பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்

ஜானுவும் ராமும்

வயதான தம்பதியரான ஜானுவுக்கும் ராமுக்கும் ஒரு பிரச்னை இருந்தது. ஜானுவுக்கு தன் கணவனின் பெயர் ராம் என்பது மனதிலிருந்து நீங்காமலிருந்தது. ராமுக்குத் தன் மனைவியின் பெயர் ஜானு என்பது தெள்ளத் தெளிவாக நினைவிலிருந்தது. ஆனால் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்த இருவரும் பரஸ்பரம் அடுத்தவர் முகங்களை மறந்துபோயிருந்தார்கள்.

அவர்களது வீட்டின் முன்னறையில் அமர்ந்து காப்பி அருந்திக்கொண்டிருந்த ஜானுவை,  ஜானுவின் சிநேகிதி யாரோ என்று ராம் நினைத்தார். சிநேகிதியை வீட்டில் காக்க வைத்துவிட்டு, காப்பியும் போட்டுக்கொடுத்துவிட்டு ஜானு எங்கே போனாள் என்று யோசித்தபடியே முன்னறையில் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருந்தார்.

ஜானு தங்கள் வீட்டு முன்னறையில் யாரோ ஏன் இப்படி இங்கும் அங்குமாக அறையில் நடந்துகொண்டிருக்கிறார் என்று யோசித்தாள். தன் கணவரைப் பார்க்கவே அவர் வந்திருக்க வேண்டும் என்று முடிவுசெய்து அவரிடம்  ”உட்காருங்கள், வந்துவிடுவார்”  என்று கூறினாள்.  அவளை அழைத்துப்போக அவள் கணவர் வரப்போவதைத்தான் அவள் தெரிவிக்கிறாள் என்று அதைப் புரிந்துகொண்டார் ராம். “அவர் வந்துவிடுவார், இவள்தான் எங்கேயோ போய்த் தொலைந்தாள்” என்று எண்ணியபடி அவளிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையோடு சிரித்து வைத்தார்.

இப்படி ஜானுவுக்காக ராமும் ராமுக்காக ஜானுவும் காத்திருப்பது ஒரு மாலையில் தொடங்கி பல வருடங்கள் தொடர்ந்தது. அந்த ஊரில் ராம், ஜானு என்ற பெயர்களைக் கொண்ட தம்பதிகள்தான் அநேகமாக இருந்தார்கள்.

 

ஒட்டுக் கேட்டது

”கவலைப்படாதே! அதிக நேரமாகாது. நாம் கொண்டுவந்திருக்கும் மருந்தை அடித்தால் சில நொடிகளில் முடிந்துவிடும்.”

“மருந்தடித்தால் அதன்பின் உடல்களை உண்ண முடியுமா? நம்மவர்களை ஒன்றும் பாதிக்காதே?”

“நம்மை மருந்து ஒன்றும் செய்யாது. லேசரையும் பயன்படுத்தலாம். எப்படியோ,  சீக்கிரத்தில் க்ளியர் செய்யவேண்டும். ஆனால் உணவைப் பற்றிப் பெரிய எதிர்பார்ப்போடு இருக்காதே.”

“அப்படியா, இதற்கு முன் இங்கே சில தடவை வந்தபோது சுவைத்துப் பார்த்திருப்பீர்கள்.”

“ஆமாம், இவர்கள் வீடுகளில் வளர்க்கும் நாலுகால் பிராணிகள் ருசியாக இருக்கும். ஆனால் இவர்கள் மாமிசம் ஜவ்வு மாதிரி இருக்கும்.”