பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்
அங்கீகாரம்
அந்தப் புனைவெழுத்தாளர் ரொம்ப கர்வி. யாரையும் லேசில் பாராட்டிவிடமாட்டார். அதனால் அவருக்கு நட்பு வட்டம் பூஜ்ய வட்டமாக இருந்தது. கொரோனா ஊரடங்குக் காலத்தில் அந்த வட்டம் சுருக்குக் கயிறாகத் தோற்றம்கொண்டு எழுத்தாளரை இரவும் பகலும் அச்சுறுத்தத் தொடங்கியது.
ஆகவே ஒரு முடிவெடுத்தார். உடனே இரண்டு சக எழுத்தாளர்களைத் அலைபேசியில் அழைத்து, “ஒங்கள மாதிரி யாராச்சும் எழுதியிருக்காங்களா? செகாவ்வுக்கு அப்புறம் நீங்கதான், என்ன ஒண்ணு, இங்க பொறந்துட்டீங்க” என்று வருந்தினார். இன்னும் இரண்டு சக எழுத்தாளர்களை அழைத்து, “ஒங்களப் போல யாரு எழுதறாங்க சொல்லுங்க, மார்க்வெஸ்ஸுக்கு நிகர் நீங்க. என்ன ஒண்ணு, தமிழ்ல எழுதறதால நோபல் கெடைக்கல” என்று நெகிழ்ந்து போனார். இன்னும் சில எழுத்தாளர்களை அழைத்து, “பொலன்யு ஒங்ககிட்டே பிச்சை எடுக்கணும் சார். வேறெங்கயாவது பொறந்திருந்தீங்கனா எங்கயோ போயிருப்பீங்க!” என்று பெருமூச்செறிந்தார். இப்படி ஒரு டஜன் எழுத்தாளர்களிடம் உலக எழுத்தாள நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு அவர்கள் மனங்களைத் தொட்டார்.
கடைசி அலைபேசி அழைப்பை அவர் முடித்தபோது மதியச் சாப்பாட்டுக்கான நேரம். சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போட்டார். தூக்கத்தில் அவர் ஒரு வென்டிலேடரில் வைக்கப்பட்டு இறந்து போனார். யாருக்கும் சொல்லப்படாமல் எரிக்கப்பட்ட அவருக்கு அடுத்த நாள் zoomஇல் ஒரு அஞ்சலிக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடங்கும்முன் அதில் உரையாற்றுபவர்கள் பட்டியலில் இருந்த ஒரு எழுத்தாளர் வீட்டுக்குச் சென்று, அவரது கணினியின் மின்திரைக்குமுன் முதல் ஆளாகப் போய் நின்றுகொண்டார். ஆவி என்பதால் அவரால் மின்திரையை மறைக்காமல் நிற்கமுடிந்தது. Zoom கூட்டம் தொடங்கியது. ஆறு சக எழுத்தாளர்களின் முகம் திரையில் தெரிந்தது. மிச்சப் பேர் ஏமாற்றிவிட்டார்கள். ஆனால் அவருக்கு அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டம் தொடங்கி பத்து நிமிடமான பின்னும் ஒரு வாசகர்கூட லாக் இன் செய்யவில்லை. ஆவி அரை மணி நேரமாக இதோ வருவார்கள் அதோ வருவார்கள் எனப் பார்த்துக்கொண்டிருந்தது. ம்கூம், ஒருத்தரைக் காணோம். இறந்துபோன துக்கத்தைவிட அதிகப்படி துக்கத்தோடு ஆவி சுடுகாட்டுக்குத் திரும்பியது.
ஒரு கட்டத்தில் மின்விசிறி நின்றுபோனது. வேர்வை தொப்பலாக நனைக்க கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார் எழுத்தாளர். வந்த கனவை மனதில் ஓட்டிப்பார்த்தார். எழுதி என்ன சுகம் கண்டோம் என்று வேதனை கிளர்ந்தது. தான் கண்டது பகல் கனவு என்பதுதான் ஒரே ஆறுதல்.
என்றாலும் இந்தக் கனவு எதனால் வந்தது என்று யோசித்தார். மதியம் உண்டது எளிய உணவுதான். அஜீரணக்கோளாறெல்லாம் கூட இல்லை. காரண காரியம் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் நடக்காது என நம்புபவர் அவர். அதனால் கனவென்றாலும் தனக்கு ஏன் இந்த அநீதி நடக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சட்டென அவருக்கு ஒன்று புலப்பட்டது.
எழுந்து உட்கார்ந்தவர் மீண்டும் அலைபேசியில் அழைத்துப்பேச ஆரம்பித்தார். “உங்க வாசிப்பென்ன, ரேஞ்ச் என்ன, செக்காவ்வுக்கே இப்படி ஒரு வாசகர் அமைஞ்சிருக்க மாட்டாரு, என்ன இங்கே பொறந்துட்டீங்க, இந்த ஆளோட வாசகர்னு சொல்லிக்கறதெல்லாம் உங்க தன்னடக்கம்தான்.”
நூறு அலைபேசி அழைப்புகளாவது இருக்கும்.
உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்
ஊரடங்குக் காலத்தில் உயிர்வாழ்பவர்களுக்கே சரியான சாப்பாட்டுக்கு வழியைக் காணோம். இதில் செத்துப்போனவர்களை எப்படி கவனிப்பது? ஆனால் இப்போது பார்த்துத்தான் தெரிந்தவர்கள் சாகிறார்கள், வீட்டில் திதி வருகிறது. அவள் அம்மா இறந்துபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இறந்தவளுக்கு அவள் வீட்டில் முதலில் சில ஆண்டுகள் விஸ்தாரமாகத் திதி தந்தார்கள். பிறகு சில ஆண்டுகள் அவள் புகைப்படத்துக்கு பூப்போட்டுவிட்டு படைத்தார்கள். போகப் போகக் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. கோயிலில் யாருக்காவது அரிசியும் வாழைக்காயும் தந்து சம்பிரதாயமாக நினைவுகூரத் தொடங்கினார்கள். ஆனால் கொரோனா காலத்தில் கோயிலுக்கும் வழியில்லை. கோயம்பேடு விவகாரத்தால் வாழைக்காய் என்ன, எல்லாக் கறிகாய்களையுமே குற்றவாளிகளைப் போலச் சந்தேகித்துத்தான் வீட்டுக்குள் நுழையவிட முடிகிறது.
உயிரோடிருந்தபோது அவள் அம்மாவுக்கு வெங்காய சாம்பார் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் யார் திதி வந்தாலும் ”நான் செத்தா என் திதிக்கு வெங்காய சாம்பார் வையி. வாழக்கா, பொரிச்ச கூட்டெல்லாம் வேணாம்” என்று தவறாமல் சொல்வாள். இந்த முறையாவது அம்மாவின் ஆசையை நிறைவேற்றிவிடலாம் என்று அவள் எண்ணினாள். புது பிராண்ட் சாம்பார் பொடி. இப்போதுதான் பாக்கட்டைப் பிரிக்கிறாள். நல்ல மணம். சாம்பார் சாதமாக அம்மா படத்துக்குமுன் வைத்துப் படைத்தபின் ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்துப் பார்த்தாள். சாம்பார் என்ற வகையறாவையே அவமானப்படுத்துவதாக அது இருந்தது. ஆனால் அவளது ஒன்றுவிட்ட மாமா ஒருத்தர் எப்போதோ சொன்னது அவள் நினைவுக்கு வந்தது: “செத்துப்போனவங்க சாப்ட்டுட்டுப் போனா சாப்பாட்டில ருசி போய்டும். சாமி பிரசாதம் மாதிரி அமிர்தமா இருக்காது.” அவளுக்குத் தன் அம்மாதான் வந்து சாப்பிட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. ‘திதி சக்சஸ்’ என்று சந்தோஷப்பட்டாள். ஆனால், ஒருவேளை புதுப் பொடி ஏமாற்றிவிட்டிருக்குமோ என்ற சந்தேகமும் வந்தது.
இன்னொரு தரம் சாம்பார் வைத்துப் பரிசோதித்துப் பார்க்கலாம்தான். ஆனால் ஒருவேளை சாம்பார்ப் பொடிதான் பிரச்சினை என்றால்? ஆனால் அவள் திதி தரும்போது அம்மா எப்படி வராமல் போயிருக்க முடியும்? இரண்டு உண்மைகளில்,ஏதோ ஒன்றுதான் உண்மையில் உண்மையாக இருக்க முடியும் என்பது நினைத்துப் பார்க்கும்போதே அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அந்தச் சாம்பார்ப் பொடி பாக்கட்டை அதன்பின் அவள் தொடவில்லை.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , 'காதலனின் மனைவி’
- உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி
- கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி
- குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - பெருந்தேவி
- குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி
- சிறுகதை: அழகு - பெருந்தேவி
- சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி
- குறுங்கதை: ஆசிர்வாதம்- பெருந்தேவி
- குறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி
- பயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி
- போகாதே-பெருந்தேவி
- விடாக்கண்டன் கொடாக்கண்டன்-பெருந்தேவி
- ஒரு மெசேஜை வாசிப்பது எப்படி?- பெருந்தேவி
- படுக்கையறைகளின் கதை- பெருந்தேவி
- ஜானுவும் ராமும்- பெருந்தேவி
- நரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி
- துச்சலை- பெருந்தேவி
- கதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி
- பெருந்தேவியின் மூன்று குறுங்கதைகள்
- அத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி
- பெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’
- சிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி
- பெருந்தேவியின் எட்டுக் குறுங்கதைகள்