20வது அத்தியாயம்

“என்ன வள்ளி இன்னும் கொஞ்சநேரம் இருக்கிறேனே ? வந்து இரண்டு மணிநேரந்தானே ஆவது அதுக்குள்ளே போ..போன்னு தொரத்துறீயே ? ”

“நல்லாயிருக்கு நீ என்ன என் புருஷனா ராத்தங்கறது. வந்ததும் வேலையை முடிச்சிட்டு எடத்தை காலிபண்ணிட்டுப் போவியா சொந்தம் கொண்டாடிட்டு இருக்கியே ? ”

“எனக்காக…நேரம் அதிகரிக்கக் கூடாதா? ”

“மத்தவங்களுக்கு எப்படியோ ? என்னைமாதிரி ஆளுங்களுக்கு நேரம் ரொம்பவும் முக்கியம் நீ இப்போ நடையைக் கட்டு, இன்னும்…… ”

“வேறயாராவது வர்றாங்களா ? வள்ளி ”

“தேவையில்லாதக் கேள்வியெல்லாம் உனக்கு எதுக்கு போன்னா போ ? நைய்…நைய்ன்னு கேள்வி கேட்டுக்கிட்டு ” என்று பேசியபடியே வள்ளி தன் உடலை , சேலையைக் கொண்டு போர்த்தத் தொடங்கினாள்.

“ அட என்ன புள்ளே ரொம்பத்தான் சலிச்சிக்கிறே ? இப்போ மட்டுமல்ல இந்த மாசத்தோட மொத்த ராத்திரியும் நீ என்கூட கழிக்கிறதுக்கு உனக்கு எம்புட்டு பணம் வேணும். ”

“அட வூட்லே பொண்டாட்டி இல்லையா ?”

“அவ பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போயிருக்கா ?! நீ விலையைச் சொல்லு !”

“உன்னாலேயெல்லாம் முடியாதுய்யா கச்சிதமாக ஒரு பார்ட்டி மாட்டியிருக்கிறது” என்று மேலும் மதுவை ஊற்றிக் கொடுத்து அவனுக்கு போதையேற்றிக் கொண்டு மறுப்பு தெரிவித்தாள் வள்ளி. இந்த தொழிலில் விலகல்தானே ஈர்க்க வைக்கும் அதை அறியாதவளா என்ன அவள் ?! கார்மேகம் மட்டும் இந்நேரம் உயிரோடிருந்தால் அவளை இப்படி மீண்டும் இழி தொழிலுக்கு விடுவானா ?!

“ இன்னும் கொஞ்ச நா பொறுத்துக்கோ வள்ளி. இப்பத்தான் தொழில் சூடுபிடிக்குது. ஒரு கார் கம்பெனிக் கடைக்காரன் சிநேகம் கிடைச்சிருக்கு. ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணி கார் மேனுபேக்சர் பண்ணறதைப் பற்றி மாதத்திற்கு மூணு அல்லது நாலு வண்டி தயார் செய்து தர்றேன்னு சொல்லி இருக்கேன் ஆர்டர் மட்டும் கிடைச்சிட்டா முதல்ல இந்த குப்பத்தை விட்டு நீ காலிபண்ணு. இனிமே வட்டித்தொழிலும் வேணாம், உன் சதைத் தொழிலும் வேணாம்”

“அடப்போய்யா ஆம்பளை ஆசை கட்டில் வரைக்கும்தான் நாளைக்கே நான் கசந்துபோனா..விரட்டியில்ல விடுவே பறக்கிறதை நம்பி இருக்கிறதை விடற ஆள் நானில்லை”.

“அப்படியெல்லாம் செய்யமாட்டேன் பிள்ளை இந்தா இது எனக்கு எங்க ஆத்தா போட்ட சங்கிலி மூணுநாலு பவுனு தேறும். சொன்ன சொல்லைக் காப்பாத்துவேன்னு நானிதை உன் கழுத்திலே போடறேன் சரியா கார்மேகத்தின் குரல் வள்ளியின் காதுகளில்”.

“என்ன வள்ளியம்மா பணத்தைப் பார்த்ததும் சும்மா அதிர்ந்து போயிட்டியா? தன்முன்னால் அப்போதுதான் கத்தைகத்தையாய் கொட்டப்பட்டு இருக்கும் நோட்டுக்களைப் பார்க்கிறாள் வள்ளி, விசுக்கென்று என்னய்யா வடிவேலு எங்கனாச்சும் கொள்ளைகிள்ளை அடிச்சிட்டு வந்துட்டியா ? இத்தினி பணம் எங்கிருந்து வந்தது”

“அட புத்தி போகுதுபாரு ஆளைப்பாத்து கொள்ளையடிச்சிட்டேன் கேட்கிறியோ ? இது உழைப்புக்கு கிடைச்ச காசு. பன்னிவித்த காசு”

“யோய் இது லட்சக்கணக்கில இருக்கும் போலயிருக்கு, நீயென்னடான்னா அப்படியென்ன தங்கத்திலேயே பன்னியை வித்தே ? ”

அவன் டம்பளரை மொடக்கென்று வாயில் கவிழ்த்தவாறே, “இப்போயெல்லாம் முழுசா வித்தா லாபம் இல்லை புள்ளே அய்யா ஒரு டாக்டருக்கு விக்கிறேன். மனுஷன் பணத்தை கொட்டறான். பன்னியோட கிட்னி இருக்கில்லை அதான் புள்ளே சிறுநீரகம் அது ?!”

“அதை வித்து என்ன பண்ணப்போறே ?!”

“அது நமக்கு எதுக்கு ? காசு வந்தாப்போதாதா ?”

“அடச்சொல்லுய்யா எனக்கு சொல்லமாட்டியா ?” என்று குழையவும்.

“டாக்டரு ரொம்ப பெரிய ஆளுடி யாரோ ஃபாரின் கம்பெனியாம் அதுகூட கூட்டு வைச்சிட்டு மனுஷ உடம்பிலே பன்னியோட சிறுநீரகத்தை பொருத்தராம், என்ன அதிசயம் பார்த்தியா புள்ளே ? இது மட்டும்தானா இன்னமும் இருக்கு பன்னியோட ரத்தத்தை ஏதோ பாடம் பண்ணி வெளியூருக்கு விக்கிறாரு. உன் கூடச் சுத்துவானே அந்த மெக்கானிக்கு….”

“யாரு கார்மேகமா ?!”

“அவந்தான். நானும் அவனுமா இரண்டு மூணுதடவை லோடு கொண்டு போய் கொடுத்துட்டு வந்திருக்கோம். இப்பக்கூட சுடச்சுட நாப்பது பன்னியை அறுத்துப்போட்டு ரத்தத்தை தொட்டியிலே நிரப்பிட்டு வந்திருக்கிறேன். நாளைக்கு விடிகாலை கொண்டுபோய் சேத்துப்புடணும்”. அவன் சொல்லிவிட்டு மீண்டும் அவள் மேல் படர ஆரம்பிக்க, நைச்சியமாய்

“ஏன் வடிவேலு, கார்மேகத்தை நீ எப்போ கடைசியா பார்த்தே ?!”

“ஒரு அஞ்சு நாளைக்கு முன்னாடி இருக்கும். பொருள் இருக்கு லோடு இறக்கணுன்னு கூப்பிட்டேன் வந்தான். லாரியிலே ஏத்திகிட்டு போய் இறக்கிட்டு வரும்போது நேத்தே என் டாவை அம்போன்னு விட்டுட்டு வந்தேன் இப்போ விரைசா போகணும் இந்த பணத்தை பார்த்தா சந்தோஷப்படுவான்னு சொன்னவன் சீக்கிரம் கிளம்பிட்டான். அப்பறம் தான் அவன் செத்துப்போயிட்டான்னு ஊரே பேசிச்சு”

“அப்போ அன்னைக்கு நைட்டு நீதான் கார்மேகத்திற்கு போன் பண்ணியா ?”

தலையை அவள் மார்பில் இருந்து நிமிர்த்து “ நீதான் அந்த டாவா ?! சும்மா சொல்லக் கூடாது கார்மேகம் ரசனைக்காரன்தான்”. அதன்பிறகு அவனின் அணைப்பும், அத்துமீறலும் வெறும் சுமையாகிப் போனது வள்ளிக்கு !

அப்படியானால், அன்றைய இரவு கார்மேகத்தை அழைத்துச் சென்றவன் இவன்தான். அந்த இன்ஸ்பெக்டர் பொம்பிளைகிட்டே இதை சொல்லியே தீரணும். மேலும் மேலும் போதையேற்றி அவனை மயங்க வைத்து விட்டு, துளசிக்குத் தகவல் தந்தாள்.

“மேடம் நான் வள்ளி பேசறேன். ஆமா கார்மேகத்தோடு விபத்து விஷயத்திலே எனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு”.

“இப்போ வீட்டில் இருந்துதான் பேசறேன். அன்னைக்கு நைட் கார்மேகத்துக்கு யார்கிட்டேயிருந்து போன் வந்தது ? அவன் எங்கிருந்தான் விபத்து எப்படி நடந்ததுன்னு தெளிவா தெரியற ஆளைப் பிடிச்சி வைச்சிருக்கேன். நீங்க இப்போ உடனே வந்தா அள்ளிட்டுப் போயிடலாம்”.

“என் வீட்டுலேதான் அவன் நல்ல போதையில் இருக்கான் நீங்க சீக்கிரம் வாங்க மேடம் ” போனைத் துண்டித்துவிட்டு படுக்கையறைக்கு வந்தாள். வடிவேலு இடது கையால் படுக்கையில் துழாவிக்கொண்டே  “ வள்ளி வள்ளி எங்கே புள்ளே போயிட்டே ?” என்று அரற்றினான். அவனைப் பார்த்தபடியே உடைகளை எடுத்து அணிந்து கொண்டே துளசி வரக் காத்திருந்தாள் வள்ளி.

“பாலாவுக்கு என்னாச்சு ஆஷா ?”

“தோட்டத்திற்கு பின்பக்கம் எதையோ பார்த்திட்டு பயந்துபோய் இருக்காரு?!”

“எதைப் பார்த்து…..?!”

“அது ஒரு ரத்த ஆறு நேசன். நான் பார்த்தேன் ஆஷா இல்லைன்னு சொல்றாங்க ?! இங்கே ஏதோ மர்மம் இருக்கு, ப்ளீஸ் நீ ஜாக்கிரதையா இரு, யாரையும் நம்பாதே” அவன் ஆஷாவைப் பார்த்து, அங்கே நின்று கொண்டிருந்த வேலையாட்களில் சிலரைப் பார்த்து சொன்னான்.

“நத்திங் பாலா இங்கே ஒண்ணும் நடக்கலை, எல்லாம் நார்மலாத்தான் இருக்கு. மழை நேரத்திலே நீ எதையாவது பார்த்து பயந்திருப்பே” என்று சொல்லி ஆசுவாசப்படுத்திட, பாலாவின் கண்கள் மெல்ல சொருகின. சற்று முன்பு கரைத்து புகட்டிய ஹார்லிக்ஸில் கலந்திருந்த மருந்தின் உபயத்தில்.

அவனை படுக்க வைத்தபிறகு நேசன் ஆஷாவிடம் திரும்பினான்.  “பாலா எந்த இடத்தைப் பற்றி சொல்கிறான் வாங்க உடனே பார்க்கலாம்”. அவர்களுடன் பின்பக்கம் நகர்ந்தான்.

“நான் அப்போதே பார்த்தேன் நேசன் இன்பேக்ட், நம்ம கேலரிக்கு பின்பக்கம் குழாய்பகுதியில் ஏதோ அடைப்பு ஏற்பட்டு இருக்குன்னு பிளம்பரை வரச்சொல்லி போன் செய்திருந்தேன், நேற்று அவங்க வந்து அந்த சுவர் ஓரமா தோண்டி எதையோ சரி பண்ணாங்க அதுக்குப்பிறகு தண்ணீர் எல்லாம் வடிஞ்சி போச்சு, ஆனா அந்தக் குழியை மூடவேயில்லை, ஏதாவது ஒர்க் பெண்டிங் இருக்குமின்னு நான் இன்னைக்கும் அவங்களை வரச்சொல்லி போன் பண்ணிட்டு திரும்பி வந்தேன். அப்போதான் பாலா அலறிகிட்டு பின்பக்கம் இருந்து ஓடி வந்தார்”

“நீ போய் அங்கே பார்த்தியா ? என்ன இருந்தது”

“பாலா சொன்னதைப் போல நம்ம சுவருக்கு அடிப்பகுதியில் ரத்தகசிவு மாதிரி ஏதோ மழைநீரும், சகதியும் சேர்ந்து ஒரே ரத்தமா இருந்தது அங்கே இண்டு இடுக்கில் அதாவது நாம தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வெட்டிவைத்த சின்ன கால்வாய் மாதிரியான பகுதி முழுக்க ரத்தம் ஓடிக்கிட்டு இருந்தது. மழை நீர் கலந்து ரத்தம் நீர்த்துப் போயிருக்கு”. ஆஷா காட்டிய திசையில் நேசனும் பார்வையைப் பதித்தான். டார்ச் வெளிச்சத்தில் அங்கே சிகப்பு நிறத்தில் மெதுவாய் சத்தமின்றி ஓடி செடிப்பக்கம் சென்றது அந்த ரத்தநீர்.

“சுவருக்கு அந்தப்பக்கம் ஏதோ பிரச்சனை இருக்கு, போலீஸ்க்கு தகவல் தரணும். தன் ஆட்களில் இருவரிடம் அந்தப்பக்கம் என்னயிருக்குன்னு உங்களுக்கு யாருக்காவது தெரியுமா ?”

“சார் நம்ம சுவரையொட்டி ஒரு பன்றிப் பண்ணை இருக்கு. அங்கேயிருந்து பன்றிகள் ஏற்றுமதியாகும் ஒருவேளை அங்கே ஏதாவது நடந்திருக்கலாம்”.

“என்னவாக இருந்தாலும் போலீஸ்க்கு தகவல் தர்றது நம்ம கடமை” , நேசன் கானத்தூர் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தான். இன்ஸ்பெக்டர் கர்ணனே லைனில் வந்தார் தகவல் சொல்லியாச்சி என்ற நேசனிடம்,

“இது நமக்கு அவசியம்தானா நேசன். தேவையில்லாம இங்கே போலீசை நுழைக்கணுமா ?”

“ஏன்…? என்ன தப்புன்னு தெரிந்துகொள்ளவேண்டாமா ? ஆஷா….”

“ஷ்….நான் எல்லாம் யோசித்துதான் செய்வேன் நீ போய் மற்ற அறைகளை பூட்டு, பேக்டரி சுத்தமாத்தானே இருக்கு ?”

“இப்போதைக்கு சுத்தம் தான் . மிஷின்ஸ் கூட சர்வீஸ் க்ளீன் செய்து இருக்கிறேன் எந்த சப்தமும் இப்போதைக்கு காட்டாது”

“அவங்க விசாரணைக்கு வந்து போகிறவரையில் ஏதும் வேண்டாம். அப்பறம் உரம் போட்டாச்சா ?!”

“ஆச்சு….இன்னேரம் அது நல்லா மண்ணோடு மண்ணா கலந்து தன் வேலையை ஆரம்பித்து இருக்கும். நான் போய் பாலாவை பார்க்கட்டுமா”

“ஓகே” என்று சொன்ன நேசன். விழாவில் வைக்கவேண்டிய சிற்பங்களை பார்வையிட்டபடியே இன்ஸ்பெக்டர் கர்ணனுக்காக காத்திருந்தான்.

பாலாவின் மேஜைக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட அத்தனையும் பாஸ்பரஸ் வகையைச் சேர்ந்தது என்று நான்சி சொல்லிவிட்டாள். அதிலும், இதுவரையில் இரண்டு பிணங்கள் தண்ணீரில் ரியாக்ஷன் காட்டி எரிந்திருக்கிறது. அப்படி எரியக் காரணமான சிகப்பு பாஸ்பரஸ் ஏற்கனே அந்த டீன்ஏஜ் பெண்ணின் கேஸில் ஈமச்சடங்கு செய்யும் போது பற்றியெறிந்த பெண்ணின் மேல் தூவப்பட்டு இருந்த அதே பொடிதான். இது பாலாவின் அறையில் அதுவும் அவனுக்கு சொந்தமான மேஜையில் பதுங்கியிருக்கிறது. பாலா ஒருவேளை யாராவது சமூகவிரோதியுடன் தொடர்பு கொண்டு மனித உறுப்புகளை விற்கிறானா ? பல்வேறு யோசனையில் துளசி வள்ளியின் வீட்டின் முன் நின்றாள். இருள் இன்னமும் அப்படிக் கிடந்தது. விடிவதற்கு சில மணி நேரங்கள் இருக்கிறது ஜீப்பில் இருந்து இறங்கி இரண்டு காண்ஸ்டபிள்களோடு வள்ளியின் அறைக்கதவைத் தட்டினாள்.

காத்திருந்தாற்போல கதவு உடனே தெரிந்து வள்ளி நின்றிருந்தாள்.  “வாங்க மேடம் அவன் உள்ளேதான் இருக்கான். பை நிறைய பணம்”,

“ யாரவன் ?! ”

“ பேரு வடிவேலு, பன்னிப்பண்ணை வைச்சு நடத்துறான்”

“அவன் இந்த நேரத்தில் இங்கே என்ன பண்றான் ”

அவள் தலைகுனிந்தாள்,  “அதுவந்து ராத்திரிக்கு ….. வரும்போதே ஏக தண்ணி…நேரமாச்சு போன்னேன். ஒருமாசத்துக்கு உனக்கு பணம் தர்றேன்னு நோட்டுக்கட்டை அவிழ்த்துப் போட்டான். அப்பறம் மெதுவா பேச்சுக் கொடுத்ததில் கார்மேகத்திற்கு அன்னைக்கு ராத்திரி ஒரு லோடு இருக்கு போகலான்னு சொல்லி போன் பண்ணது இவன்தான்னு தெரிந்தது. ஆனா சம்பந்தம் இல்லாம யாரோ ஒரு டாக்டர் அவரோட ஆராய்ச்சிக்கு பன்னியோட சிறுநீரகத்தை தந்தேன். அப்பறம் ரத்தத்தை பாடம் பண்ண சொல்லியிருக்கிறேன் அதை ஏற்றுமதி செய்யறேன்னு சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசினான். எனக்கு கார்மேகம் பேர் வரவும் சட்டுன்னு உங்க நினைப்பு வந்திட்டது. இந்த ஈனத்தொழிலை விட்டுட்டு நிம்மதியா ஒரு புது வாழ்வு வாழணுன்னு கிடந்தோம் இரண்டுபேரும். போனவன் புணமாயிட்டான். ஆனா அதைக் கூட என்னால பார்க்கமுடியலை, அதற்கு காரணம் இவன்தான். சாகும் போது கூட நான் அவளைத் தனியா விட்டுவந்துட்டேன். சீக்கிரம் போகணுன்னு சொல்லி விரைசா கிளம்பினான்னு சொன்னான் ”  அவள் கண்களில் நீர்.

“அவனெங்கே ?” என்றாள் துளசி மரத்த குரலில் படுக்கையறைக் காட்டினாள். ஆடைகள் கலைந்த நிலையில் மல்லாக்காக படுத்திருந்தான் அவனை அப்படியே அள்ளிக்கொண்டு ஜீப்பில் போட்டார்கள். பணத்தையும் பையில் திணித்து எடுத்து போட, அவன் இன்னமும் வள்ளியின் அணைப்பில் கிடப்பதாக எண்ணிக்கொண்டு புரண்டு கொண்டு இருந்தான்.  “ நன்றி வள்ளி….நான் வர்றேன்”.

“மேடம் கார்மேகத்தோட பாடி பத்தி ஏதாவது தகவல் தெரிந்ததா ? அவனுக்கு ஒரு மனைவியா நான் ஈமக்கிரியைச் செய்ய ஆசைப்படறேன்”

“தகவல் தெரிந்தா சொல்றேன்” ஜீப்பை கிளப்பினாள் துளசி. பரத்தையெனினும் அவளிடமும் இருந்த பண்பு வியக்கவைத்தது. ஸ்டேஷனை நோக்கி நகர்ந்தது ஜீப். அதேநேரம் வடிவேலுவின் சட்டைப்பையில் இருந்து செல்போனின் முனகல்.ஆன் செய்து காதில் வைத்தாள் எதிர்புறம்,,  “அண்ணே நைட்டு பன்னிக்கெல்லாம் தீனி போட வந்தேன் மழைக்கு அந்த பின்பக்க சுவர்பக்கம் ஏதோ உடைப்பு ஏற்பட்டு, நம்ம தொட்டியிலிருந்த ரத்தம் எல்லாம் பக்கத்து தோட்டத்துக்குப் போயிருக்கு போல மழைத்தண்ணியோட ரத்தமும் கலந்து ஒரே களேபாரம் இப்போ போலீசு வந்து பண்ணையை சோதனை போடுது. அந்த ரூமுக்குள்ளாற போயிருக்காங்க நீ சீக்கிரம் வான்னே எனக்கு பயமா இருக்கு ” என்றவன் சட்டென்று இணைப்பை அறுத்தான்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்