அத்தியாயம் -8

காதை உருத்தாத மெல்லிய இசையை ரசித்தபடியே அளவாக வெட்டப்பட்ட புல்தரைகளில் கால்கள் புதைய புதைய அவள் நடந்து வந்தவளின் வெண்ணிற சேலையில் சிகப்பு பூக்கள் சிரித்தன. மாலைநேர ஜில்லிப்பில் அவள் மேனியில் ஆங்காங்கே ரோஜாவின் மேல் பனித்துளியைப் போல வியர்வைத் துளிகள், காத்திருக்கும் காதலியை அணைத்துக் கொள்ளும் வேகத்துடன் இருட்டு வானை முத்தமிட்டது. இனிமே கொஞ்சம் காலார நடங்க அப்பத்தான் வயித்திலே இருக்கிற பிள்ளைக்கு நல்லது என்ற டாக்டரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டிருந்தாள். முகத்தில் கூடியிருந்த சோபை அழகு சேர்த்தது ஒவ்வொரு நடைக்கும் கையிலிருந்த கண்ணாடி வளையல்கள் துள்ளிகுதித்து விளையாடிக் கொண்டு இருக்க, பின்னால் ஏதோ அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள் யாருமில்லை. ஏதேனும் பிரமையாக இருக்கலாம் என்று மீண்டும் நடக்கத் துவங்கினாள்.

ஜனசந்தடி இல்லாத அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் முளைத்திருந்த பகுதி அது. எப்போதாவது வாகன சப்தம் காதை கிழிக்கும் மற்றபடி நிசப்த சங்கீதம் இசைக்கும் ஏரியா. பங்களாவின் முகப்பு வெளிச்சம் இலேசாய் கண்ணைக் கூசியது.

இருட்டு தன்னை மெல்ல மெல்ல அலங்கரித்துக்கொள்ள அந்த ஒளியில் ஏதோ ஒரு பெரும் வித்தியாசத்தை உணர்ந்தாள் ரத்னா. நிச்சயம் அங்கே யாரோ அந்நியர் இருக்கிறதைப் போன்றதொரு பிரமை. ப்ரவுன் நிற கூந்தல் அலைகள் ஆசுவாசப்படுத்துவதைப் போல முகத்தில் கொஞ்சி விளையாடின.

ஐம்பது அடி தொலைவில் தள்ளியிருந்த ஆளுயர கிராதி கேட் உள்ளிருக்கும் யாரையும் வெளியே காண்பிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்து பூட்டிக்கொண்டு இருக்க, வாட்ச்மேன் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்ததைப் போல கிடந்தான். வாட்ச்மேன் என்று சப்தித்தாள் ரத்னா. அவனிடம் அசைவில்லை. இம்முறை பின்பக்கம் இருந்து சப்தம் அதிகமாய் கேட்க கையில் செல்போனை கொண்டு வராமல் போனதற்காய் தன்னையே சபித்துக் கொண்டு வாட்ச்மேனை நோக்கி எட்டி நடை போட்டாள்.

ஊருக்குத் தள்ளி இப்படி அத்துவானக் காட்டில் வீட்டைக் கட்டிய கணவனின் மேல் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஜனத்திரள் சப்தம் இல்லாம மரம் செடி கொடிகளோடு, கிளி மாதிரி இருக்கிற உன்னை கொஞ்சிக்கிட்டு வாழ இந்த பங்களா என்று திருமணநாள் பரிசாக அவனிடம் இருந்து சாவியை வாங்கியபோது என்னவோ நெகிழ்வோடு கொஞ்சம் கர்வமாகவே இருந்தது ரத்னாவிற்கு !

ஆனால் இப்போது இருள் நெருங்க நெருங்க பின்னால் திரும்பிப் பார்க்கவும் பயந்தவளாய், அவனிடம் தெரிந்த வித்தியாசம் உறுத்தியது. வெளிவந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது என்று கடைவாயிற்கு அருகில் வழிந்த ரத்தம் நிறம் மாறி போயிருக்க, சட்டென சரிந்த அவன் முதுகில் ஆழமாய் இறங்கியிருந்தது முழம் நீள கத்தி !கோடிட்டு இருந்த மையைத்தாண்டி கண்களில் பயம் வழிந்து ரத்னாவிற்கு ஒரு இன்ஸ்டெண்ட் அலறலை உதடுகள் எழுப்புவதற்கு முன்பாகவே தன் முன்னால் நின்ற அந்த உருவத்தைப் பார்த்து அலறவும் மறந்து போனவள் திரும்பி வேகமாய் ஓடினாள்.

கட்…கட்…

மேடம் நீங்க ஆறுமாத கர்ப்பிணி இத்தனை வேகமாய் ஓடக்கூடாது. இந்த சீன் தான் படத்திலேயே முக்கியமான சீன். நீங்க ஓடறதையும் பயப்படறதையும் பார்த்து ஜனங்க உங்களுக்கு என்னாகுமோன்னு பரிதாபப்படணும். ரசிகர்கள் எல்லாம் கடைசி அரைமணிநேரம் சீட்டின் நுனிக்கே வந்திடணும் என்று ரைடக்டர் சொல்ல, சரி என்று தலையசைத்துவிட்டு அருகில் நின்ற டச்சப் பெண்ணை அழைத்தாள் ரத்னா என்ற கேரக்டரில் நடித்த சாகித்யா. லீடிங் கதாநாயகி இளசுகளின் கனவுக்கன்னி.

அரைசதம் அடித்த பிறகும் திரையுலகத்தில் மார்க்கெட் இழக்காதவள் சாகித்யா, வியர்வைத்துளிகளை துடைத்துக் கொண்டு கேரவேனில் ஏறி அமர்ந்தாள். டச்சப் பெண் செல்வி பின்னாலேயே வந்து ஆப்பிள் சூஸை அவள் முன்னால் நீட்டினால் நாசூக்காக அதை வாங்கிக் கொண்ட சாகித்யா மேனேஜர் குமாரை உள்ளே வரச்சொல்ல பவ்யமாய் கையில் போனுடன் உள்ளே நுழைந்தவன் அடைமழையாய் அவளின் அடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டான்.

மேடம் ஆறுமணிக்கு ஏவி.எம்.மில் உங்க அடுத்த படத்தோட பூஜை இருக்கு, அதை முடிச்சிட்டு நைட்டு ஹீரோ வருணோட பர்த்டே பார்ட்டி ஹாலிடே இன்னில் நீங்க இன்னமும் அரைமணியில் ரெடியானா சரியாக இருக்கும் என்றான்

பழரசத்தை பருகியவள் காலி தம்ளரை அந்த பெண்ணிடம் தந்து விட்டு, உதடுகளை வலிக்காமல் டிஸ்யூவால் ஒற்றிக் கொண்டாள். நாளைக்கு என்னென்ன ஷெட்யூல்.

காலையிலே ஆந்திராவில் இருந்து ரெண்டு ப்ரோடியூஸர்ஸ் வர்றாங்க பேசினபடி கால்ஷீட் புக்பண்ணிட்டு அட்வான்ஸ் தருவதற்கு புதியதாக ஆரம்பித்திற்கு மின்கைத்தடி ஆன்லைன் மேகஸின்னு உங்க பேட்டி வேணுன்னு நிருபர் கேட்டு இருக்கார் அரைமணி தந்திருக்கிறேன்.

அவசியமா குமார் இப்போ இருக்கிற டைட் ஷெட்யூல்ல… ?

மேடம் நாம பிரபலமாகிறது ஒருவிதம் நம்மை பிரபலப்படுத்திக்கிறது ஒரு விதம் நீங்க நடிக்கிற படங்களுக்கு மார்கெட்டில் நல்ல கிராக்கி. அது மட்டும் போதாது அப்பப்போ உங்க பேட்டி டிவியிலே பத்திரிக்கையில வரணும். இந்த வீக் எண்ட்டில் ஒரு போட்டோ ஷூட் ஏற்பாடு செய்திருக்கிறேன். இப்போதைய ட்ரெண்டிங்கே இன்ஸ்ட்டாகிராமில் போட்டோஸ் போடறதுதான் இதெல்லாம் நாமும் கரெண்டா இருக்கிறோன்னு தெரிவிக்க மறுக்கவேண்டாமே ?!

சரி… அரேன்ஞ் பண்ணுங்க அப்பறம் நான் அந்த சிற்பி தூரிகைநேசன் கேலரிக்கு போகணுன்னு சொன்னேனே விசாரிச்சீங்களா ?

உங்களைப் போலவே ஒரு மெழுகுசிலை செய்யணுன்னு உங்க ஆசை போனவாரம் மூன்டிவியில அவரோட இன்டர்வியூ பார்த்ததில் இருந்து நீங்க நாலைந்து முறை கேட்டுடீங்க நான் பேசமா இருப்பேனா ? கேலரியைப் பார்வையிடவும் பேசியாச்சு அவர் கூட டின்னர் சாப்பிடவும் ஏற்பாடு செய்தாச்சு.

உங்ககிட்டே ஒரு வேலையைக் கொடுத்தா அதைப்பற்றி நான் அப்பறம் கவலைப்பட வேண்டியதில்லைன்னு அப்பப்போ நிரூபிச்சிடுறீங்க ? குமார்.

மேடம் டிரஸ் ரெடி என்று அயர்ன் செய்து ஹேங்கரில் மாட்டியிருந்த அடர் சிவப்பில் ஆர்கன்ஸா சேலையும் கற்கள் பதித்த சிகப்பு நிற கையில்லா சோளியையும் தந்தாள் செல்வி. குமார் நகர்ந்துவிட குறிப்பிட்ட அரைமணிக்கு முன்னதாகவே தன்னுடைய காரில் மெலிதான மேக்கப்பில் அமர்ந்துகொண்டாள் சாகித்தியா மனதில் தூரிகைநேசன் ஒருமுறை வந்து சென்றான். இதழோரம் ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

அந்த உடம்பு மெல்லியதாய் ஒருமுறை அதிர்ந்ததைப் போல தெரிந்தது. நேர் செங்குத்தாக படுக்கவைக்கப்பட்டு அதில் உடைகளை களைந்து சுற்றிலும் நீரால் நனைத்து வைத்திருந்ததைப் போல உடலைத்தாண்டி நீர்த்துளிகள் அருகில் இருந்த ஓட்டைக்குள் நுழைய மாட்டேன் என்று தேங்கி நின்றிருந்தது. சற்று நேரத்திற்கு முன்பு அவனின் மார்புக்கூட்டின் சிரைக்கப்பட்ட ரோமங்கள் அந்த குழிக்குள் அடைந்து கொண்டு நீரை வெளியே விடாமல் போக்கு காட்டிக்கொண்டிருக்க, அதை கையில் எடுத்து தள்ளிப்போட்டு சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான் ஒரு காக்கிசட்டை.

அணிந்திருந்த வெள்ளுடையை மறைத்தது டிஸ்போஸபிள் ஆடை முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த போதும் கண்களில் ஒரு வித ஒளியுடன் பாலாவின் கரங்களில் கூர்மையான கத்தி அந்த உடலில் நேர் செங்குத்தாக வயிற்றின் அடிவரை ஒரு கோடு கிழித்தான். கண்ணாமூச்சி ஆடிய உறுப்புகள் எல்லாம் சிக்கிக்கொண்டோம் என்று ஒரு முறை பயந்ததைப் போல சற்று முன்பு வெட்டப்பட்டிருந்த கார்மேகத்தின் முகம் வெளித்திருந்தது.

பாலாவின் கைகள் ஒரு திறமை வாய்ந்த சிற்பியைப் போல அந்த உடலை ஆராய்ந்தன பல குறிப்புகளை குறிக்கச் சொல்லின செம்மண் சாலையைப் போலயிருந்த தன் மேனியின் எழிலை மறைத்திருந்த சால்வை முழுக்க பாலா நடத்திய கார்மேகத்தின் போஸ்ட்மார்ட்டம் நடத்திய புகைப்படங்கள் பறத்தியிருக்க அதில் எந்த குறையுமே காண முடியவில்லை என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள் துளசி.

அவளின் ஆசுவாசத்தை குலைப்பதைப் போல அலைபேசி கத்தியது. ஹலோ….

மேடம் நான் 401 பேசறேன்

சொல்லுங்க ? கார்மேகத்தோட இறுதி சடங்கு நடந்த இடத்தைப் போய் பார்த்தீங்களா யார் அதை செய்தாங்கன்னு ஏதாவது தகவல் கிடைத்ததா ?

மேடம்…. அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த அட்ரஸ்லே சம்பந்தப்பட்ட யாருமே இல்லை ?! கார்மேகத்தோடு பிணம் இங்கே வரவேயில்லையாம். அவர் யாருன்னே தெரியாதுன்னு சொல்றாங்க?!

வாட்….

நீங்க விசாரிக்க சொன்ன முகவரியில் இருக்கிறது ஒரு ஆங்கிலே இண்டியன் குடும்பம் மேடம். இறந்த போன கார்மேகத்தின் மெக்கானிக் ஷெட் மூடியே இருக்கு. நான் விசாரணைக்குப் போனபோது அக்கம்பக்கத்துலே இருக்கிறவங்களுக்கு கார்மேகம் இறந்து போனதே தெரியாதுங்கிறாங்க கான்ஸ்ட்டபிள் 401ன் பதில் திகைப்படைய வைத்தது.மேஜையின் மேல் இருந்த கார்மேகத்தின் பூதஉடல் துளசியைப் பார்த்தது என்னைக் கண்டுபிடி பார்க்கலாம் என்று எள்ளலாய் கோணல் சிரிப்பொன்றை வெளியிட்டது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 14. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 15. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்