அத்தியாயம் -10

வாகனத்தின் பேரிரைச்சலைப் போலவே துளசியின் மனமும் பயணித்தது. தொலைக்காட்சித் தொடர்களின் டைட்டில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதை ரசித்தபடியே வாயிற்படியில் அமர்ந்து கொண்டு வாசலின் சாக்கடையும் பொருட்படுத்தாமல் துணி வெளுத்துக் கொண்டு இருந்தாள் . அந்த பெண்மணி போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் ஒரு விநாடி திகைத்து மீண்டும் தன் வேலையில் மூழ்கினாள். இது அன்றாடம்தான் நடக்கும் நிகழ்வு என்பதைப் போல அப்பெண்மணியின் நடவடிக்கை இருந்தது. பக்கத்து தெருமுனையில் அம்மன் சிலையொன்று லைட்செட்டிங்கில் பளபளவென்று அருள் பாலித்துக் கொண்டு இருந்தாள்.

அச்சிலையின் முன்பு வட்ட வட்ட பாத்திரங்களில் விதவிதமான் அன்ன வகைகள், அந்த உணவுகளை சூடாக தன் வயிற்றுக்குள் வாங்கிக்கொள்ள ஆர்வமாய் மக்களின் கரங்களில் நிரம்பியிருந்த தொன்னைகளோடு ஒழுங்கற்ற ஒரு வரிசைமுறையில் முண்டியடித்துக் கொண்டு இருந்தவர்களை அல்லாருக்கும் இருக்கு நம்ம கவுன்சிலர் அய்யா கொடுங்கிறாங்க என்று கெச்சலான ஒரு ஆசாமி சொல்லியபடியே கரண்டியில் விநியோகித்தான்.

சப்புக்கொட்டி ஆங்காங்கே அமர்ந்து உண்டு பின் நினைக்கும் இடமெல்லாம் காலி குவளைகள் நிரம்பிக் கிடந்தது. பிள்ளைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியபடி வண்டியின் வேகத்திற்கு சவால்விட, பின்பக்கம் சில பிள்ளைகள் வண்டியை விரட்டியபடி வந்தார்கள். இன்னும் எவ்வளோ தூரம் போகணும் ?

இதோ பீச்சாங்கைப் பக்கம் திரும்பினா வள்ளியக்கா வீடுதான். வள்ளியக்கா வீடுதான் இந்தக் குப்பத்திலே பெரிசு, எல்லாருக்கும் வட்டிக்கு விடும் மேடம் பார்க்க சாந்தமாத்தான் இருக்கும் பணம்கேட்கும் போது பஜாரிதான். ஆனா நான் இப்படியெல்லாம் சொன்னேன்னு சொல்லிடாதீங்க ? அப்பறம் எங்கம்மாகிட்டே சண்டைக்கு நிக்கும்.

ம்….?! வரிசையாய் உணவுக்கடைகள் லேஸ், குர்குரே என்று சிப்ஸ் வகையறாக்கள் முளைத்திருக்க, டீக்கடையின் வாசலில் ஒரு கையில் டீயும் மறுகையில் வடையில் எண்ணெயை பிழிந்து கொண்டிருந்தவர்கள் ஆர்வமாய் ஜீப்பைப் பார்த்தார். ஒரே தெருவில் துரித உணவகங்கள் அதிகம் முளைத்திருந்தன. சிக்கனும் மீனும், காய்கறிகளோடு அரைவேக்காட்டு அரிசியும் வறுபடும் மணம் நாசியில் இறங்கியது. வீட்டின் முன்புறம் எங்கும் வயிறு நிரம்பிய டிரம்களும், குடங்களும் வணக்கம் சொல்லியது.

மேடம் அதோ அந்த பச்கைகலர் பெயிண்ட் அடித்த வீடுதான் வள்ளியக்காவுது ?! நான் உள்றார வர்லீங்க என்று தயங்கினான். பையன் சொன்னதைப் போல அந்த பகுதியிலேயே சற்றே பெரியவீடு அது. பச்சை நிறத்தில் குளித்திருந்தது. நெரிசலான பகுதியில் அழகான மாடிவீடு குட்டி கேட்டைக் கடந்து உள்ளே பிரவேசித்தாள் துளசி.அங்கே என்ன வேடிக்கை வேலையைப் பாரு என்பதைப் போல பிரியாணிப் பாத்திரத்தின் தலையில் நங்கென்று ஒரு அடி விழுந்தது கரண்டியினால்…. எதிர்புற பிரியாணிக்கடையில்.

அழைப்பொலியைக் கடந்து யாருங்க வேணும் சட்டையைத் துறந்து வெற்றுடம்பாய் கடைவாய் பற்களை துழாவியபடியே கேட்டு, துளசியின் உடையினைப் பார்த்ததும் மிரண்டபடி சட்டென்று ஒரு அட்டன்ஸ்க்குப் போய் சொல்லுங்க மேடம்

இது வள்ளியோட வீடா ?

ஆமாங்க உள்ளேதான் இருக்குது. யேபுள்ளே வள்ளி சீக்கிரம் வெளியே வா… உள்நோக்கி குரல் கொடுத்தபடியே ஓடினான். ஐந்து நிமிடத்தின் கடைசி முடிவில் வெளியே வந்தாள் வள்ளியென்கிற வள்ளியக்கா பவ்யமாய் வணக்கம் வைத்தாள் துளசியிடம்.

நீதான் வள்ளியா ? மெல்லிய நைலான் சேலை அவளின் உடலை மறைத்து இருந்தது. நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு சற்றே தள்ளி அவளின் அவசர அலங்காரத்தைப் பறை சாற்றியது. உடலில் ஒரு உதறல் தெரிய வள்ளி மெக்கானிக் கார்மேகத்தை உனக்கு எத்தனை நாளா தெரியும் எப்படி சம்பந்தம் உங்க இரண்டுபேருக்கும்.

அது … வந்து …?!

உனக்கும் கார்மேகத்துக்கும் என்னமாதிரியான உறவு, அவன் இறந்துபோன அன்னைக்கு ராத்திரி நீதான் அவன் கூட ஷெட்லே இருந்திருக்க ? உண்மையைச் சொல்லு கார்மேகத்துக்கு அன்னைக்கு ராத்திரி என்னாச்சு அவனை யாரு கொன்னது ?

அய்யோ மேடம் நான் அன்னைக்கு ராத்திரி கார்மேகத்தோடு இருந்தது உண்மைதான் ஆனா அதிக நேரம் இல்லை அரைமணிக்குள்ளே அவருக்கு ஒரு போன் வந்தது. அதனால என்னைத் திருப்பி அனுப்பிட்டாரு. அவரை நான் கொலை செய்யலை ?

வள்ளி நீ யாரு ? என்ன தொழில் செய்யறேன்னு எல்லாம் எனக்குத் தெரியும் உண்மையை மறைச்சா அதுக்கு தக்க தண்டனையும் உனக்கு கிடைக்கும். கார்மேகம் இறந்த அன்னைக்கு நீதான் அவன் கூட இருந்ததற்கு என்கிட்டே சாட்சியிருக்கு. இங்கேயே சொல்றீயா ? இல்லை போலீஸ்ஸ்டேஷன் போய் விசாரிக்கிற விதத்திலே விசாரிக்கவா ?

மேடம் நான் பொய் சொல்லலைங்க நான் இந்த குப்பத்திலே கொஞ்சம் வட்டிக்கு காசு கொடுத்து வாங்கிற பழக்கம் உண்டு. அப்படிக் காசு வாங்க வந்தப்பத்தான் எனக்கு அவன் கூட பழக்கம் ஏற்பட்டது. குடும்பம் குட்டின்னு யாருமில்லை

நான் சொன்னது உண்மை கார்மேகத்தை எனக்கு மூணு நாலு வருஷமாத் தெரியும். எப்பவாவது அவனுக்கு வேணுங்கிறபோது என்னைக் கூப்பிடுவான் இராத்திரிக்கு மட்டும். வேற எந்த பழக்கமும் எங்களுக்கு கிடையாது அதே மாதிரிதான் அன்னைக்கும் கூப்பிட்டான். நான் எந்த தப்பும் பண்ணலை. அன்னைக்கு ராத்திரி கூட வரச்சொல்லிச்சின்னு கோழிக்குழம்பு எடுத்துட்டுப் போனேன் ஆனா சாப்பிடக்கூட இல்லை ஒரு போன் வந்ததுன்னு போயிட்டான்

யார் போன் பண்ணது ?

அது எனக்குத் தெரியாது மேடம் ? சாப்பிடலைன்னு நான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன். ஏற்கனவே நிறைய கடன் இதுலே வர்ற வருமானத்தை விடச்சொல்றியான்னு கேட்டான். கோவத்துலே நான் கிளம்பிட்டேன். அதுதான் நடந்தது வேற எதுவும் எனக்குத் தெரியாது.

நிச்சயமா தெரியாதா ?

சத்தியமா தெரியாதும்மா ? அன்னைக்கு ராத்திரி ஒரு அரைமணி நேரம்தான் நான் கார்மேகத்துக்கூட இருந்தது. அதுக்குப்பிறகு என் வீட்டுக்கு வந்திட்டேன். பக்கத்து வீட்டுலே ஒரு துஷ்டி நடந்துப்போச்சு குப்பத்து ஜனங்க எல்லாரும் அதுக்குச் சாட்சி. நீங்க வேணுன்னா விசாரிச்சுப் பாருங்கம்மா மறுநாள் நான் கார்மேகத்துக்கு போன் பண்ணினேன் ஆனா போன் போகலை. அதுக்குப்பிறகு செத்துட்டாருன்னு தகவல் வந்தது.

சரி உனக்குத் தெரிந்த விஷயத்தை ஏன் போலீஸ்லே சொல்லலை.

மேடம்….நான் செய்யற தொழில்தான் அதுக்கு காரணம்

சரி நீ இருக்கும்போது ஒரு போன் வந்ததுன்னு கார்மேகம் போனதா சொன்னியே அது என்ன போன் யாருகிட்டேயிருந்து வந்தது

யாருகிட்ட இருந்து வந்ததுன்னு தெரியாது மேடம் ஆனா இதோ நான் வந்திடறேன் பா…அட எம்மேல நம்பிக்கையில்லை உனக்குப்போய் நேரம் காலம் பார்ப்பேனான்னு சொன்னான். ஆசையாய் சமைச்சதைச் சாப்பிடலைங்கிற கோவத்திலே நாலு வார்த்தை திட்டிட்டு நான் வந்திட்டேன் அப்பறம் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது மேடம். இறந்துபோன கார்மேகத்தோடு பாடியை பார்க்கலான்னு நான் ஆஸ்பத்திரிக்கு வந்தேன் ஆனா யாரோ கூட்டிட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க, என்ன செய்றதுன்னு தெரியாம வீட்டுக்கே வந்திட்டேன் மேடம்.

ஆஸ்பிட்டல்ல நீ யார்கிட்டே கேட்டே ?

அது…யாரோ ஒரு டாக்டர் மேடம். பேரு தெரியலை.

இப்போ நீ சொன்னதையெல்லாம் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக்கொடு எனக்குத் தெரியாம எங்கேயும் வெளியே போகக்கூடாது. இப்போவும் உன்மேல எனக்கு சந்தேகம் இருக்கு வள்ளி இந்த கேஸ் முடியற வரைக்கும் நீ என் கன்ட்ரோல்லதான் இருக்கணும். சொல்லிய துளசி ஜீப்பை நோக்கி நகர்ந்தாள். வள்ளியை விசாரித்ததில் அவள் சொல்வது உண்மை என்றே பட்டது. இருந்தாலும் அவள் மேல் ஒரு கண் வைப்பது என்ற முடிவோடு கார்மேகத்தை அடக்கம் செய்ய கொண்டு போன வாகனம் பற்றியும் அது யார் என்பதைப்பற்றியும் தெரிந்து கொண்டால், இந்த கேஸில் ஒரு வெளிச்சம் கிடைக்கும் நேராக மருத்துவமனைக்கு போங்க என்று சொல்லிவிட்டு வண்டியில் அவள் ஏறி அமர வள்ளி அடித்துப்பிடித்துக்கொண்டு வெளியே வந்தாள்.

மேடம் அன்னைக்கு கார்மேகத்தோடு பேசில் ஒரு பேர் அடிபட்டது அது டாக்டர் பாலாவான்னு ? கேட்டான் ஆனால் எதிர்பக்கம் என்ன பதில் சொல்லுச்சின்னு தெரியலை என்ற வள்ளியின் பதில் துளசிக்குள் ஆணியடித்தாற் போல நின்றது.

சாகித்யாவின் சிரிப்பு அந்த தோட்டத்து மலர்களின் மலர்ச்சிக்குப் போட்டியாக இருந்தது. எந்த லாபியில் அமர்ந்து தன் மனங்கவர்ந்த நேசனுடன் பேசவேண்டும் என்று ஆஷா ஆசைப்பட்டாளோ அதையே இப்போது சாகித்யா செய்து கொண்டு இருந்தாள் செய்வதறியாது அவர்களை வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

இவங்க என் பி.ஏ. ஆஷா இந்த கேலரி மொத்தத்தையும் பார்த்துக்கிறது ஆர்டர் பிளேஸ் பண்றது எல்லாமே அவங்க கையில்தான் என்னோட முழுபாரத்தையும் சுமக்கிற ஒரு ஜீவன்.

உங்களையும் சேர்த்து என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ஆஷா. பழரசங்கள் நிரம்பிய கோப்பை ஒயிலாக எடுத்து உதட்டின் அருகில் கொண்டு சென்றவள் ஒரு ரெடிமேட் புன்னகையை இவளை நோக்கி வீசிவிட்டு என்னோட மெழுகு பொம்மையை நீங்கதான் செய்யணுன்னு எனக்கு ஒரு விருப்பம். நான் உங்களுக்கு முழு ஒத்துழைப்புத் தர தயாராக இருக்கிறேன் என்று அவன் கைகளைப் பற்றி இந்த விரல்களுக்கு என்ன செய்தாலும் தகும் என்று அவன் புறங்கையில் முத்தமிட்டாள். ஆஷாவின் இதயம் சுக்கு நூறாகிப் போக சட்டென்று கையை இழுத்துக் கொண்டான் தூரிகைநேசன்.

டோண்ட் மிஸ்டேக் மி சாகித்யா எனக்கு இருக்கும் நிறைய வேலைகளில் புதிதாக ஒரு புரோஜெக்ட் ஒப்புக்கொள்ள இயலாது. இருந்தாலும் மரியாதை நிமித்தம் நான் சந்திக்க ஒப்புக்கொண்டேன். ரொம்பவும் சந்தோஷம் என்னோட வழமையை நான் யாருக்காகவும் மாற்றிக் கொள்வதில்லை சில நேரங்கள் எனக்கே எனக்கென நான் உருவாக்கிக் கொள்கிறேன் அதில் நுழைய என் நிழலைக் கூட நான் அனுமதிப்பதில்லை. அப்படி எங்களிடம் நீங்கள் உங்கள் சிலையை செய்ய விரும்பினால் கைதேர்ந்த நிபுணர்கள் சிற்பிகள் என எல்லாரையும் ஆஷா உங்களுக்கு அறிமுகப்படுத்துவாள்.

உங்களுக்கு எங்களின் பணிகள் திருப்தி ஏற்படுத்தும் வகையில் இருப்பின் நாம் தொடரலாம் இத்தனை பிஸி ஷெட்யூலில் நீங்க இங்கே வந்து நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி.

வெல் கிட்டத்தட்ட முடியாது கிளம்பு என்பதை நாசூக்காக சொல்கிறீர்கள் பரவாயில்லை என்னைப் பார்த்து மயங்கி வழியும் ஆட்களுக்கு மத்தியில் நீங்க இப்படி பேசறதுகூட உங்க மேல ஈர்ப்பினை அதிகமாக்கியிருக்கு. எனக்கு பிரச்சனையில்லை. உங்க பிராண்ட் அதுபோதும். நீங்க ஒருமுறை என் வீட்டுக்கு வரணும் மிஸ்டர். நேசன். இப்போ நான் கிளம்பறேன் காலையிலே எர்லியா சூட்டிங் இருக்கு அவள் சற்றே விழுந்த முகத்துடன் ஆஷாவிடம் விடைபெறாமலேயே கிளம்பிச்சென்றாள். சாகித்யாவின் வெம்மை சீர் செய்யும் குளுமை அந்த காருக்கு இல்லாமல் வெட்கி நின்றது.

நேசன் ஆஷாவிடம் வந்தான் இன்னைக்கு ஆக்டர் மதன் பிறந்தநாள் அவருடைய அம்மாவின் சிலையை இன்னைக்குத்தான் அவர் திறந்தார் அங்கே போகும் போது சாகித்யா மீட் பண்ணவேண்டியதாக போச்சு. அட்டைமாதிரி ஒட்டிக்கிட்டாங்க என்ன செய்யறதுன்னே தெரியலை. அவங்க காரை பாலோ பண்ணச் சொல்லிவிட்டு நம்ம வண்டியில் வந்துட்டாங்க

ம்… பெரிய நடிகை பளபளன்னு வேற இருக்காங்க உங்க மேல ரொம்பவும் ஈடுபாடு உள்ளவங்க வேற இதுக்குமேல வேற என்ன வேண்டும். ஏன் அவங்க சிலையை செய்ய ஒப்புக்கலை நீங்க ?

பிடிக்கலை எனக்குன்னு சில பிரின்ஸிபல்ஸ் இருக்கு ஆஷா அதையாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்னு உனக்குத் தெரியுமே. சரி அந்த ஸ்போர்ட்ஸ்மேன் சிலை எந்தளவில் இருக்கு வேலையைப்பற்றி பேசத் தொடங்கிவிட்டால் அதற்கு மேல் பேசமாட்டான் என்று தோன்றியது ஆஷாவிற்கு அவர்கள் கேலரிக்குள் நுழைந்தார்கள்.

சாகித்யாவின் விரல்களில் சுருக்கென்று எதுவோ தைத்தது. ஆ… என்ற கத்தலோடு கையைப் பார்த்தாள். சித்தரும்பினைப் போல ஆனால் அளவில் பெரியதாக ஒரு எறும்பு அவளின் கைவிரல்களின் இடுக்கில் முத்தமிட்டுக் கொண்டு இருந்தது. சட்டென்று கையை உதறினாள் ஆனால் போகவில்லை வண்டியை நிறுத்துங்க என்று கத்தினாள் குமார் என்னாச்சு மேடம் ? என்று பதற அவள் தன் விரலிடுக்கில் காட்ட, அசுரத்தனமாய் அவளின் தோலைப் பதம்பார்த்த அந்த எறும்பினை எடுக்கப் போராடினான் குமார்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 14. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்