அத்தியாயம் – 19

சர்ஜன் தீனதயாளன் தொண்டை தண்ணீர் வற்றிப்போக கத்திக்கொண்டு இருந்தார்.

“ஹைலி இடியாக் மேம்…. பாலாவுக்கும் எனக்கும் நடந்த பிணக்கு சாதாரணமானது. அதுக்காக அவரை கொல்லும் அளவிற்கு நான் மோசமானவன் கிடையாது. முதலில் எதைவைத்து என்னை என்கொயரி செய்கிறீர்கள் ?”

“இந்த மருத்துவமனையில் பாலாவுக்கு எதிராக அவரைப் பிடிக்காமல் இருப்பது நீங்கள் என்ற அடிப்படையில், தீசிஸ்ற்காக வாங்கிய போதைமருந்தை நீங்கள் பாலாவின் கரங்களில் இன்ஜெக்ட் பண்ணியதில் இருந்து.”

“நான் மருந்தை செலுத்தியதை நீங்கள் பார்த்தீங்களா? அதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? இல்லை நான் சொல்லி செய்ததாக யாராவது புகார் அளித்திருக்கிறார்களா? இன்பேக்ட் பாலா அட்மிட் ஆனதே நேற்றுதான் எனக்கு தெரியும்.”

“ஏன் டாக்டர் ஒரு நர்ஸ் அல்லது வாட்பாய் செய்ய வேண்டிய வேலை, டாக்டர் சொல்லும் மருந்துகளின் பட்டியலை வைத்து ஸ்டாக் எடுப்பதும், தேவைக்கான ஆர்டர் கொடுப்பதும் அதற்காக நீங்கள் அங்கே போகவேண்டிய அவசியம் என்ன?”

“ஸி… இன்ஸ்பெக்டர் இந்த மருத்துவமனையில் நான் ஒரு சீப் டாக்டர் எங்கும் செல்ல எனக்கு அனுமதியுண்டு. என்னுடைய பேஷண்டுகளுக்காக தேவைப்படும் ஒரு சில மருந்துகளை ஆர்டர் செய்வதற்கும், காலாவதியான தேதிகளை கணக்கிடுவதற்கும் நான் அங்கு செல்வது வழக்கம். இது இங்கு பணிபுரியும் எல்லா டாக்டர்களுக்கும் பொருந்தும். அப்படி தெரியாமல் செல்பவன் எதற்கு ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போடவேண்டும். அன்றைய தேதியில் நான் மருந்து குடோனிலிருந்து என்ன எடுத்து வந்திருக்கிறேன் என்பதையும் அந்த நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன். அதை நீங்கள் பார்க்கவில்லையா? இல்லை பாலா மேல் உள்ள அன்பினால் என்னை வேண்டும் என்றே சிக்கவைக்கப் பார்க்கிறீர்களா?”

“நான் இன்ஸ்பெக்டர் துளசியாக இங்கே வந்திருப்பதால் அமைதியாக விசாரணை செய்து கொண்டு இருக்கிறேன். பாலாவின் தோழியாக வந்திருந்தால் நிலைமை வேறாகியிருக்கும் டாக்டர்.”

“இன்ஸ்பெக்டர் துளசி ஒரு நிரபாராதியை என்றோ நடந்த பிணக்குகளுக்காக நீங்க சந்தேகிப்பது சட்டப்படி தவறு. என் மேல் எந்த தவறும் இல்லையென்பதை நான் எங்கும் நிரூபிக்கத் தயார். எனக்காக வெளியே நோயாளிகள் காத்திருக்கிறார்கள் நீங்கள் என்னிடம் அதிக நேரம் எடுத்துக்கொண்டீர்கள். இப்போது….”

துளசி எழுந்தாள்.

“உண்மையை அதிக நாட்கள் மறைத்துவைக்க முடியாது டாக்டர். உயிர்களைக் காப்பாற்றும் புனிதமான தொழிலைச் செய்கிறீர்கள்.” என்று எச்சரிக்கை செய்துவிட்டு வெளியே வந்து டாக்டர் சதாசிவத்தின் அறையை நோக்கி நடந்தாள். அங்கே ட்யூட்டி டாக்டர் ஆகாஷூம், சதாசிவமும் இருந்தார்கள்.

“என்னாச்சு மேடம்?” ஆகாஷ் ஆர்வமாய் கேட்டான்.

“எனக்கு எதுவும் தெரியாது என்று சாதிக்கிறார்.”

“மேடம்… டாக்டர் தீனதயாளன் பொய் சொல்கிறார். பாலா சாருக்கு என்ன நடந்திருக்கிறது என்று நிச்சயம் அவருக்குத் தெரியும். இரண்டு தினங்களுக்கு முன்பு நைட் டூட்டியில் இருந்த என்னிடம், என்னப்பா உங்க டாக்டர் பாலா இப்போ மனநோயளியாகி விட்டாராமே ஆஸ்பிட்டல் பூரா இதுதான் பேச்சு. தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கணும் அதை விட்டுட்டு இப்படி அடுத்தவன் வயித்துலே அடிச்சா படவேண்டியதானே.”

“ஏன் ஸார் அவர் மேல உள்ள கோபம் உங்களுக்கு இன்னும் தீரலையா ? என்னயிருந்தாலும் இப்படி வம்பு பேசுவது இந்தநேரத்தில் அழகில்லை.” ஆகாஷ் பதில் கூற,

“இந்த மருத்துவமனையில் சிங்கம் மாதிரி இருந்தேன். ஒரே ஒரு தப்பு அதை பெரிசாக்கி என்னை மட்டம் தட்டிட்டானே அவன். என் பாவம் சும்மா விடுமா?! அவர் கரித்து கொட்டினார். அன்னைக்கு கூட ரொம்ப வயலண்டா பிகேவ் பண்ணதா கேள்விப்பட்டேன். அவனுக்கு போதை மருந்து பழக்கம் இருக்கு, ஒரு த்ட்ரேட் புரோக்கரை அப்பப்போ அவனுடைய அறையில் பார்த்திருக்கிறேனே.”

“சார் நீங்களா இல்லாத பொல்லாதது எல்லாத்தையும் சொல்லாதீங்க பாலா ஸார் ரொம்ப நல்லவர்.”

“நீங்கதான் மெச்சிக்கணும் சரி …. சரி அவனைப்பத்தி எனக்கென்ன பேச்சு” என்று நகர்ந்துவிட்டார் மேடம் எனக்கென்னவோ அவர்தான்….. பாலா சாரோட இந்த நிலைமைக்கு காரணமின்னு தோணுது.” ஆகாஷ் பொரிய, டாக்டர் சதாசிவம் கவலை தோய்ந்த கண்களோட அமர்ந்திருந்தார்.

“டாக்டர் எனக்கு பாலாவோட அறையை சோதனை போடணும்.” சதாசிவம் கண்களைக் காட்ட , முன்னே சென்ற ஆகாஷைத் தொடர்ந்தாள் துளசி.

மிகச்சிறிய அறை, பிணவறையில் பணிபுரியும் மருத்துவருக்கு இது போதும் என்று நினைத்து விட்டார்களோ? என்ற நினைப்புடன் சுற்றிலும் பார்வையை படரவிட்டாள். நான்கைந்து நாட்கள் கவனிக்காமல் விட்டதில் சிறு தூசி டேபிளின் மீது கம்ப்யூட்டர் ஸ்கிரின் மீதும் படறி இருந்தது. அழுக்கான ஜன்னல் திரைச்சீலைகள் விலக்கப்படாமல் அறை சற்றே இருட்டைப் பூசியிருந்தது. காலண்டரின் தேதி கிழிக்கப்படவில்லை. மேஜையின் மேல் போன நியூயருக்காக துளசி வாங்கித்தந்த பென்ஸ்டார்ண்ட் நின்று கொண்டு இருந்த மஞ்சள் நிற பொம்மை அவளையே பார்த்தது.

“இதென்ன நியூயருக்கெல்லாம் கிப்ட் கொடுக்கிறே? பர்த்டேன்னாலும் பரவாயில்லை.”

“வருஷ முதலில் சந்தோஷமா பரிசோட ஆரம்பியேன்.”

“ம்…  இந்த பிளாஸ்டிக் பொம்மையை வைச்சிக்கிட்டு என்ன சந்தோஷம் துளசி இருக்க முடியும். ஏதாவது உயிரோட்டமுள்ள பொருளைக் கொடு, இல்லைன்னா நானாவது தர்றேன். மறுக்காமல் பிகு பண்ணாமல் வாங்கிக்கோ.”

“உன் பரிசு என்னென்னு எனக்குத் தெரியும் அதுக்கெல்லாம் காலநேரம் இருக்கு, இப்போதைக்கு இந்த பொம்மை மட்டும்தான்.”

“நல்லா யோசிச்சிக்கோ இத்தோட நியூயர் போனா ஒரு வருஷம் ஆகும். அதுவரையில் என்னோட பரிசை நான் காத்து வைச்சிக்கணும். போனா வராது பொழுதுபோனா கிடைக்காது.”

“நீ டாக்டரா இல்லை லேகியம் விக்கிரவனா?” இருவரும் இணைந்து சிரித்தது இப்போது அவள் காதுகளில் ஒலித்தது.

“பெரிதாக சோதிக்க அங்கே எதுவும் இல்லை ஒரேயொரு கம்ப்யூட்டரைச் சுமந்திருந்த மர மேஜை இதோட சாவி யார்கிட்டே இருக்கும்.”

“பாலாசார் கிட்டே ஒண்ணு சீப் டாக்டர்கிட்டே ஒண்ணு.” ஆகாஷ் சாவியைத் தர திறந்தாள். நிறைய புத்தகங்கள். ஒன்றிரண்டு கிரிட்டிங் கார்டுகள். பேனா பென்சில், பாரம்கள் இன்னும் இத்தியாதிகள் தாண்டி உள்ளே ஒளித்து வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தில் சிறு மரப்பெட்டி அதை வெளியே எடுத்து திறந்தாள் துளசி உள்ளே சின்னசின்னதாய் பொட்டலங்கள். சில குறியீடுகள் சிகப்பு நிறத்தில் மெல்லிய எழுத்துக்கள். அதை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள். நான்சியிடம் கொடுக்க வேண்டும் என்று அவள் மனம் நினைத்தது.

ஏதோ நினைவு வந்தவளாய், “பாலா யாரோ ஒரு த்டூரேட் புரோக்கரை அடிக்கடி சந்திப்பதாக தீனதயாளன் சொன்னாரே அப்படி யாரையாவது உங்களுக்கு தெரியுமா ஆகாஷ்?”

“ஆள் யாருன்னு தெரியாது மேடம் அவன் பேரு வடிவேல் ஒருமுறை பாலா சாரைப் பார்க்க வந்திருக்கான்.”

“யாரவன்?”

“கொஞ்சம் கெச்சலான ஆசாமிதான் மேடம். தாடியும் மீசையுமா அழுக்கா, நான் கூட பாலா சார்கிட்டே ஏன் இந்த மாதிரி ஆட்களோட எல்லாம் பேசறீங்கன்னு கேட்டேன். அவன் பன்றிகள் வளர்க்கும் ஆள். யூனிட் கூட வைச்சிருக்கான் ஈசியார் தாண்டி எங்கோயோ இருக்கு அவன் பார்ம். பிரண்ட் ஒருத்தன் பேங்க்லோன் வாங்கி இந்த தொழில் பண்ணப்போறதா சொன்னான். அவனுக்கு உதவியா இருக்குமேன்னு வரவழைச்சேன்னு சொன்னார்.”

“எந்த பிரண்டுன்னு சொன்னாரா?”

“இல்லை மேடம்.”

துளசி ‘அப்படியாரும் இருக்க வாய்ப்பில்லையே ?! எனக்கு தெரியாத பிரண்ட் யாராக இருக்கும் ?’ துளசியினுள் கேள்விகள் முளைத்தது.

“ச்சீ…அடிவாங்கப் போறே பாலா இப்படியெல்லாமா ஒரு பெண்ணைப் பார்ப்பீங்க?”

“உன்கிட்டே உண்மையைச் சொல்லணுன்னு தோணுச்சி, அதான் சொன்னேன், நீங்க உங்க பிரண்ட்ஸோட பேசும்போது என்ன பேசுவீங்க?”

“நீ உளர்னா நானும் உளரணுமா ? போவியா ? ஆனாலும் உனக்கு ஓட்டைவாய் பாலா எல்லாத்தையும் என்கிட்டே கொட்டுறீயே ? எதையாவது ரகசியமின்னு உனக்குள்ளே கொஞ்சம் ஒளிச்சி வைச்சிக்கோ. அப்பத்தான் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்.”

“யார்கிட்டே சொல்றேன் ? எனக்கு சொல்ல யாரு இருக்கா ? துளசி உன்னைவிட்டா ? நீயறியாத ரகசியங்கள் என்கிட்டே ஒண்ணு கூட இல்லை ?!”

“நிஜமா ?!”

“துண்டை போட்டு தாண்டலாம் , இப்போ இல்லை நீ வேணுன்னா உன் சுடிதார் ஷாலைக் கொடேன் தாண்டி என்னைப் புரூப் பண்றேன்.” அவன் சொன்ன தொனியினை ரசித்த துளசி செல்லமாய் பாலாவின் சிகையைக் கலைத்தாள். ‘ஏமாற்றி விட்டாயே பாலா நானறியாமல் நிறைய ரகசியங்களை சுமந்திருக்கிறாயா பாலா’ என்று மனதிற்குள் கேள்வியெழுப்பிக் கொண்டு நான்சிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். பக்கத்து ஜன்னல் வழியாக ஏதோ பேச்சுக்குரல் கொஞ்சம் கிசுகிசுப்பாக….

“இங்கே ரொம்பவும் சிக்கலா இருக்கு? இப்போ நிலைமையும் சரியில்லை. அந்த ராஸ்கலுக்கு ஏதோ பிரச்சனை அதனால போலீஸ் கவனமும் இப்போ என் மேல் விழுந்திருக்கு.”

“மடியில் இப்போ கனமில்லை, ஆனால் ஒன்று தயார் செய்து வைத்திருக்கிறேன் கனம் பொருந்தினால் நம்ம ஆராய்ச்சி சக்ஸஸ்தான்….?!” துளசி காதைக் கூர்மையாக்கினாள். சுத்தமான ஆங்கிலத்தில் அந்த வார்த்தைகள் காற்றில் மிதந்து வந்தது.

“நீங்கச் சொல்லித்தான் தெரியணுமா என்ன ? தாய்லாந்து நகரம் முழுவதும், இப்போ இதுதானே ஹாட்சாக்லேட்.”

“அதெல்லாம் பத்திரமா வந்தடையும், தயாராகிட்டு இருக்கு. சரியான பதம் வந்ததும் நானே கண்டெய்னரில் அனுப்பிவிடுகிறேன்.”

“இவ்வளவு செய்றேன் அதையெல்லாம் யோசிக்காமலா ? பார்ட்டியிடம் சேர்ப்பது என் வேலை கவலையை விடுங்க அவங்க அதை தாய்லாந்து கொண்டு வந்து சேர்க்கிறதை நீங்கதான் பார்த்துக்கிடணும்.”

“அப்போ நான் வெச்சிடட்டுங்களா? இந்த தீனதயாளனால செய்ய முடியாத காரியன்னு ஒண்ணு உண்டா என்ன?”

அந்தப் பக்கம் பேச்சுக்குரல் ஊமையானது. தீனதயாளன் யாரிடமோ எதையோ பேரம் பேசுகிறான். சட்டென்று ஆகாஷின் பக்கம் திரும்பினாள்.

“எனக்கு டாக்டர் தீனதயாளனோட போன் நம்பர் வேணும்.”

அவன் தன் செல்போனைத் தட்டி நம்பரை தர, ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டு, “இப்போ ஒரு நம்பர் அனுப்பறேன் அதோட இன்கம்மிங், அவுட்கோயிங் இனிமேல் பேசற கால்ஸ்ஸோட ரெக்கார்டிங் எல்லாம் உடனே வேணும். அரெஞ்ச் பண்ணுங்க குவிக்.” என்று கட்டளைப் பிறப்பித்து விட்டு, கர்ணனை சந்திக்க கானாப்பூதூர் ஸ்டேஷன் விரைந்தாள் துளசி.

“மழை அடிச்சிக் கொட்டுது நிறைய இடங்களில் கால்வாய்கள் உடைந்து கழிவுத்தண்ணீர் நல்ல நீரோடு கலக்குதாம். எதுக்கும் நம்ம பின்பக்க குழாய் அமைப்பினை செக் செய்யணும் நீங்க பிளம்பரை வரச்சொல்லுங்க.” என்று யாருக்கோ போன் செய்து சொல்லிவிட்டு பாலாவின் அறைக்கு வந்தாள் ஆஷா.

அங்கே பாலா இல்லை . மழையில் இவனெங்க போயிருப்பான்?. நேரம் இரவு எட்டு மணி. நேசன் வேறு இங்கில்லை ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்தக் கொண்டு பின்பக்கம் காலெடுத்து வைக்கும்போதே வேகமாக வந்து யாரோ ஆஷாவின் மேல் மோதினார்கள்.

அது பாலா….. அவனின் மூச்சு மேலும் கீழுமாய் இறைத்தது சட்டையில் ஆங்காங்கே ரத்தத்துளிகள். “பாலா உங்களுக்கு என்னாச்சு ?” பதட்டமாய் கேட்க,

“அங்கே பின்பக்கம் சுவருக்கு அருகில் ரத்தம் ஆறுபோல் ஓடுகிறது.” என்று மயங்கிச் சரிந்தான் பாலா. ரத்த ஆறா விலுக்கென்று நிமிர்ந்தாள் ஆஷா. எங்கே தப்பு நடந்தது என்று அவள் மனம் வேகமாய் கணக்கிட ஆரம்பித்தது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்