அச்சிறிய அறை தன்னை மெலிதாய் அலங்கரித்துக் கொண்டு விளக்கின் வெளிச்சத்தில் டாலடித்தது. இரண்டு சோபாக்கள் எதிரெதிரே அதன் கிழிசலை மறைக்க எங்கிருந்தோ சற்றே நெடி கிளம்பிய ஷால். துவைத்து பல நாட்கள் ஆகியிருக்கும் என்பதை ஊகிக்க சட்டென வாசனை திரவியம் தெளிக்கப்பட்டது. “மைக் சரியா இருக்கா  கெஸ்ட் வருவதற்குள் ஒருமுறை செக் பண்ணிடுங்க.”

“காம்பயரிங் பண்ற பையன் எங்கே? போக்கஸ் லைட் இங்கே இருக்கணும் கேமிரா கோணம் பாருங்க.” பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்த மாதேஷ் அந்த நியூஸ் சேனலின் நிர்வாகிகளில் ஒருவன். நாற்பதுகளின் துவக்கம் அவன் உச்சியில் வெள்ளிக்கம்பிகளாய் ஆங்காங்கே, கீளின் ஷேவ் செய்த முகவாயினை ஒட்டிய ஒரு கரும்புள்ளி கூட வெகு கவர்ச்சியாய்! களம் கண்ட வெற்றியாளர்கள் என்ற தலைப்பில் அவன் தயாரிக்கும் புதிய நிகழ்ச்சியின் முதல் சூட்டிங். எல்லாம் திருப்தி என்றானபின் தன் முன்னால் கோட்டும் சூட்டும் போட்டு வந்த ஆங்கரைப் பார்த்தான்.

“கேஷுவல் டிரஸ் பண்ணிக்கலாமே நவீன்?”

“புரொடக்ஷன்ல இதுதான் கொடுத்தாங்க ஸார்.”

“ம்…கெஸ்ட் என்ன காஸ்ட்யூமில் வருவார்ன்னு தெரியலை, உங்க லுக் நல்லாயிருக்கணும் பட் இப்போ பண்ணப்போற ஷோக்கு கேஷுவல் வேர்ஸ் போதும் சேன்ஞ் பண்ணிக்கோங்க.” கேரியரின் துவக்கத்தில் தலையாட்டிக்கொள்வதே சாலச்சிறந்தது என்ற அரிச்சுவடியை அந்த  நவீன் கற்றிருந்தான். இந்த ஷோ கிளிக் ஆகிட்டா நான் ஒரு உயரத்துக்கு போயிடுவேன். அப்பறம் நான் வெச்சதுதான் சட்டம். அவன் முகம் சற்று தயங்கி பின் தெளிந்தது.

“நவீன் ஷோவை பிராக்டிக்கலா கொண்டு போங்க, கேள்வி பதில் மாதிரியில்லாம பேச்சில் ஒரு நட்பு இழையோடனும். ஒ.கே ரெடி பர்ஸ்ட் நிகழ்ச்சியோட இன்ட்ரோ கெஸ்ட்டைப் பற்றிய குறிப்புகள் அப்பறம் அவரை அறிமுகப்படுத்தி அப்படியே பேச்சை வளர்த்திட்டு போயிடணும்.”

“சரி சார்” நவீன் தன் சிகையை ஒருமுறை ஸ்டைலாக கோதிவிட்டு உடை மாற்றக் கிளம்பினான்.

“சார்… தூரிகைநேசன் வந்திட்டார்.”

“வெல்கம் டூ அவர் ஸ்டியோ” தன் கையில் தஞ்சமடைந்திருந்த பூக்களை தாரை வார்த்தான் மாதேஷ்.

“ஓ… தேங்க்யூ…..!” பூக்களை விட தூரிகைநேசனின் முகம் மலர்ந்திருந்தது. “ப்ளீஸ் பி சீட்டட் சார் ,ஹாட் ஆர் கோல்ட்?”

“ஜஸ்ட் ஒன் காபி ப்ளீஸ்…” அடுத்த சில நிமிடங்கள் செலவழிக்கப்பட்டு ஆப்பிள்பழ வடிவில் டிசைன் செய்யப்பட்ட ஷாசர் அந்த சுடுபானத்தை சுமந்து வந்தது.

“மிஸ்டர் மாதேஷ் இயல்பாகவே இந்த பேட்டி, மீடியா, வெளிச்சங்கள் எல்லாம் எனக்கு கொஞ்சம் அலர்ஜி. நீங்க வற்புறுத்தியதால் வரவேண்டியதாகப் போச்சு .சீக்கிரம் முடிச்சிட்டா நல்லாயிருக்கும் இது லைவ்தானே….”

“ஆமாம் சார் உங்களுக்கு எந்த அசெளகரியமும் இல்லாம நான் பண்ணித்தர்றேன். என் பையனோட பிறந்தநாளுக்கு அவனைப் போலவே ஒரு மெழுகுசிலை நீங்க எனக்கு செய்துதரணும். ஐயம் இம்ப்ரஸ் வித் யுவர் வொர்க்.”

“ஒ.ஷ்யூர்…” வெளிச்சப்புள்ளிகள் தூரிகை நேசனின் உடலில் அங்குலம் கூட பாக்கி வைக்காமல் அப்படியே விழுங்கியது. கேமிராவின் கோணம் மூன்று இடங்களில் அவனின் சின்னசின்ன அசைவுகள் கூட நெற்றியோரம் இலேசாய் துளிர்த்த வியர்வையின் சொட்டு கூட துல்லியமாய்…..!

சேனல் கார்ட்டுடன் நிகழ்வின் துவக்கம் காம்பயரின் வாய்கொள்ளாச்சிரிப்புடன் ஓவியர் சிற்பி தூரிகைநேசன். 

“ஓவியக்கலையில் ஆர்வமுள்ள இவர் தன் சிறுவயதிலேயே தாய் தந்தையை ஒரு விபத்தில் பறிகொடுத்து ஆசிரமத்தில் வளர்ந்தவர். ஸ்காலர்ஷிப்பில் தன் படிப்பினை முடித்தவர். தன் ஓவியத்தின் மேலும் மெழுகு சிலைகள் செய்வதன் மூலமும் தீராக் காதல் கொண்டவர் இப்போது வரையில் தன் கலையை வளர்க்கவே இன்னமும் கல்யாணம் கூட செய்துகொள்ளாமல் இருப்பவர். அவருடன் களம் கண்ட வெற்றியாயளர்கள் பகுதியில் ஒரு சிறு கலந்துரையாடல்…!” முகவுரையோடு திரையில் தூரிகைநேசனின் கேலரியைக் காண்பித்தார்கள் விதவிதமான மெழுகுபொம்மைகள் அவற்றில் அணிவகுத்து இருந்தன. தெய்வச்சிலைகள், தலைவர்கள், திரை பிரபலங்கள் என்று அணிவகுத்தது. கேமிராவின் கோணம் இப்போது தூரிகைநேசனின் முன்னால்…!

“வணக்கம் சார்.”

“இயல்பிலேயே உங்களுக்கு ஒவியக்கலையில் ஆர்வம் இருந்ததுன்னு தெரியும். எப்படி மெழுகு சிலைகள் செய்யணுன்னு தோணுச்சி.”

“சித்திரம் கைப்பழக்கன்னு சொல்லுவாங்க. சின்னசின்ன கோடுகளை சேர்த்து அழகாக வாசலில் கோலமிட்ட எங்கம்மாதான் என்னுடைய முதல் இன்ஸ்பிரேஷன். ஒரு கலைஞனின் முதல் அங்கீகாரம் தன்னைச் சார்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கும்போது அதன் ருசியே தனி. பிள்ளைக்கு பொருளாதார ரீதியில் படிக்கவைக்கணுன்னு விருப்பாம எனக்கு பிடிச்ச ஓவியக்கலையை கத்துக்கொடுத்தாங்க அவங்க. நான் வரைந்த முதல் ஓவியம் என் தாயும் தந்தையும் தான். அம்மா அப்பா விபத்திலே போனபிறகு எனக்கு வாழ்வில் கொஞ்சம் பிடிப்பில்லாமல் இருந்தது. ஸ்காலர்சிப்பில் டிகிரி முடிச்சேன். சிற்பக்கலை கத்துக்கிட்டேன். ஓவியனா என் வாழ்க்கை முடியக்கூடாதுன்னு சிற்பக்கலையில் நான் வடித்த முதல் சிலை என்பெற்றோர்கள்தான்.”

“வெறும் கல்லாக அவங்களை கும்பிட எனக்கு பிடிக்கலை. உயிருள்ள ஓவியங்களா அவங்க எனக்கு வேணுன்னு நான் நினைச்சேன் அதன்பிறகுதான் மெழுகுசிலையா அவங்களை வடித்து வைத்தேன். நெருங்கமான உறவுகளின் இழப்பு எத்தனை பெரிய வலின்னு உணர முடிஞ்ச எனக்கு அடுத்தவங்க வலியும் புரியுமே?!”

“முதன்முதலா ஒவியக்கண்காட்சி நடத்தியப்போ என் பெற்றோருடைய மெழுகு சிலைகளைப் பார்த்த ஒரு ஆந்திராக்காரர் அவங்க பொண்ணு கல்யாணத்திற்கு தன் மனைவியோட சிலையை செய்து தரமுடியுமான்னு கேட்டார். அப்படி தொடங்கியது. இப்போ கிட்டத்தட்ட 50000த்தை நெருங்கிகிட்டு இருக்கு.”

“சூப்பர் ஸார். உண்மையில் உங்க மெழுகு சிலைகளின் உயிரோட்டம் அத்தனை அற்புதமாக இருக்கு. ஏதாவது வித்தியாசமான மெத்தட்ஸ் இருக்கா?!”

“இந்த உலகை  உய்விக்கிறதில் அன்புக்கு இருக்கிற முக்கியத்துவம் வேற எதுக்கு இருக்கு? நான் என் பெற்றோர்கிட்டே இருந்து இழந்த அன்பு. இன்னைக்கு பல தரப்பட்ட மக்கள் விதிவசத்தால தன் உறவுகளை இழந்து தவிக்கிற அந்த தருணங்களை நான் அவங்களுக்கு என் சிலை மூலமா உயிர்பித்து தருகிறேன் அதற்கு காரணம் அடிப்படையான அன்பு அவ்வளவுதான்.” பேசும் போதே தூரிகைநேசனின் கண்கள் பனித்தது.

மேலும் சில கேள்விகளும் பதில்களும் அந்த கருப்புநிற கேமிரா மனிதனின் கண்பார்வைகள் சுருட்டிக்கொள்ள மீண்டும் திரை ஒளிர்ந்தது. அதில் ரஷ்யாவாழ் இந்தியனான ஹரி பார்வைக்குக் கிடைத்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு பெண்மணி அமர்ந்த நிலையில் கனிவான பார்வையும் புன்னகையும் சுமந்தபடியே “வணக்கம்” என்று பொதுப்படையாக சொல்லிவிட்டு தூரிகைநேசனிடம் பார்வையைத் திருப்பினான்.

“இந்த சிலையை உங்களுக்கு நினைவிருக்கும் நீங்க முதன்முதலா எனக்காக செய்த மெழுகுசிற்பம். சாலைவிபத்தில் இழந்து போன என் அம்மா அவங்களை என் கூடவே வைச்சிப் பார்த்துக்கணுங்கிறது என்னோட விருப்பம் ஆனா என் வீட்டுப் பூஜையறையில் ஒரு கலசத்தில்தான் அவங்க என்கூட இருந்தாங்க தூரிகைநேசன் அவங்களை உண்மையா மாற்றியும் காட்டினார். இப்போ நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை அத்தனை பாராட்டும் நன்றியும் அவருக்குத்தான்.” அவன் கை கூப்ப தூரிகைநேசனும் எதிர்பாராத இந்த சர்ப்பிரைஸில் திகைத்துப் போயிருந்தான்.

“நன்றி, மிஸ்டர் மாதேஷ். இந்த காலை நான் எதிர்பார்க்கவில்லை. அம்மாவை இழந்த ஹரியோட நிலைமையைப் பார்க்கும் போது எனக்கு என்னோட சின்ன வயசு நினைவுதான் வந்தது. 16வயசுலே நான் அவங்களை இழந்தேன். எனக்கு அப்போ துணையா இருந்தது மகாபலிபுரத்தில் எங்க கேலரியில் இருந்த மண் சிற்பங்கள்தான் அதுதான் அப்பா எனக்கு விட்டுப்போன சொத்தும் கூட ஒருவகையில் இந்த ஓவியத்தில் இருந்து இந்த சிற்பக்கலைக்கு நான் மாற காரணமும் அப்பாவோட தொழிலை விஞ்ஞானரீதியா முன்னேற்றம் செய்யணுன்னுதான். ஹரியோட அம்மாவின் சிலையில் இன்னும் ஒரு அதிசயமும் இருக்கு அவங்க சிலை செய்யும் போது க்ளேவில் கூட அவங்க அஸ்தியும் கலந்திருந்தேன் அதனாலேயே இன்னும் உயிர்ப்பாய்.” என்று வெகு சாதாரணமாக சொன்னான் தூரிகைநேசன்.

‘மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்’ செளந்தர்ராஜனின் குரலில் ஏஸியின் குளுமையில் மிதமான ஒலியில் சொர்க்கத்தில் மிதப்பதைப் போல இருந்தது. எப்போதும் தான் காரில் பயணிக்கும் போது பழைய பாடல்களை ஒளிரவிட்டு கேட்பது தூரிகைநேசனின் இயல்பு. ஒருவித லயிப்போடு அவன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே சட்டென்று கார் ஒரு குலுக்கலோடு நின்றது.

“என்னாச்சு பாபு”

“தெரியலை ஸார் சட்டுன்னு நின்னுடுச்சி….” ஈஸியார் ரோடு அந்த இரவு நேரத்தில் தனித்து விடப்பட்ட கைம்பெண்ணைப் போல அசாத்திய மெளனத்தில் இருந்தாள். பாபு எத்தனை முயற்சித்தும் கார் நகர மறுத்தது.

“சார் நம்ம மெக்கானிக் கார்மேகம் இந்த ஏரியாவிலதான் ஒர்க் ஷாப் வைச்சிருக்கான் அவன் நம்பர் என்கிட்டே இருக்கு நான் கூப்பிடறேன்.” தன் நோக்கியாவினை உயிர்பித்து அவன் எண்களைத்தட்ட நாளை துவங்கப்போகும் விளையாட்டு வீரர் ஒருவரின் மெழுகுசிலைக்கான யோசிப்பில் இருந்தான். கிட்டத்தட்ட இருபது முழு நிமிடங்களை முழுங்கியபிறகு தட்தட் என்ற புல்லட்டின் ஒலி… கனத்த கார்மேகம் அகிருதியான உடலுடன் வண்டியை அணைத்தான்.

“என்னாச்சு….”

“தெரியலை நல்லாத்தான் போயிட்டு இருந்தது சட்டென்று அணைஞ்சிபோச்சு.” தூரிகைநேசனின் பார்வை கார்மேகத்தை அளந்தது. மளமளவென்று காரின் வயிற்றுப்பாகத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தான் அவன். அந்த ரெட் கலர் பியட் தூரிகைநேசனின் அருகே தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ள உள்ளேயிருந்து உற்சாகமாய் குரல் கொடுத்தார்கள் பாலாவும் துளசியும்…

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
 2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
 3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
 4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
 5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
 6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
 7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
 8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
 9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
 10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
 11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
 12. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
 13. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
 14. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
 15. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
 16. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
 17. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
 18. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
 19. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
 20. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
 21. நெருப்பு தூரிகைகள் :4  - லதா சரவணன்
 22. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
 23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்