அத்தியாயம்-13

கருங்கல் மண்டபத்தின் மதிற்சுவரில் சிறு கேணி புடைத்து நீர் சொரிந்ததைப் போன்ற அந்த வானுயர பவுண்டேஷன் முழுவதிலும் சுழலும் நீர் தன் பச்சோந்தி தனத்தை நிரூபித்துக்கொண்டு இருந்தது. பாளம் பாளமாய் வெடித்திருந்த தரைச் சுவற்றுப்பள்ளங்கள் முழுவதும் அந்நீரை ஆவலாய் ரொம்பி கர்ப்பஸ்திரியாய் நிரம்பியிருக்க மொட்டைமாடியின் விளிம்பில் வரி வரியான எலும்புகளை ஆடையாய் தரித்திருந்த அவன் காதுகள் இரண்டும் கூர்மையாய் அந்நீரின் சப்தத்தை உள்வாங்கிக் கொண்டது. ஒரு சொட்டு கூட மிச்சம் வைத்துவிடக்கூடாது என்று தாகத்தை அதிகமாக்கிக் கொண்டே வந்தான். ஓநாயின் முகச்சாயலைக் கொண்டிருந்த அவனிதழ்களில் கூர்பற்கள் ஆங்காங்கே நிறத்தீற்றல்களில் கலைந்து தன் நிஜத்தைப் பெற போராடிக்கொண்டு இருந்தான்.

போர்வையாய் போர்த்தியிருந்த உதட்டை பின்னோக்கி பற்களை நரநரக்க உதடு பற்களின் பின்பக்கம் பயந்து தன் சிவப்பை மறைத்துக் கொண்டது. வெப்பமாய் வீசிய காற்றை நோக்கி சிரித்தான். எட்டுதிக்கும் வெறிசிரிப்பாய் அது எதிரொலிக்க காற்றும் தன் வேகத்தை குறைக்க கதறியது. அவன் கரங்களில் கூர் கத்தி அதன் அடிப்பகுதியில் எங்கோ அறுபட்ட ஒரு விலங்கின் சதைத்தீற்றல்கள். ஒழுகும் நிலை மாறி உறைந்திருந்த உதிரத்தின் ஒற்றைத் துளி. அந்த செந்நாய் மனிதன் அவளைப் பார்க்கிறேன் எதிர்சாரியில்

அளவெடுத்த வடிவமாய் நிலவின் ஒளியில் நிமிடத்திற்கு நிமிடம் அவள் சோபித்தாள். ஆகச்சிறந்த காதலையும் காமத்தையும் அவன் அவளிடம் கொட்டிட துடித்தான். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்குள் கணப்பொழுதின் இமைக்கூட்டுக்குள் அவளை சிறை வைக்கத் துடித்தன. அவன் தன் ஈர்ப்பை விவரிக்க நொடிகளைத் தூது விட்டான் அவள் தன் உதட்டிற்கு இகழ்சாயத்தைப் பூசி வீசினாள். வெறிதீர்த்து கொள்ள தன் நீள நகங்கள் பதித்த கரங்களை நீட்டி அந்த பேரண்டத்தின் இருள் பக்கமாய் அமைந்துவிட்ட மொட்டைமாடியின் வெளிர்பரப்பில் அவளை குழந்தையாக்கினான். கூர் நகங்கள் அவளின் தளிர் உடலில் நீவி இரத்தக் கோலங்களை போட்டன. கொடூரத்தின் சாயல் அவள் மேல் படரத்தொடங்கியது.அவள் தன் புன்னகையைத் தொலைத்தாள். தன் உன்னதத்தை தொலைத்தாள். அதுகாறும் சன்னமாய் இருந்த அவளின் அலறல் ஒரிருதரம் உச்சஸ்தாதியில் போகத் தொடங்கி பின் உறையத் தொடங்கியது ஆம் அவள் தன் உயிரையும் தொலைத்தாள். உயிர் தொலைத்த மெய் உருக்குலைந்த அழகினையும் இடைவெளியின்றி புணர்ந்தான் அந்த ஓநாய் மனிதன்.

காரிடார் முழுவதும் அழுத்தமாய் தன் காலடிகளைப் பதித்தான் அந்த மொட்டைமாடி ஓநாய் மனிதனாய் தன்னை உருவகப்படுத்திய பாலா தன் காதுகளைத் தேய்த்துக் கொண்டான். கட்டிலின் கீழே சற்று முன் தன் உடலணைத்தவளின் மெய்யைத் தேடினான். மூளைக்கு ஒரு குரல் அவள் அங்கிருக்கிறாள். ஆனந்தாய் அனுபவித்த வெப்பத் தாக்கம் பாலாவைத் துரத்த அவன் வில் துளைத்து புறப்பட்ட அம்பைப் போல மார்ச்சுவரி அறையை அடைந்தான். மேஜையின் மேல் இகழ்சாயம் பூசிய அவள் தன் காரிருள் போன்ற கூந்தலை பின்புறம் தள்ளி அந்த மொட்டைமாடியின் கடைசிநிமிட காந்த ஈர்ப்பில் அவனை இழுத்தாள்.

சார் … சார்….நீங்களா எந்த கேள்வியும் அவன் கூர் காதிற்குள் விழவில்லை ஓநாய் மனிதன் தன் கூர் காதுகளை சுருக்கிக் கொண்டான் அவன்தான் இப்போது வெள்ளையுடை தரித்த பாலாவாய் மாறி நிற்கிறானே வேகமாய் அவள் கிடத்தப்பட்டு இருந்த இரும்புதகட்டை அடைந்தான். ஏற்கனவே குழந்தையாய் காத்திருந்த அவளின் தேகத்தை ஒரு விநாடி ஆரத்தழுவி பின் அருகிலிருந்த கத்தியை எடுத்து கோலங்கள் இடத்தொடங்கினான் பாலா.

திக்பிரமை பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள் துளசி. டாக்டர் சதாசிவத்தின் நிலைமையோ சொல்லவே வேண்டாம். தன் முன்னால் விரிந்திருந்த செல் திரையில் அறையில் கண்மூடிப்படுத்திருந்த பாலா திடுமென்று எழுந்து சலைன் பாட்டிலின் இணைப்பை துண்டித்து தரையில் எதையோ தேடி மீண்டும் ஏதோ கண்டுபிடித்ததின் விளைவாய் வேகமாய் ஓடி ஏதோ ஒரு பிணத்தை கட்டிப்பிடித்து பின் அதை கூர் அறுத்து டாக்டர் பாலாவுக்கு என்னாச்சு ? தன் குரல் எழும்பியதா என்ற சந்தேகம் துளசிக்கு ஏற்பட்டது.

ஆனால் அது கேட்டது என்று சதாசிவம் பேசினார். எனக்கும் அதே சந்தேகம்தான். இன்ஸ்பெக்டர் துளசி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க பாலாவை இனிமேலும் இங்கே வைக்க சாத்தியப்படாது. அவருக்கு மனரீதியா ஏதோ குறையிருக்காமாதிரி தோணுது. அதனால நாம கூடிய சீக்கிரம் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. எனக்கு தெரிந்த மருத்துவர் இருக்கார் அவரை வரச்சொல்லி….

சார் அப்போ பாலாவை பைத்தியன்னு சொல்றீங்க அரசாங்கத்தினால் சிறந்த மருத்துவர்ன்னு விருது வாங்கி உங்க மருத்துமனைக்கு பெருமை சேர்த்தவன் ஸார். ஏதோ அவன் போறாத காலம் இப்படியொரு இக்கட்டில் மாட்டியிருக்கான். நீங்க அவனுடைய அப்பா மாதிரின்னு அடிக்கடி சொல்லுவான் நீங்களே அவனை கைவிடலாமா ?

ஸீ மிஸ். துளசி பாலா மேல எனக்கு தனிப்பட்ட அக்கறையும் அன்பும் இருக்கு ஆனா நிர்வாகத்தில் நான் ரிஸ்க் எடுக்க முடியாது இப்போ நீங்க பார்த்த வீடியோவில் பிணவறையில் நுழையும் வரையில் ஆஸ்பிட்டல் கேமிராவில் பதிவானது. மீதி டாக்டர் ஆகாஷ் தன் கேமிராவில் எடுத்தது. இது வெளியே தெரிந்தால் பாலாவின் கெரியர் பாதிக்கும். இப்போதைக்கு ஒரு தற்காலிக ஓய்வு நான் பாலாவுக்கு தர்றேன்.

அவனை வேலையில் இருந்து நீங்கப் போறீங்களா ?

இல்லைம்மா இதை நீங்க லாங் லீவ்வுன்னு எடுத்துக்கோங்க ? பாலா குணமான என்னைவிடவும் யாரு சந்தோஷப்பட மாட்டாங்க அவரின் குரலில் உண்மை இருந்தது. ஆனா, இதேமாதிரி பாலா ஏதாவது ஏடாகுடம் செய்திட்டா அப்புறம் அவர் மேல சட்டமும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.

துளசி யோசித்தாள். சரி டாக்டர் நான் பாலாவை அவன் வீட்டில் வைத்துப் பார்த்துக்கறேன். ஒரு ட்யூட்டி நர்ஸ் பாதுகாப்பு இரண்டு கான்ஸ்டபிள்ஸ்

அந்த ட்யூட்டி நர்ஸ் ஒரு மென்னாகவும் திடகாந்திரமான இளைஞனாகவும் இருந்தா பெட்டர். அதுக்கு முன்னாடி இந்த கார்ட்டை பிடிங்க இவர் பேமஸ் சைக்கார்ட்ரிஸ்ட் பகவான் என் நண்பர் அவரைப் போய் பாருங்க இது பாலாவின் மேல் நான் கொண்ட அக்கறையால் ப்ளீஸ் என்று அவர் கார்ட்டை தர்ற அதைப் பெற்றுக்கொண்டு அவருக்கு ஒரு விஷ் செய்து விட்டு வெளியே வந்தாள்.

துளசி ஒன்மினிட் சதாசிவம்தான் அழைத்தார்.

நீங்க ஹாஸ்பிட்டல்ல ஒரு ரகசிய சோதனை நடத்தணுமின்னு சொன்னீங்களே அது ?

கூடிய விரைவில் நானும் பாரான்சிக் நான்சியும் வருவோம் ஸார். பை தி வே பாலா திடிர்னு இப்படி வைலண்டா பிஹேவ் பண் என்ன காரணம். அவருக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டது. அந்த அறையை நான் பார்க்கலாமா டாக்டர்.

ஷ்யூர் அவர்கள் காரிடாரில் நடந்து நோயாளிகளுக்காக காத்திருந்தவர்களின் கரங்களில் பிளாஸ்டிக் கவரில் ஊசாலாடிய பழங்களையும், ஹார்லிக்ஸூ பூஸ்ட் பாக்கெட்டுகளையும் கடந்து அந்த அறைக்கு முன்பாய் நின்றார்கள். கதவைத் திறக்க உறங்கும் குழந்தையாய் பாலா அவன் முகத்தில் அத்தனை அமைதி. சற்று முன் வீடியோவில் இருந்தவனுக்கும் இவனுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள் என்று யோசித்த டாக்டர் சதாசிவத்தின் கண்களில் அந்த சிறிய ஊசிமருந்து பாட்டில் தென்பட்டது. மேற்குமிழ் உடைக்கப்பட்ட அந்த மருந்துக் குப்பியின் அடியில் சிறு சாரல்களாய் மருந்தின் எச்சம்.

அதன் பெயரைக் கண்டதும் அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. துளசி என்று இழுத்தார். பாலாவிடம் இருந்த கண்களைத் திருப்பி சதாசிவத்தைப் பார்த்த துளசி துணுக்குற்றாள் டாக்டர் என்னாச்சு ? ஏன் உங்க முகம் இப்படியிருக்கு ?!

இந்த மருந்து சலைன் பாட்டில் மூலமா பாலாவுக்கு செலுத்தப்பட்டு இருக்கு ?

என்ன மருந்து இது ?

இது ஒருவகையான கடுமையான போதை மருந்து சோமாலியா காடுகளில் இவ்வகை மருந்துகள்

பயிரிடப்படுவதாக சொல்லுவாங்க. கோக்கைன்னுக்கு பதிலாக இந்த பிளாக்கா எனப்படும் போதை வஸ்துவை உடலுக்குள் செலுத்திக்கொண்டால் அவர்கள் அசாதாரணமானவர்களாக மாறிவிடுவார்கள் இதை பயன்படுத்தும் மனிதர்களின் உடல் வெப்ப நிலை 105 டிகிரிக்கு மேல் 3 அல்லது 5 மணி நேரங்களுக்கு வித்தியாசமான மனஉணர்வுகளுக்கு ஆட்படுவாங்க ஒருவிதமான வெறி அவங்க மூளைக்குப் பரவும் அந்த சூட்டைத் தணிக்க சிலநேரங்களில் தற்கொலை வரைக்கும் கூட போறவங்க உண்டு. ஸோ பாலா வைலைண்டா ஆக இந்த மருந்துதான் காரணம் ஆனா இந்த மருந்து இங்கேயெப்படி வந்ததுன்னு தெரியலை ?

இத்தனை மோசமான போதை வஸ்து எதற்கு டாக்டர் இங்கே இருக்கணும்.

தெரியலை இன்ஸ்பெக்டர். எனக்கே இது புதிராத்தான் இருக்கு. போனவருடம் இந்த பிளாக்கா போதை இன்ஜெக்ஷனைப் பற்றி ஒரு கருத்துரை நடந்தது. நானும் சில டாக்டர்ஸ் கலந்து கொண்டோம் அதில் பாலாவும் அடக்கம். அப்போ இந்த வஸ்துவின் வீரியத்தை சோதித்து ஒரு தீசிஸ் ரெடி பண்ணனுன்னு என்னைக் கேட்டாங்க அப்போ பரிசோதனைகளுக்காக வாங்கிய இதை நான் மறந்தே போயிட்டேன் ஆனா மருத்துவமனையின் லேப்புக்குள்ளே ஏதோ ஒர மரப்பெட்டியில் ஒளிந்திருந்த இந்த வஸ்து இப்போ ஏன் வெளியே வந்தது ? யார் எடுத்திருப்பாங்க.

இதுக்கு எல்லாம் பதில் நீங்கதான் டாக்டர் சொல்லணும். நம்ம ஆஸ்பிட்டல்ல சிசிடிவி யூனிட் எங்கேயிருக்கு பாலாவோட அறைக்கு வந்து இந்த வஸ்துவை இன்ஜெக்ட் பண்ணது யாருன்னு முதல்ல கண்டுபிடிக்கணும். அப்பறம் மருந்தோட யூனிட்லே இருந்து இதையார் வெளியே எடுத்தாங்கன்னு தெரியணும்.

இன்ஸ்பெக்டர் மருந்துகள் இருக்கும் அறைக்குள் சிசிடிவி கிடையாது. ஆனா யார் வர்றாங்க போறாங்கன்னு குறிப்பெடுக்கும் ஒரு லெட்ஜர் அங்கே இருக்கு. கண்டிப்பா இந்த மருந்தை யார் எடுத்ததுன்னு கண்டுபிடிச்சிடலாம். அவர்கள் இருவரும் சிசிடிவி யூனிட்டுக்குள் நுழைந்தார்கள். நிறைய ஒயர்களோடு இணைக்கப்பட்ட டிவிக்களில் மருத்துவமனையின் இடங்களும் சரியான நேரத்தை கணக்கிட்டு பாலாவின் அறையைப் பார்வையிட்டார்கள். காலையில் பாலா எழுந்து அமர்ந்திருந்தான். ஒரு நர்ஸ் உள்ளே வரவே அவர்கள் ஏதோ பேசுவது புரிந்தது. நர்ஸ் தன் கரங்களில் ஒரு சிரஞ்சியும் மருந்து குப்பியும் வைத்திருந்தார். சட்டென்று அதன் தலையை ஒரு தட்டு தட்டி மருந்தை நிரப்பி பாலாவின் புஜத்தில் ஏற்றி அவன் படுத்ததும் கையோடு கொண்டு வந்த மருந்துக் குப்பியை எடுத்து கொண்டு கதவைச்சாத்தி வெளியேறினார்.

டாக்டர் இந்த நர்ஸ் இவங்கதான் ருத்ரா பாலாவை கவனிக்க ஏற்பாடு செய்தவங்க இவங்க காலையிலே பதினோரு மணிக்கு ஊசி போட்டு இருக்காங்க ஆனா அந்த மருந்து பாட்டிலை கீழே போடவே இல்லையே. அவர்கள் திரையையே உன்னிப்பாய் பார்த்துக் கொண்டு இருந்தபோது கதவை திறந்து யாரோ நீலநிற யூனிபார்மில் உள்நுழைந்தது தெரிய சட்டென்று திரை மங்கலாய் போய் நிறமிழந்தது. அடுத்த மூன்று நிமிடங்கள் எந்த காட்சிகளும் திரையில் தெரியவில்லை. சரியாய் நான்காவது நிமிடத்தில் பாலா தெரிந்தான்.

பாலா கண்விழித்தான் சலைனை துண்டித்தான் சுற்றும் முற்றும் பார்த்தான் வேகமாக ஓடத்தொடங்கினான். திரும்ப திரும்ப அதே காட்சிகள், துளசி ஆயாசாமாய் டாக்டரைப் பார்த்தாள் என்ன டாக்டர் பாலாவின் அறைக்குள்ளே யாரோ நுழையறாங்க யாருன்னு தெரியலை என்ன நடந்ததுன்னு தெரியலை திடீர்னு பாலா வைலண்ட் ஆகிறான் என்ன நடக்குது இங்கே ?!

அந்த கணிப்பொறி இளைஞன் மேடம் சில நேரங்களில் ஹார்ட்டிஸ்க்கில் எரர் ஏற்படும் அதிலும் நீங்க குறிப்பிட்ட அந்த நேரத்தில இங்கே பவர் கட்டாகி இருந்தது. யுபிஎஸ் சரியான கண்டிஷனில் இல்லாமல் போனதால் சில காட்சிகள் சேவ் ஆகாம எரேஸ் ஆகியிருக்கு இது ஒரு டெக்னிக்கல் பால்ட் சில நேரங்களில் இப்படி ஆவது உண்டு. மேம் நான் ஹார்ட்வேர் பர்சனுக்கு இன்பார்ம் பண்ணிடறேன் சில நேரங்களில் இந்தமாதிரி டெலிட் ஆன டேட்டாவை சர்வரில் இருந்து ரெக்கவர் பண்ணியிருக்கோம். 100 சதவிகிதம் வாய்ப்பில்லாமல் போனாலும் ஜஸ்ட் டிரை பண்ணலாம்.

தென் கோஹெட் அவரை உடனே வரச்சொல்லுங்க ? அவன் போனில் எண்களைத் தட்டிவிட்டு துளசியிடம்

சொல்லிட்டேன் மேடம் அவர் கிண்டி தாண்டியிருக்காராம் ஒரு கஸ்டமர் ப்ளேஸில் 5 மணிக்குள்ளே வந்திடறேன்னு சொன்னார். அவன் சொல்லிவிட்டு இனி பேச ஒன்றும் இல்லை என்பதைப் போல அமைதியாகிவிட துளசி டாக்டரிடம் சார் பாலாவை பார்த்துகிட்ட நர்ஸை நான் பார்க்கணும் ?!

இங்கே வருவதற்கு முன்னாலேயே வரச்சொல்லிட்டேன் இன்நேரம் என் கேபினில் அவங்க காத்திருக்கலாம் சதாசிவம் சொல்ல இருவரும் வெளியே வந்தார்கள். காக்கிச்சட்டையைப் பார்த்ததும் சிலர் பவ்யமாய் வழியை விட்டு ஒதுங்கிக்கொள்ள, பென்சிலைப் போன்ற உடலுருவினைக் கொண்ட ருத்ரா தன் யூனிபார்ம் முழுவதும் வியர்வைப் பூக்களைச் சிந்தியபடியே டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள்.

வணக்கம் டாக்டர்..கூப்பிட்டீங்கன்னு சொன்னாங்க ?!

இத்தனை நேரம் எங்கே போயிருந்தீங்க ருத்ரா பாலாவோட வொர்க் ஸ்டேஷனில்தானே உங்க ட்யூட்டி ? அவருக்கு என்ன மெடிசன் கொடுத்தீங்க ?

நீங்க பிரஸ்கிரைப் பண்ண மெடிசன்ஸ்தான் மிடாசோலம் இன்ஜெக்ட் பண்ணினேன் 10, 8,6,4 ன்னு எம்.எல்லைக் குறைச்சி போட சொன்னீங்க நான் இன்னைக்கு அவருடைய ஸ்டேஷன் போகும் போதே சார் கண்விழித்து இருந்தார். எனக்கு என்னாச்சு நான் சீப் டாக்டரைப் பார்க்கணுன்னு சொன்னார். நத்திங் ஸார் ஜஸ்ட் மயக்கம் போட்டு விழுந்திட்டீங்க டாக்டர் உங்களை ரெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க ரவுண்ட்ஸ் போயிருக்கார் அவரே உங்களை வந்து பார்ப்பார்ன்னு சொல்லி நான் இன்ஜெக்ட் பண்ணிட்டு வெளியே வந்தேன். அவர் காமாதான் இருந்தார். உங்ககிட்டே விவரம் சொல்ல நினைச்சு வரும்போது ரொம்ப எமர்ஜென்சி இரட்டை பிரசவம் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து டாக்டர் சாந்தா வொர்க் ஸ்டேஷன்க்கு கால் பண்ணாங்க பிளட்பேங்க வரை போயிட்டு அவங்களுக்கு உதவி செய்துட்டு வரும் போது நீங்க கூப்பிட்டதா சொன்னாங்க என்ன விஷயம் சார் ?

நீங்க பாலா ரூமில் இருந்து வெளியே வந்தபிறகு அவரைப் பார்க்கவே இல்லையா ?

இல்லை ஸார் மெடிசன் மயக்கத்தில் அவர் தூங்கிட்டு இருப்பார்ன்னு நினைச்சு நான் போகலை எனி பிராப்ளம் ஸார் ?!

டாக்டர் சதாசிவம் தன் கையில் உள்ள உடைந்த மருந்து பாட்டிலைக் காட்டி பாலாவுக்கு நீங்க போட்ட இன்ஜெக்ஷன் இதுவா ? என்றார்…அந்த பாட்டிலைப் பார்த்த ருத்ரா இல்லை என்று தலையசைத்தாள்.

சார் நான் இன்ஜெக்ட் பண்ணது புது மருந்து இன்னமும் பாதி மெடிசன் ப்ரீசரில் இருக்கு. இது என்ன மருந்துன்னே எனக்குத் தெரியலை. ருத்ராவை வெளியே சிறிது நேரம் இருக்கச் சொல்லிவிட்டு துளசியைப் பார்த்தார் சதாசிவம்.

இதென்ன டாக்டர் சிக்கல் இந்த மருத்துவமனையில் என்னதான் நடக்குது. தொடர்ந்து பாலாவைக் குறிவைச்சு நிறைய கிரிமினல் குற்றம் நடக்குது. எனக்கென்னவே பாலாவை யாரோ எதிலோ சிக்கவைக்கப் பார்க்கிறாங்க அதோட ஆரம்பம்தான் இந்த பிரச்சனைகள் எல்லாம். இந்த ஆஸ்பிட்டல்ல அவனுக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா ?

எதிரின்னு யாரும் இல்லை இன்ஸ்பெக்டர் பாலா இங்கே எல்லார்கிட்டேயும் அன்பா பழகுவார். ஆனா….

என்ன டாக்டர் ஆனா…

இங்கே பாலாவுக்கும் ஹார்ட் சர்ஜன் தீனதயாளனுக்கும் ஒருமுறை மனஸ்தாபம் வந்தது.

என்னது  அது ?

ஹார்ட் சர்ஜன் தீனதயாளன் வெரி குட் டாக்டர் பட் கேரக்டர் லெஸ் பர்சன். ட்யூட்டி நர்ஸ் உடைமாற்றும் போது அங்கே யாருக்கும் தெரியாம கேமிரா செட் பண்ணி அதை தன் லேப்டாப்பில் பார்க்கிறான்னு ஒரு கம்ப்ளைண்ட் வந்தது. அதை ஊர்ஜிதப்படுத்தியதும் அது உண்மைன்னு ப்ரூப்பண்ணதும் பாலாதான் வெளியே தெரிந்தால் அசிங்கன்னும் வயதுக்கு வந்த பொண்ணு இருக்கான்னு தீனதயாளன் ரொம்பவும் வேண்டிக் கேட்டுகிட்டதால நாங்க இந்த விஷயத்தை மூடி மறைச்சிட்டோம். ஆனா தீனாமேல அதிலிருந்து ஒரு கண்ணு நிறைய சலுகைகள் அவரை விட்டு போயிடுச்சு அவருடைய வேலை நேரம் குறைஞ்சி கன்ஸ்சல்ட்டைம் கொடுத்தோம் ஆபரேஷன்ஸ்க்கு மட்டும் கூப்பிட்டோம் சம்பளம் பாதியாச்சு பிரச்சனையைப் பெரிசு பண்ணாம விட்டதால அவரும் இதையெல்லாம் கண்டுக்கலை.

அதுக்கப்பறம் அவருக்கும் பாலாவுக்கும் ஏதாவது ?

நத்திங் அவங்க இரண்டு பேரும் நார்மலாத்தான் இருந்தாங்க இந்த ஒரு இன்ஸிடெண்ட்தான் எனக்குத் தெரிந்து வேற ஏதும் இல்லை இன்ஸ்பெக்டர். இப்போ உங்களோட அடுத்த மூவ் என்ன ?

பாலாவை நான் வீட்டுக்கு கூட்டிப்போறது இனியும் இங்கே இருக்கிறது அவனுக்கு சேப் இல்லை. எனக்கு ஒரு மேல்நர்ஸ் ஏற்பாடு பண்ணுங்க மற்றதை நான் பார்த்துக்கறேன் டாக்டர். கூடியவிரைவில் நானும் பாரன்சிக் நான்சியும் உங்களை சந்திக்கிறோம், டாக்டரின் கவலைத் தோய்ந்த முகத்தைப் பார்த்து பி ரிலாக்ஸ் என்று துளசி எழுந்தாள் அதேநேரம் அவளின் போன் சிணுங்கியது. திரையில் தூரிகைநேசனின் எண்.

தொடரும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்