அடுத்த வாரம் தன்னுடைய பிறந்த நாள் என்பதை நினைத்தும், கூடவே தன் கணவனை நினைத்தும் சுஜாவின் மனதுக்குள் பதற்றம் பரவியது. அவளுடைய திருமணம் காதல் திருமணம். காதலிக்கத் தொடங்கிச் சில மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவும் முடிந்தது. எந்தச் சிக்கலுமில்லாமல் ராகேஷோடு வாழ்க்கை தொடங்கியது, தொடர்ந்தது. அவள் எதிர்பார்த்ததைவிட நிறைவான வாழ்க்கை. ஆனாலும் பிறந்த நாளை முன்னிட்டு அவள் அச்சப்படக் காரணமிருந்தது.
பெண்களின் பிறந்த நாட்களை அவர்களின் கணவன்மார்கள் மறந்துவிடுவதும் அதுபற்றி அவர்கள் குறை கூறுவதுமே உலக நடைமுறை வழக்கம். மாறாக, ராகேஷோ மனைவியின் பிறந்த நாளன்று வாழ்த்துபவனாகவும் மறக்காமல் பரிசு தருபவனாகவும் இருந்தான். பத்து வருடங்களில் அவள் பிறந்த நாளை ஒரு முறைகூட அவன் தவறவிட்டதில்லை. அவன் தரும் பரிசுகளும் வழக்கமாக ஒரு கணவனால் மனைவிக்கோ, ஒரு காதலனால் காதலிக்கோ, ஒரு சிநேகிதனால் சிநேகிதனுக்கோ, ஏன் யாரால் எவருக்குமோ தரப்படுபவை அல்ல.
தான் தரும் வினோதப் பரிசுகளை சுஜா மனமுவந்து வரவேற்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அவற்றை அவள் எப்படிப் போற்றிப் பாதுகாக்கிறாள் என்பதைக் கவனிப்பவனாகவும் இருந்தான். ”நான் கொடுப்பவற்றை நீ எப்படி வைத்துக்கொள்கிறாய் என்பதே நீ என்னை நேசிப்பதற்கான அளவுகோல்” என்று அவளுக்கு முதன்முதலில் பரிசு தந்தபோதே குறிப்பாகத் தெரியப்படுத்தியிருந்தான். இப்போது பிரச்சினை அதில்தான்.
திருமணத்துக்குப் பின் வந்த தன்னுடைய முதல் பிறந்த நாள் சுஜாவுக்கு இன்னும் நினைவிருந்தது. பூச்சி நிபுணர்களிடம் சொல்லிவைத்து ஒரு அபூர்வ ராட்சசச் சிலந்தியை ராகேஷ் அவளுக்கு அளித்தான். சுவாசிப்பதற்கான காற்றுக்காகச் சிறிய துளைகள் இடப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள் முக்காலடிக்கு இருந்தது அந்தச் சிலந்தி. தங்க நிறத்தில் ரத்தினம் பதித்தது போன்ற உடல். சிலந்திக்கு மூன்று வேளையும் பூச்சிகளைத் தின்னத் தருவதற்காக அந்தச் சிலந்தியை ஏற்கெனவே பராமரித்துக்கொண்டிருந்த ஒரு பணியாளனையும் ராகேஷ் அழைத்து வந்து தங்கள் வீட்டில் வேலைக்கு அமர்த்தினான்.
சிலந்தி ஒரு பூச்சியினம் என்பதைத் தாண்டி, அவன் அவளுக்காகத் தந்த அன்புப் பரிசு என்று பெருமிதமான அடையாளம் பெற்றுவிட்ட காரணத்தால் அதை மிகக் கவனத்தோடு அவள் கவனித்துக்கொள்ள வேண்டிவந்தது. அத்தோடு அதன் பணியாளன் ஒழுங்காக அதைப் பராமரிக்கிறானா என்று கண்காணிக்கும் பொறுப்பும் அவளுக்கு வந்து சேர்ந்தது. வீட்டில் அந்தப் பணியாளனும் தங்கியிருந்ததால் அவனுக்கான மூன்று வேளை உணவுக்கும் இதர நடைமுறைத் தேவைகளுக்கும் அவள்தான் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
அவற்றையெல்லாம்விடக் கூடுதலாக ஒரு சிரமத்தை அவள் எதிர்கொண்டாள். “நம் சிலந்தி நலமா?” என்று ராகேஷ் கேட்கும்போது பணியாளன் அந்தக் கண்ணாடிப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வருவது வாடிக்கையான ஒன்று. ஒருவேளை அவன் அப்படிக் கொண்டுவரப் பணிக்கப்பட்டிருக்கலாம். எச்சரிக்கையோடு மெதுவாக பெட்டியைப் பணியாளன் திறக்கும்போது, பாதுகாப்பு உறை அணிந்த தனது வலது கையை சுஜா பெட்டியருகே மெதுவாக நீட்டுவதும் வழக்கமாகியிருந்தது. அப்போது சிலந்தி மெதுவாக அவள் முன்னங்கையில் ஊர்வது அதற்கும் பழகிவிட்டிருந்தது. அப்போது அவளது புன்னகைக்கும் முகத்தைப் பார்த்தபடி ராகேஷ் “தன் எஜமானியை எப்படி அது நேசிக்கிறது பார், என்னைப் போலவே” என்று பூரிப்படைந்து சொல்வது தவறாது.
சிலந்தியோடு ’நல விசாரிப்பு’ நடந்த பின் பணியாளன் அதை எடுத்துச் செல்வான். அப்போது ராகேஷ் தவறாமல் அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றுவான். அன்றிரவு இருவருக்குமான கலவியில் இன்பம் அடுத்த படிக்கு ஏறியிருக்கும்.
ராகேஷ் அவளிடத்தில் வைத்திருக்கும் அன்பில் அவளுக்குத் துளியும் சந்தேகமில்லை. அவனுடைய விசாலமான இதயத்தின் எல்லா அறைகளிலும் மாத்திரமல்ல, அறைகளின் மூலைகளிலும் தான் இருந்தது அவளுக்குத் தெரியும். ‘இந்தப் பிறந்த நாள் விவகாரம் மட்டுமில்லாவிட்டால்!’ அவள் பெருமூச்செறிந்தாள். அவளுக்குப் பிறந்த நாள் என்ற ஒன்றே இல்லாமலிருந்திருக்கலாம். ஆனால் பிறந்த நாள் இல்லாவிட்டால் அவள் எப்படிப் பிறந்திருப்பாள்? இத்தனை பிரியமான கணவன் எப்படி வாய்த்திருப்பான்?
அவர்கள் வீட்டுக்கு வந்த சில மாதங்களில் சிலந்தி இறந்துபோனது. பணியாளனும் வேலையை விட்டுப் போய்விட்டான். அடுத்த வருடப் பிறந்த நாள் வந்தது. ராகேஷ் ஒரு ராட்சத ராட்டினத்தை அவளுக்கு அன்புப் பரிசாகத் தந்தான். தீவுத் திடல் பொருட்காட்சி அல்லது உல்லாசத் தீம் பார்க்குகளில் காணப்படும் சுழல் ராட்டினம். அதை நிறுத்தி வைக்க வீட்டுக்கு அருகிலேயே ஒரு காலி மனையை வாங்கியிருந்தான். சுழல் ராட்டினத்தை இயக்குவதற்காக ஒருவரை நியமித்திருந்தான். பிறந்த நாளன்று சுஜா சில முறைகள் தனியாகவும் சில முறைகள் ராகேஷுடனும் ராட்டினத்தில் சுற்றினாள்.
அவனோடு முதல் சுற்றில் ராட்டினத்தில் மேலே சென்று கீழே இறங்கும்போது அவள் வயிற்றுக்குள் ஒரு உலகமே புரண்டது. அப்போது அவன் அவளுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னான். உதட்டோடு உதடு பதித்தான்.
அதற்கடுத்த வருடம் அவனுடைய பரிசாக ஒரு வட்ட வடிவமான பேழை வந்து சேர்ந்தது. அதை அவள் திறந்ததுதான் தாமதம், அதற்குள்ளிருந்து இருள் புலிக்குட்டியைப் போலப் பாய்ந்து சூழ்ந்தது. அவளுக்குப் பரிச்சயமில்லாத இருள் அது. மழைக் காலத்தில் அவசரமாகப் படரும் இருள், அமாவாசை நள்ளிரவின் கும்மிருட்டு, காட்டுக்குள் கவிந்திருக்குள் புதிர் இருள் இவற்றைப் போன்ற எதுவும் அல்ல அது. சுருள் சுருளாக இருள் அவளைச் சுற்றியது, அவர்களைச் சுற்றியது, வீட்டைச் சுற்றியது. ஊரையும் சுற்றியிருக்கலாம் என்று நினைத்த கணத்தில் அவள் மயங்கி விழுந்தாள். அவள் எழுந்திருந்தபோது அடுத்த பிறந்த நாள் நெருங்கிவிட்டிருந்தது.
அந்தப் பிறந்த நாளுக்கு அவன் பாடுகிற தேநீர்க் கெட்டில் ஒன்றை அவளுக்காக வாங்கிக்கொண்டு வந்தான். அதை எங்கே எந்தக் கடையில் வாங்கினான் என்பது தெரியவில்லை. பிறகொரு சமயத்தில் வீட்டுக்கு வந்த அவள் தோழிகள் அவளிடம் அதைப் பற்றிச் சிலாகித்து விசாரித்ததால், அவள் அவனிடம் தயக்கத்தோடு விசாரித்தாள். அவன் அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் நழுவிவிட்டான்.
அந்தத் தேநீர்க் கெட்டில் நாளடைவில் தொந்தரவைத் தரத் தொடங்கியது. அவளுக்குத் தேநீர் போடத் தோன்றினால் போதும், அதை எப்படியோ தெரிந்துகொண்டு “வா, வா, தேநீர் போட வா” என்று பாட ஆரம்பித்துவிடும். அதன் மூடியைத் திறந்து தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைக்கும்வரை அந்த ஒரு வரியை விடாது பாடும். சுறுசுறுப்பான கெட்டில் என்பதால் நொடிகளில் கொதித்துவிடும். கொதிக்கும்போது அதன் வழக்கமான பாட்டான “பார், பார், கொதிக்கிறேன்” என்று பாடிக்கொண்டிருக்கும். விதவிதமான மெட்டுகளில் ஒரே வரியைப் பாடுவதில் அது கில்லாடி. வடிகட்டிய தேநீரைக் கோப்பைகளில் ஊற்றி எடுத்துச் செல்லும்வரை, “கொடு, கொடு, நல்ல தேநீர்,” என்று ஒரு வரியை ராகம்போட்டுப் பாடும். கோப்பைகளைத் திரும்ப வைக்க வந்தால் “தேய், தேய், என்னைத் தேய்” என்று அதைத் தேய்த்துக் கவிழ்க்கும்வரை பாடாமல் விடாது. பரிசுகளில் குறை சொல்லக் கூடாது என்ற நாகரிகத்தோடு, கொடுத்தவன் கணவன் என்ற ஜாக்கிரதை உணர்வால் கெட்டிலைப் பற்றி அவனிடம் அவள் புகார் சொல்லத் தயங்கினாள்.
ஒருநாள் சுஜாவுக்குத் தலை வலித்தபோது தேநீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு வலுவாகத் தோன்றியது. அவளது வலுவான எண்ணத்துக்கு இணையாக, அவளைத் தேநீர் போட உடனே வரச் சொல்லி அந்தக் கெட்டில் உரக்கப் பாடத் தொடங்கியது. அதன் பாடல் கூச்சலாக மாறியது. வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்தார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து கூடி நின்று கத்திப் புகார் கூறும் அளவுக்கு இருந்தது. அந்த நேரத்தில் அவள் தன் கணவனிடம் மென்மையாகத் தேநீர்க் கெட்டிலைப் பற்றிக் கூறினாள், “நீங்கள் எனக்குத் தந்தது அபூர்வமான தேநீர்க் கெட்டில், ஆனால் நமது சுற்றத்தார் மோசமானவர்கள். அதில் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்.” அவளது தன்மையான பேச்சைக் கேட்டு அவள் கணவன், “ஆமாம், உனக்கு நினைவூட்ட வசதியாகத்தான் பாடும் இதை வாங்கித் தந்தேன். ஆனால் பொறாமைக்கார முட்டாள்களுக்குப் பிரியத்தின் அருமையும் தெரியவில்லை. பொருள்களின் உணர்வும் தெரியவில்லை,” என்று வருத்தப்பட்டான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தேநீர்க் கெட்டில் வீட்டிலிருந்து அகன்றது. அவளுக்குத் தலைவலியும் அதன் பின் வரவில்லை.
தனது பிறந்த நாளுக்காக ஒருவர் அச்சப்பட்டாலும் அந்த நாளை வருடத்திலிருந்து, அவர் வாழ்க்கையிலிருந்து நீக்கிவிட முடியுமா என்ன? இந்த வருடமும் சுஜா பயந்தது நடக்கத்தான் செய்தது. அவள் கணவன் கம்பீரமாகத் தோற்றமளித்த ஒரு சவப் பெட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அதை எட்டு ஆட்கள் தூக்கிக்கொண்டு வர வேண்டியிருந்தது. அத்தனைக் கனமான பெட்டி. அலங்கார வண்ண ரிப்பன்களாலும் விதவிதமான பலூன்களாலும் பூமாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பெட்டி முன்னறையில் வைக்கப்பட்டது. சுமந்து வந்தவர்களுக்கு இரு மடங்குக் கூலியை ராகேஷ் அளித்தான். அதைப் பெற்றுக்கொண்டு அவர்களும் முகத்தில் சிரிப்போடு விடைபெற்றுக்கொண்டார்கள்.
அவள் இதயம் படபடக்கத் தொடங்கியது. ”ரிப்பன்களை வெட்டு” என்றான். தான் அதில் கிடத்த வைக்கப்படும் வகையில் ஏதாவது நடக்கலாம் என்று பயப்பட்டாள். ஆனால் அவன் பேச்சை மறுக்க அவள் விரும்பவில்லை. தனக்கு என்ன ஆனாலும் சரி, மண உறவைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று நினைக்கும் பலரைப் போல அவளும் ஒருத்தி. அவன் கேட்டுக்கொண்டபடியே ரிப்பன்களை வெட்டினாள்.
”திறந்து பார்” என்றான். சவப்பெட்டியின் தாழ்ப்பாளை விலக்கி அதன் பிடியைப் பற்றி, மரத்தினாலான மூடியை மேலே தூக்கினாள். மூடியின் ஒரு பக்கத்தைத் தூக்க அவனும் கைகொடுத்தான்.
உள்ளே எதுவுமில்லை. சுகந்தமான வாசனையை மட்டும் உணர்ந்தாள். சரி, தயாராகிவிட வேண்டியதுதான் என்று கணவனைப் பார்த்தாள். கத்தியோ, புல்லட்டோ எதுவாக இருந்தாலும் சரிதான். நிற்கும் இடத்திலேயே நிற்கலாமா, சவப் பெட்டிக்குள் ஒரு காலை முன்னேற்பாடாக வைத்துவிடலாமா?
அவளையே பார்த்தபடி ராகேஷ் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய புட்டியை எடுத்து நீட்டினான். “இதில் வலிமையான தூக்க மாத்திரைகள் இருக்கின்றன. இருபது மாத்திரைகள் உள்ளே போனால் போதும். உன்னிடம் தருகிறேன்,” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான்.
“உன்னை நேசிப்பதால் உன் பிறந்த நாளைவிடச் சிறப்பான நாள் வேறெதுவும் இல்லாததால், முடிந்தவரை தேடி வாங்கி, அசாதாரணப் பொருட்களைப் பரிசாகத் தருகிறேன். உனக்குப் பிடிக்கிறதா என்பதைவிட உன் மனதில் என்னைப் பதிக்க சின்ன முயற்சி அது. … நான் உன்னிடம் உயிரை வைத்திருக்கிறேன் என்று சொல்வதில் பொருளில்லை என்பதாலும்தான். மேலும் சர்வசாதாரணமாக எல்லாரும் சொல்லக்கூடிய சாரமற்ற வார்த்தைகள் அவை.”
அவள் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
தொடர்ந்தான். ”நான் பேசுவது உனக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். எப்போதுமே உனக்கு பரிசாகத் தேர்ந்தெடுத்தவை, அளித்தவை எனக்குத் திருப்தி தந்ததில்லை. உனக்கு முன்னாலும் சரி, நான் காட்ட நினைக்கும் பிரியத்துக்கு முன்னாலும் சரி, அவை குறைபட்டிருப்பவை. ஆனால் இந்த முறை எனக்கு முழுத் திருப்தி.”
“இந்த மாத்திரைகள்?”
” இவற்றை உன்னிடம் தருவதன் மூலம் என் விதியை உன்னிடம் தருகிறேன். விரும்பி இதைச் செய்கிறேன். உனக்கு என்னோடிருப்பது என்றைக்காவது பிடிக்காமல் போனால் அன்று இவற்றை ஒரு பானத்தில் கலந்து எனக்குத் தந்துவிடலாம். ஒருவேளை அப்படியொரு முடிவெடுத்தால் உனக்குச் சட்டரீதியான சிக்கல் வராதபடி சில முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டேன். என் மனப்பூர்வமான பரிசு மாத்திரைகள். சவப்பெட்டி எனக்கானது.” சிரித்தான்.
“பிறந்த நாளன்று ஏன் இப்படி… .” அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை.
“வேறெப்படி தெரியப்படுத்துவது சொல். காதலிக்கத் தொடங்கிய பின் என் வாழ்க்கையை உன்னிடம் தந்திருக்கிறேன். எனக்கே புரிபடாத என் குணாம்சங்களோடும்தான். ஆனால் அதெல்லாம் ஒரு விஷயமில்லை. என் சாவை உன் கையில் தருவதுதானே உன் அன்பை, உன் மேல் வைத்திருக்கும் என் அன்பை நான் கௌரவப்படுத்துவதாகும்? உனக்கு இதை விடச் சிறந்த வேறு எதை நான் தந்துவிட முடியும்?” பெட்டியை மூடிவிட்டு அவளருகே வந்தான்
“ஆனால் வாழ்வைவிடச் சாவு எப்படி முக்கியமாகும்? அது முற்றுப் புள்ளி….”
“அது முடித்து வைக்கிறது என்பதால்தான்…”
அவளுக்கு ஏதோ புரிந்ததைப் போல இருந்தது, புரியாததைப் போலவும் இருந்தது. அவனைத் தழுவிக் கொண்டாள்.
“இதுதான் நான் தரும் கடைசிப் பரிசு” என்று கூறிவிட்டு அவளை முத்தமிட்டான்.
முத்தத்தின்போதும், அதன் பின் படுக்கையில் அவர்கள் அணைத்தவாறு பின்னிப் பிணைந்திருந்தபோதும், தன்னால் கணிக்க முடியாத அவன் சுபாவத்தைப் பற்றி அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். தன் சாவை அவன் எந்த உடனடிக் காரணமின்றி, எந்தத் தர்க்கமுமின்றி அவளிடம் ஒப்புவித்தது வினோதமாக, மேன்மையானதாக இருந்தது. “ஒரு கணவன் தன் மனைவியை இந்த அளவுக்கு நேசிக்க முடியுமா?”, ”என்னதான் காதலித்தாலும்!”, “இதெல்லாம் நிஜமா, உலகத்தில் நடக்கக்கூடியதுதானா!” என்றும் சந்தேகப்படத் தோன்றியது.
அத்தனை நெகிழ்ச்சியிலும் அவள் மனம் உள்ளூர ஒன்றை எண்ணித் திருப்திப்பட்டுக்கொண்டது, இனிமேல் தன் பிறந்த நாளைக் கண்டு அவள் பயப்பட வேண்டாம். அவன் இதை விடச் சிறப்பான பரிசை அவளுக்குத் தந்திருக்க முடியாது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
- உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
- கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
- குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
- குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
- சிறுகதை: அழகு - பெருந்தேவி
- குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
- குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
- பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
- போகாதே-பெருந்தேவி
- விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
- ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
- படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
- ஜானுவும் ராமும்- பெருந்தேவி
- நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
- துச்சலை- பெருந்தேவி
- கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
- பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
- 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
- அத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
- பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
- சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
- பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்