24வதுஅத்தியாயம்

அர்த்தமுள்ள ரகசியங்கள் வைத்திருப்பவன் அமைதியாகத்தான் இருப்பான்.

‘மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக பன்றி சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தும் சோதனை முயற்சி எவ்வித பாதிப்பும் இன்றி வெற்றி அடைந்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.

இருதயம்,கல்லீரல், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், பல ஆண்டுகளாகவே விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முயற்சியாக நடைபெற்ற ஆபரேஷன் வெற்றிபெற்று இருப்பதால் மனித உறுப்பு பற்றாக்குறையைப் போக்கிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு.லங் ஓன் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை மூளைச் சாவடைந்த ஒருவருக்குப் பொறுத்தப்பட்டது.

மனிதனின் ரத்த நாளங்களுடன் பன்றியின் உறுப்பை பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து வயிற்றுக்கு வெளியே தொடையின் மேல் பகுதியில் அந்த சிறுநீரகம் மூன்று நாட்கள் வைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.’

ஸ்டேஷனில் இருக்கும்போது துளசி சொன்ன கட்டுரையைப் படித்துக்கொண்டே வந்தான் கர்ணன். அதற்குமேல் சயின்ஸ் சம்பந்தமான விவரங்கள்வர அத்துடன் கட்டுரையினை முடித்தவன் துளசியை ஏறிட்டான். சில நிறுவனங்கள் இந்தமாதிரி தேவையில்லாத ஆராய்ச்சிக்கு பணம் தருவதால்தான் மனிதன் உலகிற்கு ஒத்துவராத எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறான்.

“இந்தக் கட்டுரையில் ஒரு வரியை படிச்சீங்களா?, மனித உறுப்புகள் தட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் என்று! இனி இதற்காக மிருகங்கள் எல்லாம் வதைபடப் போகிறது. தந்தங்களுக்காக யானைகள், கொம்புகளுக்காக மான்கள், உணவுக்காக விலங்குகள், பறவைகள் இதெல்லாம் போக இனிமேல் உறுப்புகளுக்காகவும் அந்த ஜீவன்கள் அல்லல் படபோகிறது.”

“ம்….மனிதனைப் போல ஒரு சுயநலமி யாரும் இருக்க மாட்டார்கள். காட்டை அழித்து, ஏரிகளை காவுவாங்கி இன்று அதே ஏரிகளை இருப்பிடமாக்கி , மழையை அநாதையாக்கி விட்டார்கள். அப்பறம் அய்யோ அம்மா என்று கூப்பாடுபோட வேண்டியது. இயற்கை அழிக்க நினைத்தால் அது நம்மை அழிக்காமல் விடாது என்பதை எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ….?”

“எல்லாமே களங்கம் ஆகிவிட்டது. தண்ணீரை அடைத்து விற்றதைப்போல டெல்லியில் சுற்றமான காற்றை விற்க ஒரு நிறுவனம் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்குமே. இருக்கும் பொக்கிஷத்தை விற்று இல்லாத சூன்யத்தை விலைபேசும் மனித இனம் ” துளசி ஆதுரமாக சொல்லிக் கொண்டே வந்தாள் கர்ணன் அவளின் பேச்சில் உள்ள உண்மைக்கு தலையசைத்தான்.

அவர்கள் வடிவேலு சொன்ன குடோனை அடைந்தார்கள். போலீஸ் வண்டியைக் கண்டதும் வாசலில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தன் கையிலிருந்து சிகரெட்டை மனமின்றி அணைத்துவிட்டு அவர்களை நோக்கி வந்தான்.

“வணக்கம் சார்….”

“இது என்ன இடம்? யாருக்கு சொந்தமானது?”

“அய்யா இது ஒரு டைமில் உற்பத்தி பண்ணும் குடோன் இதை ஆரம்பிக்கும்போதே இங்கிருந்து வரும் கழிவுகள் கடலில் கலந்துடுன்னு ஸ்டே வாங்கிட்டாங்க எங்க முதலாளியும் இந்த இடத்தை அப்படியே போட்டு வைச்சிட்டாங்க இரண்டு வருஷமா பூட்டித்தானுங்க கிடக்குது. எப்பவாச்சும் முதலாளி வருவாங்க குடோனை சுத்தி பார்த்துட்டு மனசு கனத்துப் போயிடுவாங்க.”

“உள்ளே யாரும் இல்லையா ?”

“இல்லீங்க, இங்கே இரண்டு வாட்ச்மேன். நான் பகல்ல இருப்பேன் ராத்திரி ஒன்பது மணிக்கு கோபாலு இருப்பான். என்ன விஷயங்க அய்யா?”

“ஒண்ணும் இல்லை ராத்தரி நேரங்கள்லே தப்பான விஷயங்கள் எல்லாம் நடக்கிறதா ஒரு தகவல் . இந்த மில்லோட முதலாளியை நாங்கள் பார்க்கணுமே அப்படியே அந்த வாட்ச்மேன் கோபால் அவனையும். இப்போ எங்கேயிருப்பான்.”

“அவன் சரியானத் தண்ணி வண்டிங்க . எப்ப பாரு சரக்கும் கையுமாத்தான்.”

இரும்புக் கிராதிக்கு வெளியே அந்த மில்லின் வாசலை பார்ப்பதைப் போல இரண்டு கேமிராக்கள் இருக்க,  “இந்த கேமிரா வேலை செய்யுமா ?” என்று கேட்டாள் துளசி.

“இல்லைம்மா…..இங்கே நைட்டு ஆளவரம் இல்லாம கிடக்கும், போனமாசம் யாரோ நாலைஞ்சு பேரு ஒரு பொம்பிளையைக் கூட்டியாந்து அதுலே அவனுங்களுக்குள்ளே ஏதோ அடிதடி போலீஸ் பிரச்சனைன்னு டிவி பேப்பர்லே எல்லாம் வந்தது. கோபாலுவை வேலைக்கே வரவேண்டான்னு அய்யா நிறுத்திப்புட்டாங்க. அப்பறம் பாவம் பார்த்து சேர்த்தாங்க. அப்பவே இந்தக் கேமிராவை மாட்டிட்டாங்க . ஆனா சில நேரத்தில யாருன்னு தெரியலை கேமிராவைக் களவாண்டுடறாங்க. அதனால நேத்துதான் ஒருதம்பி வந்து மாட்டிட்டுப் போச்சு நாளைக்கு வேலை பார்க்கும்ன்னு சொல்லிச்சி.”

“உங்க முதலாளி யாரு ?”

“டி நகர்லே ஆதிகேசன் துணிக்கடை, நகைக்கடை எல்லாம் இருக்கே அவருதுதான்  அதெல்லாம். நான் வேணுன்னா அய்யாவுக்கு போன் பண்ணி சொல்லட்டுங்களா ?”

“வேண்டாம் நாங்களே பார்த்துக்கிறோம்.” அந்த வாட்ச்மேனிடம் கோபாலின் எண்ணை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை அந்த இடத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வண்டியில் ஏறினார்கள் துளசியும் கர்ணனும்.

“இப்போ எப்படி பீல் பண்றீங்க பாலா?”

“நத்திங் , ஐம் நார்மல் .ஆஷா வாங்க போகலாம்.” காரைக் கிளப்பியபடியே கேட்டாள்,  “அவன் உங்களுக்குத் தெரிஞ்சவனா?, டாக்டர் பாலான்னு உங்க பெயரைச் சொல்லிக் கூப்பிட்டானே?”

“தெரியலை ஆஷா, அவனை இதுக்கு முன்னாடி நான் எங்கயோ பார்த்திருக்கிறேன். பட், என்னைப் பார்த்ததும் அவன் ஏன் அப்படி கத்தினான்னு தெரியலை. ஒரே குழப்பமா இருக்கு. இப்போ நாம அவசியம் வெளியே போயே ஆகணுமா ஐ நீட் சம் ரெஸ்ட்.” பாலாவின் சோர்ந்துபோன முகம் ஆஷாவை யோசிக்க செய்தது.

“இன்பேக்ட் பாலா டாக்டர் நீலகண்டன் ரொம்ப பேமஸான டாக்டர் மனித மனங்களைப் படிப்பதில்!. வெல் இந்த விழாவை சாக்கா வைச்சி அவரை சந்திக்கிற வாய்ப்புக் கிடைச்சிருக்கு, எனக்கு தெரிந்து உங்க மனசிலே இருக்கிற அழுத்தத்தை அவர்கிட்டே பகிர்ந்துகிட்டா கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்.”

“ஆஷா என்னோட மன உணர்வுகள் எனக்கே தெரியாத போது நான் எப்படி அவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். ஒருவேளை எனக்கான மருத்துவத்திற்காகத்தான் இந்த பத்திரிகை வைக்கும் டிரிப்பா….?!”

“நோ…நோ… , ஆரம்பத்திலேயே நீலகண்டன் எங்க லிஸ்ட்லே இருக்கிறார். சில நேரங்களில் நேசன் தன்னோட மைண்ட் அப்சட் ஆகிற நேரங்களில் அவர்கிட்டே மனம் விட்டு பேசுவார். நீங்க இருக்கிறதும் டாக்டர் பீல்ட் ,ஸோ இந்த மீட்டிங்கை தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.”

“இதுக்கு ஏன் இத்தனை தேர்ந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்தறீங்க ஆஷா. சைக்கார்ட்டிரிஸ்ட் டாக்டரைப் பார்க்கும் எல்லாரும் பைத்தியங்கள் இல்லை, அது எனக்குத் தெரியும் இன்பேக்ட் இதை நானே யோசிச்சேன். இந்த விழா முடிந்தவுடன் அதைச் செய்யலான்னு நினைத்தேன் . அதற்குள்ளே ஒரு நல்ல வாய்ப்பு வரும்போது ஏன் விடணும். நாம டாக்டரைப் பார்த்துட்டுத்தான் இன்னைக்குப் போகிறோம்” என்றான் பாலா.

இந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் விஷயத்தில் நேசனிடம் நம்பிக்கையாகப் பேசிவிட்டாலும், பாலா எப்போது எப்படி ரியாக்ட் செய்யாவானோ என்று பயத்தோடுதான் பயணித்தாள் ஆஷா. ஆனால் அவன் இத்தனை இலகுவாக எடுத்துக்கொண்டது மனதிற்கு வெகு இதமாக இருந்தது அவளுக்கு.

மெயிலில் வந்த விவரங்களை ஒரு இன்டர்நெட் சென்டரில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டார்கள் துளசியும் கர்ணணும். இரண்டு எண்களிலும் நிறைய இன்கம்மிங் அவுட்கோயிங் கால்ஸ் இருந்தது. டாக்டர் தீனதயாளனின் எண்ணில் இருந்து அநேகம் ஃபாரின் கால்ஸ் அழைப்பு இருந்தது. தாய்லாந்து நம்பர் ஒன்று அங்கே ஒரு ரிசர்ச் சென்டரின் பெயர் அதில் பதிவாகியிருக்க, மற்றொரு எண்ணில் இருந்து வடிவேலுவின் எண்ணுக்கு அதிகமாக கால்ஸ் வந்திருந்தது. மற்றொரு எண்ணின் பெயர் கோபால் என்றிருந்தது.

“அநேகமா இது அந்த மில் வாட்ச்மேன் கோபாலாத்தான் இருக்குன்னு நினைக்கிறேன்” என்றான் கர்ணன்.

“எஸ்…தாய்லாந்து ரிசர்ச் சென்டரைப் பற்றி தன் அலைபேசியில் கூகுளில் தட்டினாள். மருத்துவ ஆராய்ச்சிகள் நடக்கும் இடம் என்று அதன் தோற்றம், தற்போதைய ஆராய்ச்சிகள், பணிபுரியும் மருத்துவர்கள் என்ற விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு இருந்தது. டாக்டர் தீனதயாளனின் வங்கிக் கணக்கை ஆராய்ந்ததில் அவருக்கு தாய்லாந்தில் உள்ள இரண்டு மூன்று உணவு விடுதிகளின் பெயரில் இருந்து பணம் மாற்றப்பட்டு இருந்தது தெரிந்தது.

“ஸோ….டாக்டர் தீனதயாளன்தான் இதற்கு எல்லாம் காரணங்கிறது தெளிவாகிவிட்டது. பாலா மேல நிறைய வீண் பழி சுமத்தி அவனை கிட்டத்தட்ட மென்டல் டிசாடர் வரைக்கும் கொண்டு போயிருக்கான். இப்பவே அவனை அரெஸ்ட் பண்ணி ரிமாண்டில் வைக்கணும் கர்ணன்.”

“பொறுங்க துளசி இப்போ நம்ம கையில் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போதுமானவைதான். ஆனா கையும் களவுமா அவனைப் பிடிக்கணும்.”

“எப்படி ?”

“சொல்றேன். ஐ ஹேவ் ஏன் ஐடியா ! வடிவேலுவோட போன் உங்ககிட்டே இருக்குல்ல?. எனக்குத் தெரிந்து வடிவேலு மூலமா சரக்கு இருக்குன்னு அந்தாளுக்கு தெரியப்படுத்தணும். அவனோட போன்லே லாஸ்ட் கால் எப்போ வந்ததுன்னு பாருங்க. ”

“மாசம் ஒருமுறை டாக்டர் தீனதயாளனுக்கு அமெளண்ட் கிரெட் ஆகியிருக்கு, அந்த கணக்குப்படி பார்த்தா இப்போ அவனோட பண்ணையிலே வச்சிருந்த பொருளுக்கான விலை நிர்ணயம் ஆகியிருக்கும். சரக்கு கைமாறி ஒருமாசம் ஆயாச்சு அடுத்த டீல் இப்போ ஆரம்பமாயிருக்கும்.”

“கரெக்ட்…வடிவேலு குடிபோதையில நிறைய பணத்தை வள்ளிக்கிட்டே கொட்டி போனமுறை மாதிரி லோடு ஏத்தப் போகணுன்னு சொல்லியிருக்கான். அப்போதான் ஏதேச்சையா கார்மேகம் பத்தின பேச்சு வந்திருக்கு.”

“நாளைக்குள்ளே டாக்டர்கிட்டே இருந்து வடிவேலுக்கு டிமாண்ட்ஸ் வரலாம். அந்த இடத்துக்கு வடிவேலுக்குப் பதில் நாம பொருளைக் கொண்டு போவோம். பக்காவா மாட்டுவாங்க எப்படி என் பிளான்.”

“ஒருவேளை போன் வரலைன்னா?”

“வடிவேலு அரெஸ்ட் ஆனது டாக்டருக்கு தெரியாது .அவனை போனில்தான் கான்டேக்ட் பண்ணப் போறார், நமக்கு நிறைய வாய்ப்பிருக்கு துளசி. டாக்டரை வளைச்சிப் பிடிச்சிடலாம். ஆனா அதுக்கு முன்னாடி நாம செய்ய வேண்டிய வேலை ஒண்ணு இருக்கு.”

“என்னது ?”

“இந்த குடோன் வாட்ச்மேன் கோபாலையும், மில் ஓனர் ஆதிகேசவனையும் சந்திக்கணும். அவங்க உதவியிருந்தா நம்ம திட்டம் கச்சிதமா முடியும். முதல்ல அந்த ஏரியாவிலே உள்ள சிசிடிவி கேமிராக்களை சரி செய்யணும்.” அவர்கள் பேசியபடியே ஸ்டேஷனில் வாசலில் வந்து இறங்கினார்கள். ரைட்டர் பரபரப்பாக ஓடி வந்தார்.

“என்னாச்சு….?!”

“மேடம் அந்த ஆளு வடிவேலு கை நரம்பைக் கட் பண்ணிக்கிட்டேன்.”

“வாட்…எப்போ ?”

“பத்துநிமிஷம் இருக்கும் மேடம். கட்டுபோட்டு பக்கத்துலே இருக்கிறே ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம். கூடவே இரண்டு கான்ஸ்டபிளை காவலுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர் பதட்டாய் சொல்ல துளசியும் கர்ணனும் நாங்க போகும்போது நல்லாத்தானே இருந்தான்” என்றனர் ஒரே குரலில்.

“ஆமா மேடம்….டாக்டர் பாலாவும், கூட ஒரு பொண்ணும் உங்களைப் பார்க்க வந்தாங்க ஏதோ விழாவுக்கு பத்திரிக்கை வைக்க, அந்தம்மா என்கிட்டே பேசிகிட்டு இருக்கும்போதே பாலா சார் செல்லுக்குப் பக்கத்தில் போனார். அதுவரையில் படுத்திருந்த வடிவேலு திடீர்னு எழுந்து இவன்தான் இவன்தான் அய்யோ அவனைப் பிடியுங்களேன்னு கத்தினான்.

டாக்டர் பாலா என்னைக் காப்பாத்துங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறதா சொன்னீங்களேன்னு கூப்பாடு போட்டான். செல்லுக்குப் பக்கத்திலே நின்ன பாலா சாரோட சட்டையைப் பிடிச்சிட்டு ஒரே ரகளை.”

“அதுக்கு பாலா என்ன செய்தார்?”

“அமைதியா அவனையே வெறித்துப் பார்த்தார்.அப்பறம் அவனோட கைகளைப் பிடிச்சித் தள்ளிவிட்டு நகர்ந்தார். அந்த பொண்ணு பாலா சாரைக் கூட்டிட்டுப் போச்சு. தண்ணியெல்லாம் கொடுத்துதான் அனுப்பினேன் கொஞ்சம் மயங்கிறாப்போல ஆயிட்டார். இவன் கத்தறதை நிறுத்தவே இல்லை. அவங்களை வண்டியிலே ஏத்தி அனுப்பிவிட்டு வந்து பார்க்கிறேன் இவன் கையை அறுத்துக்கிட்டான்.” ரைட்டர் நடந்ததை ஏற்ற இறக்கங்களோடு சொல்லி முடித்தார்.

“கர்ணன் நீங்க ஆஸ்பிட்டல் போய் கர்ணனை கவனியுங்க, நான் பாலாவைப் பார்த்துட்டு வந்திடறேன்.” என்று வேகமாக படியிறங்கியவளின் போன் அலறியது. டாக்டர் சதாசிவம் வண்டியை எடுக்கப்போன கர்ணன் ஒருவிநாடி நின்றார்.

போனில் யாருடன் பேசினாளோ துளசியின் முகத்தில் தெரிந்த கலவரத்தைக் கண்டு அருகில் வந்தான்.

“என்னாச்சு?”

“காலையிலே நான்சி மார்ச்சுவரியில் பரிசோதனை செய்யப் போயிருக்கா…..மாலை ஆகியும் அவ அந்த அறையை விட்டு வெளியே வரலை, டாக்டர் அவளைத் தேடிப் போனது அந்த இடத்தில நான்சி இல்லை.  ‘என்னைத் தேட வேண்டாம். இப்படிக்கு நான்சி’ னு ஒரு துண்டு சீட்டு மட்டும் கிடைச்சதாம். அதுக்குப்பிறகு நான்சியோட செல் அணைக்கப்பட்டு இருக்குன்னு” டீன் சதாசிவம் பதட்டமா பேசறார்.

‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போதே, வடிவேலுவின் எண்ணில் இருந்து அழைப்பு. இருவரும் உஷாரானார்கள். லவுட் ஸ்பீக்கரில் குரல் வழிந்தது.

“வடிவேலு நீ பேச வேண்டாம் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ, இந்த முறை சரக்கு நைட் எடுத்து வர வேண்டாம். நாளைக்கு விடிகாலை மூணு மணிக்கு குடோனுக்கு வந்துடு. வைச்சிடறேன்” சட்டென்று தொடர்பு துண்டிக்கப்பட்டது.

“கர்ணன்…. !”

“சொல்லுங்க துளசி….”

“இது பாலாவின் குரல்….” என்ற துளசி,முகத்தில் ஏராளமான குழப்பங்களை வாங்கியிருந்தாள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
  2. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
  3. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
  4. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
  5. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
  6. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
  7. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
  8. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
  9. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
  10. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
  11. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
  12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
  13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
  14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
  15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
  16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
  17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
  18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
  19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
  20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
  21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
  22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
  23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்