்பு. புரிகிறதா?”
சீடன் பதில்சொல்ல வாயைத் திறந்தான். குரு அவனைச் சைகையால் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்.
“எந்தக் கேள்வி தன்னிடம் பதிலுக்காகக் கேட்கப்படுகிறது, எது இல்லை என்று தெரிந்துகொள்வது பயணத்துக்கான தயாரிப்பில் அவசியம். அது தெரியும்வரை பயணி பதிலளிக்கப் பழகிக்கொள்ளாமலிருப்பது அவனது தலையைக் காக்கும்.”
சீடன் தலையாட்டவில்லை.
பயணம்: அறிவுரை
ஒரு பாட்டி நரம்பு தெரியும் மெலிந்த விரல்களால் தன் பேத்தியின் தலையைத் தடவியபடி சொன்னாள்:
நினைவிலிருத்திக் கொள். எப்போதும் நாம் இங்கே இருந்து அங்கே செல்கிறோம். உன் கணவனோடு மட்டும் நீ தனியாக வசித்தாலும் சரி, உன் கணவன் இங்கே உன் தாய் தந்தை வீட்டில் வசிக்க வந்தாலும் சரி, திருமணம் என்றாகிவிட்டால் நீ இங்கே இருந்து அங்கே போகிறாய். இங்கே இருந்து அங்கே செல்லும் உன் மனதில், இங்கே இருந்து அங்கே சென்ற என்னை, உன் தாயை, உன் அத்தையைப் போன்றவர்கள் எங்கே இருந்தாலும் இருக்கப் போகிறோம். இங்கே இருந்து அங்கே சென்றிருப்பதை ஒவ்வொரு கணமும் நினைவூட்டியபடியே. எங்கேயும் செல்லாமல் அங்கே வாழ்பவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வதும் இங்கே இருந்து அங்கே செல்பவர்கள் இறந்த காலத்திலும் வாழ்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. எதிர்காலம் என்ற ஒன்றுக்காக.
பேத்தி பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.
எதிர்காலம் என்ற ஒன்றுக்காக இங்கே இருந்து அங்கே செல்லும்போது எதற்காக இங்கே இருந்து அங்கே போகிறோம் என்று கேட்காமலிருப்பதே … நான் எதற்கு பேசிக்கொண்டே போகிறேன்? நீயோ நல்ல பெண், அப்படி எதையும் கேட்க நீ வாய் திறக்கவுமில்லை.
பேத்தி நல்ல பெண்ணாகப் பாட்டியின் உள்ளங்கைகளை எடுத்துத் தன் விழிகளை அவற்றால் பொத்திக்கொண்டாள்.
பயணம்: சுற்றறிக்கை
பயணத்தை நினைத்த உடனே தொடங்கிவிட முடியாது. அதற்கென்று மூன்று விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பின்பற்றக் கடினமான விதிகள். தொடர்ந்து பின்பற்றும்போது இன்னும் கடினமாக உணரப்படுபவை.
விதி ஒன்று: புறப்பட்ட இடத்தைத் திரும்பிப் பார்க்கக்கூடாது. கண்களால் மட்டுமல்ல, எண்ணத்தினாலும்தான்.
விதி இரண்டு: சேரும் இடத்தைப் பற்றித் திட்டமிடக்கூடாது. திட்டம் என்பது தெளிவான புள்ளிகள் எதுவுமில்லாத மங்கலான படலம் போன்ற எதிர்பார்ப்பையும் உள்ளடக்கியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
விதி மூன்று: தன் இயலாமையின் பொருட்டோ, தனக்கு ஏற்காத தட்பவெப்ப நிலையை முன்னிட்டோ யாருடைய உதவியையும் எதனுடைய அனுகூலத்தையும் எதிர்பார்க்கக் கூடாது. வாகனம், குடிநீர், உணவு, சிகிச்சை முதலியவை தொடங்கி, தனக்குத் தேவையென்று ஒருவர் யூகிக்கக் கூடிய அனைத்தும், ஒருவர் வேண்டக்கூடிய அனைத்தும் இதில் அடங்கும்.
ஒன்றை இங்கே கூறவேண்டும். இவ்விதிகள் பயணம் செய்ய முயல்பவர்களை அதை மேற்கொள்ளவிடாமல் சோர்வுறச் செய்வதற்காக வரையறுக்கப்படவில்லை. நினைக்கும்போதே அச்சுறுத்தும் பயணத்தை முன்னெடுக்க வேண்டியிருப்பவர்கள் பற்பலர். அவர்களது நலனை முன்னிட்டே விதிக்கப்பட்டிருக்கின்றன. பயணத்தை வெற்றிகரமாக முடித்தால், அவர்கள் பயணம் முடியும் இடத்தில் மண்டியிடக் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். புழுதி நிலத்தை முழந்தாள்கள் தொட்டு, உடல் வளைய வணங்கி, எதிரே நோக்கினால் சிம்மாசனத்தில் முப்பரிமாண டிஜிடல் அவதாரமாகக் காட்சி தருவார் அரசர். கண்ணை உயர்த்தாமல், தோளைத் தூக்காமல், எளியவர்களுக்கேயான நடையோடு, அடக்கத்தோடு அவர் முன் சென்று மண்டியிட்டு மரியாதை செலுத்தினால், காருண்யம் மிக்கவர் தனது புறங்கையை ஒரு முறை முத்தமிடத் தருவார் என்கிறார்கள். தனக்கான மிகப் பெரிய கௌரவம், மிகப் பெரிய சன்மானம் என்று பயணி அதைக் கொள்ளவேண்டும்.
இந்நிலத்தில் பயணம் தொடங்கப்பட்ட காலத்தில் அதன் சட்டதிட்டங்களை விமர்சித்தவர்கள் இருந்தார்கள். பயணத்தால் ஆவதொன்றுமில்லை என்று குறைகூறியவர்கள் இருந்தார்கள். அவர்கள் சிலர் மட்டுமே. அந்தச் சிலருக்கு எதிர்நிலையில் பயணத்தை எதிர்நோக்கியிருந்த பலர் இருந்தார்கள். காலப்போக்கில் அந்தச் சிலரில் சிலர் காணாமலடிக்கப்பட்டார்கள், சிலர் இறந்து போனார்கள், இன்னும் சிலர் தம் சொற்களையும் எழுத்துகளையுமே மறந்துபோகும் மறதி நோய்க்கு ஆளானார்கள். விளைவாக, சிலர் சிற்சிலராகக் குறைந்து போனார்கள். எதிரிகளாகிவிட்ட பற்பலரான பலருக்கு முன்னால் சிற்சிலரான சிலர் பரவும் நெருப்புக்குள் உதிரும் பூவிதழ்களாகக் கருகிப் போனார்கள். சிற்சிலர் அழிந்துபோன பின் பற்பலரது பயணம் சூடுபிடித்தது. பற்பல பற்பலர்களானார்கள், பயணித்தார்கள்.
பயணத்தை மேற்கொள்பவர்கள் அதை விரும்பி மேற்கொள்கிறார்களா என்றால் விருப்பம் இங்கே அனாவசியமானது. பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது, மேற்கொள்கிறார்கள். புறப்பட்ட இடத்தைத் திரும்பிப் பார்க்காமல், சேரும் இடத்தைத் திட்டமிடாமல், யாருடைய, எதனுடைய அனுகூலத்தையும் எதிர்பார்க்காமல்.
ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டது. ஒருவேளை அரசரின் இடத்தை அடைந்து, அவரது புறங்கையை முத்தமிடும் பாக்கியம் பெற்றுவிட்டால், அவர்கள் அதற்குப்பின் பயணத்தை இன்னும் தொடங்காதிருக்கும் பிறரது பார்வையிலிருந்து, அக்கறையிலிருந்து, புள்ளிவிவரங்களிலிருந்து மறைந்துவிடுகிறார்கள்.
அதற்குப் பின்? அதற்குப் பின் என்ற கேள்வி அதிகப்பிரசங்கித்தனமானது. அதற்குப்பின் என்று ஒன்றுமில்லை. அதற்குப்பின் என்று ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டவர்களே இங்கே வசிக்கிறார்கள். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளில் நூறு சதவிகிதம் அவர்கள்தாம்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
- உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
- கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
- குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
- குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
- சிறுகதை: அழகு - பெருந்தேவி
- சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
- குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
- குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
- போகாதே-பெருந்தேவி
- விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
- ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
- படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
- ஜானுவும் ராமும்- பெருந்தேவி
- நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
- துச்சலை- பெருந்தேவி
- கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
- பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
- 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
- அத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
- பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
- சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
- பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்