அத்தியாயம் – 5

நேசன் ஆர்ட் கேலரி மதியம் பதினோரு மணி நேர சுறுசுறுப்பில் இருந்தது. தன் கேபினில் கணிப்பொறியின் முன் அமர்ந்திருந்த ஆஷாவின் கைபேசி சிணுங்க, நேசனின் குரல் ,ஒட்டவைத்த புன்னகையை முகத்திற்குக் கொடுத்தவள் “யெஸ் சார்” என்றாள்.

“எல்லாம் தயாரா இருக்கு கெஸ்ட் வந்து ஓய்வெடுத்துவிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் கேலரியை பார்வையிட வந்திடுவாங்க. நீங்க ஒரு டென் மினிட்ஸ்லே இங்கேயிருந்தா பர்பெக்டா இருக்கும்.” கொஞ்சும் ஆங்கிலத்தில் பேசிவிட்டு போனை வைத்தவள்.

கணிப்பொறியில் உள்ள செய்திகளை பிரிண்டருக்கு அனுப்பினாள். என்ன கோபமா விநாடிக்குள் அக்காகிதத்தை தன் உடலில் இருந்து வெளியே துப்பியது பிரிண்டரின் மேற்புறம். உமிழ்ந்த அந்த காகிதக் கற்றைகளை கண்ணாடியாய் உடலைக் காட்டிக்கொண்டு இருந்த போல்டரில் பதுக்கினாள். திமிறிய இளம்பெண்ணின் இளமையைப் போல பிதுங்கி வழிந்த காகிதங்கள் ஒற்றை நாடாவினால் கட்டப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்டது.

“மேடம் அவங்க எல்லாம் வந்தாச்சு… வெல்கம் டிரிங் கொடுத்து உட்கார வைச்சிருக்கேன் என்று சொன்ன தலைமை சிற்பி அகிலனிடம் தலையசைத்துவிட்டு மீண்டும் ஒருமுறை காகிதக்கற்றைகளை சரிபார்த்துவிட்டு, அறையொட்டி இருந்த கதவுக்குள் சென்று கலையாத முகப்பூச்சை மீண்டும் சீராக்கினாள் .பைலுடன் வெளியே வந்த ஆஷா இருபதுகளின் முடிவிற்கு வெகு சில வருடங்களில் வரப்போகிறவள். பெயருக்கு ஏற்றாற்போல கண்களில் கவர்ச்சி வழிந்தோடும் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தூரிகை நேசனின் வெளியுல தொடர்புகள் எல்லாம் இவளுடையதுதான்.

அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பது ஆஷாவிற்குப் பொருந்தும். கால்பந்தாட்டத்தில் ஓய்வு பெற்ற புகழ்பெற்ற வீரர் ஒருவர் தன்னுடைய 45 வயதில் தனக்கென ஒரு மெழுகுச்சிலை ஆரம்பிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு இவர்களை அணுகியிருந்தார். சென்னையில் அடுத்த ஈசியாரில் இயங்கிக்கொண்டு இருக்கும் நேசன் கேலரியை இணையத்தின் துணைகொண்டு அதன் நேர்த்தியை உணர்ந்து பணவிவகாரங்கள் நேரம் என அனைத்தும் இணையத்திலேயே முடிக்கப்பட்டு விட்டது. இப்போது அவர்கள்தான் கேலரியை பார்வையிட வந்திருக்கிறார்கள் கூடவே இரு உதவியாளர்களும்.

வெல்கம் டிரிங்கான இளநீரின் சுவை உள்ளேயிறங்கிட கண்ணுக்கு குளிர்ச்சியாய் “ஆஷா அவர்கள் முன்னால் சார் இப்போ வந்திடுவார் அதுக்குள்ளே நாம கேலரியைச் சுற்றிப் பார்க்கலாமா?!”

“ஷ்யூர்” என்று அவர்கள் எழுந்தார்கள்.

கலைக்கூடம் என்ற எழுத்துக்களின் கீழே இரண்டு கைகள் வணக்கத்துடன் வரவேற்றது அந்த நான்கு அடி உயர ஸ்தூபியின் மேல் இருந்த கைகளில் அத்தனை உயிர்ப்பு இதுதான் சார் இந்த கேலரி ஆரம்பித்தப்போ செய்த முதல் மெழுகுசிலை

இரும்பு கம்பிகளில் பிணைத்து வைக்கப்பட்டு குழைக்கப்பட்ட களிமண் உருவகங்கள், சின்ன ப்ரஷ் வைத்து முற்றிலும் தயாரான ஒரு பெண் மெழுகு சிற்பத்தின் விரல்களுக்கு நெயில் ஆர்ட் செய்து கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். இந்த சிலை பிரபல மாடலிங் அழகியோடது அவங்களுக்கு நெயில் ஆர்ட்ன்னா ரொம்பவும் இஷ்டம் அதற்காகவே ஸ்பெஷல் கேர் எடுக்காறாங்க டெக்னீஷியன் கிட்டத்தட்ட 95சதவிகிதம் முடிவடைந்து விட்டது இன்னமும் ஹேர்கலரிங் மட்டும் பாக்கி.

அவர்களின் கூட வந்தவன் ஒருவன் அந்த கூந்தலின் கற்றைகளைத் தொட்டுப்பார்த்தான். “இது… ரியல்லா?”

“எஸ்…. கூடுமானவரையில் உண்மையான இதழ்கற்றைகள்தான் பயன்படுத்தப்படும், அவர்களின் கூந்தலின் வண்ணம் எந்த நிறத்தில் இருக்கிறதோ அதே அளவிற்கு, கூந்தல் மட்டுமல்ல கண்களின் நிறம் கூட அப்பத்தானே சிலையில் ஒரு உயிர்ப்பு தெரியும்.”

அடுத்த டேபிளில் ஒரு களிமண் சிலைக்கு முக அளவினை தன் பாகைமாணியின் மூலம் அளவுகளைச் சரிபார்த்துக் கொண்டு இருந்தார் இன்னொரு ஊழியர்.

“இதென்ன முகம் முழுக்க பிளாக் மார்க்ஸ். மனித உடலில் எல்லாத்தோல்களும் ஒரே மாதிரியிருப்பதில்லையே இந்த முகத்துக்கு உரியவரின் முகத்தில் தசைதிசுக்கள் எப்படியிருக்கிறதோ அப்படியே வடிவமைக்க சிலை செய்ய துவங்கும் போதே அவரின் முகத்தில் உள்ள மார்க்ஸ் எல்லாம் கவனத்தில் கொண்டு வரப்படும் புன்னகையில் ஒளிர்விடும் பற்களின் இடைவெளி கூட கவனமாய்.”

“ஒரே சிற்பத்தின் உடல் தயாராகியதைப் பார்த்தீர்கள் முகம் தயாரானதைப் பார்த்தீர்கள் இந்த கம்பிக்கட்டில் சிற்பத்தின் தலைப்பாகத்தில் சிதை என்னப்படும் சுண்ணாம்புக்கலவை பூசப்படும் அக்கலவை நமது கேலரியிலேயே கிளிஞ்சல்களால் தயாரிக்கப்படுகிறது. சிலமணிநேரத்திற்குப்பிறகு பூசப்பட்ட கலவை இறுக நீரில் ஊறவைத்து இதோ இந்த மரபென்சில் உள்ள ஹோல்சில் தலைகீழாக கவிழ்த்து வைத்து காய்ச்சிய மெழுகோடு சில கலவைகளையும் கலந்து புனலில் ஊற்றி அது இறுகியதும் மேலோட்டமாக இருக்கும் நீர் வெளியேற்றப்பட்டு முகவடிவில் வரும் அதற்கு பிறகு எல்லாமே ஓவியர்களின் கைகளில்…”

“நம்மகிட்டே மொத்தம் அறுபதுக்கும் மேற்பட்ட ஓவியர்கள் உண்டு. உடலின் நிறம் தோலின் மேல் உள்ள புள்ளிகள் இரத்தத்திட்டுக்கள் என எல்லாமே அந்த ஓவியத்தின் மூலம்தான்.”

“இதென்ன கோலிக்குண்டுகளைப் போல”

“இது கண்கள் ஒவ்வொரு கண்களும் ஒவ்வொரு நிறம் சிலருக்கு கண்களில் கருப்பு முழியின் பக்கத்தில் செவ்வரியான இழைகள் இளஞ்சிவப்பாக இருக்கும் இங்கே பாரு ஐபாலில் சப்ஜெக்ட்டின் புகைப்படத்தில் என்ன நிறத்தில் கண்கள் இருக்கிறதோ அதையே வண்ணங்களில் குழைத்து தயாரித்து சிறு நூலிழைகள் மூலம் பெயின்ட் செய்து ஒட்டிவிடுவோம் இதோ முழுமையாக தயாரான சிலை இதன் கண்அமைப்புகளைப் பாருங்கள் அத்தனை உயிரோட்டமாய் இருக்கும்.”

அவள் சொன்னது உண்மைதான் வெள்ளை படலத்தில் கருந்திராட்சையை ஒட்டவைத்ததைப் போல அதைச் சுற்றிலும் இளஞ்சிவப்பு திசுக்களின் வரிவடிவம் அக்கண்கள் நீரில் கலங்கி மிதப்பதைப் போல சொல்லியூஷனில் மிதக்கும் அழகு கொஞ்சியது. வெரி கிளாஸ் வந்திருந்த மூன்றுபேர் முகங்களிலும் திருப்தி. அதேநேரம் உள்ளே நுழைந்தான் தூரிகைநேசன் எதிர்ப்பட்ட எல்லாரின் புன்னகையையும் வாங்கி திருப்பித் தந்தபடியே, “வெல்கம் வெல்கம் என்ன கேலரி எல்லாம் சுற்றிப் பார்த்தீங்களா எப்படி உங்களுக்குப் பிடிச்சிருக்கா?!”

“ரொம்ப திருப்தி மிஸ்டர் நேசன். மேடம் அழகா எக்ஸ்பிளைன் பண்ணாங்க ஒவ்வொரு சிலைக்கும் நீங்க எடுத்துக்கிற கேர்தான் அதற்கு உயிர்ப்பு கொடுக்குது. எக்ஸ்சலெண்ட் என்னோட சிலையை எப்போ ஆரம்பிக்கப்போறீங்க?!”

“கூடிய விரைவிலேயே… 80நாட்களில் உங்கள் பிறந்தாநாள் வரப்போகிறதே அன்றைக்கு உங்கள் வீட்டு வரவேற்பரையினை நீங்கள் மெழுகுசிலையாய் இருந்து விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்துவீர்கள் என்றான் சிரித்தபடியே!”

90 சதவிகித்தொகை பரிமாறப்பட்டது. அந்த ஆகிருதியான விளையாட்டு வீரனின் முகமும் கண்களும், உடலமைப்பும் அங்குலம் அங்குலமாக அளவெடுக்கப்பட்டன.

தூரிகைநேசன் ஆஷாவுடன் கணக்கு விவரங்களைப் பார்வையிட்டான்.

“நேற்று லோடு வந்ததே எல்லாம் கொடவுனில் இறக்கிவைக்கப்பட்டு இருக்கா ஆஷா.”

“எல்லாம் செக்பண்ணிட்டேன் கண்டெய்னரில் இருந்து நம்ம காசியும் துரையும்தான் இறக்கிவைச்சிருக்காங்க பர்பெக்டா இருக்கு இருக்கிற ஸ்டாக் பத்து சிற்பத்திற்கு வரும் ரீ ஆர்டர் பண்ணிடணும் ஸார். ஆஸ்திரேலியா விளையாட்டுவீரர் மிஸ்டர். ரேவின் சிலைக்கு மெழுகு அளவு சொல்லிட்டு மெட்டீரியல்ஸ் எடுக்க துரைகிட்டே சொல்லிடுங்க ஸார். பிகாஸ் இன்னும் இரண்டரை மாதங்கள் சட்டுன்னு ஓடிடும். எனக்குத் தெரிந்து நாலு நாள்ல நாம அவர் சிலை சம்பந்தப்பட்ட வேலைகளை ஆரம்பிக்கணும். க்ளே தயாரா இருக்கு சில கெமிக்கல்ஸ் கலவை சேர்க்கணும் அய்யா வரணுன்னு நேத்து பார்க்கும்போது சொன்னாங்க.”

“நான் லன்ஞ் முடிச்சிட்டு கொடவுனுக்குத்தான் போகிறேன்.” மீண்டும் ஒருமுறை கேலரியின் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு ஆஷாவிற்கு சில கட்டளைப் பிறப்பித்துவிட்டு காரை நோக்கிப் போனவன் டிரைவர் வெகு ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்த செய்தித்தாளை பார்க்க,

டிரைவர் மணியோ வெகு அதிர்ச்சியுடன் “சார் இது யாரு தெரியுதுங்களா? அன்னைக்கு டிவி நிகழ்ச்சிக்கு போயிட்டு வரும்போது நம்ம கார் வழியே நின்னுதுன்னு ஒரு மெக்கானிக்கை வரவழைச்சேனே அவன்தான். விபத்தாம் அந்த இடத்திலேயே ஆள் அவுட்டாம்.” எனவும் அந்த செய்தியைப் பார்வையிட்டவனின் உதடுகளில் இருந்து ஒரு உச் பிறந்தது. செய்திதாளில் பார்வையிட்டபடியே பயணம் தொடங்கியது.

சாலை விபத்தில் வாலிபர் மரணம். என்ற தலைப்பில் சாக்பீஸ் கோடுகளுக்கு நடுவில் அவன் இதர வரிகளைத்தாண்டி அரசு பொதுமருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு இருக்கிறது என்ற செய்தி அறைந்தது.

அதே நேரம் தன் முன்னால் வெற்றுடம்பில் கிடத்தப்பட்டு இருந்த அவனை மன்னிக்கவும் அதை எங்கோ பார்த்த மாதிரியுணர்வு. இரவில் இவன் முகம் சரியாகத் தெரியவில்லை, எதிர்பார்த்தது போல பாலாவின் முகத்தில் ஒரு மர்மப்புன்னகையோடு கத்தியை எடுத்து நடு மார்பில் கோடு ஒன்றைப் போட்டான். பிசிறில்லாமல் அது தன் வேலையைச் செய்ததில் நேரம் கரைந்து போனது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 14. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 15. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 19. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்