தமிழுக்கு அப்பால் -3
இன்றைய இலக்கிய நூல்கள் வரிசையில் எனது கல்லூரிக்காலத்தில் படித்த ஒரு நூலை அறிமுகப்படுத்தலாம் என்று ஆவல். ஷேக்ஸ்பியரை அறிமுகம் செய்துகொள்ளாமல் ஆங்கில இலக்கியத்தை அறிந்தேன் என்று யாராவது கூற முடியுமா? உலகக் காவிய கர்த்தாக்களுக்கெல்லாம் தலைவன் கம்பன், உலக நாடககர்த்தாக்களுக்கெல்லாம் தலைவன் ஷேக்ஸ்பியர் என்றால் போதுமானது.
நாங்கள் கல்லூரியில் படித்த நாட்களில் பி.ஏ., பி.எஸ்சி படிப்புகளில் மாணவர்கள் இரண்டு ஷேக்ஸ்பியர் நூல்களையேனும் (அசலாக!) படித்தாக வேண்டும். பாடத்திட்டம் அதற்குத் தகவே அமைக்கப் பட்டிருந்தது. இன்று செமஸ்டர், டிரைமெஸ்டர் என்றெல்லாம் கல்லூரியின் ஒரே ஆண்டின் படிப்பையே இரண்டாக மூன்றாகப் பகுத்துப் படிக்கிறோம். ஆனால் எங்கள் காலத்தில் அப்படி இல்லை. (நான் 1968இல் பட்டப்படிப்பை முடித்த ஆள்). எங்களுக்கு பகுதி 1-ஆங்கிலம், பகுதி 2-தமிழ். பகுதி 3இல் மேஜர் பாடம் ஒன்று, ஆன்சிலரி பாடங்கள் இரண்டு உண்டு. அப்போது முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு ஆகிய இரு ஆண்டுகளுக்கான மொத்தப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் இரண்டாம் ஆண்டின் இறுதியில்தான் நடக்கும். மேஜர் பாடத்தில் ஏதேனும் சில தாள்கள், ஒரு ஆன்சிலரியின் அனைத்துத் தாள்களும், தமிழுக்கான தாள்கள், ஆங்கிலத்துக்கான தாள்கள் ஆகிய அனைத்தும் அப்போது தேர்வில் முடிக்கப்படும். இரண்டு ஆண்டுகள் படித்ததை ஒட்டுமொத்தமாக நினைவு வைத்திருந்து தேர்வு எழுத வேண்டும். மூன்றாவது ஆண்டில் மேஜர் பாடத்தின் பிற தாள்கள் மட்டுமே.
ஆக, இரண்டு ஆண்டுகள் ஆங்கில இலக்கியமும் தமிழ் இலக்கியமும் தொடர்ச்சியாகக் கற்பிக்கப்படும். அன்றைய பகுதி ஒன்று ஆங்கிலப்பாட முறைப்படி, முதல் ஆண்டில் ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகம் ஒன்று பாடத்திட்டத்தில் இடம் பெறும். ஏதேனும் ஒரு இன்பியல் நாடகத்தைப் பாடமாக வைப்பார்கள்.
இரண்டாம் ஆண்டில் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகம் – ஹேம்லட், ஒதெல்லோ இம்மாதிரி துன்பமுடிவு நாடகங்களில் ஏதாவதொன்று பாடமாக இருக்கும். இப்போது நினைக்கும் போது இவையெல்லாம் ஒரு வசந்தகால நினைவாகவே தோன்றுகின்றன. ஆம், தத்துவம், வரலாறு, உளவியல் முதற்கொண்டு, பெளதிகம், வேதியியல், கணிதம் என எந்தப் பட்டத்திற்காகப் படித்த மாணவனாயினும் இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களை மூலநூலாகப் படித்திருப்பான் என்பது ஓர் அரிய விஷயமல்லவா? பின்னாட்களில் பட்டப் படிப்பில் செமஸ்டர் முறை வந்தபோது இந்த ஷேக்ஸ்பியர் நாடகப் படிப்புகள் கைவிடப்பட்டன. ஒரு அரையாண்டிற்குள் (வகுப்புகள் தொடக்கம், ஆயத்தங்கள், தேர்வுகள் போன்றவை எல்லாம் போக, ஒரு செமஸ்டரின் உண்மையான பாடம் நடக்கும் கால அளவு மொத்தமே மூன்றுமாதம்தான் வரும்) எப்படி ஒரு ஷேக்ஸ்பியர் நூலைப் படிக்க முடியும்?
சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். நான் படித்தபோது, 1965-66இல் ‘ட்வெல்த் நைட்’ என்ற இன்பியல் நாடகத்தையும் 1966-67இல் ‘ஆண்டனி அண் கிளியோபாட்ரா’ என்ற துன்பியல் நாடகத்தையும் படித்தேன். முதலில் ட்வெல்த் நைட் (பன்னிரண்டாம் இரவு) என்ற ரொமாண்டிக் காமெடியைப் பார்ப்போம். (ரொமாண்டிக் காமெடி என்பது தமிழ்த் திரைப்படம் பார்க்கும் இரசிகருக்கு நன்கு அறிமுகமான விஷயம். தீவிரமான கதை ஒன்றும் இருக்காது. ஒரு காதல் கதை. ஒரு இனிமையான, அழகிய அல்லது அற்புதப் பின்னணியில் வைத்துச் சொல்லப்படும். அவ்வளவுதான். காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு போன்ற தமிழ்த் திரைப்படங்கள் மிக நல்ல உதாரணங்கள்.)
இனி ட்வெல்த் நைட் என்ற கதையைப் பார்க்கலாம். நமக்கெல்லாம் முக்கோணக் காதல் கதை நன்கு அறிமுகமான ஒன்று. இரண்டு தலைவர்கள் – ஒரு தலைவி, அல்லது இரண்டு தலைவிகள் – ஒரு தலைவன் என்று கதையில் அமைந்தால் ஒரு முக்கோணக் காதல்கதை உருவாகிவிடும். கடைசியில் இன்னொரு தலைவியோ, தலைவனோ நுழையும்போது அதில் இரண்டு காதல் ஜோடிகள் உருவாகி கதையின் சுப முடிவு ஏற்படும். (அப்படி இல்லையானால் ஒரு தலைவியோ தலைவனோ இறக்க வேண்டும், அது துன்பியல் ஆகிவிடும், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ போல). ஆனால் ட்வெல்த் நைட் ஒரு சுபமுடிவு முக்கோணக் காதல்கதைதான்.
வயோலா என்ற உயர்குலப் பெண் ஒருத்தி, கப்பல் உடைந்து இல்லிரியா என்ற ஒரு நாட்டிற்குள் வருகிறாள். அவளுடன் பயணம் செய்த அவள் சகோதரன் செபாஸ்டியன் இறந்துவிட்டதாக நினைக்கிறாள். புதிய நாட்டில் பெண்ணாக உலா வருவது சரியல்ல என்று கருதி ஆண்வேடம் தரித்துக் கொள்கிறாள். அங்கு தலைவனாக இருக்கக்கூடிய ஆர்சினோ என்பவனுக்கு அவள் செஸாரியோ என்ற பெயரில் வேலைக்காரனாகச் சேர்கிறாள். அவனைக் காதலிக்கிறாள். ஆனால் ஆர்சினோ, அதே ஊரில் இருக்கும் உயர்குடிப் பெண்ணான ஒலிவியா என்பவளைக் காதலிக்கிறான். ஒலிவியாவை அவன் அணுகும்போது அவள் அவனுக்குப் பிடி கொடுக்கவில்லை. ஆகவே தன்னிடம் ஏவலனாக இருந்த வயோலாவிடமே ஒலிவியாவுக்கு காதல் கடிதம் கொடுத்து, அவள் மனத்தைத் தனக்குச் சார்பாக மாற்றுமாறுகூறி அனுப்புகிறான் ஆர்சினோ. ஆனால் கடிதம் கொண்டுவரும் செஸாரியோவை (வயோலாவை) ஆண் என்று கருதி ஒலிவியா காதலிக்கிறாள். ஆக, வயோலா ஆர்சினோவை காதலிக்க, ஆர்சினோ ஒலிவியாவை காதலிக்க, ஒலிவியா வயோலாவை காதலிக்க (காதல் முக்கோணம் பிடிபடுகிறதா?) ஏக களேபரம்தான். கடைசியாக வயோலாவைப் போலவே அச்சு அசலாக இருக்கும் அவளது சகோதரன் செபாஸ்டியன் அதே இடத்திற்கு வந்துசேர முக்கோணம் நாற்கோணமாகிறது. ஆர்சினோ வயோலாவையும், வயோலாவின் ஆணுருவான செபாஸ்டியனை ஒலிவியாவும் மணக்க, எல்லாம் இனிதாக முடிகிறது! இதுதான் ட்வெல்த் நைட்-டின் கதை.
ஆமாம், இந்த நாடகத்துக்குப் பன்னிரண்டாம் இரவு என்ற தலைப்பு எதற்காக? பன்னிரண்டாம் இ்ரவு என்பது அக்காலத்தில் கிறிஸ்துமஸ் முடிந்து பன்னிரண்டாம் நாளான ஜனவரி 5 அன்று ‘எபிஃபனி இரவு’ என்ற பெயரில் கிறித்துவர்களால் கொண்டாடப்பட்ட ஒரு கும்மாளக் கொண்டாட்டம். (சிலர் ஜனவரி 6 இரவு என்றும் கொள்கிறார்கள்). அன்று விதிகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு வேலைக்காரர்கள், எஜமானர்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி வேறுபாடு இன்றி குடித்துக் கும்மாளம் அடிப்பார்கள். அன்றைய இரவில் ‘முட்டாள்தனமான’ இந்நாடகம் போடப்பட்டதாக சாமுவேல் பெபிஸ் என்ற வரலாற்றாளர் தெரிவிக்கிறார். அதனால் இந்த நாடகத்தின் தலைப்பும் ட்வெல்த் நைட் என்றே வந்துவிட்டது என்கிறார்கள்.
ட்வெல்த் நைட் நாடகத்தின் முக்கியக் கதைப் பகுதியைப் பார்த்துவிட்டோம். ஆனால் இதற்கு இணையாக ஒரு உபகதை – மற்றொரு கதைப்பகுதி இந்நாடகத்தில் இருக்கிறது. முன் கதைக்குச் சுவை கூட்ட இது பயன்படுகிறது. இதில் முக்கியக் கதாபாத்திரங்களாக, ஒலிவியாவின் வீட்டில் ஒரு கும்பலே இருக்கிறது. ஒலிவியாவின் குடிகார அங்கிள் சர் டோபி, அவனது முட்டாள் நண்பன் ஆண்ட்ரூ ஆகூசீக், அவளது புத்திசாலியான ஏவல்தோழி மரியா, வீட்டின் விதூஷகன் ஃபெஸ்டி, வீட்டின் ஏவலர் தலைவன் மெல்வோலியோ என இவர்கள் யாவும் இந்த துணைக்கதையின் உறுப்பினர்கள். இந்தத் துணைக்கதையின் முக்கிய நோக்கம் மெல்வோலியோ இளக்காரமாக எல்லாரையும் நடத்துவதால் அவனைப் பைத்தியக்காரன் ஆக்கிப் பழிவாங்குகிறாள் மரியா.
இடையில் செபாஸ்டியன் இறக்கவில்லை எனத் தெரிகிறது. அவன் தன் சகோதரி வயோலாவைத் தேடி வருகிறான். செபாஸ்டியனின் நண்பனாகிய அண்டோனியோ என்பவன் ஆர்சினோவின் எதிரி. செபாஸ்டியனை வயோலா (செஸாரியோ) எனக்கருதி காதலுக்காக இருவர்ப் போருக்கு (டியூவல்) அழைக்கும் ஆண்ட்ரூ அகூசீக்கின் கதை ஒருபுறம், ஆர்சினோவின் எதிரியான அண்டோனியோவை காவலர்கள் பிடித்துச் செல்ல அதில் ஏற்படும் குழப்பம் இன்னொரு புறம் எனக் கதை இறுதியில் சற்றே நீளுகிறது. இவற்றை எல்லாம் விரிவாகப் படிக்க வேண்டுமானால், நாடகத்தையே படிக்க வேண்டியதுதான். எப்படியோ எல்லா ‘முட்டாள்தனங்களும்’ ஒருவழியாக கதை இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு (ரிசல்யூஷன்) வந்து முடிகின்றன. ஷேக்ஸ்பியரின் மற்ற பல கதைகளைப் போலவே இந்தக் கதைக்கும் பல பரிமாணங்கள் இருப்பதாக விமரிசகர்கள் கூறுகிறார்கள்.
ஷேக்ஸ்பியரின் ஆஸ் யூ லைக் இட், எ மிட் சம்மர் நைட்ஸ்’ ட்ரீம் போன்றவையும் மிகச் சிறந்த ரொமாண்டிக் காமெடிகளாக உள்ளன. முடிந்தால் இவற்றைப் படித்துப் பார்க்குமாறு வாசக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அசலாகத்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. இவற்றின் விரிவான (!) கதைச் சுருக்கங்கள் இண்டர்நெட்டில் எங்குத் தேடினும் கிடைக்கும், தமிழிலும்கூடக் கிடைக்கும்!
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- விசாரணை – க. பூரணச்சந்திரன்
- பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
- ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
- இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
- பரஜன் - க. பூரணச்சந்திரன்
- வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
- மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
- கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
- சூளாமணி – க. பூரணச்சந்திரன்
- மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
- விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
- வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
- மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
- உடோபியா - க. பூரணச்சந்திரன்
- பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
- ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
- நீலகேசி - க.பூரணச்சந்திரன்
- சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
- பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
- ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
- மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
- பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
- நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
- விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
- குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
- சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
- ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
- தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
- ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
- சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
- அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
- பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
- செம்மீன் : க.பூரணச்சந்திரன்
- ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
- ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
- கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22) : க.பூரணச்சந்திரன்
- புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
- மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
- வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
- ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
- விசித்திர உலகில் ஆலிஸ் : க.பூரணச்சந்திரன்
- காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
- சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
- கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
- ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
- பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
- அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
- ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன்
- தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்