21வது அத்தியாயம்

கர்ணன் தன் மோவாயினைத் தேய்த்தார். “இதை நீங்க எப்போ பார்த்தீங்க?”

“நானில்லை இன்ஸ்பெக்டர். என் நண்பன் ஒருவன் இங்கே தங்கியிருக்கிறான். அவன்தான் ஈவ்னிங் ஒரு வாக் போகும்போது பார்த்து இருக்கான் போல, நேத்து பிளம்பிங் ஒர்க் நடந்தது. அதிலே எதாவது மிஸ்டேக்கா இல்லை மழையில் ஏதாவது பைப் லீக்காகுதான்னு தெரியலை.”

“என்னவாயிருந்தாலும் கண்டுபிடிச்சிடலாம். இதுக்குப் பின்பக்கம் என்ன பில்டிங் ஒற்றைச் சுவர்மாதிரி இருக்கே.”

“ஆமாம் இந்த இடத்தை அப்பா காலத்திலே வாங்கியது . அப்போ இதை சுற்றியும் குப்பம்தான். மீனவர்கள் அதிகமா இருந்தாங்க , இப்போ யாரோ ஒரு லோக்கல் ஆசாமி பன்றிப் பண்ணை வைச்சிருக்கான்னு கேள்விப்பட்டேன். கேலரி பெரிசுப் பண்ணும் போது இதையும் சேர்த்து கேட்டேன். அந்தாளு கொடுக்கலை அப்போ இங்க இந்த பண்ணையில்லை”

“இஸிட்…. அந்தப்பக்கம் தான் ஏதோ பிரச்சனை போல தெரியுது ” என்ற கர்ணன் அந்த பன்றிப்பண்ணையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சிறு இரும்புக்கிராதியைக் கடந்து நடக்க,

“அய்யா ஆரு வேணுங்க ?” தலையில் குளிருக்கு அடக்கமாக உருமா கட்டியிருந்த அவன் கேட்டான். போலீஸ் உடையினைப் பார்த்ததும் அவனின் நடுக்கம் குரலில் வழிந்தது. ஒரு முப்பது வயதிற்குள்தான் அவனை கணிக்க முடியும், தாடியும் மீசையும் ஏராளமாய் வழிந்து, ஒரு முரட்டுத் தோற்றத்தை தந்தது.

“இங்கே என்ன இருக்கு ?!”

“பன்னிப் பண்ணைங்க. நாலைஞ்சு வருஷமா எங்க ஓனரு நடத்துறாரு. மழையிலே கரண்ட் போச்சு அதனால இத்தினி இருட்டா இருக்கு.”

“இன்வெட்டர் இல்லையா? ”

“என்னதுங்கய்யா….?!”

“சரி ஒரு மெழுகுவர்த்தி இல்லைன்னா டார்ச்லைட் எடுத்துட்டு வா ?! அது என்னன்னு தெரியும் இல்லை.”

“தெரியுங்கய்யா அது… ஓனருகிட்டே ஒருவார்த்தை…”

 “இப்போ கூட்டிட்டுப்போறீயா இல்லை…கர்ணனின் கோப வார்த்தைகளில் அரண்டவனைப் போல வாரிச்சுருட்டியபடி வாங்கய்யா என்று ஓடினான். பின்னாலேயே இரண்டு கான்ஸ்டபிள்கள் வெளிச்சம் பாய்ச்சியபடி வர , மொத்தம் பதினெட்டு அடுக்குகளைக் கொண்ட அந்த பண்ணையின் கடைசி வரை பார்த்தார்கள்.

பன்றிகள் இருளில் இல்லறப்பணியில் ஈடுபட்டு இருக்க, அதை கலைப்பதைப் போல, வெளிச்சம் பாய்ச்சிய அவர்களை ஒரு கொலைபாதப் பார்வைப் பார்த்தது. தீவனங்களும் கழிவுகளும் சேர்ந்து கலவையாய் வீச்சம் ஒன்று முகத்தைக் கீறிப் போனது.

“அய்யா எல்லாம் பார்த்தாச்சுங்களா ? என்றான் பவ்யமாய் அவன் ”

“ம்….” என்று சுவரோமாய் நகர்ந்தவரைப் பார்த்ததும்,  “ அய்யா அது வெறும் கழிவு நீர்த் தொட்டிங்க அந்தப்பக்கம் வீச்சமாய் வீசும் போவேணாம் ” என்று தடுத்தான்.

“இப்போ மட்டும் இங்கேயென்ன சந்தனவாசமாடா வீசுது? ” சுவரையொட்டி மூன்று அடி உயரத்தில் சற்றே பருமனாய் கிடந்த அந்த தொட்டி போன்ற அமைப்பை சந்தேகமாய் பார்த்தார் கர்ணன். டார்ச் அந்தத் தொட்டியின் மீது தன் வெளிச்சக் கால்களுடன் பேட்டரி விளம்பரத்தில் வரும் பாண்டா பொம்மையைப் போல வேகமாக ஓடியது.

அதுவரையில் அங்கே மொய்த்த கொசுக்கள் தாங்கள் பிடிபட்டுவிட்டோம் என்ற பயத்தில் பறக்க, தொட்டியின் இடது பக்கம் சிவப்பு நிறத்தில் ஏதோ திரவம் கசிந்ததன் அடையாளமாய் திட்டுக்கள் இருந்தது. இந்த தொட்டியிலே என்ன இருக்கு என்று லாட்டியைத் தட்டி கேட்டார் ஒரு காக்கி.

“அய்யா அதான் சொன்னேனே இது கழிவு நீர்த்தொட்டின்னு……?”! அதே லாட்டி இப்போது அவனின் முதுகைப் பதம் பார்த்தது.

“பொய் பேசினாயோ ? திற….” மேலோ போடப்பட்டு இருந்த இரும்பு மூடியை பலங்கொண்ட மட்டும் தள்ளினான்.

உள்ளே ….. ஒரு அகலமான கல்மேடை அதில் இரண்டு மூன்று குழாய்கள் சொருகப்பட்டு இருக்க, அதில் ஒரு குழாய் தன் இருப்பிடத்தை விட்டு நகர்ந்து இருந்தது. சுவரோடு ஒட்டியிருந்த அடைப்பினை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த குழாய் என்பதையும் அதில் தானும் தன் எஜமானரும் சேர்ந்து சேகரித்து வைத்தவை எல்லாம் கசிந்துவிட்டிருக்கிறது என்பதைப் புரிந்ததும் அவன் வெலவெலத்தான்.

மொத்தம் ஆறு அடுக்குகளைக் கொண்டது அந்த தொட்டி ஒவ்வொன்றிலும் 8 பிரிவுகள் அதில், திரவமாக பாதி உறைந்தும் உறையாததுமாக ரத்தம். ஒவ்வொருன்றும் சீஸ் பெட்டியைப் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஏதோ மிகப்பெரும் விபரீதம் என்று கர்ணனுக்கு தோன்ற பக்கத்தில் நின்றிருந்த அவனை திரும்பிப்பார்க்க, தன் கையில் இருந்த போனில்  “ அண்ணே போலீசு வந்து பண்ணையை சோதனை போடுது அந்த ரூமுக்குள்ளாறே போயிட்டாங்க , நீ சீக்கிரம் வான்னே ” என்று சப்தத்தோடு பின்னால் துரத்தி வந்த கர்ணனின் கைவிரல்களின் உபயத்தில் குப்புற விழுந்தான் போன் எகிறிப்போய் தன் இணைப்பை துண்டித்துக் கொண்டது.

“அய்யா…..அய்யா ஒனருக்குத்தான் பேசினேங்க”

“யாரு உன் ஓனரு?”

“பேரு வடிவேலுங்க இந்த ஏரியா கவுன்சிலரோட மச்சான்”

“உன் ஓனரு இன்னும் பத்து நிமிஷத்திலே இங்கே வரணும். கான்ஸ்டபில்ஸ் இந்த இடத்தை சீல் பண்ணுங்க”

“எஸ்…ஸார்….” விரைப்பான சல்யூட்டுக்குப் பிறகு, ஜீப்பில் அவன் ஏற்றப்பட்டான். பூட்டு ஒன்று தன் ரகசியத்தை சாவியின் துணையுடன் போர்த்திக் கொள்ள, இதுயேதும் அறியாத பன்றிகள் தங்கள் கலவிகளில் சுதந்திரமாக ஈடுபட ஆரம்பித்தது.

“என்ன பிராப்ளம் இன்ஸ்பெக்டர் எனிதிங் ராங்?”

“ம்….ஆளு இங்கேயில்லை, சோதனைப் போட்டதை வைச்சிப் பார்க்கும் போது ஏதோ தப்பு இருக்கிறாமாதிரிதான் தெரியுது. நீங்க கவலைப்பட வேண்டாம். இனிமேல் நான் பார்த்துக்கறேன். வெல், இப்படியொரு பிரச்சனை இருக்குன்னு தெரிந்ததும் எனக்கென்னன்னு போகாம போலிசுக்கு தகவல் தந்ததற்கு நன்றி ”

“வெல்கம்…” தூரிகை நேசன் தலையசைத்தான்.

“உங்க பிரண்ட் ஒருத்தரைப் பற்றி சொன்னீங்களே அவரு யாரு ? ”

“டாக்டர். பாலா அரசாங்க பொது மருத்துவமனையில் பிணவறை சர்ஜன். எங்க கேலரி தொடங்கி பத்து வருடங்கள் முடியப்போகும் நிலையில் ஒரு சின்ன விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அந்த விழா ஏற்பாடுகளைக் கவனிக்க இங்கே வந்து தங்கியிருக்கிறான்”

“அவர் இப்போது எங்கே ? ”

“ஹி ஜஸ்ட் ஸ்லிப்பிங். தூரிகைநேசனின் வார்த்தைகளின் முடிவில் கர்ணனின் அலைபேசியில் துளசி அழைத்தாள்”

“சொல்லுங்க மேம்….!”

“……………. ”

“அப்படியா ? நான் உடனே உங்க ஸ்டேஷனுக்கு வர்றேன். தேங்யூ மிஸ்டர் நேசன், ஆள் பிடிபட்டுட்டான் தகவல் தெரிந்ததும் நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.” கர்ணன் விடைபெற்றுக் கொள்ள ஆஷா, நேசனிடம் வந்தாள்.

விளையாட்டு வீரர் ஜானின் சிலை பக்காவாக தயாராகிவிட்டது.

“இன்னும் கண்கள் மட்டும் பொறுத்த வேண்டும் அதன் பிறகு நம்ம சொல்யூஷனை மிக்ஸ் பண்ணிட்டா வேலை முடிந்தது. ஒரு சின்ன ஐடியா. நம்ம விழாவின்போது ஜானை இன்வைட் பண்ணுங்க இன்னும் ரீச் நல்லாயிருக்கும்” என்றாள். சரியென தலையசைத்தாலும் தூரிகை நேசனை வேறு ஏதோ யோசனைகள் பீடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள் ஆஷா.

வெளவாலைப் போல தலைகீழாகத் தொங்கிக் கொண்டு இருந்தான் வடிவேலு. கடைவாயிலிருந்து வழிந்த ரத்தம் தரையைத் தொட்டு மீண்டும் ஒரு ஸ்பிரிங்போல மேலெழுந்து எச்சிலுடன் சேர்ந்து கொண்டது. சற்றுமுன்பு உடம்பின் ஒவ்வொரு அங்குலமும் சுகத்தில் திளைந்திருந்தது போய் அணுக்கள் வரை வலித்தது. ஒரு ரவுண்டு முடிந்து லட்டிகள் பிளந்து மற்றொரு ரவுண்டுக்கு தயாராக , டீ சாப்பிட போய் இருப்பவர்கள் வருவதற்குள் அதோ என்னை முறைத்துக் கொண்டே நான் சொல்வதை ரெக்கார்ட் செய்ய காத்திருக்கும் சின்ன டேப்பை பார்த்தான். இதயம் வாய்வழியாக வெளியே வந்துவிடும் போல இருந்தது.

ரணங்களில் தெளிக்கப்பட்ட குளிர்ந்த நீர் இன்னும் எரிச்சலைத் தந்தது. முணகினால் கூட எங்கே அடிப்பார்களோ என்று பயந்த வடிவேலு மீண்டும் வாயிலில் அரவம் கேட்கவும் பயப்பார்வை பார்த்தான்.

“என்ன வடிவேலு இன்னமும் அடி வேணுமா ? இல்லை என்ன நடந்ததுன்னு சொல்லிடறீயா ? இல்லை சொல்லமாட்டேன்னு இப்படியே இடக்கு பண்ணேன்னு வை , கசாப்பு கடையிலே ஆட்டுத்தோலை உரிச்சி பார்த்து இருக்கியா அதே மாதிரி உரிச்சிடுவேன் ” என்று துளசி கர்ஜிக்க, இனிமேல் உயிர்தான் முக்கியம் எவனைக் காப்பாற்றி என்னவாகப் போகிறது என்று

“நான் …..நான்….எல்லாத்தையும் சொல்லிடறேன் மேடம்” என்று தழுதழுத்தான் வடிவேலு

“அது…நல்ல புள்ளைக்கு அழகு….இவனை இறக்கி பக்கத்து ரூம் நாற்காலியில உட்கார வைய்யுங்க ”அதே போல் அமர வைத்தார்கள். சுற்றிக்கொள்ள ஏதோ துணியென்று தரப்பட்டது, “ச்சீ இதுக்கு பன்னி வாடையே பரவாயில்லை” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அவன் முன்பு டீ வைக்கப்பட்டது. ஒரு எறும்பு எந்த தடையும் இன்றி சுதந்திரமாக மேஜைமேல் ஊர்ந்து வந்து தன் சிறு இறக்கையை விரித்து ஒரு அடி பறந்து பின் மீண்டும் மேஜையை வந்தடைந்தது. உன்னை மாதிரிதான் நானும் மாட்டிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி, கண்ணாடித் தம்பளரின் மேல் வழிந்த இரண்டு சர்க்கரைத் துளிகளை திருட்டுத்தனமாய் ருசி பார்த்து சட்டென்று சூடு பட்டு கீழே விழுந்தது. மறுபடியும் சளைக்காமல் அதன் இனிப்பை நோக்கி ஊர்ந்தது.

டீயை ருசிக்கலாமா வேண்டாமா? என்ற யோசனையில் இருந்தான் வடிவேலு, பாதி இராத்திரியில் அவன் வாழ்வு இப்படி கந்தர்கோலமாக ஆகியிருக்க வேண்டாம். யார் அவனை இங்கே கொண்டு வந்து இருப்பார்கள். வள்ளியின் வீட்டில் அவளோடு சல்லாபித்துக் கொண்டுதானே இருந்தான் போதையின் மயக்கத்தில் சுரீர் என்று அடித்த தண்ணீரின் பாய்ச்சல் ஏற்படுத்திய வலி இப்போது ஒருமுறை உடலைச் சிலிர்க்க வைத்தது.

‘என் பணம்….?! அய்யோ இன்றைக்கு லோடு அனுப்ப வேண்டுமே அந்த முட்டாள் பையன் என்ன செய்யறான்னு தெரியலை?’ நினைவு தெரிந்த நாளில் இருந்து சின்ன சின்ன அடிதடி பஞ்சாயத்து என்று எத்தனையோ முறை போலீஸ்ஸ்டேஷனுக்கு வந்தாகிவிட்டது. கொஞ்சம் சில்லறை விட்டு எறிந்து காலரைத் தூக்கிவிட்டு போவதுதான் அவன் வழக்கம். ஆனால், மூக்கு சில்லு முதற்கொண்டு உடைந்து அய்யோ என்று அலறியது இதுதான் முதல்முறை. வடிவேலு தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டிருக்க, பல பூட்ஸ்களின் சப்தம் அவனைச் சமீபித்தது. உடல் தன்னையும் அறியாமல் ஒரு புயலை தோற்றுவித்தது.

கர்ணனை வரவேற்றாள் துளசி “குட் ஜாப் துளசி அவனை எப்படி பிடிச்சீங்க?! விசாரிச்சிட்டீங்களா?”

“கார்மேகத்தோட வழக்கை விசாரிக்கும் போது அவனோட தொடர்பில் இருந்த வள்ளிங்கிறவங்க மூலமா, கார்மேகம் இறந்துபோன முதல்நாள் வள்ளியோட இருக்கும் போது ஒரு போன் வந்ததுன்னும் அதனால அவன் உடனே கிளம்பிப் போனான்னு உங்ககிட்டே சொல்லியிருந்தேன் இல்லையா? அந்த போனைப் பண்ணியது இவன்தான். பணத்திற்காக அப்பப்போ லோடு அடிப்பாங்களாம். அப்படி அன்னைக்கு நைட் லோடு முடிஞ்சி ரொம்ப சீக்கிரமா கிளம்பின கார்மேகத்திற்கு வழியிலே விபத்து நடந்திருக்கலான்னு சொல்றான். பட் ஆள் மேல எனக்கு டவுட் இருக்கு கர்ணன். எதையோ மறைக்கிறான்”

“ரொம்ப பெரிய விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கு துளசி, தூரிகைம்நேசனோட ஆர்ட் கேலரி உங்களுக்குத் தெரியுமா? என்னோட ஸ்டேஷன் லிமிட்க்குள்ளேதான் வருது. அங்கே ஒரு சின்ன பிராப்ளம். மழையிலே ஏதோ பைப் லீக்காகி தண்ணியோட இரத்தமும் கலந்து வந்திருக்கு பங்கஷன் அரேஜ்மெண்ட்டுக்காக வந்த டாக்டர் ஒருத்தர் அதைப் பார்த்து ஷாக்காகி இருக்கார். நான் விசாரணைக்குப் போனப்போ நேசனோட கேலரிக்கு பின்பக்கம் ஒரு ஒற்றைச் சுவர் இருக்கு அங்கே பன்னிப்பண்ணை ஒன்றும் இருக்கிறது. அதோட சொந்தக்காரன்தான் இப்போ அரெஸ்ட் பண்ணி வைச்சிக்கிறே வடிவேலு. பன்றிகளோட ரத்தத்தை தனித்தனியா பாடம் பண்ணி ஒரு அண்டர் வாட்டர் டேங்க் செட் பண்ணிவைச்சிருக்கான். அதிலிருந்த சில ஸ்டிக்கர்கள் மேபி அதை வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பன்றாமாதிரி தெரிந்தது. அவனை விசாரிக்கிற முறையில் விசாரிச்சா உண்மை தன்னால வெளியே வந்துடும்”

“நேசனோட கேலரியில் இருப்பது உங்க நண்பர் பாலாதானே, அதாவது கார்மேகத்தோட பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ண டாக்டர்”

“ஆமாம். பாலாவை நீங்க அங்கே பார்த்தீங்களா?”

“இல்லை நான் நேசனைத்தான் பார்த்தேன் அவங்க அசிஸ்டெண்ட் கூட இருந்தாங்க. டாக்டர் பாலா அங்கே என் கண்களில் படவேயில்லை” பேசியபடியே வடிவேலு இருந்த விசாரணை அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
  2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
  3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
  4. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
  5. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
  6. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
  7. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
  8. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
  9. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
  10. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
  11. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
  12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
  13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
  14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
  15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
  16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
  17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
  18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
  19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
  20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
  21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
  22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
  23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்