அத்தியாயம் – 22

வளைந்து நெளிந்த அந்த தென்னை மரத்தின் நிழல் சந்தன நிற மணலில் படர்ந்து பிரதிபலித்தது. அதன் கீற்றுகளின் வழியே சூரியன் குதூகலமாக ஒளிவீசினான். நீல நீர் அலைகள் எழுந்து கரையை நோக்கி வெள்ளை நுரையைத் துப்பி விட்டு செல்ல, ஈரமணலில் சிற்சில நண்டுகள் குழிக்குள் புகுவதும் வெளிவருவதுமாக விளையாடிக் கொண்டு இருந்தது.

சன் ஸ்கீரின் லோஷனைத் தடவிக்கொண்டு சூரிய ஒளியில் கிட்டத்தட்ட முக்கால் ஆடை மறைத்த குழந்தையின் நிலையில் படுத்திருந்தாள் சாகித்தியா அவளின் கண்களை கருப்பு நிற சன் கிளாஸ் மறைத்திருந்தது. அப்போதைக்கு அவளின் உடலிருந்து எழுந்த வெப்பம் சூரியனுக்கே சவால் விடுவதாய் இருந்தது.

அவளின் அருகிலேயே நரேன். இயற்கையோடு ஒன்றிய நிலையில் புது ஒளியுடன் கிடந்த அவளைப் பார்த்து தன் விரல்களால் கிச்சுகிச்சு மூட்டினான்.

“ஓ…. நரேன் கொஞ்ச நேரம் உங்க குறும்பை விடமாட்டீங்களா ? இந்த இயற்கை, தகிக்கும் வெப்பம் அதுக்கு ஏற்றாற்போல சில்லுன்னு கடல்காத்து எதையும் பெரிசா எடுத்துக்காத மனிதர்கள்ன்னு எத்தனை அருமை பார்த்தீங்களா இந்த இடம் ?”

“என்ன சகி ? ஹனிமூன் வந்திட்டு இயற்கையை ரசிக்க சொல்லறியே ?!” அவன் குரலில் கெஞ்சல் இருந்தது. உடலின் மணலைத் தட்டிவிட்டு எழுந்து நின்ற சாகித்யா. அருகில் வைத்திருந்த பெரிய கேப்பை அணிந்து கொண்டாள். நரேன் அவளை தன்னோட இறுக அணைத்துக் கொள்ள ஒரு வெளிநாட்டு பயணி அவர்களை புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று அனுமதி கேட்டு கேமிராவிற்குள் அவர்களின் பிம்பங்களை அடக்கினான்.

நரேனின் கைக்கு அகப்படாமல் போக்கு காட்டியபடி ஓடினாள் சாகித்யா அவளின் கூந்தல் இழைகள் முதுகில் பரவி இடையைத் தொட்டு அசைந்தாடிட ரகசியமாய் ரசித்தபடியே துரத்திய நரேனிடம் வேண்டுமென்றே சரணடைந்து, பொய்யாய்ச் சிணுங்கினாள், வெட்கிச் சிரித்தாள். அக்காதல் களியாட்டத்தை சில தலைகள் திரும்பிப்பார்த்து உனக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று தத்தம் செயல்களில் முடங்கிபோனார்கள் மற்ற சுற்றுலாவாசிகள்.

‘என் தாகம் தணிக்க நீ உன் தாகம் தணிக்க’ என்று இளநீரை கைகளில் ஏந்தி ஒரே ஸ்ட்ராவில் அருந்தினார்கள். மெல்ல அவளின் காதில் ஏதோ சொல்லி முகத்தில் செம்மை படர வைத்தான்.

அவர்களின் மோன நிலையைக் கலைப்பதைப் போல சட்டென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம் சாகித்யா நரேனின் கரங்களுக்குள் சிறைப்பட்டு இருந்த இளநீரை அவர்களிடம் இருந்து பறித்து கடலுக்குள் எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிதறி ஓட, நரேன், “கமான் சாகித்யா” என்று அவளை இழுத்து கொண்டு ஓடினான். ரம்மியமான அச்சூழல் பதட்டமாகியது.

கேமிரா அவர்களை முழுவதுமாய் படம் பிடித்துக் கொண்டது. காட்சி முடிந்தவுடன்,

“மேடம் உங்க போன் ரொம்ப நேரமாய் அடிச்சிக்கிட்டு இருக்கு.” அதுவரையில் கூட நடித்த நரேன் ஒரு மென் புன்னகையுடன் நகர, நீள அங்கியில் தன் உடலைப் போர்த்திக்கொண்டு நாற்காலியில் அமர்ந்த சாகித்தியாவை நோக்கி அசிஸ்டெண்ட் டைரக்டர் வந்தார்.

“மேடம் இன்னும் இரண்டு ஷாட்தான் உங்களைக் காப்பாற்ற நரேன் வர அவர் கைகளில் குண்டு பாய்ந்து விடுகிறது. அவர் மயங்கிப் போகிறார். நீங்க உதவிக்கு ஆளில்லாம தடுமாறீங்க அப்போ முன்பின் தெரியாத ஒருத்தன் உங்களை நோக்கி வர்றான். இந்த சீன்ல அழுகை, விரக்தி, பயம், பதட்டம், அடுத்து என்ன நடக்குமோங்கிற எதிர்பார்ப்பு எல்லாம் உங்க முகத்திலே பிரதிபலிக்கணும். க்ளோஸ்அப் ஷார்ட் மேம் கொஞ்சம் லிப்ஸ்டிக் மட்டும் மைல்ட் ஷேட் போட்டுக்கோங்க கண்களில் அந்த கலக்கம் தெரியணும்.” சீனை விளக்கிவிட்டு, “நான் ஆங்கிள் ரெடி பண்ணிட்டு சொல்றேன்.” என்று நகர்ந்தார்.

“ஒ.கே ஸார்.” என்று தலையசைத்தவள். வாட்ஸ்அப்பை திறந்தாள். அலமாரியிலிருந்து திணிக்கப்பட்ட உடைகளைப் போல குறுஞ்செய்திகள் வந்து கொட்டின. தூரிகைநேசனிடம் இருந்து அழைப்பும் செய்தியும் வந்திருந்தது. இப்போதெல்லாம் அவன் அடிக்கடி அழைக்கிறான் என்ற எண்ணம் அவளுக்குள் ஒருவித சந்தோஷத்தை தோற்றுவித்தது. இத்தனை படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னி என்று பெயர் வாங்கி, பல கதாநாயர்களுடன் நெருங்கி நடித்திருந்தாலும் தூரிகைநேசனைப் போல யாரும் அவளை ஈர்க்கவில்லை. வெகு குறுகிய காலத்தில் அவனிடம் ஏற்பட்ட ஈர்ப்பு அவளுக்கு இனம்புரியா ஒரு உணர்வைத் தோற்றுவித்தது.

வாட்ஸ்அப்பில் மெசேஜைப் பார்த்தாள். விழாவின் தேதியைக் குறிப்பிட்டு அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தான். சாகித்யாவின் இதழ்களில் புன்னகை ஒன்று உற்பத்தியாகியது.

‘கட்டாயம் வருகிறேன்’ என பதிலுக்கு மெசேஜ் செய்தாள்.

“மேடம் ஷார்ட் ரெடி.” என்று குரல் வர, ‘கோவாவில் ஒரு படப்படிப்பிற்கு வந்திருக்கிறேன் ரூமிற்கு வந்ததும் பேசுகிறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அதனடியில் ஒ ஹார்ட்டினையும் போட்டு கேமிராவிற்காக அழத் தொடங்கினாள்.

இன்விடேஷன்ஸ் எல்லாம் கவர் போட்டு கொரியர் தபாலில் சேர்ப்பிக்க வேண்டியவர்களுக்கு முகவரி எழுதி தனியே வைத்துவிட்டு, நேரில் பார்த்து அழைக்க வேண்டியவர்களுக்கு என்று பத்திரிக்கையை ஒதுக்கி வைத்தாள் ஆஷா. நேசன் அலுவலக அறைக்குள் நுழைந்தவன், “ஆஷா டாக்டர் போன் பண்ணினார் எப்போ கிளம்பறீங்க ?” என்று அவளிடம் தன் போனை தந்தான்.

“மாலை ஏழு மணிக்கு ?”

“பாலா….. எங்கே ?”

“விழாவுக்கு சிலரை நேரில் அழைக்கணுன்னு சொல்லியிருக்கேன் தயாராகிட்டு இருக்கார்.” அப்போது தான் சாகித்தியாவின் குறுஞ்செய்தி வந்தது. வாட்ஸ்அப் நோட்டிபிகேஷனில் இறுதியாய் அவள் அனுப்பிய சிகப்பு இதயம் சிம்பிள். ஆஷா அதையே வெறித்தாள். தான் பேசிக்கொண்டே இருக்க, அவளிடம் மெளனத்தை உணர்ந்த நேசனின் பார்வை அவளிடம் போனது. பத்திரிக்கைகளை கைகளில் எடுத்துக் கொண்டு, போனை நேசனிடம் கொடுத்துவிட்டு அமைதியாய் வெளியேறினாள் ஆஷா.

குழப்பமாய் டிஸ்பிளேயினைப் பார்த்தபோது சாகித்யாவின் மெசேஜ்ஜைப் பார்த்ததும் தலையில் கைவைத்துக் கொண்டான் தூரிகைநேசன்.

———————————

“துளசி இதுக்கு மேலயும் நீங்க பாலாவைக் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கணுமா ?”

“ஏன் அப்படி சொல்றீங்க கர்ணன். பாலா மேல எந்தத் தப்பும் இல்லைன்னு என்னோட உள் மனசு சொல்லுது. அவருக்கு எதிரா நடக்கிற சதியிது.”

“பட்… எந்த லூப்பும் இல்லையே, தெளிவாக அவரை நோக்கி காய் நகர்த்தப்படுதுன்னு சொல்றீங்க. ஒரு இடம் இல்லை துளசி , நாம போற எல்லா இடத்திலும் எல்லா கிரைமிலும் பாலா கனெக்ட் ஆகிறார் பார்த்தீங்களா ? கார்மேகத்தோட பாடி, அதற்கு முன்னால் பாலாவால் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட ஒரு பொண்ணோட பாடி, அவருடைய அலுவலக அறையில் இருந்து கிடைச்ச சிகப்பு பாஸ்பரஸ் பொட்டலங்கள். அநாதை பாடிகளை அடக்கம் செய்ய அவர் போட்ட கையெழுத்து, இப்படி நிறைய ஒத்து வருது. இதுக்கெல்லாம் ?”

“பாலாதான் காரணனுன்னு மேலோட்டமாத் தோணும் கர்ணன். ஆனா பாலா காரணமில்லை.”

“பாலா மேல உள்ள அன்பு உங்களை இப்படி யோசிக்க வைக்கிறதா ? வடிவேலுவோட ஸ்டேட்மெண்ட்டைப் பாருங்க. அவனை ஒரு டாக்டர் போனில் கான்டேக்ட் பண்ணி பேசினதா சொல்றான். ஒருமுறை அவன் ஆஸ்பிட்டல்ல போய் பார்த்ததாகவும் சொல்றான். அதற்கு ட்யூட்டி டாக்டர் ஆகாஷ் பாலாவைப் பார்க்க ஒருமுறை கொஞ்சம் கெச்சலான ஆசாமி வந்ததா ஒரு ஸ்டேட்மெண்ட் சொல்லியிருக்கீங்க இதெல்லாம் கனெக்ட் ஆகுதே.”

“ம்….கரெக்ட்தான் வடிவேலு இன்னொரு விஷயம் சொன்னான் கர்ணன். மறுபடியும் ஒருதடவை ப்ளே பண்ணுங்க.” அவர்கள் ரெக்கார்ட்டை மறுபடியும் போட்டார்கள்.

“உண்மையைச் சொல்லிட்டா உனக்கு எந்த பாதிப்பும் இல்லாம நான் பார்த்துக்கறேன். அதை விட்டுட்டு எம் மாமா கவுன்சிலரு அது இதுன்னு ஆட்டம் காட்டினே யாருக்கும் தெரியாம நரம்பை உருவிடுவேன், எதிர்பாராத விபத்துன்னு கையைக் கட்டிக்கிட்டு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன். மிஞ்சிமிஞ்சிப் போனா இரண்டு மாசம் டெர்மினேட்தான் ஆகும். ஆல்ரெடி உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிதான் கேட்கிறோம்.” என்று கர்ணன் மிரட்டவும்.

“ஐயா என்னால அடி தாங்க முடியலைங்க நானே எல்லா உண்மையும் சொல்லிடலான்னுதான் நினைச்சிகிட்டு இருந்தேன். ஐயா அந்த இடம் என் மாமாவுதுங்க. இப்போயெல்லாம் வெள்ளைப் பன்னிக்கறி நல்ல விலைக்குப் போகுது. குடிசைத்தொழில்ல இதையும் சேர்த்திட்டதாலே பெரிசா செலவு இல்லை. பத்து பதினைஞ்சி குட்டிங்களோட ஆரம்பிச்சது. அடிக்கடி புரோக்கர் மூலமா யாராவது வெளிநாட்டு ஆளுங்க பன்னிகறி கேட்டு வருவாங்க. அதேபோல புரோக்கர் ஒருத்தன் இரண்டு பேரைக் கூட்டிகினு வந்தான். பண்ணையைச் சுத்திப் பார்த்துட்டு, அவங்களுக்குள்ளே ஏதேதோ பேசிக்கிட்டாங் இங்கிலீஷ்ல பேசிக்கிட்டதால எனக்கு ஒரு இழவும் புரியலைங்க. ஒண்ணுமே பேசாம போயிட்டாங்க நான் அந்த புரோக்கர்கிட்டே டேய் இந்தமாதிரி சாவுகிராக்கியெல்லாம் கூட்டிகினு வராதேன்னு கத்திப்புட்டேன்.

கவுன்சிலர் பதவி அப்பிடி இப்படின்னு சேர்ந்த காசுலே இன்னும் கொஞ்சம் பண்ணையை டெலப் பண்ணினேன். அப்பத்தான் ஒரு நாள் ஒரு போன் வந்துச்சி. எனக்கு பன்னியோட ரத்தம் தேவைப்படுது கறிக்கு வெட்டும்போது எனக்கு அதை தர முடியுமான்னு கேட்டு, சரி கீழே போறதுதானே தர்றேன்னு சொன்னேன் அதுக்கு கணிசமா தொகையும் வந்ததது. அப்பறம் அன்னைக்கு புரோக்கர் கூட்டி வந்த ஆளுங்க உன்னோட பண்ணையிலே ஓரத்திலே ஒரு வாட்டர் டேங்க் மாதிரி போடலாம், இரத்தத்தை அதிலே சேகரிச்சி வைன்னு சொன்னாங்க நிறைய பணமும் தந்தாங்க.

 

பணத்தைப் பார்த்ததும் சரின்னு சொன்னாலும், சட்டுன்னு நாளைக்கு ஏதாவது வில்லங்கம் வந்திடுன்னு தோணுச்சு. வந்தவங்கள்லே ஒருத்தன் நீ எங்களை நம்பலாம் இதையெல்லாம் செய்ய சொல்றது ஒரு டாக்டர் அவரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலே இருக்காரு பேரு பாலா நீ வேணுன்னா போய் பாரு ஆனா ஆஸ்பத்திரியிலே வைச்சு ஏதும் பேசக்கூடாதுன்னு சொல்லி அனுப்பினாங்க.”

“யாரு அந்த டாக்டர்…..?”

“அவரு பேரு ஏதோ பாலாவாம் ஒருதபா பார்த்தேன் மனுஷன் நல்லா சின்ன வயசு. அவருகிட்டே போய் சார் நீங்கதான் பாலாவான்னு கேட்டேன்.”

“ஆமா…. அவங்க எல்லாம் சொன்னாங்களான்னு என்கூட வந்த இரண்டு பேரைக் காட்டி கேட்டாரு. தலையாட்டினேன். பயப்படாதே தைரியமா செய் நானிருக்கிறேன்னு சொன்னாரு. அப்போ ஆரம்பிச்சதுதாங்க அப்பப்போ அந்தாளுங்க வருவாங்க இப்போ அதுவும் நின்னுப்போச்சு வெறும் போன்பேச்சு மட்டும்தான்.

எங்க பண்ணையிலே ஒரு மூலையிலே ஒரு சின்ன தொட்டி கட்டினாங்க அது எப்போதும் குளிராவே இருக்கும். என்னயிதுன்னு கேட்டேன் ஐஸ்பொட்டி நீ வெட்டற ரத்தத்தை இதிலேதான் சேகரிக்கப் போறோன்னாங்க. சின்னசின்ன பிளாஸ்டிக் டப்பா மாதிரி அதுலே ரத்தம் உறைஞ்சிப் போய் இருக்கும் தேவைப்படற நேரம் எடுத்து கொண்டு வந்து தரச்சொல்லுவாங்க. கூடவே……?!

கூடவே…..! இப்போயெல்லாம் வெளிநாட்டுலே பன்னிக்கறிக்கும் ரத்தத்துக்கும் நல்ல வரவேற்பாம். அதும் ஏதோ தாய்லாந்துன்னு சொன்னாங்க அங்கே இது துன்றதுக்கு எல்லாம் தடையாமே?! கள்ளமார்க்கெட் வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி மத்ததெல்லாம் டாக்டர் பார்த்துப்பாருன்னு சொன்னங்க. சிலநேரம் நம்ம மகாபலிபுரம் தாண்டி லோடு எடுத்துட்டுப் போய் இறக்கிட்டு வருவோம். நிறைய பணம் கிடைக்கும்.”

“யார் யார் போவீங்க ?”

“ஆரம்பத்திலே நா மட்டும்தான். வியாபாரம் பெருக பெருக தெரிஞ்ச பண்ணையில் இருந்து பன்னிகளை வாங்கிட ஆரம்பிச்சேன். அதானல லோடு அதிகமாச்சு மாசத்துக்கு ஒரு மூணுமுறை லோடு அடிப்போம். பணம் கொடுத்துடுவாங்க.”

“யார் அவங்க ?”

“அதெல்லாம் ஏதும் தெரியதுங்க. அங்கே மகாபலிபுரம் தாண்டி ஒரு கொடவுன் இருக்கும் அங்கே மூஞ்சியை மூடிக்கிட்டு இரண்டுபேரு நிப்பானுங்க அவனுங்ககிட்டே சரக்கை கொடுத்துட்டு நாங்க வந்திடுவோம். எனக்கு பணம் வந்ததால நான் எதையும் கேட்டுக்கிறது இல்லை.”

“கார்மேகத்தை எப்படித் தெரியும்.”

“ஒரு தபா என்னோட வண்டி நின்னுப்போச்சு, வேனோட டயரை மாத்தனும் சரக்கு கையில இருக்கு. பக்கத்துலே அவனோட கேரேஜ்க்குத்தான் போனேன் வண்டியிலே இருந்து ஒரே வீச்சமா இருக்கேன்னு கேட்டான். நம்ம குப்பம்தான் அவனும் கொஞ்சம் பழக்கம் நமக்கும் ஒரு நல்ல ஆள் இருந்தா சப்போர்ட்டு நல்லதுன்னு தோணுச்சி அதனால சரின்னுட்டேன். அவனுக்கு பணமுடை, அன்னைக்கு நைட் லோடு ஏத்திட்டு போக வேண்டியிருந்ததால அவனையும் கூப்பிட்டேன்.”

“கரெக்டா கூலி கொடுத்திட்டு அனுப்பிட்டோம். ஆனா போற வழியலே ஆக்ஸிடெண்ட் ஆகுன்னு நானு நினைக்கலைங்க. டிவியில காட்டுனப்போ கூட நாமா போய் பேசினா ஏதாவது வில்லங்கம் வந்திடுன்னு பயந்து அமைதியா இருந்திட்டேன்.”

“இதுவரைக்கும் எத்தனைமுறை லோடு எடுத்துட்டுப் போயிருக்கே ? ஒவ்வொரு முறையும் அதே இடம்தானே வேற எங்காவது மாற்றம் இருந்ததா ?”

“ஐயா ஒவ்வொரு முறையும் அதே இடந்தானுங்க. கிட்டத்தட்ட இரண்டு மூணு வருஷமா லோடு எடுத்திட்டுப் போறேன் கரெக்டா காசு வந்திடுங்க. இப்போ புதுசா பன்னியோட கிட்னியைக் கேட்டாங்க.” தயங்கித் தயங்கி வடிவேலு சொன்னான்.

“எதுக்கு ?”

“ஏதோ ஆராய்ச்சியாம் பொண்ணு உடம்பிலே பொருத்திப் பார்க்கணுன்னு……” அவன் இழுக்க துளசியும் கர்ணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்