17வது அத்தியாயம்
“இது இது … ?! இன்ஸ்பெக்டர் கர்ணன் இது இந்த பாடி எங்கே கிடைத்தது உங்களுக்கு ?”
“விபத்து நடந்த இடத்தில் தான்? யாரு என்னன்னு இனிமேதான் கண்டுபிடிக்கணும் மேடம் . இவரை உங்களுக்குத் தெரியுமா ?!”
“விபத்து நடந்த இடத்தில் இந்த ஆளின் பாடி கிடைத்ததா ?”
“நோ…நோ…! அந்தக் காரை ஓட்டியதே இவர்தான். ஆக்ஸிடென்ட் ஆனா வெய்கிளிலிருந்துதான் இந்த பாடியை எடுத்தோம் ஏன் ?!”
“இந்தாளு பேரு கார்மேகம் மெக்கானிக் இவன் செத்து நாலு நாளாச்சு!” “இன்பேக்ட் மார்ச்சுவரியிலிருந்து திரிபுரசுந்தரியோட வண்டின்னு சொல்லி ஏமாற்றப்பட்ட வாகனத்தில் கடத்தப்பட்டது இவனோட பாடிதான். நாலு நாள் முன்னாடி செத்துப் போனவன் எப்படி இன்னைக்கு காலையிலே விபத்துலே மறுபடியும் இறக்க முடியும்?!”.
“நீங்க சொல்றது எனக்கு அதிர்ச்சியா இருக்கு மேடம்!, விபத்து நடந்த இடத்தில் ஸ்பார்ட்லே நான் மட்டும் இல்லை பாரன்சிக், கிரைம் போட்டோகிராபர் எல்லாரும் இருந்தாங்க, அந்த போட்டோகிராப்ஸில் பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும். நீங்க என்னடான்னு ஏற்கனவே இறந்திட்டான்னு சொல்றீங்க?” “ உங்க கணக்குப்படி முன்னாடியே போஸ்மார்ட்டம் நடந்த உடல்ன்னா அதற்கான அடையாளங்கள் இருக்குமே?!” இன்ஸ்பெக்டர் கர்ணனின் கேள்விக்கு நான்சியைப் பார்த்தாள் துளசி.
நான்சி அருகில் குடத்தில் இருந்த நீரை அதன் மீது கவிழ்த்தாள். தலையிலிருந்து கால் வரை சடசடவென்று யாருக்கோ பயந்து ஒளிவதைப் போல தரை நோக்கி விழுந்தது நீர்குவியல்கள். நான்சியின் பாரன்சிக் மூளை சட்டென்று விழித்துக் கொண்டது.
கார்மேகத்தின் உடலை ஆராய்ந்தாள். உடல் மெல்ல மெல்ல விறைப்புத்தன்மைக்கு போய் கொண்டு இருந்தது. அதன் உஷ்ணம் கரையத் தொடங்கியது . தோளின் இருபக்கத்தில் சிறுசிறு நரம்புகளால் ஆன முடிச்சுகளின் அடையாளம் எதையோ உறித்து தைத்தாற்போல், தன் ஹேண்ட்பேகில் இருந்து ஒளிரும் தன்மையுடைய (ANTHERACENE) பொடியை அதன் மேல் தூவினாள். சட்டென்று அவளின் முகம் இருளுக்கு போனது. “கர்த்தாவே !” என்ற ஒலி அவளின் உதடுகளில்.
“என்னாச்சு நான்சி ?!”
“இது கார்மேகம்தான் துளசி ! இறந்து கெட்டுப் போகாமல் இருக்க இந்த உடல் எம்பிளாமிங் செய்யப்பட்டு இருக்கு. அதுவும் இது …இது மனிதத்தோல் இல்லை அதை முழுவதுமாக உரித்து மேலே பதப்படுத்தப்பட்ட விலங்கின் தோல் !”.
“வாட்….?!” துளசி,கர்ணனின் குரல்கள் ஒருசேர ஒலித்தது.
ஒரு நிமிஷம் கார்மேகத்தின் பாடியைத் திருப்ப கனமின்றி சட்டென்று அது கவிழ்ந்து கொண்டது. முதுகெலும்பு இருக்கும் இடத்தில் நீண்ட கழி ஒன்று அதேபோல் அளவில் வைக்கப்பட்டு இருக்க, கால் மூட்டு ஜவ்வு எலும்புகள் முகத்தின் தாடை என எல்லாவற்றிலும் செயற்கைத் தனம் ஒளிந்து கொண்டு இருந்தது.
தன் பையிலிருந்து சிறு கத்தி ஒன்றை எடுத்தாள் கார்மேகத்தின் பாடியில் இருந்து சதுரவடிவமாக மேற்தோலை வெட்டிஎடுத்து பிளாஸ்டிக் உறையினுள் பத்திரப்படுத்தினாள். தன் மொபைல் போனில் கார்மேகத்தின் பாடியை புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
“துளசி எதிராளி ரொம்பவும் மோசமான ஆளா இருக்கான். கார்மேகத்தின் உடம்பு என்று கூறப்படும் இது ஒரு விலங்குத்தோல் போர்த்தப்பட்ட கூடு. எல்லாம் போலி !”
“ஆனால் ரத்தம் உறையாமல் வழிந்து ஆடைகளில் எல்லாம் நனைந்ததே அதெப்படி ?”
“விபத்து நடந்த இடத்தில் இருந்த பாரான்சிக் ஆட்கள் எங்கே ? எனக்கு அவர்களை உடனே பார்க்க வேண்டும்.” என்று நான்சி கேட்க,
“இங்கே பக்கத்திலே லேபில்தான் இருப்பார்கள், வாருங்கள் போகலாம் !”என்று அவர்கள் நான்கு அடி நடக்கும் போதே, சட்டென கார்மேகத்தின் உடல் தீப்பற்றி எரிய தொடங்கியது நான்சியின் உதடுகள் “சிகப்பு பாஸ்பரஸ்” என்று சத்தமாக சொல்லியது.
கண்களை விழித்த பாலா தன் எதிரில் அமர்ந்திருந்த நேசனைப் பார்த்தான். சன்னமான சிரிப்பு நேசனின் அதரங்களில் ஒளிர்விட அதற்கு பதிலாய் சின்ன முறுவலுடன், எழுந்தமர்ந்தவன் முற்றிலும் புதிய இடமான அந்த அறையை ஒருமுறை பார்த்துவிட்டு, “நேசன் இப்போது மணி என்ன ? இது எந்த இடம் நான் ஏன் இங்கே வந்திருக்கிறேன் ?!” என அடுக்கடுக்காய் கேள்விகளை விற்பனையாளனைப் போல கடைபரப்பிட,
ஒரு வாடிக்கையாளனாய் மாறி தேர்ந்தெடுத்து பதிலளித்தான் நேசன். “இது என்னோட ஆர்ட் கேலரிடா, நம்ம கேலரியில் நடக்கப்போகும் விழாவிற்காக உன்னையும் துளசியையும் அழைக்க வந்திருந்தேன். எனக்கு உதவியா இருக்கட்டும் விழா நேரத்திலனு உங்க சீஃப் கூட பர்மிஷன் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். துளசி ஒரு கேஸ் விஷயமா வெளியே போயிருக்கா வந்திடுவா ?!”
ஆஷா கைகளில் உலர்ந்த பழங்களையும், சக்கரை கலக்காத பழச்சாற்றையும் கொண்டு வந்து வைத்தாள். “என்ன சொல்றார் உங்க பிரண்ட்?” என்ற ஆஷாவை புதியதாய் பார்த்தான் பாலா. பழச்சாறு அவன் கரங்களில் திணிக்கப்பட, உலர்ந்திருந்த தொண்டைக்கு அது தேவையாய் இருந்தது. “ஆஸ்பிட்டல் போகணுமே நேசன். ஏற்கனவே சீப் டாக்டர் என்மேல கோபமாய் இருக்கிறார்.”
“புரியுதுடா !” “நான் அவர்கிட்டேயும் பர்மிஷன் கேட்டாச்சு கொஞ்சநாள் நீ ரெஸ்ட் எடுத்தா நல்லாயிருக்குன்னு அவரும் நினைக்கிறார்.!”
“ரெஸ்ட் எடுக்கும் அளவிற்கு எனக்கு என்ன பிரச்சனை ? ” அவன் தன்னை முழுவதுமாய் பார்த்துக் கொண்டான். பிறகு என்ன நினைவுக்கு வந்ததோ ? கேலரியில் ஏதோ விழாவென்று சொன்னாயே நேசன் என்ன அது ?”
“அதுக்கு நான் பதில் சொல்றேன் ” என்று ஆஷா தன் கையில் இருந்த போனை இயக்கி ஒரு வீடியோவை ஒளிர விட்டாள். தூரிகைநேசன் முகம் கொல்லா புன்னகையுடன் பேசத் தொடங்கினான்.
“நம்ம ஆர்ட் கேலரி தொடங்கி பத்து வருடங்கள் முடியப்போகுது. தன்னுடைய உருவங்களை மெழுகுச்சிலையா மாற்றுவது வெளிநாடுகளில் பரவலாக இருக்கு. சில வருடங்களுக்கு முன்பு சினிமா செலிபரட்டீஸ், அரசியல் தலைவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் என அனைவருக்கும் மெழுகுச்சிலைகள் செய்யப்பட்டு நிறைய மக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்!”.
“வெளிநாடுகளில் இந்த மெழுகுச்சிலைக்கு டிமாண்ட் அதிகம். சின்ன வயசிலே இருந்தே மண்குழைத்து பொம்மைகளும் உளியில் செதுக்கிய சிலையையும் பார்த்துப் பார்த்துதான் வளர்ந்தேன். அப்பா அம்மாவுக்குப் பிறகு எனக்குன்னு இருக்கிறது என்னோட தங்கினதும் இந்த கேலரி இடம்தான். எப்பவோ அப்பா வாங்கிப்போட்டது. சிற்பக்கலை படித்தேன் மேலோட்டமா ஆரம்பித்த தொழிலில் பத்தோடு பதினொன்னா எனக்கு இருக்கப் பிடிக்கலை!”.
“அதனால ஒரு வித்தியாசமா மெழுகு சிலைகளை நாமே உற்பத்தி பண்ணலான்னு தோணுச்சி, அதற்கான மூலப் பொருட்களை எல்லாம் வெளிநாடுகளில் இருந்து வரவழைச்சேன். இந்தத் துறையில் படிச்சிட்டு வேலையில்லாம இருந்தவர்களில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினேன். அப்போதான் ஆஷா என்னோட சேர்ந்தாங்க!”.
“உற்பத்தி செய்ய ஆரம்பிச்சாச்சு சிலைகளை விற்பனை செய்யணுமே, அதனால பெரிய நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுக்கள், சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் வீடுகளில், இந்த சிற்பங்கள் வைப்பது டிரண்டாகவும் இருக்கும்”.
“நம்ம கலாச்சாரத்தை நினைவுபடுத்தற மாதிரியும் இருக்குன்னு முடிவு செய்தோம், அதற்கான முயற்சிகளில் இறங்கினோம். இதோ இப்போ நல்ல நிலைமையில் இதுவரையில் நான் 5000 சிலைகளை செய்திட்டேன். அதில் மெழுகுசிலைகளும் அடக்கம்!”.
“நான் முதல் முதலா செய்தது என் பெற்றோர்களுடைய மெழுகுசிலை, இறப்பு என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாதாகிப் போய்விட்டது. மரணம் நம்மை பிரிக்கும் வரையில் இணைபிரியாமல் இருப்போன்னு நிறைய பேர் தங்கள் அன்பைப் புதுப்பித்து கொள்வார்கள். ஆனா மரணத்திற்குப் பிறகு, ஒரு உயிர் பிரிவதைக் காட்டிலும், அதனுடன் வாழ்ந்து பயணித்தவர்களின் வலி கொடுமையானது”.
“அப்படித்தான் நம் நேசமிகுந்தவர்களை இழந்து வாடுகிறோன்னு ஒரு பதிவு படித்தேன். அம்மா என் வாழ்வும் வளர்ச்சியும் உனக்கு முக்கியமா இருந்தது ஆனா அதைப் பார்க்க நீ இல்லை, மிஸ்யூ என்று பதிவிட்டு பத்திரிக்கையில் ஒரு திருமண செய்தி.!”
“தன் அன்னையை இழந்து அந்த பிள்ளை படும் துயரம் எனக்கான ஒரு செய்தியைப் போல இருந்தது. நானும் அதில் பாதிக்கப்பட்டவன்தானே அப்போது முடிவு செய்தேன். அதன் பிரதிபலிப்புதான் இந்த உருவ மெழுகு பொம்மைகள். உன் முகம் பார்க்காமல் ஏங்கினேன் என்பது காதலில் மட்டுமல்ல அன்பிலும்தான்!”.
“நிறைய ஆர்டர்கள். இறந்தபோனவர்களை உயிர்ப்புடன் கொண்டுவரும் இந்த முயற்சிக்கு நல்லவரவேற்பு கடந்த பத்துவருடங்களில் எதையோ சாதித்த ஒரு உணர்வு இன்னும் எங்கள் கேலரியை விரிவுபடுத்தும் நோக்கம் இருக்கிறது!”.
அத்துடன் வீடியோவை அணைத்தவள். “எங்கள் கேலரி தொடங்கி பத்துவருடங்கள் ஆனதைக் கொண்டாட இந்த விழா” என்று பாலாவைப் பார்த்து சிரித்தாள்.
“நிறைய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவின் ஏற்பாட்டை நீங்களும் நானும் இணைந்துதான் கவனிக்கப் போகிறோம். என்ன டாக்டர் என்னோட சேர்ந்து வேலை செய்ய நீங்க தயார் தானே ?”
“பி !குவிக்”
“நிறைய அழைப்பிதழ்கள் அச்சாகி வந்து விட்டது. நாம் அதை போய் கொடுக்க வேண்டும் கிளம்புங்கள்.” என்று அவனைத் துரிதப்படுத்தி பாத்ரூமிற்குள் தள்ளினாள்.
“தேங்க்ஸ் ஆஷா!” “ பாலாவோட மனநிலையைப் பற்றி நான் உனக்கு சொல்லியிருக்கிறேன். சூழ்நிலைகள் மாறும் போது அது தெளிவடையுன்னு நான் நினைச்சேன். அதற்கு நம்ம கேலரியும் உன்னோட தோழமையும் சரியாயிருக்குன்னு என் கணிப்பை நீ உண்மையாக்கிட்டே. பாலா சீக்கிரம் குணமாயிடுவான்னு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு!”
“அப்பறம் நம்ம டாக்டர் நெல்சன்கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சு, ஆனா எப்படி பாலாவைக் கூட்டிப்போறதுன்னுதான் தெரியலை?”
“அழைப்பிதழ் கொடுப்பதைப் போல நான் கூட்டிப்போகிறேன் நீங்க கவலைப்படாதீங்க!” சொல்லிவிட்டு, காலிக்கோப்பைகளை எடுத்துசென்ற ஆஷாவை நன்றியுடன் பார்த்தான் நேசன்.
நான்சி லேபிற்குள் இருக்கு இன்ஸ்பெக்டர் கர்ணனும், துளசியும் வராந்தாவில் திகைப்புகளைப் பூசிக்கொண்ட முகத்தோடு காத்திருந்தார்கள்.
அவர்களின் கரங்களில் விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் பல்வேறு கோணங்களில் கார்மேகத்தின் புகைப்படம். இரத்தம் உறைந்த நிலையில் கண்கள் இரண்டும் பாதி மூடியிருந்தது. பற்கள் கிட்டித்துப் போய் இருந்தது தாடையின் இறுக்கத்தில் தெரிந்தது.
அவன் தலையின் வலதுபக்கத்தில் இருந்து வழிந்த குருதி கண்ணை பாதி மறைத்து சட்டையில் வழிந்திருந்தது. சீட்பெல்ட் போட்டு இருந்தான். கை இரண்டும் ஸ்டேரிங்கில் அழுத்தமாய் பதிந்திருந்தது.
“கர்ணன்…காரின் கைப்பிடியில் ஏதாவது கைரேகைத் தடயங்கள் இருந்ததா?!”
“பாரன்சிக் ஆட்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கார்மேகம் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் எப்படி ? அவன் பாடியில் தேவையாவற்றை எடுத்துவிட்டு அவனை இங்கே கொண்டுவந்து செட்டப் செய்து இருப்பார்களா ?”
“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அவனின் நகக்கண்களில் நீலம் பூத்து இருக்கிறது. நம் உடலின் ஆரோக்கியம் முதலில் வெளிப்படும் இடம் நகக்கண்தான். அதன் வெண்மையினைக் கொண்டு அந்த உடல் எத்தனை ஆரோக்கியமாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்!” என்று ஒருமுறை வேறொரு கேஸிற்காக மருத்துவர் சொல்லியிருந்தார்.
“கார்மேகத்தின் நகத்தின் நிறம் சற்றே வெளிர் நீலம் பூத்து இருக்கிறது. இறந்து ஒருமாதத்திற்குள் நகம் கழண்டு விழுந்து விடும் ஒருவாரத்திற்குள் அது நிறம் மாறும் விபத்தில் இறந்து போயிருந்தால், அவனின் நகக்கண்ணணில் இத்தனை மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. !”
“இதில் நடந்திருக்கும் சதியை அறிய நான்சி வரும்வரையில் காத்திருக்க வேண்டியதுதான்?!”. என்று அவர்கள் பேசி முடித்த கடைசி தருணம் கண்ணாடிக் கதவினைத் திறந்து கொண்டு நான்சி அவர்களை உள்ளே வருமாறு கைகாட்டினாள்.
“துளசி நீ நிறைய அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இறந்த போன கார்மேகத்தின் உடலில் இருந்து நிறைய உறுப்புகள் திருடுபோயிருக்கு?!”
“அப்படின்னா….!” “ இது உடல்உறுப்புகள் கடத்தும் மாபியாவா ? என்ன திருடு போயிருக்கு கிட்னியா ?”
“தோல் மற்றும் எலும்புகள்…?!” என்றாள் நான்சி.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
- நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் :4 - லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்