15வது அத்தியாயம்

விழிகள் நான்கும் தெறித்து விடுவதைப் போல பார்வையை அந்தத் தோல்பைகளின் மேல் போட்டார்கள் தூரிகை நேசனும், துளசியும். இது என்ன விபரீதம்…. ? !.  இருவரின் நெற்றிப் பரப்பும் வரிக்கோடுகளைச் சுமந்தது. பாலாவின் மேல் சந்தேக நிழல் விழுந்திருக்கும் இந்நேரத்தில்…. நிலைமை மோசமாகிக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. நானறியாத மறுபக்கம் பாலாவிற்கு சர்வ நிச்சயமாய் இருக்கிறது . அவளின் நீண்ட யோசனையை தோளின் மேல் விழுந்த நேசனின் கரம் கலைத்தது.

“உன்னோட சிந்தனை ஓட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது துளசி. ஆனால் நீ பாலாவின் தோழியாக இல்லாமல் இன்னொருவளாக இருந்து யோசித்தால் நிச்சயம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இயலும், அறுவை சிகிச்சை மருத்துவர் தன் உறவினர் என்று வந்தால் மட்டும் கத்தியை தீட்ட மறக்கிறாரா என்ன ? அப்படித்தான் சீழ் பிடித்திருக்கிறது என்று தெரிந்ததும் உறுப்பாக இருந்தாலும் வெட்டி எறிவதுதான் புத்திசாலித்தனம்.”

“நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை நேசன். உங்களுக்கும் பாலாவின் மேல் சந்தேகம் வருகிறதா?”

“எனக்கு நீ வேறு பாலா வேறு இல்லை, இடையில் ஏதோ தவறு நடந்திருக்கலாம். ஆனால் மனிதனின் மனம் வித்தியாசமானது. மென்மையாக இருப்பவர்களின் கொடூரம் அதிகப்படியானது. எனக்கு தெரிந்து பாலா எதையோ முயற்சித்து இருக்கிறான். அதன் விளைவுதான் இப்போது அவனை அலைக்கழிக்கிறது. முதலில் உன் கவனத்தில் இருந்து பாலாவை அகற்று. நடந்ததை நன்றாக யோசித்து என்ன செய்யலாம் என்று முடிவெடு. அதுவரையில் பாலா என் கேலரியில் இருக்கட்டும். நான் போய் என் காரை தயார் செய்கிறேன்.”  “இனியும் அவனைத் தனியே விடுவது அத்தனை நல்லதாய் படவில்லை எனக்கு!” சொல்லிவிட்டு அவளின் பதிலினை எதிர்பாராமல் நேசன் தன் கார் நோக்கி சென்றுவிட,

துளசி ஒரு முழு நிமிடம் எடுத்துக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தினாள். அருகிலிருந்த ஜம்போ கவரில் அந்த எலும்புகளை மூட்டையாக கட்டி, தன் ஜிப்சியின் பின்னால் போடும்போது, பாலாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து காரின் பின் இருக்கையில் படுக்க வைத்தான் தூரிகை நேசன். ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த பாலாவின் முகத்தை ஒருமுறை ஊன்றிப்பார்த்துவிட்டு,

“நேசன் நீங்க கேலரிக்கு போங்க நான் பாரன்சிக் லேப் வரையில் போய்விட்டு நேராக வருகிறேன். பாலா பத்திரம்.”

“அதை நீ சொல்லணுமா துளசி ? தெளிவாக யோசி நிச்சயம் ஏதாவது க்ளூ கிட்டும்!”  என்று சொல்லிவிட்டு காரை இயக்கினான். துளசி தன் மொபைலில் பாரான்சிக் நான்சியின் எண்களைத் தட்டினாள். அதற்குள் முந்திக்கொண்டு திரிபுரசுந்தரியின் எண் திரையில் தெரிந்தது இயக்கினாள்.

“வணக்கம் மேடம் நான் திரிபுரசுந்தரி பேசுகிறேன்!”

“சொல்லுங்க…?! வண்டியைப் பத்தி ஏதாவது க்ளூ கிடைச்சதா ?”

“அதைப்பற்றித்தான் சொல்ல வந்தேன் மேடம், நீங்க விசாரித்த அந்த வண்டி இன்னைக்கு காலையிலே ஈசியாரில் விபத்துக்குள்ளாகி இருக்கு, அதை ஓட்டிவந்த ஆள் உடனடி மரணம். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் உங்களைப் போலவே வண்டியெண்ணைப் பார்த்துவிட்டு என்னை விசாரணைக்கு அழைத்தார் !”.

“போனீங்களா ?”

“ஆமாம் அச்சு அசல் என்னுடைய ஆம்புலன்ஸ் போலவே இருக்கிறது அதே கருப்பு நிறம், நம்பர் பிளேட், முன்பக்க இருக்கைக்கு அருகில் உள்ள முருகனின் படம் என இன்ஞ் பை இன்ஞ் எனக்கே ஒரு விநாடி அது என்னோட வண்டியோன்னு சந்தேகம் வந்திட்டது!”. திரிபுரசுந்தரியின் குரலில் வழிந்த பதட்டத்தை துளசியால் உணர முடிந்தது.

“அந்த விபத்து எந்த ஸ்டேஷன்லிமிட் !”

“கானத்தூர் ஸ்டேஷன் லிமிட், இன்ஸ்பெக்டர் பேரு கர்ணன், அவர்கிட்டே நீங்க விசாரித்ததையும் சொன்னேன் உங்க எண்ணை வாங்கி வைச்சிகிட்டார் அநேகமா பேசுவார்னு நினைக்கிறேன்!?”.

“தகவலுக்கு நன்றி திரிபுரசுந்தரி நான் அவரிடம் பேசுகிறேன்.”

“மேடம் வண்டிதான் போர்ஜெரின்னு தெரிஞ்சிப்போச்சே .. இனிமே எனக்கு எந்தப் பிரச்சனையும் வராதே ?”

“தப்பு உங்கபேரில் இல்லைன்னா எந்த சிக்கலும் வராது?!”  என்று இணைப்பைத் துண்டித்தாள் துளசி.

தூரிகை நேசனின் கார் மிதமான வேகத்தில் சாலையில் வழுக்கிக்கொண்டு பயணித்தது. அறுபது லட்சத்தை முழுங்கியிருப்பதால் அநேக வசதிகளை அது தன்னுள் குத்தகைக்கு எடுத்து இருந்தது. ரிவ்யூ மிரரை உள்ளேயே வைத்தாற் போல் போகுமிடம் வழித்தடம் எல்லாமே படம் போல் டிரைவர் இருக்கையின் முன்பு ஓடிக்கொண்டு இருந்தது. மெல்லிய சங்கீத ஒலியும் ஏசியின் சில்லிப்பும் அதற்குள் தவழ்ந்து வந்தது.

“ஹலோ… ஆஷா இயர்….?!” ப்ளூடூத் இணைப்பின் வழியே காரின் உள் ஸ்பீக்கரில் அவளின் குரல்

“சொல்லு ஆஷா ?”

“எங்கே இருக்கீங்க ? உங்க போன் இத்தனை நேரம் நாட்ரீச்சபளில் இருந்தது ?!”.

“விழாவிற்கு பிரண்ட் ஒருத்தரை அழைக்க வந்திருந்தேன். ஏன் என்ன ?”

“உங்க விழாவின் சீப்கெஸ்ட் சாகித்யா பத்து காலாவது பண்ணியிருப்பா ? ” ஆஷாவின் குரலில் ஒலித்தது கோபமா பொறாமையா என்று மனதிற்குள் விநாடி நேரப் பட்டிமன்றம் நடத்திவிட்டு,  “என்னவாம் ?” என்றான் தூரிகைநேசன்

“எனக்கு என்ன தெரியும்  ? ”  “சிற்பிக்கும், ரசிகைக்கும் இடையில் நான் யார்?”

சத்தமாக சிரித்துவிட்டு, ” ஆஷா என்னயிது சராசரி பெண்களைப் போல வார்த்தைகளைப் பிரயோகிக்கிறாய் ?. சரி விடு என்ன செய்து கொண்டு இருக்கிறாய் இப்போது நான் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும். சாகித்யாவை ஓரமாய் நிறுத்திவிட்டு அதைக் கேள் !”  என்று ஆரம்பித்து பாலா பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான் நேசன்.

“அந்த அறை முழுவதிலும் உரம் நிரப்பி வைத்திருக்கிறேன் நேசன் அதை இடம் மாற்றிட வேண்டும் அதற்கு எனக்கு எப்படியும் மூன்றுமணி நேரங்கள் பிடிக்கும்.”

“அவ்வளவு உரமா வந்திருக்கிறது ?”

“ஆம்.. போன மாதம் முடிவில் ஆஸ்திரேலியாவில் இருந்து 160 மூட்டை உரங்கள் வந்ததை நீங்கள் மறந்துவிட்டீர்களா ? மிகவும் குறைச்சலாக அனுப்பியிருக்கிறார்கள் என்று அட்வான்ஸ் செக் கூட நேற்று சைன் பண்ணீங்களே ?”

“எஸ்.எஸ்…!” “மறந்துவிட்டேன் நான் நம் அலுவலகத்தில் பாலாவுடன் காத்திருக்கிறேன் ஆட்களை வைத்து சீக்கிரம் மூட்டைகளை வேறு எங்காவது மாற்றிவிட்டு அந்த அறையை சுத்தம் செய்து விடு ஆஷா, ஜாக்கிரதை உரம் மிகவும் விலையுயர்ந்தவை வேறு !”.

“நான் பார்த்துக் கொள்கிறேன்  ” என்று அவள் போனை வைத்தாள். எப்போதும் எதற்கும் அலட்டிக்கொள்ளமாட்டாள் ஆஷா . அவளிடம் வேலையை ஒப்படைத்தபின் கவலையில்லை என்று நினைக்கும் போதே, இன்று என்னை சந்திக்க வர இயலுமா ? ” என்று சிகப்பு நிற ஹார்டினைப் போட்டுவிட்டு ஒரு குறுஞ்செய்தி சாகித்யாவிடம் இருந்து வந்தது.

யோசனையுடன் பின்னால் இருந்த பாலாவைப் பார்த்தான். “நான் ஒரு நண்பருடன் வெளியில் இருக்கிறேன், நாளை சந்திக்கலாமா ? இல்லை ஏதேனும் அவசரமா ?” என்று மீண்டும் செய்தியனுப்பிட,

“உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது!”  என்று பதிலுக்கு அனுப்பியிருந்தாள். இதை மட்டும் ஆஷா பார்த்தாள் என்னாகும் என்று நினைத்த நேசனின் அதரங்களில் குறுநகை படர்ந்தது. அதுயென்னவோ சாகித்யாவை ஆஷாவிற்குப் பிடிக்கவே இல்லை. அவளின் ஒவ்வொரு வருகையையும் வெறுக்கவே செய்கிறாள். அவளும் பாவம்தான் என்னிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்த நாளில் இருந்தே அவளைக் கவனித்து வருகிறேனே ! என்னைப் பார்க்கும் போது மட்டும் அவளின் கண்களில் ஒரு அதீத பளபளப்பு, இதுவரையில் அவள் தன்னிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், செயல்களால் உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறாள்.

அப்போது நீ மட்டும் இன்னும் ஏன் அவளை விலக்கியே வைத்திருக்கிறாய் என்று மனம் கேள்வி எழுப்பியது. உண்மைதானே என் வலது கரமாய் தென்படுபவள் ஆஷா. எள் என்பதற்குள் எண்ணெயாய் இருப்பவள். அவள் தன்னிடம் வந்து சேர்ந்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான்

எட்டுவருடங்களுக்கு முன்பு கேலரி ஆரம்பித்து இருந்த நேரம் அது. இரண்டு மூன்று அசிஸ்டெண்டுகள் மட்டும்தான் அப்போது பணியில் இருந்தார்கள். மழை வலுத்திருந்த ஒரு நாளில் மெழுகைக் காய்ச்சித் தொட்டியில் காயவைத்து விட்டு, கேலரியில் இருந்து அவன் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டு இருந்த சமயம், ஈசியார் சாலையோரத்தில் மரத்தின் அடியில் வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு குளிருக்கு தன் கரங்களாலேயே அணை போட்டபடியே அவள் நின்றிருந்தாள். காரை அவள் புறம் நிறுத்தலாமா வேண்டாமா என்று ஆயிரம் கேள்விகளுக்கு நடுவில் ஏதோ உள்மனம் ஊந்த காரை நிப்பாட்டினான் நேசன்.

மழை இன்னமும் வலுத்திருந்தது.  “நீங்க எங்கேம்மா போகணும் ? இந்த இருட்டுலே இங்கே நிக்கிறது பாதுகாப்பு இல்லை, உங்க கூட வந்தவங்களுக்கு ஏதும் ?”

“எனக்கு யாரும் இல்லை ? எங்கே போகணும்ன்னு தெரியலை ? ” நலிந்து போய் வந்தது அவள் குரல்.

“உட்காருங்க ….!? ” என்று பின் இருக்கையைக் காட்டினான். சில நொடி தயங்கியவள் ஏறி அமர்ந்தாள். கார் பூட்டிய கதவுகளுக்குள்ளே விளக்கை ஒளிரவிட்டு வெளிச்சத்தைப் பரப்பியது. அவள் புடவை அணிந்திருந்தாள் ஆடைகள் ஆங்காங்கே கிழிந்திருந்தது. நீல நிற புடவையின் வலப்பக்கத்தை தலைப்பு கொண்டு மூடியிருந்த போதும் இடது புற ரவிக்கையின் கை கிழிந்து தொங்கியிருந்தது . உதடுகளின் இறுதியிலும் நெற்றியலும் மழையின் உபயத்தால் ரத்தம் கழுவப்பட்டு இருந்ததால் சில காயங்கள் வெளிப்படையாய் சிரித்தன.

ஒரு ஒழுங்கு முறையின்றி கூந்தல் கலைந்திருந்தது. குளிரினாலா என்னவென்று தெரியவில்லை அவளின் உடல் நடுங்கிட, காரின் குளிரைக் குறைத்துவிட்டு உங்களுக்குப் பக்கத்தில் என்னோட ஜெர்க்கின் இருக்கு அதைப் போட்டுக்கோங்க, குளிருக்கு கொஞ்சம் அடக்கமாக இருக்கும் என்று சொன்னவன் பிளாஸ்கில் இருந்து அவனுக்காக வைக்கப்பட்டு இருந்த பிளாக் டீயை ஊற்றிக் கொடுத்தான். அந்த சூடு அவளுக்குச் சற்றுத் தேவையாயிருந்திருக்கும் போல, அந்த பெண்ணின் கண்கள் நன்றியோடு நேசனைப் பார்த்தன. பயப்பார்வை மாறி ஸ்நேகப்பார்வை வந்திருந்தது அவளிடம்.

” இது என்னுடைய வீடு இந்த அறையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உள்ளே என்னோட ஜிப்பா இருக்கிறது உங்களுக்கு சேரவில்லையென்றாலும் ஈர உடையோடு நிற்கவேண்டாம் !” என்று தன்னறைக்குப் போனான். காலையில் சந்திப்போம் என்று தன்னறைக்கு சென்று கதவைச் சாத்திக்கொண்டான் நேசன்.

மறுநாள் காலையில், உணவு மேடைக்கு வரும்வரையில் அவளுடைய நினைவே இல்லை, சூடான காப்பியை வேலையாள் கொண்டு வந்து வைக்கும்போதுதான், “நேற்றிரவு ஒரு பெண்ணை அழைத்து வந்திருந்தேன் அவர்கள் எழுந்துவிட்டார்களா என்று பார்த்துவிட்டு உணவு உண்ண அழைத்துவா!”  என்று பணிக்க “என்றுமில்லாத் திருநாளா பெண்ணை அழைத்து

வந்திருக்கிறாரா ?”என்ற இமாலயக் கேள்வியுடன் அவன் மாடியேறினான்.

“உங்க பேர் அந்த நேரத்தில் அங்கே என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?”

அவள் தட்டில் உணவை பாதி காலி செய்திருந்த நிலையில் நேசனின் கேள்விக்கு,  “இப்பவே பதில் சொல்லணுமா இல்லை சாப்பிட்டுவிட்டு பேசலாமா ?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.

சாப்பிடும்படி சைகை செய்தவன் எதிரில் இருந்த டிவியின் சப்தத்தை கூட்டிட, “ஈசியாரில் வளர்ந்து வரும் பிரபல நடிகருக்கு உரிமையான பண்ணைவீட்டில் பரிதாபமாக இருவர் உயிரிழந்து இருந்தனர். அவர்கள் யாராலோ கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற நிலையில் தன் பண்ணைவீட்டில் கொலைசெய்யப்பட்டு இருக்கும் நபர்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகர் திட்டவட்டமா தெரிவித்தார். விசாரணை நடைபெற்று வருகிறது.”

செய்தியின் பக்கம் விட்டு பார்வையை எதிரில் இருந்த பெண் பக்கம் திருப்பியவன்

“ இந்த பண்ணைவீடு எங்கிருக்கு தெரியுமா நான் உங்களை அழைத்து வந்தேனே அதிலிருந்து 2கிலோ மீட்டர் உள்ளே ?!”

“தெரியும் என்றாள் மெதுவாக….!”

“சாப்பிட்டு முடித்து டம்பளிரில் இருந்த நீரை மடமடவென்று குடித்தவள், அந்த இரண்டு கொலைகளையும் செய்தது நான்தான் !” என்று மெல்லிய குரலில் சொல்லி நேசனை திகில் ஏற்றினாள்.

“வாட்….?!”

“உண்மைதான். நான் பெங்களூரில் சிற்பக்கலை படித்து வந்தேன் என் கல்லூரியில் படிக்கும் ராஜூதான் அந்த இறந்துகிடந்தவர்களில் ஒருத்தன். பெற்றோர் இல்லாத எனக்கு அவங்க அப்பாதான் கார்டியன் சென்னையில் சிற்பங்கள் பற்றிய ஒரு கான்பிரன்ஸாக நாங்க இங்கே வந்தோம் ஓட்டல்ல ரூம் எடுத்திருந்தோம். மகாபலிபுரச் சிற்பங்களைப் பார்வையிடலான்னு இங்கே அழைத்து வந்தேன். மழை வந்திட்டதால என்னோட நண்பன் பண்ணைவீடு இருக்கு அங்கே ஸ்டே பண்ணிட்டு காலையிலே ரூமுக்கு போகலான்னு சொன்னான் ஆனா….!”

“உங்களுக்கு என்ன நடந்திருக்குன்னு புரியுது. மேற்கொண்டு என்ன செய்யலான்னு இருக்கீங்க ?”

“தெரியலை…..?!”

“இப்போதைக்கு பிரச்சனைகளைத் தள்ளிப் போடுங்க எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம் நீங்க ரெஸ்ட் எடுங்க பெரிய மனிதர்கள் எல்லாம் இன்வால்வ் ஆகியிருக்கிறதால இந்த கேஸை மூடத்தான் பார்ப்பாங்க அதன் போக்கை குறித்து தீர்மானிக்கலாம். என்று அப்போதைக்கு நேசன் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.”

இறந்தவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்ப்பும் இல்லையென்றும், காவலாளிக்கு பணம்கொடுத்து சில நேரங்களில் அந்த பண்ணைவீட்டில் தவறான சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று போலீசாரின் விசாரணையில்தான் தனக்கே தெரியவந்ததாகவும், குற்றம் நடந்ததற்கு காரணமே வந்திருந்தவர்கள் நன்றாக குடித்துவிட்டு, தொழில் செய்யும் பெண்ணுடன் உறவில் ஈடுபட்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக கைகலப்பு ஏற்பட்டு கொலை நிகழ்ந்துவிட்டது என்று காவலாளி போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்று செய்திவாசிக்கும் பெண் சொல்லி முடித்ததும்.

“அய்யாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லீங்க முட்டாள்தனமா காசுக்கு ஆசைப்பட்டு நான்தான் காசை வாங்கிகிட்டு, இப்படி அடிக்கடி வர்றவங்களுக்கு வாடகைக்கு விடறது வழக்கம். அன்னைக்கும் அப்படித்தான். ஆனா பொண்ணைக் கூட்டிவந்தது எனக்குத் தெரியாது நானும் சரக்கு போட்டு இருந்தேன். திடீர்னு சப்தம் கேட்டுதான் நான் போனேன் அங்கே இரண்டுபேரும் இரத்தவெள்ளத்தில் இருந்தாங்க ஒருத்தர் கையில் பழம் நறுக்கும் கத்தியும் ஒருத்தர் கையில் பாதி உடைந்த பாட்டிலும் இருந்தது அதை வச்சித்தான் ஒருத்தரையொருத்தர் குத்திகிட்டு இறந்துபோனாங்கன்னு நான் போலிஸில் சொன்னேன்!” அவன் துண்டை கக்கத்தில் வைத்தபடியே பாவமன்னிப்பை போல் கேட்டுக் கொண்டு இருந்தான்.

“நான் சொல்லலை , பெரிய இடம் அந்த நடிகர் மூன்றுபரம்பரையா சினிமாவில இருக்கார் அதனால பிரச்சனையை மூடி மறைக்கத்தான் பார்ப்பார் . பணம் பாதாளம் வரையில் பாய்ந்திருக்குன்னு சொல்லுவாங்க அப்படித்தான் இங்கேயும். இப்பவரையில் உங்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை . அதனால ஃபிரியா இருங்க . நீங்க பெங்களூருக்கு போக விருப்பப்பட்டா நான் அனுப்பி வைக்கிறேன்.”

“வேண்டாம் அங்கே என்னை சீராட்ட யாரும் இல்லை, எனக்கு எங்காவது ஒரு வேலை வாங்கிக் கொடுத்திடுங்க !” “நான் ஏதாவது ஹாஸ்டலில் தங்கி?!”

“அதெல்லாம் வேண்டாம் நானும் ஒரு சிற்பிதான் ஈசியார் சாலையில் என்னோட கேலரி இருக்கு அங்கே இப்போது நம்பிக்கையான ஆட்கள் தேவை. நீங்க சிற்பக்கலை படிச்சிருக்கீங்க அங்கேயே வேலைக்கு வரலாம் விருப்பமிருந்தால் கேலரியிலோ அல்லது இப்போ இருக்கிற மாதிரி என் வீட்டிலோ தங்கிக்கொள்ளலாம்!” என்றான்.

“மிகவும் நன்றி உங்கள் உதவிக்கு  “  என்று கரம் குவித்தாள் அந்தப் பெண். நேசன் அன்று வாங்கித் தந்த ஆடைகளில் ஒன்றான நீலநிற சல்வார் அவளுக்கு வெகு பொருத்தமாக இருந்தது. எந்த பெண்ணைப் பார்த்த போதும் பரவாத ஒரு இதம் இவளைப் பார்த்ததும் தோன்றியது. உங்க பெயர் என்ன ?”  என்றான்.

“ஆஷா…..?”

சட்டென்று தன்னைக் கடந்து சென்ற வண்டியை தவிர்த்துவிட்டு ரிவ்யூ மிரரில் பார்க்க , பின்னிருக்கையில் படுத்திருந்த பாலா எழுந்து அமர்ந்திருந்தான். அவன் கண்களில் ஒரு வித அந்நியத்தன்மை தென்பட்டது? உதடுகள் கோணலாய் சிரித்தன. தூரிகைநேசனின் விரல்கள் ஒருமுறை ஸ்டீரிங்கை அழுந்தப்பற்றின. முணுக்கென்று ஒரு பயக்கீறல் மனதில் மையத்தில் உதித்தது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
  2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
  3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
  4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
  5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
  6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
  7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
  8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
  9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
  10. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
  11. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
  12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
  13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
  14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
  15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
  16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
  17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
  18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
  19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
  20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
  21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
  22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
  23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்