16வது அத்தியாயம்

“மிஸ்.சாகித்யா நீங்க எத்தனை முறை போன் செய்தாலும் என் பதில் இதுதான் தூரிகைநேசன் இங்கே இல்லை . அவர் எப்போது வருவார்னு தெரியாது , அத்தனை அவசரம் என்றால் நீங்கள் அவர் செல்லில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று கோபமாய் போனை வைத்தாள் ஆஷா.

முட்டாள் இவள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் ஏதோ மந்திரம் ஜபிப்பதைப் போல எப்போது பார்த்தாலும் அவரின் பெயரையே உச்சரித்துக் கொண்டு. ஒருமுறை முகத்தைக் காட்டினாள் கூட உணர்ந்து கொள்ளாத எருமைத்தோலாய் இருக்கிறாளே என்று நினைத்து சாகித்தியாவின் பளபளப்பும் மென்மையும் கொண்ட தோல் நினைவுக்கு வர தன் கரங்களைப் பார்த்துக்கொண்டாள். சற்றே நிறம் மங்கியிருக்கிறேனோ எப்போதும் சிற்பம் தோட்டம் என்று அதையே கவனித்துக்கொண்டு இருப்பதால்தான் என்னில் என் உடலழகை மெருகுபடுத்துவதில் நான் கவனம் செலுத்துவதில்லை . அதனால்தான் நேசனின் பார்வை சாகித்தியாவின் பக்கம் திரும்பியிருக்கிறதா ?

‘ஆனால் வெறும் உடல் அழகிற்கு முக்கியத்துவம் தருகிறவரா நேசன் நிச்சயமாக இல்லை . அவருக்கு என்மேல் அக்கறையும் அன்பும் உள்ளது. ஆனால் காதல்…?! அன்பையும் காதலையும் உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு இருந்தால் அவனுக்கு எப்படித் தெரியும். இந்த எட்டு வருடங்களில் ஒருமுறையாவது அவன் கண்களை நேருக்குநேர் பார்த்து இருக்கிறாயா ? அல்லது உன் இருப்பை அவனுக்கு உணர்த்தியிருக்கிறாயா ? எதுவும் இல்லை. எப்போது பார்த்தாலும் கல்லுக்கும் களிமண்ணுக்கும் வாக்கப்பட்டவளைப் போல அது கூடவே சுற்றிக்கொண்டு இருந்தால் எப்படி அவனுக்கு உன் மேல் ஒரு அபிப்ராயம் வரும் ‘ மனது ஆஷாவை இடித்துரைத்தது.

நட்பையும் காதலையும் உணரவேண்டும் நான் உனக்கானவன் என்று என்னைப் பார்க்கும் போது நேசன் உணர்ந்திருக்க வேண்டும். புகழும் அழகும் நிறைந்த நடிகை அவனையே சுற்றிச்சுற்றி காதல் மொழிகளும் கள்ளப்பார்வையுமாய் இருக்கிறாள் . ஒருவேளை சாகித்தியாவிடம் நேசனின் மனம் பாய்ந்து விட்டால், அந்த வலியை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா ? கேள்விகளும் பதிலுமாய் மனதை ஆட்கொண்டு இருக்கும்போதே பாலாவிற்காக அவள் தயார் செய்த அறையின் வேலைகள் முடிந்தது. கேலரியை கூட்டிப் பெருக்குபவளிடம் பெருக்கித் துடைக்கச் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்.

சாகித்தியா முதன் முதல்ல இங்கே வந்தப்போ அத்தனை பேசாத நேசன். அவளுக்கு உடம்பு முடியவில்லை என்றதும் வீடுதேடிப் போய் பார்க்கவில்லையா ? அதையும் விடு,ஒருத்தனைத் தேடி இத்தனை தரம் போன் போடுகிறாள் என்றால் அவர்களிடம் பிடிப்பு இல்லாமலா இருக்கும். கடவுளே இதென்ன அவஸ்தை, ஆஷா தலையைப் பிடித்துக் கொண்டாள். பேசாமல் நேசனிடமே அவள் மேல் விருப்பமா என்று கேட்டுவிடலாமா ? என்று உள்ளே ஓடியது. சற்று நேரத்திற்கு முன்பு தன் எரிச்சலை அவளறியாமல் காட்டும்போதே சாகித்யா பற்றிய நினைவுகளை ஓரமாய் வைத்துவிட்டு வேலையைப் பார் என்றானே ?

ஒருவேளை அது நீ வேலைக்காரிதான் அவளைப் பேச உனக்கு தகுதியில்லை என்பதாய் இருக்கும் அதனர்த்தம். ச்சீ இருக்காது…இத்தனை வருடங்களில் ஒரு நல்ல ஸ்நேகிதியாகத்தான் நேசன் அவளை நடத்தியிருக்கிறான். எப்போதும் வேலையாளைப் போல நடத்தவில்லை. அவன் எல்லாரிடத்திலும் அன்புடன்தானே நடந்துகொள்கிறான் என்று இடித்துரைத்தது மனது . அவளின் மனக்கோர்ட்டில் ஆறேழு ஆஷாக்கள் பிரிந்தார்கள். சிலர் அவள் பக்கம் சிலர் நேசனின் பக்கமும் பேசினார்கள். ஆனால் இறுதியாக நீதிபதியாக வேடமிட்டு இருந்திருந்த ஆஷா வழக்கின் வாதம் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது நீதிபதியான எனக்கு முன்னால் நிற்பது ஒரேயொரு கேள்விதான். ஒவ்வொரு ஆஷாவும் அந்த நீதிபதி ஆஷாவை பார்த்தார்கள் அமைதியாய்.

நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள். வழக்கை தொடர்ந்து இருக்கும் இந்த ஆஷா ஒரு கொலைக் குற்றவாளி அவள் நேசனிடம் அடைக்கலம் கேட்டு வந்தவள். அடைக்கலம் தந்ததனாலேயே அவளுக்கு தன் காதலையும் தரவேண்டிய அவசியம் நேசனுக்கு இல்லை இதுவே என் தீர்ப்பு என்று நீதிபதி ஆஷா முடிக்கவும் மற்ற உருவங்கள் காணாமல் போனது. தானே மறந்து போன ஒரு விஷயம் தன் மனதின் அடிஆழத்தில் புதைந்து கிடப்பதால்தான் இந்நேரத்தில் வெளிவந்து இருக்கிறது அப்படியானால் நான்…..நேசனை விரும்பும் அளவிற்கு தகுதியானவள் இல்லையோ ? என்று யோசிக்கத் துவங்கினாள். அவளையும் அறியாமல் கண்களில் நீர் திரண்டது.

“ஆஷாம்மா அல்லாத்தையும் பெருக்கித் துடைச்சிட்டேன்” என்று

சொல்லிவிட்டு நகர்ந்த அந்தப் பெண்மணியின் முதுகில் பயணித்த தலைபெருத்த எறும்பினை பயத்துடன் பார்த்த ஆஷா தன் மனதின் அத்தனை நினைவுகளையும் ஒதுக்கிவிட்டு,

“பொன்னம்மா கொஞ்சம் இரு உன் டிரஸ்ல எறும்பு” என்று ஒரு காகிதத்தை எடுத்து அதை தட்டிவிட்டாள். ஒருமுறை தலையைத் திருப்பி ஆஷாவை முறைத்துவிட்டு, வெடுக்கென்று மண்ணுக்குள் தனக்கு ஒரு குழியை உடனடியாக வெட்டி பதுங்கிக்கொண்டது அந்த எறும்பு.

“அட என்னம்மா ஒரு சின்ன எறும்புக்கா இப்படிக் கத்துனே? அது கடிச்சி நானென்ன செத்தா போகப்போறேன். சுருக்குன்னுச்சி தட்டிவிட்டேன் போகலைப்போல, நீ கத்துன கத்துல நான் ஏதோ பாம்புன்னு நினைச்சிட்டேன்  ” என்று சொன்ன பொன்னம்மா சிரித்தபடியே நகர்ந்தாள் . அவளின் முதுகுப்புறத்தில் சின்னத்தாய் ஒரு இரத்தப்புள்ளி.

அதே நேரத்தில் நேசனின் கார் கேலரியை அடைந்தது. ஆஷாவின் கவனம் அவர்கள் மேல் நிலைத்தது.

“உங்க நண்பர் வர்றாங்கன்னு சொன்னீங்க அவர் எங்கே ?  ”  நேசனை சமீபித்த ஆஷா கேட்க,

“ஒரு இரண்டு பேரை கூப்பிடு ஆஷா அவன் மயக்கமா கிடக்கிறான். தூக்கிட்டுப் போகணும்” நேசன் சொன்னபடியே இரண்டு நபர்கள் வந்து பாலாவைக் குழந்தையைப் போல தூக்கி அவனுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் கிடந்த கட்டிலில் கிடத்தினார்கள். காற்று வசதிக்காக ஜன்னல்கள் திறந்து விடப்பட்டிருந்தது. இவருக்கு என்னாச்சு ?

போனில் என்னால தெளிவா ஏதும் சொல்ல முடியலை ஆஷா என்று பத்துநிமிடங்களை செலவழித்து எல்லா விவரங்களையும் சொன்னான் நேசன். “கடவுளே இவருக்கு….நேசன் நீங்கள் ஏன் டாக்டர்.நெல்சனை வரவழைக்கக் கூடாது உங்கள் நண்பரும் கூட இல்லையா ?”

“கரெக்ட், பாலாவுக்கு டீரிட்பண்ண அவர்தான் சரி நான் போன் பண்றேன். அப்பறம் ஆஷா பாலா சில நேரங்களில் கொஞ்சம் ஹார்ஷா பிகேவ் பண்ண வாய்ப்பிருக்கு. இன்பேக்ட் இப்போ கார்லே வரும்போது உன்கிட்டே பேசிட்டு போனை வைக்கிறேன் திடீர்னு எழுந்து உட்கார்ந்து இருக்கான். பக்குன்னு ஆயிடுச்சி ஒருமாதிரி கோணலா வேற சிரிச்சான். என்னபாலான்னு கேட்டதும் அப்படியே மறுபடியும் படக்குன்னு மயங்கிட்டான். யாராவது துணைக்கு வைச்சிக்கோ நான் போய் டாக்டருக்கு போன் பண்ணிட்டு அப்படியே இங்கே வந்திட்டோன்னு துளசிகிட்டே சொல்லிட்டு வந்திடறேன்”

“அது யாரு துளசி ?” சட்டென்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள் ஆஷா.

நேசன் அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அது என் தோழி பாலாவை கல்யாணம் செய்து கொள்ளப்போகிற பெண் என்று சொல்லிவிட்டு எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் சென்றுவிட்டான். ஆஷா பாலாவின் அருகில் சென்றாள், அங்கே நேசனின் போனில் சாகித்யா காலிங் என்று இசைத்தது. அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றாள் ஆஷா.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவைத்தாண்டி பின்புறம் அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த மரங்களில் கூட ஒருவித அமானுஷ்யம் தோன்றியது. அமரர் அறை என்ற என்று அடர்நிறத்தில் வெள்ளை பெயின்ட்டால் அளவெடுத்து எழுதப்பட்டு இருந்த இடத்தின் வாயிலில் கர்ணன் நின்றிருந்தார்.

இன்ஸ்பெக்டர் கர்ணன் என்ற துளசியின் கேள்விக்கு தலையசைத்து நான்சியையும் அறிமுகம் செய்துகொண்டார்.

“விபத்து எப்படி நடந்தது ஸார். அந்த வண்டி இப்போது எங்கே ?! ”

“விபத்துக்கான காரணம் வண்டியை வேகமாக செலுத்தியது பிரேக் பெயிலியர் கண்ட்ரோல் பண்ண முடியாமல் மோதியிருக்கலாம் டிரைவர் ஸ்பார்ட் அவுட். சீன் ஆப் கிரைமில் கிடைத்த தடயங்கள், வண்டியில் கைப்பிடியில் ஏதாவது கைரேகைகள் ஒளிந்திருக்கிறதா என்றெல்லாம், பாரான்சிக் ஆட்கள் செக் பண்ணிட்டு இருக்காங்க”

“பாடியைப் பார்க்கலாமா ? இன்ஸ்பெக்டர் ”

“ஓ எஸ்…. ”அவர்களுடன் நடந்தார் கர்ணன். சில நிமிடங்கள் செலவழித்து மருத்துவமனையில் காணாமல் போன கார்மேகத்தின் பிணத்தைப் பற்றியும், திரிபுர சுந்தரியை விசாரித்தது பற்றியும் சுருக்கமாக சொல்லி முடித்தாள் துளசி.

உள்ளே ரத்தவாடை மூக்கை துளைக்க, ஆங்காங்கே தன் இரும்பு உடம்பில் துளைகள் போட்டு நட்சத்திரங்களை உருவாக்க முனைந்திருந்தது. அந்தப் படுக்கை தலைமாட்டில் மரக்கட்டை ஒன்று. மூன்று டிராலிகள் காலியாக இருக்க, அங்கே பெரிதும் சிறியதுமாய் பிளாஸ்டிக் பக்கெட்டுகள், பெண்களுக்கு பிடித்த நிறம் எனக்கு வேண்டாம் என்று உதிர்த்தாற்போல சாயம்போன ஒரு பிளாஸ்டிக் குடத்தில் ஏகத்துக்கும் தூசை சுமந்திருந்த நீர். அதற்குத் தோதாக பச்சை நிற மக்கொன்று சடலங்களுக்குப் போட்டியாய் அதில் அமர்ந்திருந்தது.

முகத்தில் கர்சீப்பை ஒற்றியபடியே சென்ற துளசி, கர்ணனின் நகர்தலுக்குப் பின்னால் அந்த இரும்புப்படுக்கையில் படுத்திருந்தவனை கண்டதும் மின்சார அதிர்விற்கு உள்ளானாள். காரணம் அது காணாமல் போனதாக சொல்லப்படும் கார்மேகத்தின் உடல்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்