பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்

படுக்கையறைகளின் கதை  

திருமணமான புதிதில் ஜெஸ்ஸியும் ஜெரால்டும் புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் ஒருவரையொருவர் அகலாது அந்த வீட்டின் எல்லா அறைகளிலும் புழங்கினார்கள். ஜெஸ்ஸி அடுக்களையில் இருந்தால் ஜெரால்டும் அங்கேதான் இருப்பான். முன்னறையில் இருவரும் ஒன்றாகவே தொலைக்காட்சி பார்ப்பார்கள்.  வீட்டின் ஆகப் பெரிய படுக்கையறையில் இருவரும் குலாவியதை, உறவுகொண்டதைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டாம்.

முதல் குழந்தை பிறந்தவுடன் ஆகப் பெரிய படுக்கையறையின் கதவு திறந்துவைக்கப்பட்டது. இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் அந்தப் படுக்கையறை ஜெரால்டின் படுக்கையறை ஆனது. அப்போதிலிருந்து ஜெஸ்ஸியும் பிள்ளைகளும் தனியாகத் தூங்க ஆரம்பித்த சற்று சிறிய படுக்கையறை ஜெஸ்ஸியின் படுக்கையறை என்று பெயரிடப்பட்டது. பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்கள் பிள்ளைகளின் படுக்கையறை என்ற ஆகச் சிறிய படுக்கையறைக்குச் சென்றார்கள். பிள்ளைகளுக்குத் திருமணமாகி வீட்டைவிட்டுச் சென்றவுடன் பிள்ளைகளது படுக்கையறை விருந்தினர் படுக்கையறையாயிற்று.

பிள்ளைகளது படுக்கையறை விருந்தினர் படுக்கையறையானபின், அதன் எதிரே இருந்த ஜெரால்டின் படுக்கையறை இரவுகளில் தவறாமல் உட்புறமாகத் தாளிடப்பட்டது. ஜெரால்ட் அறையிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஜெஸ்ஸியின் படுக்கையறையும் இரவுகளில் தவறாமல் உட்புறமாகத் தாளிடப்பட்டது.

ஒருநாள் ஜெஸ்ஸி-ஜெரால்ட் வீட்டில் பணியாற்றும் வேலைக்கார அம்மா வெகு நேரம் அழைப்பு மணியை அடித்தும் வீட்டின் வாசற்கதவு திறக்காததால் பக்கத்து வீட்டில் போய்ச் சொன்னாள். பக்கத்து வீட்டுக்காரர் ஜெஸ்ஸி-ஜெரால்டின்  பிள்ளைகளிடம் அதைத் தெரிவித்தார். சில மணி நேரங்களில் பூட்டுக்காரர் ஒருவரின் உதவியோடு பூட்டு உடைக்கப்பட்டது.  ஜெஸ்ஸியின் படுக்கையறைக் கதவும் ஜெரால்டின் படுக்கையறைக் கதவும்  தட்டப்பட்டன. பதில் இல்லாததால் கதவுகள் உடைக்கப்பட்டன. படுக்கையறைகளில் ஜெஸ்ஸியும் ஜெரால்டும் இறந்து கிடந்தார்கள்.

அந்த வீடு சில நாட்களில் காலிசெய்யப்பட்டது. பின் விற்கப்பட்டது. சென்ற மாதம் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் அதை இப்போது வாங்கியிருக்கிறார்கள். நாளை பால்காய்ச்சிக் குடிக்கப்போகிறார்கள். இருப்பதிலேயே ஆகப் பெரிய படுக்கையறை சற்று ஆஸ்வாசமாக மூச்சுவிட்டுக்கொள்கிறது.

சுப்புணி

பாட்டி சாகக் கிடந்தாள். ஓரிரு நாட்கள் போனாலே பெரிய விஷயம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். வீட்டின் ஒரே பெரிய தலை அவள். அப்பா வழிப் பாட்டி. சென்ற வருடம்தான் தாத்தா தன் எண்பது வயதில் போய்ச் சேர்ந்தார். இருவரும் மனமொருமித்த தம்பதி என்று அறியப்பட்டவர்கள்.

வீடு முழுக்க உறவினர் கூட்டம். பாட்டிக்கு ஸ்பூனில் தண்ணீர் கொடுத்துக்கொண்டிருந்த என் சித்தி “என்னமோ சொல்ற மாரி இருக்கு” என்றாள். அருகிலிருந்த என் கடைசிச் சித்தப்பா காதை அவள் வாயருகில் கொண்டுபோய் வைத்துக்கொண்டு “உப்புங்கறா” என்றார். “எதுக்கு உப்பு கேக்கறா அம்மா?” என்று கேட்டாள் என் முதல் அத்தை. பிறகு அவள் தன் காதை பாட்டியின் வாயருகே வைத்தபடி “சுப்புங்கறா” என்று கூறினாள். பிறகு  இரண்டாவது அத்தை பாட்டியின் வாயில் காதை வைத்துக் கேட்டுவிட்டு, “சுப்பு இல்லக்கா, சுப்புணிங்கறா” என்று தெரிவித்தாள்.  பிறகு ஆர்வம் மேலிட உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டார் என்று கூடியிருந்த அனைவரும் ஒவ்வொருவராகக் காதுகொடுத்துக் கேட்டார்கள். எல்லாரும் “சுப்புணி” என்ற பெயரை உறுதிப்படுத்தினார்கள்.

சுப்புணி என்ற பெயர் குடும்பத்தில் யாருக்குமில்லையே என்று சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு சித்தி. பிள்ளைகளுக்கோ பேரப் பிள்ளைகளுக்கோ உறவினர்களுக்கோ ஏன் தூரத்து உறவினர்களுக்கோ கூட அந்தப் பெயர் இல்லை என்று சொன்னாள் பெரியம்மா.  மற்றவர்கள் அதை ஆமோதித்தனர். “சுப்புணி” யாராக இருக்கும் என்ற கேள்வி எங்கள் மனதில் எழுந்தது.

“சுப்புணினு யாரையாவது பாட்டிக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னமோ” என்றான் என் அண்ணன். அவன் பத்திரிகைக்குக் கதைகள் எழுதுபவன்.

“சுப்புணினு ஒருத்தர நாம கேள்விப்பட்டதே இல்லியே,” என்று கேள்விக்குறியோடு பார்த்தாள் இரண்டாவது அத்தை.

“நாம கேள்விப்படாட்டா என்ன, பாட்டிக்கு அவரைத் தெரிஞ்சிருக்கும்” என்றான் என் அண்ணன் விட்டுக்கொடுக்காமல். அவன் “சுப்புணி” என்ற கதாபாத்திரத்தை எப்படியாவது அந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடத் தயாராக இருந்தான்.

”நீயா கற்பனை  செய்யாதே, பாட்டிக்கு நம்மளவிட்டா  யாரைத் தெரிஞ்சிருக்கும்?” என்று பெரியப்பா அவன் வாயை அடைத்தார். “சின்னவன் சொன்னமாரி உப்புனுதான் சொல்லியிருப்பா. வயசான காலத்துல நாக்கு உப்பைக் கேக்கும்.”

“யாராவது கல் உப்பு கொண்டுவந்து தாங்களேன்” என்று அறையிலிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கூறினாள் பெரியம்மா. ஒரு சித்தி உள்ளே போய்  கல் உப்பை எடுத்துக்கொண்டு வந்தாள். ஒரு உப்புக் கல்லை தண்ணீரில் கரைத்து பெரியப்பா  பாட்டிக்குப் புகட்டினார். அன்றிரவு பாட்டியின் கதை முடிந்தது.

அந்த நாளில் அந்த சில நிமிடங்களில் மட்டும் எங்கள் குடும்பத்துக்குள் வந்து போனவராக சுப்புணி இருந்தார். “அவர் நிஜமான ஆள்தான்” என்று என் அண்ணன் மட்டும் கொஞ்ச நாள்  சொல்லிக்கொண்டிருந்தான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
 2. உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
 3. கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
 4. குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
 5. குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
 6. சிறுகதை: அழகு - பெருந்தேவி
 7. சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
 8. குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
 9. குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
 10. பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
 11. போகாதே-பெருந்தேவி
 12. விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
 13. ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
 14. ஜானுவும் ராமும்- பெருந்தேவி
 15. நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
 16. துச்சலை- பெருந்தேவி
 17. கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
 18. பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
 19. 'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி
 20. அத்தனை நீண்ட கனவு  (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
 21. பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
 22. சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
 23. பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்