பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்

விடாக்கண்டன் கொடாக்கண்டன்

அவளுக்கு அவனைக் காதலிக்கச் சற்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் அவனைப் பார்க்கும் பெண்களைச் சட்டென உள்ளிழுத்துக்கொள்ளும் கண்கள் அவனுக்கு. அந்தக் கண்களுக்காகத்தான் மிகவும் அஞ்சினாள். இப்படி உள்ளிழுத்துக்கொள்ளும் கண்கள் கடல்களைப் போன்றவை. இழுத்துக்கொள்ளும் அதே வேகத்தில் அலைகள் அடித்துத் துவைத்து வேறொரு கரையில் கொண்டுசேர்த்துவிடும். உயிரற்று என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் அவளுக்கு அவன்தான் தனக்கு எல்லாமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

“வேண்டுமானால் செக் பண்ணிக்கொள்.” என்று கண்களில் புன்னகை தெரிய சொன்னான்.  ”ஆனால் முதலில் நீ தைரியமாகக் குதிக்க வேண்டும்.”

”மலையுச்சியிலிருந்து குதிப்பதைப் போலவா?”

“வேண்டுமானால், பத்தாவது மாடியிலிருந்து குதிப்பதைப் போல என்று வைத்துக்கொள்.”

அவர்களது அலுவலகம் பத்தாவது மாடியில் இருந்தது. அங்கிருந்து பார்த்தால் அரபிக்கடல் நீலப் பச்சை நூலாகத் தெரியும்.

“குதித்துப் பாறையில் மோதிச் சாக வேண்டும், அதுதானே?”

“குதிக்கும் போது உன்னைப் பிடித்துக்கொள்ளும் கரங்கள் பற்றி உனக்கு நம்பிக்கை வேண்டும்.”

“குதித்தால் நீ நிச்சயமாகப் பிடித்துக்கொள்வாயா?”

“முதலில் நீ குதி.”

“பிடித்துக் கொள்வாயா?”

“முதலில் நீ குதி.”

“பிடித்துக் கொள்வாயா?”

“முதலில் நீ குதி.”

மூன்று வருடங்களுக்கு முன்பு இப்படி உரையாடத் தொடங்கிய இந்த இருவரையும் எனக்குத் தெரியும். இருவரும் இந்த ரெஸ்டரண்டுக்கு அடுத்துள்ள கட்டிடத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். பெரும்பாலும் வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகம் முடிந்தபின் நேரே இங்கே வருவார்கள். இன்றைக்கு  லஸ்ஸியும் பானிபுரியும் ஆர்டர் செய்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

“என்ன, குதிக்கிறாயா?”

“நீ பிடித்துக்கொள்வாயா?”

இத்தோடு 980வது முறை இதே கேள்வி, இதே பதில். இவர்கள் வழக்கமாக வந்தமரும் மேஜை இது.  மேஜைக்கு மேல் எரிந்துகொண்டிருக்கும்  சாண்டிலியர் விளக்கான எனக்குக் காதுகளை எப்படி மூடிக்கொள்வதென்று தெரியவில்லை.

சித்த புருஷர்

மாலையில் வழக்கம்போல இருவரும் சந்திக்கும் காந்தி சிலைக்கு வந்தபோது அவன் ஏற்கெனவே வந்திருந்தான். “சாரி, கொஞ்சம் லேட்டாயிடுச்சி,” என்று நான் வருந்தி முடிப்பதற்கு முன்பு “இருக்கட்டும், இன்னிக்குக் காலையில ஒன்னு நடந்தது” என்றான் பரபரப்பாக.

“எங்க தெருகிட்டே இருக்கற டீக்கடைகிட்டத்தான்.” அவன் மயிலாப்பூரில் குடியிருந்தான். ஒரு படுசுமாரான தெரு.

”காலையில எந்திரிச்சவுடனே ஒரு தம்மடிக்கறதுக்காகப் போனேன். டீக்கடையில நாலு பேரு இருந்தோம். பெஞ்சில தாடி வச்சிக்கிட்டு ஒரு ஆளு உக்காந்திருந்தான்.  எதிர்சாரிலருந்து ஒரு ம கொழந்த ரோட்டுக்கு வந்தது. ரெண்டு, மூணு வயசிருக்கும். பாப்பா உள்ளே போ-னாரு டீக்கடைக்காரரு.”

“ம்.”

“ஒரு தண்ணிலாரிக்காரன் வேகமா வந்தான் அப்ப. ஒரு செகண்ட் ஒன்னுமே புரியல. எங்களைக் கடந்து பிரேக் போட்டு நின்னான். பாத்தா தாடிக்காரரு கொழந்தயத் தூக்கிக்கிட்டு எதித்தாப்பல வீட்டு வாசல்ல. கேட்டுக்குள்ள பூ மாதிரி எறக்கி வச்சிட்டு நடந்து போய்ட்டாரு.”

“யாரு அவரு? நல்ல வேளை கொழந்த தப்பிச்சது.”

“யாருனு தெரில. கொழந்தய வாசல்ல உட்டுட்டு கவனமில்லாம இருக்குதுங்க.”

“அவர முன்னாடி பாத்திருக்கியா?”

“பாத்ததில்ல. இதுங்கள்ளாம் கொழந்த பெத்துக்கல்லனு யார் அழுதாங்க?”

அவன் பேச்சு சாவின் வாயிலிருந்து தப்பித்த குழந்தையின் பொறுப்பில்லாத பெற்றோர்களைப் பற்றியே இருந்தது. எனக்கோ அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ஒரு மகான் வந்திருக்க வேண்டுமெனத் தோன்றியது.

“அந்த நேரத்துல சரியா அங்கே வந்திருக்காரு பாரு.”

“உடனே சித்த புருஷர்னு நினைச்சி விபூதி வாங்க தேடிட்டுப் போயிடாதே. ஏதாவது வயசான கஞ்சாக் குடிக்கியா இருப்பான்.”

சிரித்தேன். அவனுக்கு அந்த மனிதரைப் பற்றிச் சரியாகத் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, என்னைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது. அவன் டீக்கடைக்குப் போகாத நேரமாகப் பார்த்து டீக்கடைக்காரரிடம் அந்த மனிதரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள  வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எங்களைக் கடந்து ஒரு தண்ணீர் லாரி அப்போது சென்றது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
  2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
  3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
  4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
  5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
  6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
  7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
  8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
  9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
  10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
  11. போகாதே-பெருந்தேவி
  12. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
  13. படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
  14. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
  15. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
  16. துச்சலை- பெருந்தேவி
  17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
  18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
  19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
  20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
  21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
  22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
  23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்