அத்தியாயம்-6

உடல் மிச்சங்களின் வரி வடிவத்தை சுமந்திருந்த அந்த பாரன்சிக் பேப்பரை வெறித்ததாள் துளசி. ‘இதெப்படி சாத்தியமாகும். மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட உடலில் இருந்து எலும்புகள் காணாமல் போயிருக்கிறதென்பது சாதாரண விஷயம் இல்லையே. நான்சியின் அறிக்கையினை புறந்தள்ள முடியாதபடி எலும்பு மருத்துவரும் தன் ஸ்டேட்மெண்ட்டில் அதையேதான் சொல்லியிருக்கிறார்.

அரசு மருத்துவமனையில் பிணவறையில் இதுபோன்ற தவறுகள் நடக்க சாத்தியமா ? அதிலும் பாலாவினால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் அது. தெளிவான பிரேத பரிசோதனை அறிக்கையை அவனும் அளித்திருக்கிறான். இடைப்பட்ட அந்த நான்கு நாட்களுக்குள் என்னவாயிருக்கும். அந்தபெண்ணின் உடல் தீப்பற்றி எரிந்து போனதற்கு காரணம் சிகப்பு பாஸ்பரஸ் என்று நான்சி குறித்திருக்கிறாள். அந்த பாஸ்பரஸ்ஸூக்கு பிரேத பரிசோதனை அறையில் என்ன தேவையிருக்கக் கூடும்.

பாலாவை எந்தளவிற்கு நம்புவது ? இந்தக் கேள்வி அவளுள் முளைக்கும் போதே மனம் இடித்தது. எதிர்காலமே அவன்தான் என்று முடிவு செய்த பிறகு இப்படி யோசிப்பது தவறல்லவா என்று ! ஆனால் ஒரு காவல்துறை அதிகாரியாக குற்றவாளியினை நண்பனாகக்கூட ஏற்க முடியாதென்பதைத் தாண்டி கணவனாக அவளால் எப்படி ஏற்க முடியும். அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளன், பிரேத’பரிசோதனை செய்யும் மருத்துவர்களில் முதன்மையானவன் என்ற அடையாளம் கொண்டு இருப்பவன் அறியாமல் எப்படி இத்தவறு நிகழ்ந்திருக்க முடியும். இனி நான் என்ன செய்ய போகிறேன்.’

நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டாள் துளசி. பள்ளி நாட்களிலேயே தூரிகைநேசன், பாலா, துளசி மூவரும் நண்பர்கள் பெற்றோர்களின் இறப்பிற்கு பிறகு தூரிகைநேசனின் வழி ஓவியம், சிற்பம் என்று மாறிப்போக அவர்களின் நட்பும் அத்தனை இறுக்கமாக இல்லை. ஆனால் பாலாவும் அவளும் பள்ளியிறுதியாண்டு தாண்டி தங்களுடைய துறையைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து அதில் அடையும் சிறுசிறு சந்தோஷங்களைக் கூட பகிர்ந்து கொண்டு இணையாய் வாழ்பவர்கள் அப்படியிருக்க அவனை எப்படி சந்தேகப்படுவது ?

சமீபத்தில் அவனிடம் ஏதாவது மாற்றங்கள் தோன்றியிருக்கிறதா என்று யோசித்தாள். அன்று அப்பா வருகிறார் என்று அவன் பிளாட்டுக்கு போன போது அவன் சிரித்த அசுரச் சிரிப்பு நினைவு வந்தது கூடவே அந்த மாந்திரீகப் புத்தகம் ஓருவேளை கண்ட புக்கையெல்லாம் படித்துவிட்டு மனித உடலைக்கொண்டு ஏதாவது ஆராய்ச்சி யாகம் என்று செய்கிறானோ ? ச்சே அப்படியெல்லாம் இருக்காது படிப்பது அவனின் வழக்கம் அதைகொண்டு அவனை சந்தேகப்படக் கூடாது. என்ன செய்யலாம் யோசனைகளும் குழப்பங்களும் அவளை முண்டியடித்துக் கொண்டு இருக்க, எதிரே நீண்ட நேரமாக மெளனமாக காட்சிகளை ஒளிபரப்பிக்கொண்டு இருந்த டிவியின்திரையில் பாலா பணிபுரியும் அந்த மருத்துவமனையின் காட்சிகள்.

அரை மணிநேரமாய் மெளனமாய் இருந்த ரிமோட்டின் விரதத்தைக் கலைத்தாள். அரசு மருத்துவமனையின் அவலம். அரசு மருத்துவமனைகளில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படும் அறைகள் எந்தவித சுத்திகரிப்பும் ஆரோக்கியமும் இல்லாததாக உள்ளது. ஆங்காங்கே மாசுபடுத்தப்பட்ட கவனிக்கப்படாமல் இருக்கும் இந்த இடத்தில் பிரேதபரிசோதனையை பெரும்பாலும் மருத்துவர்க்ள செய்வதில்லையாம். அங்கே பணிபுரியும் ஊழியர்கள்தான் உடலை அறுக்கிறார்கள் அதை வைத்துதான் அறிக்கைகளும் தயாரிக்கப்படுகிறது என்று முன்னாள் அரசு பிரேதபரிசோதனை மருத்துவரும், மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளரும் ஆன திரு. தங்கப்பன் அவர்கள் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அவ்வழக்கு நிலுவையில் இருந்தது.

தற்போது அந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக நமது நிருபர் அளித்திருக்கும் வீடியோ ஆதாரம் இதோ உங்கள் பார்வைக்கு….! இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆறுபேர் கொண்ட வாகனம் ஒன்று சாலை விபத்திற்குள்ளாகி இருந்தது. அந்த உடல்களை மருத்துமனை ஊழியர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்வதைத்தான் நமது நிருபர் காட்சிகளாகத் தருகிறார் என்று செய்தி ஒளிபரப்பாகி கொண்டு இருக்க, திகைப்பாய் கண்களை அதில் பதித்தாள் துளசி.

பிரேக்கிங் என்னும் தலைப்பில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி கொண்டு இருக்க, இச்செயலுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். இது பற்றிய விவாதம் இன்று இரவு 8 மணிக்கு நமது செய்தி சேனலில் செய்தி வாசிக்கும் பெண் பேசிக்கொண்டே இருக்க, பாலாவின் எண்களைத் தன் மொபைலில் தட்டினாள் துளசி.

கிடத்தப்பட்டிருந்த உடலின் பாகங்கள் அனைத்தும் பாலாவின் மூளைப் பகுதிக்குள் ஒரு சாவாலை தோற்றுவித்தது. சரியாக சவரம் செய்திருக்காத முகமும் மார்ப்பு பிரதேசங்களில் இன்னமும் மயிர்கற்றைகளின் எச்சங்கள் தொற்றியிருந்தது. சற்றே அசூயையை வரவழைக்க, நீரை எடுத்து அதன் மீது ஊற்றிக்கொண்டே இருந்தான். சுற்றியிருந்த ஊழியர்களும் ட்யூட்டி டாக்டர் என்று அடையாள அட்டையை மாட்டியிருந்த மீசை முளைக்கலாமா வேண்டாமா என்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இளைஞனும் பாலாவை வியப்பாய் பார்த்தார்கள்.

பாலாவின் மூளை ‘இவனை… இவனை…’ என்று கோரப்பசி கொண்ட அரக்கனைப் போல நினைவுப்பருக்கைகளை விழுங்கியது. காதிற்குள் தேவையில்லாத சப்தங்கள் அதில் துளசியின் எள்ளல் பேச்சு சற்று முன்பு வாயிலை அடைத்துக் கொண்டு குரல் கொடுத்த நிகழ்காலப் பிணங்களின் உறவான எதிர்காலப் பிணங்கள், டிவியில் ஒளிப்பரப்பான செய்திகளும் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பாலா இந்த கேஸை முடிச்சிட்டு வா” என்று உணர்வுகள் அற்ற முகத்துடன் பேசிய டீனும் வரிசையாய் குடைந்து எடுத்துக் கொண்டு இருக்க, கையிலிருந்த கத்தியினை தூக்கியெறிந்தான்.

“என்னாச்சு ஸார்….?!”

“நாட் நவ்” என்ற கத்தல் காற்றோடு மிதந்து வந்து கேள்வி கேட்டவனின் காதை அடைந்தது. அணிந்திருந்த உடலுறையைக் கழற்றிவிட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டான் பாலா. புகை சூழ்ந்த குமட்டி அடுப்பினைப் போல புகைந்த மனதில் நினைவுகள்.

அவன் போஸ்மார்டம் செய்த பெண்ணின் பிணம் ஈமக்கிரியைகள் நடக்கும் போது சட்டென்று எரிந்து விழுகிறது. அதில் இருந்த எலும்புகளைக் காணோம். அதெப்படி என் கவனத்தில் இருந்து பிசகிபோகும். எப்படி தீப்பற்றிக் கொள்ளும். யோசனைகள் ஈக்கள் மொய்த்துக் கொண்டது. அவனெதிரில் வந்து நின்றார் டீன் சதாசிவம். பதறியபடி எழுந்தான் பாலா.

“பாலா உங்க அஜாக்கிரதையால எத்தனை பெரிய சிக்கல் பார்த்தீங்களா? டிவியிலே ஹாஸ்பிட்டல் போட்டோவைப் போட்டு கிழிகிழின்னு கிழிக்கிறாங்க. எட்டுமணிக்கு விவாத நிகழ்ச்சி வேறாம். உங்க மருத்துவமனை டாக்டர்ஸ் யாராவது வர முடியுமான்னு கேட்கிறாங்க. என்னாச்சு பாலா மற்ற மருத்துவமனைகளைப் போல நாம இல்லையே இதுவரைக்கும் இந்த மாதிரி தப்பு நடந்ததும் இல்லை. எனக்கு இன்னமும் ஒரு வருஷ சர்வீஸ் இருக்கு.அதுக்குள்ளே இப்படியொரு பிரச்சனை ?! அன்னைக்கு ஏன் ஸ்டாப்ஸ் ஆபரேட் பண்ணாங்க ?! நீங்களோ ட்யூட்டி டாக்டர்ஸோ ஏன் சர்வீஸ் பண்ணலை ?!”

“ஸார்… அன்னைக்கு விபத்துலே ஆறேழு பிணங்கள் வந்திருந்தது உங்களுக்கே தெரியும். ஏதோ அரசியல்வாதிக்கு தெரிந்தவங்கன்னு பிரஷர் வேற. ஒருபக்கம் மீடியா இன்னொரு பக்கம் இறந்தவங்களோட பேமிலி, நடுவில் இன்னொரு சிக்கல் இன்ஸ்பெக்டர் துளசி ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருந்தாங்க. நான் ட்யூட்டி டாக்டர் ஆகாஷ்கிட்டே எல்லா விவரமும் சொல்லிட்டுப் போயிருந்தேன் அன்னைக்கே அவன் கொஞ்சம்…”

“ஸ்டாப்பிட் பாலா இது பள்ளிக்கூடன்னு நினைச்சீங்களா ?! பொறுப்பில் இருந்து தவறிட்டு காரணம் வேற சொல்லிட்டு இருக்கீங்க ?! இது லீகல் இஷ்யூ என்ன செய்யறது ?”

அவர் கையைப் பிசைந்து கொண்டிருந்த விநாடி பாலாவின் செல்போனில் துளசியின் அழைப்பு….! கண்களில் ஒரு வித வெறி மின்ன கையிலிருந்த போனை தூக்கி வீசியவன் மேசையை ஒங்கி குத்த ஆரம்பித்திருந்தான் அவன் கைகளுக்கு இடையில் ஒரு சிறு கத்தி முளைத்திருந்தது. டீன் அவனை ஒருவித பயத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 14. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 15. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்