அத்தியாயம்-12

பால் கலக்காமல் பதவிசாய் வந்தமர்ந்திருந்தது துளசியின் எதிரில் அந்தக்  கோப்பை. மிதமான சூடோடு எலுமிச்சை வாசமும் இணைந்து வர அந்த ப்ளாக் டீ அந்நேர டென்ஷனைத் தீர்க்கும் அருமருந்தாய் இருந்தது . தான் அமர்ந்திருந்த இடத்தை மீண்டும் ஒரு முறை பார்வையிட்டாள் துளசி. சுவரெங்கும் கலர்கலராய் புகைப்படங்கள். பெரியமனிதர்களுடன் சிலதில் விருது வழங்குவதும், சிலதில் வாங்குவதுமாய் கலர்கலரான சால்வையில் தன் அக்மார்க் சிரிப்பைச் சிரித்துக் கொண்டு இருந்தாள் திரிபுரசுந்தரி.

அறையின் மூலையில் சிறு மேஜையும் தலை கவிழ்ந்திருந்த மேஜை விளக்கும். இணைபிரியா துணை போல நாற்காலி. வெள்ளை தாள்களின் மத்தியில் கருப்புநிற இங்க் பேனா ஒன்று இளைப்பாரிக்கொண்டு இருந்தது. பக்கத்து அலமாரியில் நோட்டுப் புத்தகங்களும், பைல்களும், சற்றே நெருக்கடியான இடம்தான். இதில் சுமார் நாற்பது பிள்ளைகளுக்கும் மேல் வசிப்பதாக சற்று முன்பு அமர வைத்துவிட்டு போன பெண்மணி சொன்னாள்.

“அம்மா பக்கத்து குப்பம் வரைக்கும் போயிருக்காங்க. நீங்க வந்திருக்கிற தகவலைக் கொடுத்திட்டோம். இப்போ வந்திடுவாங்க!”  என்று சொல்லி சென்றிருந்தாள். பாடாவதியான ஒரு பேன் ‘தேமே’ என்று தலைக்கும் மேல் சுற்றிக்கொண்டு இருந்தது. துளசி எழுந்து மெல்ல சுற்றி வந்தாள். நான்கைந்து அடுக்குகள் கொண்டு வீடு அது. ஒவ்வொரு அடுக்கிலும் சில பிள்ளைகள் வரைந்து கொண்டோ படித்துக் கொண்டோ இருந்தார்கள். சில வயது முதிர்ந்த பெண்மணிகள் கைவேலைகள் செய்தபடியிருக்க, பின்கட்டு மதிய சமையலை ஜோராக தயார் செய்து கொண்டு இருந்தது.

” வணக்கம் ”  என்ற அமர்த்தலான குரல் கேட்டுத் திரும்பினாள் துளசி. பளீரென்ற முகம் கண்களில் ஒருவித இரக்கமும் பரிவும் தெரிந்தது. கண்களை உறுத்தாத வண்ணத்தில் காட்டன் புடவை. அதே நிறத்தில் முழுக்கையும் காலர் வைத்து கழுத்தை மறைத்திருந்த சோளி, நெற்றியில் சந்தனகீற்றின் நடுவில் குங்குமம் ,உயர்ந்த கொண்டை திரிபுரசுந்தரி தன் வயதை ஏகத்திற்கும் தன் ஆடையால் உயர்த்தியிருப்பதைப் போன்று தெரிந்தது. முகம் மட்டும் 30தில் இருந்து முப்பத்தைந்து இருக்கலாம் என்று உணர்த்த,

 ” வணக்கம் ” என்றாள் துளசி பதிலுக்கு.

“வாங்க, முன்னாடி அலுவலகத்தில் உட்கார்ந்து பேசலாம் ”  துளசி சற்று நேரத்திற்கு முன்பு காத்திருந்தது தான் அந்த அலுவலகம். தற்போது அங்கிருந்த மூன்று மத தெய்வங்களின் மத்தியில் விளக்கும் ஒற்றை ஊதுபத்தியும் எரிந்து கொண்டு இருந்தது.  ” உட்காருங்க மேடம், என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்கன் தெரிந்து கொள்ளலாமா ?” நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் திரிபுரசுந்தரி.

“இந்த நேசக்கரங்கள் துவங்கி எத்தனை வருடமாகிறது ?”

“பதிமூன்று வருடங்கள் அரசாங்கத்தின் உதவியோடும் பல நல்ல உள்ளங்களின் உதவியோடும் இந்த இல்லம் நடக்குது. நீங்களே பார்த்திருப்பீங்க, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வாழ வழியில்லாதவர்கள் இன்னும் அநாதரவா விடப்பட்ட பிள்ளைகள்ன்னு நிறைய பேர் இருப்பாங்க. பக்கத்து குப்பத்து பெண்களுக்கு இங்கே தொழிற்பயிற்சி தருகிறோம். மொத்தம் 40 பிள்ளைகளுக்கும் மேலயிருக்காங்க. அதில் 12 பேர் கல்லூரிக்குப் போறாங்க. மீதியெல்லாம் பள்ளிச் சிறுவசிறுமிகளும், குழந்தைகளும்.”

” பக்கத்தில் இருக்கிற குப்பத்து மக்கள் ரொம்பவும் அன்பானவங்க. கடுமையான உழைப்பாளி .ஆனா சட்டுன்னு உணர்ச்சி வசத்தால தற்கொலைங்கிற தவறான முடிவை எடுத்திடறாங்க. இதனால ஒண்ணும் அறியாத பச்சைப்பிள்ளைங்க பாதிக்கப்படுறாங்க.!”

“தற்கொலை தவறான ஒன்றுன்னு அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது எங்களோட பணி. கல்லூரி மாணவர்கள் சில இந்த பணிக்கு வாலண்டியர்ஸ்ஸா ஒர்க் பண்றாங்க. மனு கொடுத்து இந்தப்பக்கத்திலே உள்ள ஒயின்ஷாப்பை மூடியிருக்கோம்.”!

 அந்த பாராட்டுவிழாதான் இன்னைக்கு கமிஷனர் தலைமையில் நடந்தது. அப்பத்தான் நீங்க வந்திருக்க தகவல் கிடைச்சது. அதனால உடனே வரமுடியலை. என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்கன்னு தெரிந்துகொள்ளலாமா? அவளின் பேச்சின் முடிவில் திரிபுரசுந்தரியின் மேல் ஒரு மரியாதை உண்டானது துளசிக்கு அதுவே வார்த்தைகளிலும் பிரயோகித்தது.

“ம் … நல்ல விஷயங்களை செய்யறீங்க வாழ்த்துக்கள், இதுதவிர நீங்க அநாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் செய்யறதா கேள்விப்பட்டேன். அந்த விஷயமாத்தான் உங்ககிட்டே பேசணும். நாலு நாளைக்கு முன்னாடி மருத்துவமனையில் இருந்து அடக்கம் பண்ண பிணங்களைப் பற்றிய தகவல்கள் வேணும்.?”

“இதோ…! எங்க இல்லம் தொடர்பா செய்துவர்ற காரியங்களில் இதுவும் ஒண்ணு. ஒருத்தரோட பிறப்பின் முதல் தெரியாம எப்படியோ அவன் வாழ்க்கையிலே கடந்திடறான். ஆனா அவனோட இறப்பு இதுநாள் வரையில் அவன் செய்த எல்லா காரியங்களையும் ஏதோ ஒரு வகையில் இணைக்கிறது . அப்படி வாழற ஆன்மா நல்ல முறையில் இறைவனை சேரணும். அதற்காகத்தான் இந்த சேவையை நாங்க செய்யறோம்.”

” அநாதரவா விடப்பட்ட பிணங்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு மருத்துவமனைகள், ஏன் சில நேரம் பொதுமக்கள் கிட்ட கூடயிருந்து வரும். அவங்களை நன்முறையில் அடக்கம் செய்வது எங்க பொறுப்பு. !”  பேசியபடி துளசியின் முன் ஒரு நோட்டுபுத்தகத்தை வைத்து கடைசிப்பக்கத்தைக் காண்பித்தாள்.

 அதில் தேதிவாரியாக அவர்கள் அடக்கம் செய்த பிணங்களின் விவரங்கள் குறிக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட தினத்தன்று குறிக்கப்பட்டு இருந்த பெயர்களில் கார்மேகத்தின் பெயர் இல்லை வெடுக்கென்று நிமிர்ந்தாள் துளசி.

“மிஸ்.திரிபுரசுந்தரி இந்த நோட்டில் கார்மேகங்கிற பெயர் இல்லையே?”ஆனா அவரோட பாடியும் உங்ககிட்டே ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனையின் ரெக்கார்ட்டில் இருக்கே? தன் கைவசம் வைத்திருந்த காகிதத்தைக் காட்டிட அதில் அடிப்பகுதியில் இருந்த கார்மேகத்தின் பெயரைப் பார்த்தாள் திரிபுரசுந்தரி.

“ஒரு நிமிடம் இன்ஸ்பெக்டர்…?”  தன் மேஜையின் இழுப்பறையினைத் திறந்து அதில் நான்காக மடித்து வைக்கப்பட்டு இருந்த காகிதத்தைக் காட்டினாள். இதுதான் அன்றைக்கு மருத்துமனையில் என்னிடம் கொடுக்கப்பட்ட பாரம். இதில் பதினைந்து பெயர்கள் உள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பெயர் இல்லை. துளசி அதைவாங்கிப் பார்த்தாள். பதிவுப் புத்தகத்தின் அடிப்பாகம், அதாவது கார்பன் காப்பி அதெப்படி ஒரிஜினலில் கார்மேகத்தின் பெயர் தெளிவாக இருக்கிறது.ஆனால் அடிப்பாகத்தில் இல்லையெனில் கார்பன் காப்பியை வைத்து எழுதப்படவில்லையா?

ஒருவிநாடி இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தாள். திரிபுரசுந்தரி தந்த கார்பன் காப்பியின் அடியில் மருத்துவமனையின் சீலின் மேல் பாலாவின் கையெழுத்து இருந்தது. வலதுபுறம் பெற்றுக்கொண்டோம் நல்ல முறையில் அடக்கம் செய்கிறோம் என்று திரிபுரசுந்தரியின் கையொப்பம் இருந்தது. ஆனால் தன் கையில் இருந்தததில் கார்மேகத்தின் பெயர் சீலின் சற்றே மேலே திணிக்கப்பட்டதைப் போல இருந்தது .அப்படியென்றால் மருத்துவமனையில் தான் ஏதோ தவறு நடந்திருக்கிறதா? இது எப்படி சாத்தியமாகும். இந்த பாரம் பிரகாரம்தானே வாட்ச்மேன் பாடியை இவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறான்.

எனில், தப்பு யாரிடம்? ” மிஸ்.திரிபுரசுந்தரி எப்போதும் இறுதிவரையில் இருந்து பிணங்களை பெற்றுக்கொள்ளும் நீங்கள் அன்று மட்டும் ஏன் பாதியில் சென்றீர்கள்? உங்கள் வாகனம் மீண்டும் இரண்டாவது முறையாக மருத்துமனைக்கு வந்து கார்மேகத்தின் பாடியை வாங்கிச் சென்று இருக்கிறதே?

“இன்ஸ்பெக்டர் முதலில் எதற்கு இந்த விசாரணை என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்னிடம் உள்ள நகல் வரிசையில் தான் நான் பிணங்களைப் பெற்றேன். நீங்கள் சொல்லும் கார்மேகம் என்னும் பாடி எங்களிடம் வரவில்லை. மீண்டும் ஒருமுறை எங்களின் வாகனம் வந்திருப்பதாக சொல்கிறீர்கள். அதற்கு சாத்தியமே இல்லை.ஏதோ தவறு நடந்திருக்கிறது?

உங்கள் வாகனம் இரண்டாவது முறை வந்ததற்கு ஆதாரம், ‘இதோ இந்த ரெக்கார்ட்’ .இங்கே பாருங்கள் மாலை ஐந்து மணியளவில் உங்களின் லோகோ பொறித்த வாகனமும் உங்கள் யூனிபார்ம் அணிந்த டிரைவர் ஒருவரும் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் தான் விபத்தில் அடிப்பட்டு இறந்திருந்த கார்மேகம் என்பவரின் பாடி குறிப்பிட்ட நாட்களை அடையும் முன்னரே ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது?!”

 அக்காகிதத்தில் வண்டி எண்ணைப் பார்த்த திரிபுரசுந்தரி தலையில் கைவைத்துக் கொண்டாள்.

“மேடம் அன்றைக்கு மொத்தம் பதினைந்து பிணங்களை நாங்க அரசு பொது மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டோம் ஆனா ரயில்வே டிராக்கில் ஒரு அநாதைப் பிணம் கிடப்பதாக எனக்குத் தகவல் வர நான் அங்கே செல்லவேண்டியதாகிவிட்டது. அதிலும், நாங்க இதுவரையில் அடக்கம் செய்த பிணங்களின் எண்ணிக்கை 1000த்தைக் கடந்திருப்பதால் எங்களின் சேவையைப் பாராட்டி லயன்ஸ்கிளப்பில் ஒரு விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுமட்டும் இல்லை.அன்றைய தினத்தின் அனைத்து செயல்களையும் ஒரு முண்ணனி டெலிவிஷனின் பெயரைச் சொல்லி அவர்கள் படம் பிடித்தார்கள். அதன் காப்பி இதோ! என்று ஒரு பென்டிரைவினைக் காட்டினாள். தன் மேஜையின் மேல் உள்ள கணிப்பொறி அந்த பென்டிரைவிற்கு உயிர் கொடுத்தது.

“தப்பு என்சைடில் இல்லையென்று என்னால் நிரூபிக்க முடியும் இன்ஸ்பெக்டர். ஏன்னா தகனம் செய்யப்பட்ட இடம் தாம்பரம் அருகில். அங்கிருந்து நான் பொது மருத்துவமனைக்கு வர கிட்டத்தட்ட முக்கால்மணி நேரம் பிடிக்கும். அப்படியிருக்கும் போது எங்களின் வாகனம் அனைத்தும் ஒரே நேரத்தில் தான் கிளம்பியிருக்கிறது. நீங்கள் காட்டிய நம்பர்ப்ளேட் என்னுடையதுதான் ஆனால் வாகனம் எங்களுடையது அல்ல.”

“என்னுடைய ஐந்து வாகனங்களிலும் இருந்து பாடியை இறக்குவதும் அதற்கான ஆவண செய்வதில் எங்கள் டிரைவர்கள் கலந்துகொண்டார்கள். அதற்கான வீடியோ ஆதாரம் இதில் உள்ளது. ஒரே நேரத்தில் எப்படி மேடம் இரண்டு இடத்தில் அந்த வாகனம் இருந்திருக்க முடியும். தவிரவும் நீங்கள் குறிப்பிட்ட அடையாளம் எங்கள் டிரைவர்களிடம் இருக்கிறதா என்று கூட பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அவர்களையும் விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன் என திரிபுரசுந்தரி பேசப்பேச கணினியின் திரையில் வெகு உன்னிப்பாய் கவனித்தாள் துளசி.

பாரத்தில் கணக்கிட்டு இருந்த நேரப்படி அந்த வாகனம் தகனம் செய்யும் இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் சரியாக இருந்தது. ஒளிபரப்பில் நல்ல செயல்களைச் செய்து வரும் வாகனங்களும் அதன் வாகன ஓட்டிகளும் என்று தனியாகக் கவர் செய்திருந்தார்கள்.

“எங்கேயோ தப்பு நடந்திருக்கு இன்ஸ்பெக்டர். உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் விசாரணையில் எங்க இல்லத்தோட பெயர் வெளியவராம பார்த்துக்கோங்க. சத்தியமாக எங்களிடம் ஒளிவுமறைவு இல்லை என்று கைகூப்பினாள் திரிபுரசுந்தரி.

துளசி அவளிடம் அந்த பாரத்தின் நகலைப் பெற்று கொண்டாள். மேலும் அந்த பென்டிரைவையும். ” உங்க மேல எந்தத்தப்பும் இல்லைன்னு தெரிந்தாலும் இந்த விஷயத்திலே உங்க இல்லத்தினை சம்பந்தப்படுத்தியிருக்கிறதால நீங்க எனக்கு ஒத்துழைப்பு தரணும். உங்க டிரைவர்களை என்னை அலுவலகத்தில் வந்து பார்க்கச்சொல்லுங்க  என்று விடைபெற்றாள்.

இடியாப்பச் சிக்கலைப் போல மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டு வருகிறதே என்ற வருத்தம் மேலிடத் துவங்கியது துளசிக்கு. செல்போன் அலறியது. மருத்துமனையில் இருந்து டாக்டர் சதாசிவம். பச்சை பட்டனை அழுத்தி காதிற்குக் கொடுத்தாள்.

“சொல்லுங்க ஸார்….?!”

“துளசி எங்கேயிருக்கீங்க ? கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?”

“என்னாச்சு டாக்டர் ? திரிபுரசுந்தரி இல்லத்துக்கு விசாரணைக்கு வந்திருக்கேன். ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க என்னாச்சு ?”

“பாலா…..?!”

“பாலா..பாலாவுக்கு என்ன டாக்டர் ?!”

“எதையும் என்னால நேரில் சொல்ல முடியலை ப்ளீஸ் கம்…நிலைமை ரொம்பவும் கட்டுக்கடங்காம போயிருக்கு ?!” சதாசிவம் போனை வைக்க உச்சபட்ச டென்ஷனோடு ஜிப்ஸியை மருத்துமனை நோக்கி செலுத்தச் சொன்னாள் துளசி.

“என்னால இப்பவரைக்கும் நம்பவே முடியலை. நீங்க என்னைப் பார்க்க வந்திருப்பதை ?!”  அளவான மேக்கப்பில் மேக்ஸியில் இருந்தாள் .மேக்ஸியின் முன்புறத்தினைவிடவும் பின்புறம் மிக ஆழமாக வெட்டப்பட்டு இருந்திருக்க வேண்டும். அடிக்கடி தோளில் இருந்து சரிந்த உடையை சீர்படுத்திக் கொண்டே தன்னைக் காண வந்திருக்கும் தூரிகைநேசனுக்காய் ஆச்சரியப்பட்டாள் சாகித்யா.

“இப்போ எப்படியிருக்கு சாகித்யா உங்களுக்கு ? முதல்நாள் நல்லாயிருந்தீங்க ? சட்டுன்னு ஒரு சின்னவிபத்துன்னு பத்திரிக்கை செய்தியைப் பார்த்ததும் கொஞ்சம் பதட்டமாகிவிட்டது. அதனாலதான் ஒரு நடை பார்த்துட்டு போகலான்னு வந்தேன்.!”

“ஒஹோ…தேங்க்யூ ! ஸோ மச்…மிஸ்டர் தூரிகைநேசன் இப்போ கூட என்னால நம்பவே முடியலை. ஐயம் ரியல்லி எக்ஸைட்டட் .இப்படி விபத்து ஏற்பட்டாத்தான் பார்க்க வருவீங்கன்னா, அடிக்கடி அடிபடலாம் போல இருக்கே  ?!” என்று கண்ணடித்து கவர்ச்சியாய் சிரிக்க, செல்வி பழரசத்தை டம்ளர்களில் நிரப்பி அவர்களிடம் தந்தாள்.

அதை பருகியபடியே, சிரித்தவன் என்னாச்சு உங்களுக்கு ? என்ன விபத்து ?

“பெரிசா விபத்து இல்லை, ஆனா நம்ம கேலரியில் இருந்து வெளியே வந்தப்போ காருக்குள்ளே ஏதோ சின்னசின்ன எறும்புகள் இருந்தது. அதில் ஒன்று என் கைவிரலிடுக்கில் கடித்துவிட்டது ?!”  அவள் விரல்களைப் பிரித்து காண்பித்தாள். இலேசாக கன்றிப் போயிருந்தது.

“அதுக்குப்பிறகு வீட்டுக்கு வந்து டயர்ட்லே இருந்திட்டேன் சட்டுன்னு பார்த்தா முதுகில் ஒரே வலி அப்பறம் செல்விதான் வந்து பார்த்தா கார்லே தட்டிவிட்ட அதே எறும்பு அதை எறும்புன்னு கூட சொல்ல முடியாது. உடல் மெலிந்து தலைமட்டும் பெரிசா என்னவகைன்னு தெரியலை. கடிச்சு சதையைப் பாதி பிய்த்து எடுத்திட்டது. உயிர்போற அளவுக்கு வலி.?!”

“மை காட்…அப்பறம் ?”

“அப்பறம் என்ன ? வலியைக் குறைக்க ஊசி செப்டிக் ஆகாம இருக்க ஊசி அதுயிதுன்னு ரெண்டுநாள் கால்ஷீட் காலி. இன்பேக்ட் நானே ஒருநாள் ரிலாக்ஸ் பண்ணனுன்னு நினைச்சேன் கண்ணாபின்னான்னு டேட்ஸ் கொடுத்தாச்சு என்ன பண்ணலான்னு யோசிச்சப்போது கடவுளா பாத்து இந்த எறும்பை அனுப்பியிருக்காரு போலயிருக்கு.!”

“வெரிகுட்….மதன் உங்களைப் பற்றித்தான் பேசிக்கிட்டே இருந்தார். வெரி போல்ட் கேர்ள், ரொம்ப தைரியம் அவங்க. எல்லாத்தையும் பாஸிட்டிவா திங்க் பண்றவங்கன்னு இப்போ நேரிலேயே பார்க்கிறேன். !” அவனின் பாராட்டு அவளை ஜில்லிப்பாக்கியது.

“மதன் என்னோட கோ ஒர்க்கர் அதைத்தவிர என் மனதில் அவரைப் பற்றி எந்த அபிப்ராயமும் கிடையாது நான் உங்களை நேசன்னு கூப்பிடலாமா ?”

“ஷூயூர்….!”

“தேங்க்யூ…! என்னோட பாப்புலாரிட்டிதான் என் பிரச்சனையே நேசன். எங்கேயோ ஒரு மூலையிலே மாசச் சம்பளத்தை வாங்கிட்டு நிம்மதியா ஆசைப்பட்டதை சாப்பிட்டு சந்தோஷமா இருக்க முடியலை. எங்கேயும் சுதந்திரமா போக முடியாத ஒரு சிறை வாழ்க்கை. பிடிக்கலைன்னாலும் மேல கைபடும்போது அமைதியாத்தான் இருக்கணும். வேற வழியில்லை. பணத்தைத்தாண்டி ஒரு கிரேஸ் இந்த வாழ்க்கையில் முதல்ல இருந்தது. ஆனா இப்போ ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அமைதியான வாழ்க்கைக்கு மனசு ஏங்குது.”

“நேசன் டூ பி பிராங்க் வித் யூ…நான் யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கப் போறேன்.!”

அவன் சிரித்தான். “எல்லாம் நம்ம மனதுதான் காரணம் சாகித்யா. இக்கரைக்கு அக்கறைப் பச்சை, எதிலும் ஆசையில்லாத மனிதர்கள் இல்லை. ஆசையைத் துறந்த புத்தனும் இந்த உலகில் இல்லை. என்னைப் பொறுத்தவரை துறவறத்தின் மேல் கொண்ட ஆசைதான் அவரை சகலத்தையும் உதறித்தள்ள வைத்தது. நம்மோட ஆசை அடுத்தவர்களைக் காயப்படுத்தாம இருந்தா பெட்டர். ஒகே… பதட்டத்தோடு வந்தேன். இப்போ உங்களை நார்மலாப் பாக்கும் போது சந்தோஷமா இருக்கு டேக் ரெஸ்ட், அதிலும் இது உங்களுக்கு எதிர்பாராம கிடைத்திருக்கிற ரெஸ்ட் வேற என்ஜாய்.!”

“நன்றி நேசன் ஏற்கனவே உங்க கேலரியைச் சுற்றிப் பார்க்கணுன்னு எனக்கு ஆசை ! ஆனா பாருங்க யார் கண்ணு பட்டதோ அன்னைக்கு அங்கே வந்து ….சொல்ல மறந்திட்டேன் .உங்க தோட்டம் அந்த நிலவெளிச்சத்திலே ரொம்பவே அழகு. அதைப்பார்க்கிறதுக்காகவாவது நான் இன்னொரு முறை வரணும்.!”

“அவசியம் வாங்க….நாளைக்கு கூட நான் புல்லா கேலரியில் தான் இருப்பேன் . யூ நோ தி பேமஸ் ஸ்போர்ட்ஸ் மேன் ரிச்சர்ட் அவரோட மெழுகு சிலை நாளைக்கு டெலிவரி வாங்களேன்! அவரையும் மீட் பண்ணாமாதிரி இருக்கும்.”

“ஷ்யூர்…! அவசியம் நீங்களே அழைக்கும் போது இந்த வாய்ப்பினைத் தவறவிடுவேனா ?!”  அவள் கண்களில் காதல் வழிந்தது. வெகு கவனமாய் அதை கவனிக்காதபடி விடைபெற்றான் தூரிகைநேசன். தீர்ந்த சதைத் துணுக்களை கிரகித்தபடியே மீண்டும் உணவுக்காய் நூலிழைகளுக்குள் இருந்து புறப்பட்ட அந்த எறும்பு தூரிகைநேசனின் கால் ஷுவின் அடியில் அடைக்கலமானது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்