தமிழுக்கு அப்பால் 43
டாக்டர் பனீஸ்வரநாத் ரேணுவின் மைலா ஆஞ்சல் (கறைபடிந்த எல்லைப்பகுதி) என்பது இந்தியில் எழுதப்பட்ட முக்கிய நாவலாகும். பிரேம்சந்தின் கோதான் நாவலுக்கு அடுத்த நிலையில் இந்தியில் இரண்டாவது சிறந்த படைப்பாக வைத்து இது எண்ணப்படுகிறது. இந்த நாவலில் காணப்படும் அளவுக்குச் சாதி வெறியும் ஆணவக் கொலைகளும் தமிழகத்தின் தென் பகுதியில் காணப்பட்டாலும், இதே அளவுக்குச் சாதிப் பிளவுகளை, பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். சுமார் 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ள இந்த நாவலில் சாதிக்கு அப்பால் இயங்காதவர்கள் அபூர்வம்
.இது மைதிலி நாவல். மைதிலி இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக தனியாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதை இந்தி நாவல் என்றே சொல்வது மரபாக உள்ளது. மிதிலைப் பகுதியில் (பிஹார் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி) பேசப்படும் மொழி மைதிலி. இது ஒரு வட்டார நாவல். இந்த நாவல் 1950களின் தொடக்கத்தில் வெளிவந்தது.
இந்திய சுதந்திரம் கிடைத்த வேளையில் மிதிலை நாட்டார் கதைகளையும் பாடல்களையும் பலவிதக் காதல்கதைகளையும் கிராமப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டது இந்த நாவல். இதனால் கிராமப்புற வட இந்தியாவின் ஓர் அரிய சித்திரம் நமக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு தனிமனிதனின் கதையோ குடும்பத்தின் கதையோ அல்ல. ஒரு கிராமத்தின் கதை. எனவே இதில் தொடர்ச்சியான சிறுசிறு சம்பவங்கள் மட்டுமே உள்ளன. டாக்டர் பிரசாந்த்-கமலா, பாலதேவ்-லட்சுமி, காளிசரண்-மங்கலாதேவி, கலாசி-பூலியா என்ற நான்கு காதல் கதைகள் உள்ளன.
பிஹாரின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மேரீகஞ்ச் என்ற கிராமத்தில் கதை நிகழ்கிறது. 1946இல் இங்குள்ள ஆஸ்பத்திரியில் பிரசாந்த் குமார் என்ற லட்சிய பூர்வ டாக்டர் மலேரியா, காலாஅஜார் போன்ற நோய்களை குணப்படுத்த வருகிறான். கிராம மக்கள் அவனை மதிக்கின்றனர். (இவன் பூர்வகதை விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது. இவன் ஓர் அநாதைக் குழந்தை. பெற்றவள் கோசி ஆற்றில் போட்டுவிட்டுப் போய்விடுகிறாள். ஒரு நேபாளி பிராமணக் குடும்பம் தங்களது ‘ஆதர்ச ஆசிரமத்தில்’ இவனை விடுகிறது. அதை ஸ்நேகமயி என்பவள் மேற்பார்வை செய்கிறாள். அவள் வளர்ப்பினாலும் உதவியாலும் இவன் மெட்ரிகுலேஷன் படித்த பிறகு வாராணசிக்கு மருத்துவம் படிக்க வருகிறான். முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிப்பவன், ஒத்துவராமல் பிறகு பட்னா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கிறான். பிறகு கிராமப்புற மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் இந்த மூலைமுடுக்கு கிராமத்துக்கு வருகிறான்.) இந்த டாக்டர் ‘பாபு’ நோய்களை மட்டுமல்ல, மக்களின் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.
தாசில்தார் விசுவநாத் பிரசாத்தின் மகள் கமலாவை அவன் குணப் படுத்தும்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. கமலா கருவுறுகிறாள். இடையில் பிரசாந்த் ஒரு கம்யூனிஸ்ட் எனக் கைது செய்து பிறகு விடுவிக்கப்படுகிறான். கமலாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நீலோத்பல் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்படுகிறது.
பாலதேவ் ஓர் இடையன் (யாதவ்). காங்கிரஸ் கட்சிக்காரன். அருகிலுள்ள பூர்னியா நகரைச் சேர்ந்தவன். அவன் அழகான தூய இந்தியில் காந்தியத்தைப் பேசுகிறான். ஆனால் அவன் பேசும் இந்தி இந்த மக்களுக்குப் புரியாத ஒன்று. இந்த கிராம மக்களை வைத்து ஒரு சுதந்திர ஊர்வலம் நடத்துகிறான். மஹந்த் சேவாதாஸ் என்பவன் கபீர் மடம் என்ற ஒன்றை நடத்துகிறான். அதில் வேலை செய்யும் லட்சுமி என்பவளை வைத்திருக்கிறான். ஆனால் அவள் வேலையைவிட்டு பாலதேவுடன் வாழச் செல்கிறாள்.
காளிசரண் என்பவனும் இடைச்சாதிதான். அவன் சிறந்த மல்யுத்த வீரன். அவன் காங்கிரஸ் கட்சியை விட்டு சோஷலிஸ்ட் கட்சிக்கு மாறி, உழைப்பாளர்கள், சாந்தலர்கள் ஆகியோரை வைத்து ஓர் அமைப்பைக் கட்டுகிறான். சர்க்காவில் நூற்கும் மங்கலா தேவி என்ற ஆசிரியையைக் காதலிக்கிறான். ஆனால் சோஷலிஸ்டுகள் கைதுசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகிறான்.
கலாசி என்பவன் ஒரு ஓஜா. மந்திரவாதி. நன்றாகப் பாடுபவன், நன்றாக கஞ்சிரா வாசிக்கிறான். தத்மா பகுதியின் பூலியா என்ற பெண்ணைக் காதலித்து மிகுந்த முயற்சிக்குப் பின் மணக்கிறான்.
கிராம மக்கள் சாதிக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது, ஆண்களைப் பெண்கள் எதிர்த்துப் பேசக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர். உதாரணமாக மஹந்த் முழு கிராமத்துக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறான்.
பிராமணர்கள்- எங்களுக்குத் தனியான சிறப்பிடம் ஒதுக்கப்படாவிட்டால் சாப்பிடமாட்டோம்
சிப்பாய்கள்- நாங்கள் நாட்டுக்காக போராடியவர்கள். மற்றவர்களுடன் சரிசமமாக உண்ண எங்களால் முடியாது.
ஹிபரன் சிங்- எங்கள் சாதியினர் மாடுமேய்ப்பவர்களுடன் சமமாக அமர்ந்து உண்ணமாட்டார்கள்.
யாதவர்கள்- தானுக்குகளுடன் சமமாக அமர்ந்து யாதவர்கள் உண்ணமாட்டார்கள்.
விருந்து எவ்வளவு நன்றாக நடந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
இடையில் மஹந்த் சேவாதாஸ் இறக்க, காசியிலிருந்து வரும் ஒருவன் மஹந்த் ஆக முயலுகிறான். அங்கேயே பணியில் இருந்த ராமதாஸை காளிசரண் மஹந்த் ஆக்குகிறான். அவன் வைப்பாட்டியாக ராம்பியாரி என்பவள் தன் குழந்தைகளுடன் அந்த மடத்திலேயே வசிக்கிறாள்.
மாறிவரும் காலத்தை தாசில்தார் விஸ்வநாத் உணர்கிறான். அவன் செல்வாக்கும் சரிகிறது. தன் பதவியைத் துறந்து காங்கிரஸ் உறுப்பினன் ஆகிறான். இடையில் ஓர் இந்துத்துவ கும்பல் (கருந் தொப்பிக்காரர்கள்) நிலைபெற முயல்கிறது. அதன் தலைவனாக ராம் கிர்பால் சிங்கும் அவனைச் சேர்ந்த ராஜபுத்திரர்களும் இருக்கிறார்கள். சாந்தலர்களும் கீழ்ச்சாதியினரும் சோஷலிஸ்டு கட்சியில் சேர்கிறார்கள். ஆனால் அது ஊழல்மிக்க கட்சியாகிறது. பவன்தாஸ் என்ற குள்ளன் காந்தியுடன் இருந்தவன். அவன் மேரிகஞ்சிற்கு வருகிறான். அப்போதுதான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதை மேரீகஞ்சினர் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
காந்தி இறக்கிறார். கிராமத்தினர் துக்கம் கொண்டாடுகின்றனர். பவன்தாஸ், தன் கட்சியின் ஊழல், சாதிப்பற்று இவற்றால் மனம் நொந்து போராடும்போது ஒரு மாட்டுவண்டியின் அடியில் சிக்கி இறக்கிறான். அவன் உடல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தூக்கி வீசப்படுகிறது.
ஒரு நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன் அடிப்படையில் நிலவுரிமை கேட்டு சாந்தலர்களும் கிராமவாசிகளும் நீதிமன்றம் செல்கின்றனர். அவர்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இடையில் காங்கிரஸ் கட்சி ஜமீன்தாரி முறை ஒழிந்தது என்று அறிவிக்கிறது. கிராமத்து நிலம் ஏலம் விடப்படும்போது பணக்காரர்கள் நிலங்களை வாங்கிக் கொள்கிறார்கள். எங்கும் குழப்பமும் போட்டியும். விஸ்வநாத் பிரசாத் பழைய நிலவுடைமை முறைக்கே மாறுவோம் என்று சொல்லிப் பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். ஆனால் வன்முறை வெடிக்கிறது. சாந்தலர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். மிச்சம்மீதி இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
ஜோத்கி என்ற பார்ப்பனப் பூசாரி, கீழ்ச்சாதி மக்களால்தான் கலகமும் அமைதியின்மையும் ஏற்பட்டது, டாக்டர்கள் விஷ ஊசிபோட்டு நோயைப் பரப்புகிறார்கள், என்றெல்லாம் பிரசாரம் செய்கிறான். அவனை அனைவரும் நம்புகிறார்கள். டாக்டர் பிரசாந்த் ஊரைவிட்டு ஓடும் நிலை ஏற்படுகிறது. டாக்டர் இல்லாததால் ஜோத்கி ஒரு கைம்பெண்ணைப் பேய்பிடித்தவள் என்று சொல்லிக் கொல்லச் செய்கிறான். இப்படி நாவல் முடிகிறது.
இருந்தாலும் ஒரு உடன்பாட்டு மனநிலையில்தான் நாவல் முடிகிறது. டாக்டரும் விஸ்வநாத்தும் மனம் ஒன்றாகின்றனர். கிராம மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வநாத், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பிகா நிலத்தை தானமாக அளிக்கிறான்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- விசாரணை – க. பூரணச்சந்திரன்
- பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
- ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
- இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
- பரஜன் - க. பூரணச்சந்திரன்
- வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
- மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
- சூளாமணி – க. பூரணச்சந்திரன்
- மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
- விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
- வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
- மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
- உடோபியா - க. பூரணச்சந்திரன்
- பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
- ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
- நீலகேசி - க.பூரணச்சந்திரன்
- சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
- பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
- ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
- மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
- பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
- நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
- விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
- குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
- சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
- ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
- தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
- ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
- சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
- அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
- பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
- செம்மீன் : க.பூரணச்சந்திரன்
- ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
- ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
- கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22) : க.பூரணச்சந்திரன்
- புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
- மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
- வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
- ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
- விசித்திர உலகில் ஆலிஸ் : க.பூரணச்சந்திரன்
- காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
- சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
- கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
- ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
- பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
- அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
- ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
- ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன்
- தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்