அத்தியாயம் – 11
சிவந்த தன் விரல்களை தேய்த்துக் கொண்டாள் சாகித்யா. இலேசாய் தோல் வழுட்டிய இடத்தில் பற்றிக்கொண்டு எறிந்தது. “குமார் என்ன எறும்பு இது ?”
“சித்தெறும்பு மாதிரிதான் இருக்கு.ஆனா கொஞ்சம் பெரிசா என்னன்னு தெரியலை, சிலவகை எறும்புகள் கடிச்சா இப்படி எரிச்சல் அதிகமா இருக்கும். பயப்படாதீங்க நான் அதை தட்டிவிட்டுட்டேன்.உங்க ஸ்கின் ரொம்பவும் சென்சிடிவ் வலி அதிகமாக இருக்கோ என்னவோ.ரொம்பவும் எரிச்சல் இருந்தா ஆஸ்பிட்டல் போகலாமா ?”
“இல்லை குமார் வீட்டுக்குப் போகலாம். காலையிலே இருந்து ஒரே அலைச்சல் அலுப்பு அதிகமாக இருக்கு முடிஞ்சா நாளைக்கு கூட கால்க்ஷீட் கேன்சல் பண்ணிடுங்க குமார்”. ஏதோ பேச வாயெடுத்து “சரி மேடம் ” என்று தலையசைத்து வைத்தான். சாகித்யா மாடியேறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“மேடம் சாப்பிட ஏதாவது ?” செல்வியின் குரலில் கலைந்து,
“இல்லை செல்வி ஒண்ணும் வேண்டாம் நீ போய் தூங்கு “! என்றதும் செல்வி தயங்கினாள்.
“என்ன?”
“இல்லை மேம் ! ” “மேக்கப் ஏதும் கலைக்கல, டிரஸ் சேன்ஜ் பண்ணலை நான்….?”
“பரவாயில்லை பக்கத்து அறையிலேதானே இருக்க. நான் மேனேஜ் பண்ணிக்கறேன் . தேவைப்பட்டா கூப்பிடறேன். எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல இருக்கு !” சாகித்தயா சொல்லவும் செல்வி அகன்றாள். விருந்திலும் சரியாக சாப்பிடவில்லை கொஞ்சம் பாலாவது கொடுக்கலாம் என்று அடுக்களையின் பக்கம் போனாள் செல்வி.
எறும்பு கடித்த எரிச்சலை விடவும் சாகித்யாவின் மனதில் வேறொரு எரிச்சல் மண்டிக்கொண்டு இருந்தது. திரையில் பிரபலம் ஆகிய நாளில் இருந்தே அவளைக் கண்டதும் வயோதிகர்களில் இருந்து இளைஞர்கள் வரை அவளிடம் வழிவது வழக்கம் ஆனால் இந்த தூரிகைநேசன் அவளை எத்தனை இலகுவாக அலட்சியம் செய்து விட்டான்.எத்தனை திமிர் ?நானே நேராக போய் பேசியும் மறுத்துவிட்டான். அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? அந்த ஆஷாவா என் முன்னால் அவள் நிற்க முடியுமா?
மதன் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் கூட என் ஒரு பார்வை அவர்கள் மீது பட்டுவிடாதா,அவர்கள் இருக்கும் பக்கம் பார்த்து சிரித்துவிட மாட்டேனா என்று பலர் காத்திருக்க இந்த தூரிகைநேசன் மட்டும் ஏன் இப்படி ?
உன் இருளாடையை கிழித்தே தீருவேன் என்று சபதம் மேற்கொண்டதைப் போல விளக்குகளின் ஒளி வானத்தை நோக்கி மோகமாய் சீறிப்பாய்ந்தது. விதவிதமான திரவங்கள் அதரங்களின் சுவைக்காக காத்திருந்தது. எல்லா விருந்தினர்களும் விருந்தினை விமர்சித்தும் ரசித்தும் கொண்டிருக்க மதன் மட்டும் படு டென்ஷனாக இருந்தான். விருந்தினர்கள் எல்லாம் வந்தாச்சு .விழாவின் முக்கிய விருந்தினர்களில் ஒருவரான தூரிகைநேசன் கூட வந்தாகிவிட்டது.இன்னமும், அவள் வரவில்லை. அத்தனை முறை சொல்லியும் ஏன் இந்த தாமதம்? அவனின் கண்கள் வாசலையே பார்த்துக் கொண்டு இருக்க, அவனின் எதிர்பார்ப்பினை பொய்யாக்காதபடி ரெட் கலர் ஆடி கார் உள்ளே நுழைந்தது.
ஹை ஹீல்ஸ் சப்திக்க கையில் பூங்கொத்துடன் இறங்கின சாகித்யா மின்னும் விளக்குகளுக்கு எல்லாம் சவால் விட்டாள் தன் பளீர் மேனியால்.
“மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் மதன். ஸாரி கொஞ்சம் லேட்டாகிடுச்சு.”
“பரவாயில்லை உன் பிரசன்ஸ் எனக்கு சந்தோஷம். வெல் இன்னொரு முக்கியமான ஆளை உனக்கு அறிமுகப்படுத்தனும்!” அவளை அழைத்துக் கொண்டு தூரிகைநேசனிடம் சென்றான் மதன்.
“இன்னைக்கு என்னோட பிறந்தநாள் விழாங்கிறதை விடவும் என்னோட அம்மாவோட சிலைதிறப்பு விழாதான் ஹைலைட். இவர் பெயர் தூரிகைநேசன்.கைதேர்ந்த சிற்பி உயிரோவியமாய் மெழுகு சிலைகளை அமைப்பதில் எக்ஸ்பர்ட்! போன வருடம் நமக்கெல்லாம் சிங்கப்பூரில் ஒரு விருது விழா ஏற்பாடு செய்திருந்தாங்களே உன்னால கூட வரஇயலாமல் போய்விட்டது. அன்னைக்குத்தான் நான் தூரிகைநேசனை சந்தித்தேன். அவரோட திறமை எனக்கு வியப்பை வளர்த்தது. ”
“உனக்கு செலிபிரட்டி மதனைத்தான் தெரியும். ஆனா சின்னவயசிலே செத்துப்போன அம்மாவின் அன்புக்காக ஏங்குகிற ஒரு ஜீவனைத் தெரியாது. ஒரு சின்ன போட்டோ மூலமா எனக்கு துணையா இருந்த அம்மா இப்போ உயிர்ததும்பும் ஒரு சிலையாவே இருக்காங்க. அதுக்குக் காரணம் தூரிகைநேசனின் கைகள்தான்.”
“கிரேட் மதன்…!” ” நானும் இவருடைய பேட்டி ஒன்றை சமீபத்தில் டிவியில் பார்த்தேன், ரியல்லி எக்ஸ்லண்ட் இன்று மாலை அவருடைய கேலரிக்கு செல்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைத்திருக்கிறேன்.”
“இஸிட்….!” மதன் ஆச்சரியப்பட்டான்.
” சாகி உன்னோட கையால அம்மாவோட சிலையை நீ திறக்கணும் !” சாகித்யா அலட்சியமாக பார்வையை செலுத்திக்கொண்டு, இருந்த தூரிகைநேசனை ஒரு பார்வையைப் பார்த்தபடியே, சிலையின் முன்னால் இருந்த திரையை அகற்றினாள் கைத்தட்டல்கள் பறந்தது.
வெண்ணிற குஷன் ஷோபாவில் அமர வைக்கப்பட்டு இருந்தது அச்சிலை. ரோஜாவண்ணத்தில் புடவையணிந்து வழுவழுவென்ற சருமத்துடன் பளீரிட்ட நகங்கள் ப்ரவுன் நிற கண்கள்,கருணையும் அன்பும் வழிந்தது. அவை உயிர்ப்புடன் இருப்பதைப் போல தோன்றியது ஒரு கணம். நெற்றியில் திருநீறு மெல்லிய கோடு இழுத்திருக்க, முகவாயின் ஓரம் ஒற்றைப் பொட்டாய் மச்சம் புன்னகையை ஒளிரவிடும் உதடுகள் என அச்சிலை இல்லையில்லை அவ்வுருவம் அமர்ந்திருந்தது.
பார்த்தவர்கள் அனைவருமே ஓஹோ என்று சொல்லை ஆச்சிரியமாய் எழுப்பினார்கள். இத்தனை தத்ரூபமாய் ஒரு சிலையை செய்ய இயலுமா ? அதிலும் அதன் கை மற்றும் முகப்பகுதிகள் அனைத்தும் ஒரு உயிருள்ள மனிதனின் தோல் எத்தனை மென்மை. அந்த கைகள் முழுவதும் சிற்சில மென் முடிகள் பசுமஞ்சள் நிறத்தில் முகம் என சாகித்தயா விழி விரித்தாள். அற்புதம் இத்தனை உயிரோட்டமா ?!
“க்ரேட் மிஸ்டர் தூரிகைநேசன் ! ” உங்களுடைய டிவி பேட்டியைப் பார்க்கும்போது எனக்கு வியப்பா இருந்தது. இருந்தாலும் எனக்குன்னு ஒரு சிலை செய்யணுமின்னு ஆசை வந்தது. ஆனா மதனோட அம்மாவின் சிற்பத்தைப் பார்த்ததும் அந்த ஆசை அடக்க முடியாததாகிவிட்டது. எனக்கும் இதைப்போன்ற சிற்பம் செய்யணும்.அதற்கு நான் என்ன செய்யணும்!”. படபடவென்று அவளின் விழிகள் பட்டாம்பூச்சியாய் துடித்து உதடுகள் வளைவில் மென்சிரிப்புடன் அவள் கேட்க, யாராய் இருந்தாலும் அடிமையாகிப் போய் இருப்பார்கள்.
ஆனால் தூரிகைநேசன் மென்மையாய் அவளைப் பார்த்து, “அதற்கென்ன எங்கள் கேலரிக்குத்தான் வரப்போகிறீர்களே அப்போது பேசிக் கொள்ளலாம் !” என்று தவிர்த்தான்.
அதன் பிறகு பிறந்தநாள் விருந்து களை கட்டத் தொடங்கியது. சிலர் தூரிகைநேசனை சுற்றியும் மதனைச் சுற்றியும் நின்றிருந்தனர். சாகித்யாவைச் சுற்றி இரண்டு புரோடியூசர்கள் தங்கள் படத்தில் நடிக்கச்சொல்லி மதனிடம் சிபாரிசுக்காக கேட்டு இருந்தார்கள்.
“சாகி இந்த பிறந்தநாளுக்கு நீ வந்தது ரொம்ப சந்தோஷம் என்னோட சிறிய பரிசு!” ஒரு சின்ன வெல்வெட் பெட்டியில் வைர நெக்லஸ் அதற்கு தோதான காதணியும் இருந்தது.
“நல்லாயிருக்கு மதன்.பிறந்தநாள் உங்களுக்குத்தானே பரிசு எதற்கு எனக்கு ? ” என்றாள்.
“பிகாஸ் ஐ லைக் யூ பேபி !” “என்னோட இந்த பிறந்தநாள் விரைவில் நம் திருமண நாள் விருந்தாக மாற ஒரு அச்சாரம் !” என்று அவளின் கைகளைப் பற்றிட சட்டென்று உதறிக்கொண்ட சாகித்யா அருகில் நின்ற தூரிகை நேசனைப் பார்த்தாள்.
பின், ” மதன் ஏற்கனவே நீங்க நிதானத்தில் இல்லை. இப்போதைக்கு இந்த விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டாம்.” ” டிசைட் சம் அதர் டைம் ?!” என்றாள். ஆனால் இந்த வாய்ப்பினை விடுவதாக மதன் இல்லை.
“மிஸ்டர் மதன் தேங்கஸ் பார் இன்வைட்டிங் மீ அப்போ நான் கிளம்பட்டுமா ? ” என்று தூரிகைநேசன் இடையில் வர சாகித்யா அந்த நிமிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு மதனிடம் இருந்து பிரிந்து கூட்டத்தில் கலந்தாள்.
“ஓகே…ஸார்” ” உங்க வருகை எனக்குப் பெருமை. !”என்று சந்தோஷமாய் வழியனுப்பிவிட்டு சாகித்யாவைத் தேடி நகர்ந்தான். தூரிகை நேசனுக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் ஒரு முறை மதனின் அன்னையின் சிற்பத்தைப் பார்த்துவிட்டு அருகிலிருந்த பணியாளனை அழைத்தான்.
மாதம் ஒரு முறை இந்த சிலையை ஒரு சொல்யூஷன் கொண்டு துடைக்கவேண்டும் இல்லையெனில் அதன் சதைப்பகுதியின் ஒளி மங்கிவிடும். இது இம்போர்ட்டட் மெழுகு சிலை டெலிவர் செய்யும்போதே அதை எங்க ஆட்கள் தந்திருப்பார்கள். சந்தேகம் ஏதாவது இருப்பின் அலுவலக அட்டையில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று நகர்ந்தான்.
வாசலை அடையும்போதே காரோட்டி கண்ணசைவில் ஒரு நொடி நிதானித்து பின் பின்பக்கத்து இருக்கையை நிரப்பியிருந்த சாகித்யாவை வியப்பாய் பார்த்தான் “நீங்க….?!”
“ஸாரி மிஸ்டர். தூரிகைநேசன் ! உங்க அனுமதியில்லாமல் உங்க வண்டியில் அமர்ந்தது தவறுதான். இருந்தாலும் வேற வழி தெரியலை, கொஞ்ச நேரத்திற்கு முன்னால் மதன் பேசியதை நீங்களும் கேட்டீர்களே ? அவர் இப்போது நிதானத்தில் இல்லை. நான் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையிலும் இல்லை.அதனால கிளம்பிடலான்னு முயற்சித்தேன். அவர் என்னைக் காணாமல் என்னுடைய காரின் அருகிலேயே நிற்கிறார். ஏற்கனவே பிரஸ் பீப்பிள்ஸ் வந்திட்டாங்க ஏதாவது அசம்பாவிதம் நடந்திட்டா அது …?!”
“புரிகிறது….?!” என்றான் தூரிகைநேசன் அமர்த்தலாய் !
“நன்றி நானே உங்க கேலரிக்கு வர அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தேன்.அதனால என்னை ….. !ஸாரி நீங்க வேற எங்காவது போகவேண்டியிருக்கிறதா ?”
நிலைமையை உத்தேசித்து, ” பரவாயில்லை அங்கேதான் போகிறேன் வாங்க !” என்று முன்புறம் அமர்ந்து கொண்டான். சாகித்யாவிற்கு அவன் பின்னால் அமர்ந்து தன்னுடன் பேசிக்கொண்டே வருவான் என்ற நினைப்பு பொய்த்துப் போனதில் சற்றே வருத்தமே, அதிலும் வளவளவென்று எந்த பேச்சும் இன்றி 20 நிமிடப் பயணமும் அமைதியிலேயே கழிந்தது.
சாகித்யா ஏதாவது கேட்டால் மட்டும் பதில் பேசினான். மத்தபடி அமைதியயே உருவாகியிருந்த அவனை ஏனோ உடனே பிடித்துப்போனது அவளுக்கு. உருவத்தில் மட்டும் அல்ல குணத்திலும் அவன் ஒரு ஜெம் என்று தோன்ற தூரிகை நேசனின் மேல் உள்ள கிரேஸ் அதிகரித்தது. ஆனால் அதே கிரேஸ் ஆஷாவை அவன் பெருமையாய் பேசியதும் அவளிடம் எல்லாவற்றையும் விசாரித்துக்கொள்ளுங்கள் என்று தன்னை கழட்டிவிட்டதையும் நினைக்கும் போது எரிச்சல் மூண்டது. அப்படியென்ன அந்த பெண்ணைவிடவும் தான் இளப்பம்.
தமிழ்த்திரையுலகின் முண்ணனி நட்சத்திரம் மதனே என் பின்னால் சுற்றும் போது இவனுடைய அலட்சியம் புதிதாகவே இருக்கிறது. எப்படியும் அவனை தன் வசப்படுத்த வேண்டும் என்ற யோசனைகளின் ஊடேயே முதுகில் சுருக்கென்று ஒரு வலி. என்ன இது ? இன்னும் ஆடைமாற்றாமல் அப்படியே அமர்ந்திருப்பது நினைவுக்கு வந்தது. தலையலங்காரத்தை கலைத்தாள் மறுபடியும் ஏதோ ஊர்வது போலவும், சுருக்கென்று ஊசிவைத்து குத்துவதைப் போலவும் வலித்தது. என்னயிது பின்பக்கம் கையை நெருக்கி பிராக்கின் நாட்டைக் கழற்றப்போக உச்சப்பட்ச வலியில் தன்னை மறந்து “அம்மா……?!” என்று கத்தினாள் சாகித்யா.
வெதுவெதுப்பான கண்ணாடிப் பால்தம்ளரைக் கையில் எடுத்து அறையின் கதவின் மேல் கைவைத்த செல்வி சட்டென்று அதை உதறிவிட்டு அறைக்குள் ஓட சாகித்யா நிலை சொல்லவொண்ணா வியப்பைக் கொடுத்தது. கூனிக்குறுகி நெளிந்து வலியில் துடித்துக் கொண்டு இருந்த அவளைக் கண்டதும், ” மேடம் என்ன செய்கிறது உங்களுக்கு ?”
“என் முதுகில் ஏதோ குத்துகிறது செல்வி வலி உயிர் போகிறது ?!” என்றவளை அமர்த்தி பரபரவென்று உடைகளை கழற்றி வெற்று முதுகினைப் பார்த்தாள். சிகப்பும் கருப்புமாய் ஏதோவொன்று சிறு புள்ளியாய் தெரிந்தது. என்னயிது அந்தப் பகுதியில் இருந்து ரத்தம் மெலிதாய் வழிந்து கொண்டு இருக்க, சாகித்யா முதுகை அசைத்தாள் வேகமாக இருங்கம்மா ஏதோ வண்டு போல இருக்கு என்று செல்வி அதைக் கையால் எடுக்கப் போய் தோற்றுப் போனாள்.
என்ன மேடம் இது ரொம்பவும் ஸ்டிப்பா இருக்கு எடுக்க முடியலை. இதுபெயப்படி இங்கே வந்தது. பலங்கொண்ட மட்டும் செல்வி எடுத்துப்போட சாகித்யாவின் சதைத்துணுக்குகளை தன் நுனியில் சுமந்தபடி அந்த எறும்பு வெளியில் வந்தது. காருக்குள் சாகித்யாவின் விரல் இடுக்கை பதம் பார்த்த அதே எறும்பு. “இது இது…” காருக்குள் இருந்தது செல்வி இங்கேயெப்படி ?” ” அம்மா ஆ…. !”என்று வலியில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் சாகித்யா.
பின்புறம் அவள் முதுகில் ஒரு சிறுதுளையினைப் போட்டு துருவி எடுத்திருந்ததைப் போல அந்த பூச்சியை எடுத்த இடம் நாலானா அளவிற்கு ஓட்டையாய் இருந்தது வலிமிகுதியிலும் மயங்கினாள் சாகித்யா…..?! செல்லி குமாரை அழைக்க மிக மிக மெதுவாய் தரையில் இருந்த ராஜஸ்தான் கம்பளத்தின் ஒரு ஓரத்து நூலிழைக்குள் தன் உடலை நுழைத்துக் கொண்டது அந்த எறும்பு. நிதானமாக தற்போது எடுத்துக்கொண்ட சாகித்யாவின் சதைத்துணுக்குகளை சுவைக்க ஆரம்பித்தது.
டாக்டர் சதாசிவத்தின் முன்னால் அமர்ந்திருந்தாள் துளசி “ஸார் கார்மேகம் விஷயத்திலே நடந்தது எல்லாமே தப்பா இருக்கு ? இறந்துபோன அவனோட பாடியைக் காணோம். ?! இது மீடியாவுக்கு தெரிந்தா எத்தனை அவமானம். ?இவ்ளோ பெரிய மருத்துவமனையில் இருந்து ஒரு பிணம் எப்படியோ காணாம போயிருக்கு ஆனா அதுக்கான ரெக்கார்ட்ஸ் எதுவும் இல்லை. ?!”
“துளசி சாதாரணமா விபத்து ஏற்பட்டா ஒரு காவல்துறை அதிகாரிக்கு தகவல் சொல்லி அவரிடம்தான் இறந்தவரின் பொருட்கள் ஒப்படைக்கப்படும் அது விபத்தா இல்லை கொலையான்னு அவங்கதான் முடிவு பண்ணுவாங்க. சம்பந்தப்பட்ட பாடி அடையாளம் தெரியாம இருந்தா போலீஸ் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்படும் பதினைந்து நாட்களுக்கு பிறகு ஏதாவது தொண்டு நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் அவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து இறுதி சடங்கை செய்ய ஆவண செய்வார்கள். ஒரு போலிஸ் ஆபிசர் உங்களுக்கேத் தெரியும். ?!”
“தெரியும் டாக்டர் ஆனா கார்மேகத்தின் பாடி நாலுநாளுக்குள்ளே எப்படி வெளியே போச்சு. ?”
“இதுக்கு பதில் பாலாதான் சொல்லணும் துளசி. நான் ஆகாஷை கூப்பிட்டு விசாரித்தவரைக்கும் பாலாவின் மேற்பார்வையில் தான் கார்மேகத்தோட பாடி வெளியே போயிருக்கு. நேசக்கரங்கள்ன்னு ஒரு அமைப்புக்கு அதை அவர் தந்திருக்கிறார். அன்றைய தேதியில் அதே அமைப்புக்கு ஒரு பத்து பதினைந்து பிணங்கள் சென்றிருக்கு அதில் கார்மேகத்துடையதும் ஒண்ணு ஆஸ்பத்திரியின் வளாகத்தில் தான் எல்லா பிணங்களையும் ஏற்றியிருக்காங்க பாலாவின் கையெழுத்து பேரில் ஆகாஷ் அதை எக்ஸிக்யூட் பண்ணியிருக்கான் அவனை வரச்சொல்லியிருக்கிறேன் நீங்க விசாரிக்கலாம்.!” அவர் சொல்லி முடித்த விநாடி ஆகாஷ் உள்ளே நுழைந்தான்.
அவன் கையில் ஒரு பைல் முளைத்திருந்தது.
“வணக்கம் மேம் ! இதுதான் அந்த பைல் அன்றைய தேதியில் நேசக்கரங்கள் அமைப்பிற்கு நாம கொடுத்த அடையாளம் தெரியாத பாடிகளின் விபரம் இதில் கடைசியாய் கார்மேகத்தின் பெயரும் விபரங்களும் இருக்கு !”
ஆகாஷின் கையிலிருந்த பாரத்தை வாங்கிப் பார்த்தாள் அதில் கடைசியில் கார்மேகத்தின் பெயருக்கு கீழே பாலாவின் கையொப்பம் இருந்து கூடவே நேசக்கரங்களின் முகவரியும் திரிபுரசுந்தரி என்ற பெயரும் அடுத்த விசாரணையை அங்கிருந்துதான் தொடங்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
“மேடம் ஒரு சின்ன விஷயம் சார் கையெழுத்து போட்ட பார்ம் வைச்சித்தான் புரோசீட் பண்ணோம் இந்த நேசக்கரங்கள் அமைப்பு கடந்த இரண்டு மூணு வருடங்களா இப்படி அநாதைபிணங்களை எடுத்து அடக்கம் பண்ற வேலைகளை செய்யறாங்க. உள்ளே வாங்க !?” என்று குரல் கொடுக்க வாட்ச்மேன் உடையில் ஒரு 50வயது மதிக்கத்தக்க நபர் உள்ளே நுழைந்தார்.
“அன்னைக்கு அவங்களோட வண்டி ஐந்து வந்தது முதல்ல பதிமூணு பிணங்களை ஏற்றிக்கொண்டு போனாங்க அப்போ நானும் கூட இருந்தேன். அதற்கு பிறகு ஒருமணிநேரம் கழித்துதான் அவங்க வண்டி திரும்பியும் வந்ததா நம்ம வாட்ச்மேன் சொன்னாரு.?!”
துளசியின் பார்வை அவர் மேல் விழுந்தது. ” நான் ஒரு கேஸில் பிஸியா இருந்ததால கார்மேகத்தோட பாடியை நேசக்கரங்கள் அமைப்பிற்கு இவர்தான் டெலிவர் பண்ணியிருக்காரு.!?”
“உங்க பேரு…?!”
“முரளிங்க …!”
முரளி…?! அன்னைக்கு என்ன நடந்தது.?!”
“மேடம் அன்னைக்கு நான்தான் கேட்லே இருந்தேன் வழக்கமா வரப்போலத்தான் திரிபுரசுந்தரி மேடம் அவங்க வண்டிங்க பிணங்களை ஏத்திட்டு இருக்கும்போதே மேடம் அவசரமா வெளியே போகணும் முரளி அதனால நீங்க கொஞ்சம் கூட இருந்து ஏத்திடுங்கன்னு சொல்லிட்டு கையெழுத்தைப் போட்டுட்டு கிளம்பிட்டாங்க. நானும் வழக்கம் போல வண்டியில் ஏற்றிக்கிட்டு இருந்தேன். கொஞ்சநேரத்தில் மறுபடியும் வண்டி வந்தது கார்மேகத்தோட பாடியை எடுக்க பார்மோடு ஆனா வழக்கமாக வர்ற திரிபுரசுந்தரிமேடம் வரலை, வேற யாரோ வந்தாங்க ?!”
“வந்தது யாருன்னு நீங்க விசாரிக்கலையா ?”
“விசாரிச்சேன் மேடம் திரிபுரசுந்தரி மேடம் இடுகாட்டுலே இருக்காங்கன்னு சொன்னாங்க. அதனால அவசரமா நான் கொடுத்து விட்டேன். அந்தாளு கையெழுத்துப் போட்டு வாங்கிட்டுப் போனான். !”
“வந்தவனை இதுக்கு முன்னாடி அந்த நேசக்கரங்கள் அமைப்பில் பார்த்திருக்கீங்களா?!”
“இல்லை மேடம் ! புதிய ஆள் அவன்தான் வண்டியை ஒட்டிவந்தான். வண்டியிலே நேசக்கரங்கள்ன்னு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. கூடவே அந்த அமைப்பின் யூனிபார்மும் அவன் போட்டு இருந்தான் அதிலும் ஸ்டிக்கர் இருந்தது. பாரத்திலே கார்மேகம் பேரும் இருந்து சீப் டாக்டரோட கையெழுத்தும் இருந்ததால நான் பிணத்தை டெலிவரி பண்ணிட்டேன்.?!”
“அவன் எப்படியிருந்தான் இன்னொரு முறை பார்த்தா அடையாளம் சொல்ல முடியுமா ?”
“கருப்பா குள்ளமா இருந்தான். வெள்ளை கலர் யூனிபார்ம் தொப்பி போட்டு இருந்தான் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி பாதி முகம் அதுவே மறைச்சிகிடுச்சி வழக்கமாக வர்ற வண்டிதானேன்னு நான் அனுப்பிட்டேன் மேடம் !”
“வந்த வண்டிகளோட நம்பர் பிளேட் இருக்கா.?”
“இதோ அந்த ரெக்கார்ட் புக்கிலே இருக்கு மேடம் !”
அவள் ரெக்கார்ட் புக்கில் வண்டியின் எண்கள் குறித்திருந்த பக்கத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டாள். சதாசிவத்தைப் பார்த்து, “சார் நான் இந்த நேசக்கரங்கள் அமைப்பின் தலைவி திரிபுரசுந்தரியைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன் !” என்று எழுந்தாள் துளசி.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
- நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் :4 - லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்