அத்தியாயம் – 3

சோகக்களை அப்பிய முகத்தோடு மூன்று நாட்கள் மழிக்காத வெள்ளை நிற முகப்பயிர்களோடு ,தன் முன்னால் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த அவளைப் பார்த்தார் அந்த பெரியவர் கண்கள் அழுதுஅழுது வற்றிப்போய் இருந்தது.

“எனக்கு எந்த பயமும் இல்லை நீங்க பத்திரமா போயிட்டு வாங்கப்பா.” என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பிய அந்த பெண்  இப்போது தனக்கு முன்னே அதுவாய் தன்னை வழியனுப்புவாள் என்ற வம்சவிளக்கு .இப்போது அவர் வழியனுப்ப நேரம் பார்க்க வைத்திருக்கிறாள்.

சுவரில் தலைசாய்த்து சாய்ந்திருந்த அவரை இன்னும் கொஞ்சநேரம்தான் அவள் அதுவாகி அதுவும் காற்றில் கலக்கப்போகிறது என்ற உண்மை உறைக்க விழிகளைக் கூடத் திருப்பாமல் அப்பெட்டியில் அவளின் வெளிறிய முகத்தைப் பார்த்தபடி இருந்தவரை பக்கத்து வீட்டு மூர்த்தி ஆர்த்தோ மருத்துவர் அழைத்தார்.

“சிவநேசா இப்படியே உட்கார்ந்திருந்த அடுத்த காரியங்களை யார் பார்க்கிறது. பொண்டாட்டி செத்தபிறகு அவதான் உலகன்னு இருந்தே கடவுள் அவளைப் பரிச்சிருக்க வேண்டாம். ஏற்கனவே செத்துப்போய் நாலுநாள் இருந்துட்டு வந்த உடம்பு தாங்காதுப்பா, நேரம் வேற போயிட்டே இருக்கு? அவ என்ன எழுந்து வந்து உன்னை அப்பான்னா கூப்பிடப்போறா? மனதை கல்லாக்கிட்டு நல்லபடியா வழியனுப்பி வைப்பா.” என்றார்

கம்மிய குரலில் “எனக்கு எதுவும் செய்ய தெம்பு இல்லை மூர்த்தி ஆக வேண்டியதை நீங்களே பார்த்துடுங்க. அவளே போனப்புறம் என்னத்துக்கு சாங்கியமும் சம்பிரதாயமும்.” அவரின் விரக்தி மூர்த்தியைக் கீறிப்பார்த்திருக்க வேண்டும்

ஒரு ஆழ்ந்த பெருமூச்சோடு அக்கம் பக்கத்து ஆட்களை வைத்து சாங்கியங்களுக்கு ஏற்பாடு செய்தார். சபேசனின் வழக்கப்படி தேர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது, வெட்டியான் பச்சரியும் நல்லெண்ணெய்யையும் சட்டியில் கலந்து கொண்டு இருந்தான்.

“சாமி நீர் மலைக்கு ஆரு போறாங்க? செத்தபிள்ளைக்கு கூடப்பிறந்தவங்க அங்காளி பங்காளி யாராவது?” மூர்த்தி தன் பெண்ணைப் பார்த்து ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரச்சொன்னார். அந்த ஐஸ்பெட்டியின் தலைமாட்டில் இருந்த காமாட்சிவிளக்கு ஒரு குண்டானுக்குள் ஓளிந்து கொண்டே தன் வெளிச்சத்தை சிதறடித்தது. பக்கத்தில் குவியல்குவியலாய் ஊதுவத்தி தன் தலையில் நெருப்பை சுமந்த கொள்ளிவாய் பிசாசாய் ! கண்ணாடிப்பெட்டியை அகற்றினார்கள். விரைத்திருந்த  அத்துணிமூட்டைக்குள் அவளின் முகம் மட்டும் வெள்ளைப் பஞ்சுக்குள் சுற்றிவைக்கப்பட்ட பொம்மையாய்.

நாற்காலியில் அதனை தூக்கி உட்காரவைத்தான் வெட்டியான். ஆனால் அது உட்கார மறுத்து சறுக்கிக் கொண்டு ஓடியது. ஒரு குச்சியை வைத்து பின்பக்கம் அணைகட்டி அமர வைக்க கத்தியைக் கொண்டு பஞ்சினைப் பிளந்தான். பிளந்திருந்த அந்த முதுகுப்பக்க பஞ்சுத்துணியைத் தாண்டி கொழகொழவென வெறும் சதைப் பிண்டம் வெளியே கசிய முதுகெலும்பு இருந்த இடம் முற்றிலும் காலியாய் ! மூர்த்தியின் கண்களுக்குள் விபரீதமாய் ஏதோ தட்டுப்பட்ட அந்த நேரம் வெட்டியான் தன் சட்டியிலிருந்து சீகக்காய் எண்ணெய் எடுக்க நகர்ந்த அந்த நேரம் ! அந்த பிரேதம் தீப்பற்றி எரிந்தது. அனைவரிடமும் ஒரு திடுக்கிடல்…!

உற்சாகமாக தன்முன்னால் எழும்பிய குரல்கேட்டு திரும்பினான் தூரிகைநேசன் எதிர்புறத்தில் துளசியும் பாலாவும்,“என்ன ஓவியரே நடுரோட்ல நிக்கிறே? நான் கூட இந்த ரோடுலே தூரிகைநேசனுக்கு யாராவது சிலை வைச்சிட்டாங்களோன்னு நினைச்சேன்?!” என்றாள் கிண்டலாய்

“ஒரு போலீஸ் ஆபிசர் இப்படித்தான் கிண்டலடிக்கிறதா? உன்கிட்டே ஒரு மிடுக்கே இல்லையே?!”

“அதெல்லாம் யூனிபார்ம் போட்டா தானா வந்திடும். போலீஸ்னா சிரிக்கக்கூடாதா என்ன? மேற்படி ஜோக் கூட அடிப்பேன் அவன் சிரித்தான் என்ன இரண்டுபேரும் வீதியுலாவா?”

“ரொம்ப நாளாச்சி மீட் பண்ணி அதான் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வர்றோம். கார் ரிப்பேரா?” என்று கேட்ட பாலாவின் கண்கள் எதிரே பானெட்டினை குடைந்து கொண்டிருந்த மெக்கானிக்கின் மேல் விழுந்தது. வாட்டசாட்டமான அவனின் உடல் திரண்டு எழுந்த புஜம் என்று ஆஜானுபாகுவாக இருந்த அவ்வுடல் இம்சிக்க சட்டென்று தனது மருத்துவமனையின் வெள்ளை கடப்பைக்கல் மீது அவன் உடைகளற்ற உடலை சுமந்தபடி அதுவாய் காட்சியளிப்பதாய் தோன்ற கைகளில் ஒரு பரபரப்பு.

“என்னடா முழிக்கிறே” என்று தூரிகைநேசன் தோளைத் தட்டவும்தான் இயல்பு நிலைக்கு வந்தான். தலையை உதறியபடியே நத்திங் என்றான் கண்கள் மட்டும் இன்னமும் அந்த மெக்கானிக்கையே மொய்த்தது.

“நான் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் நிகழ்ச்சி முடித்துவிட்டு வரும்போது கார் வழியில் மக்கர் பண்ணிவிட்டது.”

“சூப்பர் அதான் உன் வாகனம் காலை வாரிடுச்சே வா நைட் டின்னர் முடிச்சிட்டு பாலாவே உன்னை டிராப் பண்ணிடுவான்.” என்றாள்.

“இல்லைப்பா அதான் மெக்கானிக் வந்திட்டாரே கொஞ்ச நேரத்தில கார் ரெடியாகிடும். என் கேலரிக்கு வேற போகணும். சிலை செய்ய கொஞ்சம் மெட்ரியல்ஸ் ஆர்டர் பண்ணியிருந்தேன். லோட் வந்ததாக சொன்னாங்க ரிசீவ் பண்ணனும்.”

“அடடா நான் ஒரு போலீஸ் ஆபிசர், இவன் ஒரு டாக்டர் நீ ஒரு பிரபலமான ஓவியர் நண்பர்கள்தான்னு பேரு ஆனா சந்திச்சிக்கிறதே இல்லை கிடைச்ச சான்ஸை ஏன் விடணும் நேசன் வாங்க துளசி.” அழைக்க அதற்கு மேல் மறுக்கத் தோன்றாமல் டிரைவரிடம் காரை சரிசெய்து எடுத்து செல்ல சொல்லிவிட்டு அவர்கள் வண்டியில் அமர்ந்தான் தூரிகைநேசன். துளசி தொணதொணக்க பாலாவிடம் மட்டும் ஒரு அசாத்திய மெளனம். ஏனோ இந்நிகழ்வு அவனுக்கு விரும்பத்தகாததைப் போல இருந்ததோ என்று தூரிகைநேசனை நினைக்க வைத்தது.

———————————————–

அந்த அதிகாலைக் குளிர் காதில் கவிதைப் பேசியது போர்த்தியிருந்த போர்வைக் காவலனைத் தாண்டி, வீல் என்ற அலைபேசியின் அலறலுக்கு செவிசாய்த்து கண்களைத் திறந்தான் பாலா. அதிகாலை உறக்கத்தை கலைத்தவனை மனதிற்குள் சபித்துக் கொண்டே, காதில் துளசி கிசுகிசுத்தாள்.

“பாலா இஸ் திஸ் எமர்ஜென்ஸி சீக்கிரம் மருத்துவமனைக்கு வா….?!” நேரம் ஆறரையைக் காட்டியது.

“என்னாச்சு துளசி…?!”

“ஒரு மேஜர் ஆக்ஸிடெண்ட் டிரைவரோடு சேர்த்து ஆறேழு பேர் ஸ்பாட்லேயே எல்லாரும் அவுட் என் லிமிட்லேதான் விபத்து. பாடி எல்லாம் உங்க ஆஸ்பிட்டலுக்குத்தான் வருது ப்ளீஸ் கம் நீ தர்ற ரிப்போர்ட்ஸ் வைச்சுதான் நான் கேஸை ஹேண்டில் பண்ணனும். பிகாஸ் பிரஸ் பீப்பிள்ஸ் இப்பவே மொய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.”

“ஓஹோ…. ஐ வில் பி தேர் இன் 20 மினிட்ஸ் துளசி.” அதற்கு பிறகு படுக்கையில் உறக்கம் பிடிக்கவில்லை பாலாவிற்கு. ரத்தத் தீற்றல்களோடு காரில் இடது பக்கமும் வலப்பக்கமும் கடைசியாய் சிரித்திருந்த உதடுகளுக்கு கருஞ்சிவப்பு நிறத்தை பூசிய முகங்கள் கண்ணுக்குத் தெரிய துவங்கன. ஏழு பத்து என்றறிவிக்க விரட்டிக்கொண்டு இருந்த நொடி முட்களை பார்த்தபடியே உள்ளே நுழைந்தான் பாலா. எதிர்பட்டான் கம்பெளண்டர் கோபி

“ஸார் மொத்தம் ஏழு பாடிங்க…. மார்ச்சுவரியில் போட்டு இருக்கோம். மத்த ஆட்கள் எல்லாம் சுத்தம் பண்ணிட்டு இருக்காங்க!?”

“விபத்து எப்படி நடந்தது டிரைவர் குடிச்சிருக்காரா? கொண்டு வந்த போலீஸ் என்ன சொன்னாங்க?!”

“அதெல்லாம் ஏதும் சொல்லலை ஸார். இறந்தவங்க கொஞ்சம் பெரிய இடம் போல நம்ம லோக்கல் அரசியல்வாதியோட உறவினர் குடும்பம் அதனால இன்னமும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக ரிப்போர்ட் வேணுன்னு சொல்லிட்டுப் போனாங்க.”

“ட்யூட்டி டாக்டர்ஸை அட்டண்ட் பண்ண சொல்ல வேண்டியதுதானே?!” கேட்டுக் கொண்டே பிரேதபரிசோதனை அறிக்கை என்று ஒரு மனித உடலின் வெளிப்பாகங்கள் தெரியும் படியான வரைபடம் கொண்ட பழுப்பநிற பேப்பரை பேடில் பொருத்தினான். மேற்பக்கம் அவர்கள் அனைவரின் பெயரையும் எழுதினான்.

“இரண்டு மணி நேரம் எல்லாம் வேலைக்கு ஆகாது. நான் துளசிகிட்டே பேசிக்கிறேன்.” பேப்பர் ஒர்க் எல்லாம் முடிந்தவுடன் உதவிக்கு வந்த மருத்துவ கல்லூரி இளைஞனை ஒரு பார்வை பார்த்துவிட்டு போஸ்மார்ட்டம் அறைக்குள் நுழைந்தான் பாலா சீருடை சகிதம் போட்டிருந்த மாஸ்க்கையும் மீறி மனிதகவுச்சி வாடை சற்றே பலமாய் வீசத்தொடங்கியிருந்தது.

‘இந்த நாத்தமெல்லாம் எங்களை ஒண்ணும் செய்யாது ஸார்’ என்று கெத்தாக நின்றிருந்தார்கள் அங்கிருந்த ஊழியர்கள். உதவிக்கு வந்த அந்த மருத்துவக்கல்லூரி மாணவன் மட்டும் இரண்டுமுறை வாஸ்பேஷன் பக்கம் போய் வந்திருந்தான். சதுரமான பழுப்புவெள்ளை நிற கடப்பை கல்லில் உறைந்திருந்த ரத்த அச்சுக்கள் பூக்களாய் வியாபித்து ஒரு புதுடிசைனைத் தோற்றுவித்திருந்தது. உடைகளற்ற அந்த உடல்களில் மேடிட்ட பகுதியின் மேல் எவ்வித கிறக்கமோ ஈர்ப்போ யாருக்கும் ஏற்பட்டிருக்கவில்லை. பிரேதப்பரிசோதனை முடிந்தபிறகு அவர்களுக்கு அணிவிக்கப்பட இருக்கும் பேட்ஜ்குகள் வரிசையாய் ஒருபுறம் அதற்குப்பக்கத்தில் சற்றே துருப்பிடிக்கப் போகும் நிலையில் உள்ள கத்தி கத்திரி வகையறாக்கள் சலைன் கலந்திருந்த நீரில் மூச்சடைக்கப்பட்ட பிணமாய் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு இருக்க, யாரை முதலில் எடுக்கப்போகிறாய் என்று போட்டியிடுவதைப் போல இருந்தது அது.

கூர் நுனி கொண்ட சிறிய கத்தி ஆர்வமாய் அந்த சதைக்கோளத்தை கீறி ருசிபார்க்கத் தயாராய்! விபத்து நடந்த நேரம் உடைந்த எலும்புகளின் விவரங்கள் கருகிய தோல்கள் காதோரம் குத்தியிருந்த காரின் கண்ணாடித் துண்டங்கள் என சகலமும் கோப்பையாய் ஒரு காகிதத்தில் சேகரித்து முடிக்க ஸார் என்று தயங்கி வந்து நின்றான் இன்னொரு வார்ட்பாய்

“என்ன கோபி….?” மாஸ்கைத் திறக்காமலேயே அவனிடம் கேட்டான் பாலா.

“சார். வெளியே பிரஸ்பீப்பிள்ஸ் ரொம்ப பிரஷர் பண்றாங்க துளசி மேடமும் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க?!

துளசியின் பெயரைக் கேட்டதுமே தனக்கு அருகில் நின்றிருந்த ட்யூட்டி டாக்டரிடம் “ரெக்கார்ட்ஸ் ரெடி பண்ணுங்க.” என்று வெளியே வந்தான் பாலா.

மைக்கோடு எதிர்ப்பட்ட சிலரை கடந்து துளசியிடம் வந்தான். “என்ன துளசியிது நீயாவது இவங்களை கன்ட்ரோல் பண்ணக் கூடாதா?! ஆறுபேர் ஒவ்வொரு பாடியினையும் அனலைஸ் பண்ண வேண்டாமா? ஒரு சிறுமி, இரண்டுபேர் வயசானவங்க இவங்க மூணுபேர் ரொம்பவும் நசுங்கி குழைஞ்சி போயிருக்காங்க பாடி கொஞ்சம் டீகம்போஸ் ஆகியிருக்கு. நடந்தது விபத்துதான் மற்ற விவரங்களுக்கு கொஞ்சம் காத்திருக்கணும் ப்ளீஸ் கிவ் மி சம் டைம்.”

“எனக்குப் புரியுது இவங்களை நீ கேர் பண்ணாதே நான் பார்த்துக்கறேன் இப்போ வேற ஒரு சிக்கல் பாலா ஐ நீட் யுவர் ஹெல்ப்.” அவள் குரலில் இருந்த பதட்டம் அவனையும் தொற்றிக் கொண்டது.

“என்னாச்சு?”

“நான்கு நாளுக்கு முன்னாடி அதான் பீச்சிலே கரை ஒதுங்கிய பிணம் தற்கொலைன்னு போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லி ஆள் அடையாளம் தெரியாம உங்க ஆஸ்பிட்டல் மார்ச்சுவரிலேயே கூட இருந்ததே, நேத்து ஸ்டேஷன்லே இருக்கும்போதே அந்த பொண்ணோட போட்டோ எடுத்திட்டு ஒரு வயதான பெரியவர் வந்தார் அவ என்பொண்ணு நான் காசியாத்திரை போயிட்டு வந்தேன் பெண்ணை வீட்டில் காணோம் விருகம்பாக்கம் ஸ்டேஷன்லே கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தேன் அவங்கதான் உங்களை பார்க்கச் சொன்னாங்கன்னு வந்தாரே”

:ஆமா…. அந்த கேஸூக்கு என்ன துளசி அதுதான் அவர் பொண்ணுன்னு பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சிட்டு பாடியை வாங்கிட்டுப் போயிட்டாரே அந்த புரோசிஜர் முடிச்சிட்டுத்தானே நாம வெளியே டின்னர் போனோம்.”

“எக்ஸ்ஷார்ட்லி அதே பொண்ணுதான். பாடியை வாங்கிட்டுப்போய் ஈமக்கிரியைப் பண்ணப் போன இடத்தில அந்த பொண்ணோட பாடி திடீர்ன்னு தீப்பிடிச்சி எரிஞ்சி போச்சாம்.”

“வாட்.. அதெப்படி இறந்து போய் இத்தனை நாள் கழிச்சி ….?!”

“எனக்கும் அதுதான் டவுட் வயசானவர் பாவம் பயத்திலேயே மயங்கி விழுந்திட்டார் என்ன ஏதுன்னு விசாரிக்கிறதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சிப்போச்சு அவருக்கு துணையா இறுதிக்காரியங்களில் கூட இருந்த ஆர்த்தோ டாக்டர் மூர்த்தி சொன்ன ஒரு விஷயம் என்னை குழப்பிடுச்சி பாலா.”

“அப்படியென்ன சொன்னார்?”

“இறந்து போன அந்தப்பெண்ணோட முதுகெலும்பை ஏற்கனவே எடுத்திருக்காங்களாம். அப்படியெடுத்திருக்கும் பட்சத்தில் எப்படி உன்னோட பிரேதபரிசோதனை அறிக்கையில் அது தெரியாம போயிருக்கும்.”

பாலா மாஸ்க்கையும் அணிந்திருந்த பச்சை நிற மேலாங்கியினையும் கழற்றும் சாக்கில் பின்பக்கம் திரும்பி நின்று கொண்டான். மனதில் முணுக்முணுக் என்று ஒரு சப்தம்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
  2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
  3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
  4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
  5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
  6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
  7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
  8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
  9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
  10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
  11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
  12. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
  13. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
  14. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
  15. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
  16. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
  17. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
  18. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
  19. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
  20. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
  21. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
  22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
  23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்