அத்தியாயம் – 23

“என்னடா சொல்றே …. பன்னியோட கிட்னியா ?!”

“அட ஆமா சாரு…. நம்ம டாக்டரு பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்றதா ஒரு தபா பேசிகிட்டாங்க. என்கிட்டே முதல்ல பன்னியோட உறுப்புகள் எல்லாம் வேணுன்னு சொன்னப்போ எனக்கு சந்தேகம் வந்துச்சு நா உடனே அவராண்டே போனைப் போட்டு கேட்டேன்.

ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யப்போறேன் அதாவது மனுஷ கிட்னி விலை கூடிப்போச்சு ஒரு பொண்ணு கர்பிணியா வேற இருக்கா கெட்டுப்போன அவ உடம்புக்குள்ளே இந்த பன்னியோட கிட்னியைப் பொருத்துற ஆபரேஷனை யாரு வெளிநாட்டு டாக்டரு செய்யறாராம் அதுக்கு இவரு உதவறாரு. உனக்கு இப்போ கிடைக்கிறதை விடவும் அதிகமாக கிடைக்கும் அதனால எவ்வளவு ஏற்பாடு பண்ணித்தர முடியுமோ தான்னு கேட்டாரு.

ஏதாச்சும் வம்பு வந்திடப்போவுது சாருன்னு நான் கேட்டதற்கு என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன். உன்னை யாராவது கேட்டா டாக்டர் பாலான்னு என்னை கையைக் காட்டி விட்டுடுன்னு சொன்னாங்க அவ்வளவுதான் எனக்கு தெரியும். அந்த டாக்டரு நம்பருகூட என் போனுலே ஏத்தி வைச்சிருக்கேன் நானா போட்டா போனு போவாது அவராத்தான் கூப்பிடுவாரு.” வடிவேலு சொல்லிவிட்டு தண்ணீரை முடக்முடக்கென்று குடிக்கும் சப்தம் வர டேப்பை நிறுத்தினார் கர்ணன்.

“வடிவேலுவோட ஸ்டேட்மெண்ட்லே தெளிவா பாலா பத்தின குறிப்பு இருக்கே.”

“இன்ஸ்பெக்டர் கர்ணன். யாராவது வந்தா என்னை அடையாளம் காட்டினு பேரைச் சொல்லுன்னு சொன்ன பாலா ஏன் அவனை சந்திக்க மறுக்கணும். இவங்க காண்டேக்ட் எல்லாமே போனில்தானே, ஒருமுறை பாலாவை சந்தித்ததும் வேற ஏதாவது காரணமா இருக்கலாமே ? வடிவேலு சொல்ற அந்த யாரோ இரண்டு பேரைப் பத்திய தகவல்கள் இல்லையே ?” கர்ணன் ஒரு வித நம்பாத தன்மையுடன் துளசியைப் பார்த்தார்.

“கர்ணன் எனக்கு பாலா மேல அன்பு இருக்கு, அவனை சிக்கலில் இருந்து தப்பிக்க வைக்கணுன்னு அக்கறை இருக்கு. ஒருவேளை பாலா குற்றம் செய்திருந்தா நிச்சயம் அவனை தப்பவிட மாட்டேன் அவன் கையிலே விலங்கு மாட்றே முதல் ஆளு நானாத்தான் இருப்பேன். இதிலே கண்டிப்பா வேறறொரு ஆள் சம்பந்தப்பட்டு இருக்கான்.”

“எப்படி சொல்றீங்க ?”

“போன மாதம் பேப்பர்லே வந்த நியூஸ் நீங்க படிச்சிருக்கீங்களான்னு எனக்கு தெரியலை.” தன் வாட்ஸ்அப்பில் சேகரித்து வைத்திருந்த அந்த செய்தியைக் காட்டினாள் துளசி.

“இந்த ஆராய்ச்சி நியூயார்க்கில வெற்றிகரமா நடந்திருக்கு இதைத்தான் இங்கேயும் எக்ஸிக்யூட் பண்ண டிரை பண்ணியிருக்காங்கன்னு எனக்குத் தோணுது.”

“கரெக்ட்….பட் … பாலா எப்படி இதில்…..?!”

“பாலாவுக்கு நிறைய வாசிக்கும் பழக்கம் இருக்கு கர்ணன். அவன் எதையாவது படிச்சிட்டுகிட்டே இருப்பான் எந்த விஷயத்தையும் அவனோட விவாதிக்கலாம். நிறைய வேலியபுள் பாயிண்ட்ஸ் வைத்திருப்பான். என்னோட சந்தேகப் புள்ளி பாலாவின் பக்கம் திரும்பாம இருக்கிறதுக்கு இன்னொரு அசெம்ஷன் இருக்கு. அது டாக்டர் தீனதயாளன்.”

“யார் அவர் ?”

“அந்த மருத்துவமனையில் ஒரு காலத்தில் ரொம்பவும் பவுர்புல்லா இருந்த டாக்டர். அவர் ஒரு சர்ஜனும் கூட, அவரோட மோசமான நடத்தையை பாலா வெளிப்படுத்திட அவரை நிர்வாகம் வெளியே அனுப்ப பார்த்துச்சு அப்பறம் அவரோட அனுபவத்தை கருத்தில் வைச்சு முன்னாடி இருந்த இம்பார்ட்டெண்ஸைக் குறைச்சி அவரை டெம்பவரி டாக்டர் மாதிரி டீரிட் பண்ணினாங்க இதுக்கு காரணமான பாலா மேல அவர் பயங்கரமான கோபத்தில் இருந்தார். எப்படியாவது பாலாவைப் பழிவாங்கணுமின்னு அவர் பேசியதை சிலர் என்கிட்டே சொன்னாங்க.”

“டீன் சதாசிவமும் அதையேதான் சொன்னார். பாலாவை ஆஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு கூட்டி வந்த மறுநாள் அவனோட அறையைச் சோதனைப் போடப் போனப்போ நான் அவரை விசாரிச்சேன். மனுஷன் எனக்கு அப்படி எந்த பழிவாங்கும் எண்ணமும் இல்லைன்னு சாதிச்சார்.”

“அன்னைக்கு நான் பாலாவோட அறையை சோதனைப் போட்டப்போ ஜன்னல் அருகில் ஒரு போன் வழிப் பேச்சை நான் கேட்டேன். அது தீனதயாளனின் குரல் அவர் ஏதோ ஒரு ஒப்பந்தம் பற்றி பேசிகிட்டு இருந்தார். நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை ?! இங்பே நிலைமை சரியில்லை ? ஒரு சின்ன சிக்கல் அதனால போலீஸ் கவனம் என்மேல் இருக்கு. நான் சரக்கு ரெடி பண்ணிட்டேன். வழக்கம் போல கொண்டு வந்து சேர்த்திடறேன் ஆனா ஷிப்பிங் நீங்கத்தான் பார்த்துக்கணுன்னு பேசினான். அவனோட பேச்சு முழு ஆங்கிலத்தில் இருந்தது.”

“நம்பரை டிரேஸ் பண்ண வேண்டியதுதானே துளசி.”

“பண்ணியாச்சு. டிவிஷன்ல எல்லா குயரிஸீம் ரெடி, என்னோட மெயில் ஐடிக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த நம்பரில் இருந்து தீனதயாளன் யார்கிட்டே பேசியிருக்காருன்னு தெரிந்து போயிடும் அவரோட இன்கம்மிங் அவுட்கோயிங் டீயெல்ஸ், பேங்க் டீயெல்ஸ், அந்த நிமிஷத்தில இருந்து அவர் பேசுற ஒவ்வொரு கால்ஸ் கூட ரெக்கார்ட் செய்யப்படுது.”

“ஒருவேளை இந்த வடிவேலுகிட்டே பேசறது தீனதயாளனாத்தான் இருக்குமோ பாலா மேல உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமா அவன் பேரைப் பயன்படுத்தியிருக்கலாம் இல்லையா ?!”

“எக்ஸார்ட்லி….”

“துளசி… வடிவேலு பேசும் போது ஒரு நம்பரில் இருந்து போன் வருன்னு சொல்லியிருக்கானே அந்த நம்பர் தீனதயாளனோட மேட்ச் ஆகுதா ?!”

“இப்பத்தான் பத்து ரூபாய்க்கு எல்லாம் தெருமுனையில் சிம்கார்ட் கிடைக்குதே. அதையும் வெரிபை பண்ணிட்டேன். வள்ளி வீட்டுலே எனக்கு வடிவேலுவின் போன் கிடைச்சது, அவனோட போனையும் டிராக் பண்ண சொல்லியாச்சு அதிலே ஒரு நம்பர்லே இருந்து அவனுக்கு அடிக்கடி போன் வந்திருக்கு. ஆனா அந்த நம்பரோடு ப்ரூப் பாலா பேரில் இருக்கு.”

“மை குட்னஸ்…..இதென்ன குழப்பம்.”

“பதறாதீங்க… டாக்டர் தீனதயாளனோட செல்போனுக்கும், பாலா பேர்ல இருக்கிற வடிவேலுவின் போனுக்கு அடிக்கடி அழைப்பு வரும் செல்போனுக்கும் சிக்னல் ஒரே இடத்தில் இருந்துதான் வர்றதா கண்டுபிடிச்சாச்சு. அது தீனதயாளனின் எண்தான். பாலாவை சிக்கவைக்கிறதுக்காகவே அவரு இந்த வேலையைப் பார்த்து இருக்காரு.”

“அப்போ அவரை அரஸ்ட் பண்ணிடலாமே ?!”

“கர்ணன் நமக்கு இன்னமும் கொஞ்சம் தகவல்கள் தேவைப்படுதே, முதல்ல வடிவேலு சொன்ன அட்ரஸ்லே அந்த கொடவுன் இருக்கிறதான்னு செக் பண்ணுவோம். ஏற்கனவே போஸ்ட்மார்ட்டம் அறையில் நடந்த சில பிரச்சனைகளைச் சொல்லியிருக்கிறேன் இதுக்கெல்லாம் காரணம் தீனதயாளன்னா அவனுக்கு நிச்சயமா ஆஸ்பிட்டல்ல கைக்கூலிகள் இருக்கலாம் அவங்களைப் பிடிக்கணும். தப்பிக்க முடியாத அளவுக்கு அந்தாளை லாக் பண்ணனும்.”

“குட்…. முதல் நம்ம மகாபலிபுரம் தாண்டியிருக்கிற கொடவுனுக்குப் போகலாம்.” துளசியும், கர்ணனும் ஜிப்சியில் கிளம்பிட அதேநேரம் மார்ச்சுவரி அறைக்குள் நுழைந்தாள் நான்சி. அவளின் கரங்களில் சில உபகரணங்கள் இருந்தன.

“துளசியைப் பார்க்கணும் ஆஷா நான்.”

காரில் அருகமர்ந்திருந்த பாலாவை தலையைத் திருப்பிப் பார்த்தாள் ஆஷா. “இன்னைக்கு அவங்களுக்கும் பத்திரிக்கை வைச்சிட்டு வந்திடலாம் பாலா. அவங்க ஸ்டேஷன் மயிலாப்பூர்தானே நாம அந்த வழியாத்தான் டாக்டரைப் பார்க்கப் போறோம்.”

“டாக்டரை எதுக்கு ?”

“விழாவிற்கு அழைக்க என்ன பாலா சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன் எல்லாத்தையும் மறந்திட்டீங்களா ?” ஆஷா செல்லமாய் அலுத்துக் கொண்டாள். அவன் உடனே முகம் சுருங்கினான்.

“இப்போயெல்லாம் எனக்கு நிறைய ஞாகமறதி வருது ஆஷா ஏன்னு தெரியலை ?! நான் கொஞ்சம் அப்நார்மலா பீல் பண்றேன்.”

“டோண்ட்ஓர்ரி பாலா எல்லாம் ஒர்க் பிரஷர்தான். நம்ம உடம்பும் உழைக்கத் தயாரா இருக்கும் போது கூடவே மனசும் ஒத்துழைக்கணும் இரண்டுலே எது மக்கர் பண்ணாலும் நாம அம்பேல்தான். அதனாலதான் உடலுக்கு எப்படி பயிற்சிகள் அவசியமோ, மனசுக்கும் பயிற்சிகள் அவசியம்.”

“சமீபத்திலே ஒரு கதை படிச்சேன் ஒரு ஞானியிடம் அவருடைய சீடர் குருவே மனித வாழ்கைக்கு அர்த்தம் இருக்கிறதான்னு கேட்டாராம் ?”

“யோசிக்கவே இல்லாமல் சட்டென்னு குரு இல்லைன்னு சொல்லிட்டாரு.”

“நம்மில் சில பேர் எப்பவும் இப்படித்தான் கேள்விகளை மற்றவர்களை நோக்கி வீசிடுவோம் ஆனா வெளிப்படும் பதில்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம என்ன நினைக்கிறோமோ அந்த பதிலைத்தான் எதிரில் இருப்பவர் சொல்லணுன்னு எதிர்பார்ப்போம். கேள்விகள் பிறக்கபடுவதில்லை பாலா அது பதிலை எதிர்ப்பார்த்து வீசப்படுகிறது.”

“ஒரு மனுஷக்கு பிறக்கும்போது முழு சுதந்திரத்தை இறைவன் கொடுத்திடறார். அவன் தன்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ள களத்தையும் கொடுத்திடறான். சில நேரங்களில் வாய்ப்புகள் கூட வீடியோ கேம்ஸில் வர்ற லைப் சேவிங் ஆப்சன் மாதிரி வந்திடுது. இதையெல்லாம் தாண்டி தேவையில்லாததை சுமந்துகிட்டு திரியறோம்.”

“உங்களுக்கு முதல் உலகப்போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சனை தெரியுமா ? நீங்க நிறைய வாசிப்பீங்கன்னு உங்க தோழி துளசி சொன்னாங்க.”

“ம்…அவர் சின்ன வயதில் இருந்தே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர். வளர வளர அவர் தன்னுடைய எண்ணங்களை ஆரோக்கியமாக வளர்த்தார். அவரிடம் அரசியலில் பெரிதாக விசேஷத் திறமைகள் இல்லாமல் போனாலும், வில்சன் கூட நெருக்கமாக பழகியவர்கள் அவரைப்பற்றி சொன்ன கருத்து வித்தியாசமா இருந்தது.

அவரோட ஒவ்வொரு நடவடிக்கைகளும் செயலும், இறைவன் அவரின் அந்த பிறப்பை ஒரு அர்த்தத்துடன் படைத்திருக்கிறான் நான் விதியால் இதை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன் ஒவ்வொரு செயலுக்கு முன்பும் உறுதியா நம்புவேன்னு சொல்லுவாராம். அமெரிக்க ஜனாதிபதிகளில் பி.எச்டி பட்டம் பெற்றவர் அவர் ஒருவர்தான் முதல் உலகப்போர் சமயத்தில் உலக அமைதிக்காக சமாதான நோபல் பரிசு வில்சனுக்குத் தரப்பட்டது.

நான் வெற்றிபெற்றவன்னு இந்த நினைப்புதானே உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் முன்னேற வைத்தது.

தன் முதல் வழக்குலே தடுமாறின மகாத்மா காந்திஜிதான். ஆங்கிலேயே சாம்ராஜ்ஜியத்தையே ஆன்ம வலிமையால் எதிர்த்து வெற்றியும் பெற்றார். அவர் பின்னாடி ஒரு தேசமே நின்னது. இதெல்லாம் அவர் மேல அவர் வைத்திருந்த நம்பிக்கை மெளண்ட்பேட்டன் பிரபு அவரை ஒரு தனி மனித ராணுவம் என்று பாராட்டினார். நாம யாருக்கும் குறைஞ்சவங்க இல்லை பாலா.

உங்க மனசு எதனாலோ பலவீனப்பட்டு இருக்கு அதை மீட்டு எடுக்கிறது உங்க கையிலேதான் இருக்கு. நாம இன்னைக்கு பத்திரிக்கை கொடுக்கப்போகும் போது டாக்டர்கிட்டே மனசுவிட்டு பேசுங்க உங்களுக்கு ஒரு ரிலீப் கிடைக்கும்.”

“இப்பவே எனக்கு ஒரு ரிலீப் இருக்கு ஆஷா. ஒரு ஆண் தன்னோட பயணிக்கிற துணையினால் அவனையறியாமலேயே உயர்க்கிறான். இந்த இதம் எனக்கு துளசிகிட்டே கிடைச்சா மாதிரி நேசனுக்கும் உங்ககிட்டே இருந்து கிடைக்கிறது. அதனாலதான் அவன் உயர்ந்துகிட்டே இருக்கான்.”

“நேசனா ? துளசிக்கும் உங்களுக்கு இருக்கிறது ஒரு ஆத்மார்த்தமான நேசம் ஆனால் எனக்கும் நேசனுக்கும்…?!”

“அப்படியெதுவும் இல்லைன்னு சொல்லி ஏமாத்தப்பார்க்க வேண்டாம் ஆஷா. நீங்க இரண்டுபேருமே ஒருத்தரையொருத்தர் விரும்பறீங்க ?”

“பாலா நீங்களா ஏதாவது அர்த்தம் பண்ணிக்காதீங்க. அப்படியே நான் நேசனை விரும்பினாலும் அவரின் உயரம் எங்கே நானெங்கே ? அதிலும் பளபளன்னு பட்டாம்பூச்சி மாதிரி வர்ற சாகித்யா முன்னாடி நானெல்லாம் நிக்க முடியுமா ?” ஆஷாவின் துயரம் வார்த்தைகளாக வெளிவந்தது.

பாலா அவளை ஆதரவாக பார்த்தான்.

“அன்பு வேற கவர்ச்சி வேற ஆஷா, நேசனின் மனம் உன்பால் எப்போதோ வந்துவிட்டது. அதை நீ இன்னமும் உணரலை, அவனுமே அதை உணர்த்த நினைக்கலை அதுதான் உண்மை. உண்மையான காதல் தன் இணையைப் பார்க்கும் போது ஒரு இதத்தை தரும். எந்த சூழ்நிலை வந்தாலும் உன்னோட அருகாமை மட்டும்போதும்ங்கிற நினைப்பு அவனுக்கு இருக்கு. வெளியில் இருந்து பார்க்கிற நான் உணர்ந்திட்டேன் நீயும் உணரும் காலம் வரும்.” பாலாவின் சொற்கள் ஆஷாவின் மனதில் பாலை வார்த்தாற் போல இருந்தது. அவர்கள் பேசியபடியே துளசியின் ஸ்டேஷன் வாசலில் காரை நிறுத்தி இறங்கினார்கள்.

“உள்ளே துளசியில்லை…. அவங்க ரவுண்ட்ஸ் போயிருக்காங்க மேடம். ஏதாச்சும் சொல்லணுங்களா ?” ரைட்டர் பாலாவை அங்கே அடிக்கப் பார்த்திருப்பதால் அவனை வரவேற்றார். ஆஷாவை புதியதாய் பார்த்தார்.

“நத்திங் நாங்க போன்லே பேசிக்கிறோம்.” என்று அவள் ரைட்டரிடம் பேசிவிட்டு திரும்ப பாலா லாக்கப்பில் உடலைக் குறுக்கி அமர்ந்திருந்த வடிவேலுவை வெறித்துப் பார்த்தான். வடிவேலுவின் கண்களும் பாலாவை அடையாளம் கண்டு கொண்டது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 14. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 15. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 19. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்