அத்தியாயம் – 14
“டேய் ஏன் பத்துதடவை பிரேக் போடறே ? ராஸ்கல். ஆளேயில்லாத இடத்திலே இத்தனை பிரேக் தேவையா ? இதுக்குத்தான் உன்கூட வர்றதேயில்லை ”.
“தியா டார்லிங் என்னை மாதிரி பசங்க வண்டி வாங்குறதே உங்களை பக்கத்துலே …..”
“போதும் போதும் ராகுல். வண்டியைப் பார்த்து ஓட்டு, முத முறையா அதுவும் பிறந்தநாள் அதுவுமா உன்கூட வந்திருக்கிறேன். ஏதாவது வம்பு வர்றதுக்கு முன்னாடி சரியான நேரத்துக்கு வீட்டுக்குப் போகணும்”.
“அதான் நாலு மணிக்கு கூட்டிப்போய் விட்டுடறேன்னு சொல்லியிருக்கேனே ? பிறந்தநாள் அதுவுமா போரடிக்காதே டார்லிங். இன்னைக்கு நாலு மணி வரைக்கும் நீ என் கன்ட்ரோல்”. தியாவின் கரங்களில் முதுகின் விலாவில் வலிக்காமல் குத்துக்களை வாங்கினான்.
பைக் சற்றே ஆட்டம் கண்டது. பயந்து போய் மேலும் அவள் முதுகில் ஒண்டினாள். தேங்யூ டியர் என்று வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான் ராகுல். அந்தச் சந்தின் வளைவில், கண்களுக்கு மசமசப்பாக ஒரு கருப்பு நிற வண்டி மரத்தின் அருகிலே சற்று முன்பு அவள் அவன் முதுகில் ஒட்டியிருந்தாற்போல ஒட்டியிருந்தது.
“ஏய் வண்டியை ஸ்லோ பண்ணு ஏதோ ஆக்ஸிடெண்ட் ராகுல்” வண்டியை நிறுத்திவிட்டு,
“தியா யாராவது உயிரோட இருக்காங்களான்னு பார்க்கலாம்”
“இல்லை ராகுல் போகலாம், இது ஆக்ஸிடெண்ட் நாம பார்த்து தகவல் சொல்லப் போக அப்பறம் நம்ம இரண்டு பேரும் போலீஸ் கோர்ட்டுன்னு அலையணும், அதுலேயும் நம்மைப்பற்றி வீட்டுக்கு தெரிந்திடும் அது நல்லதுயில்லை அதனால கிட்டே போக வேண்டாம். நாம போயிடலாம் எனக்கு பயமா இருக்கு .”
“சும்மாயிரு தியா ஒருவேளை அந்த வண்டியிலே யாராவது உயிரோட இருந்து நாம பார்க்காம போயிருந்தா அது காலத்துக்கும் குற்றவுணர்ச்சியா மாறிடும் ”. ராகுல் மெல்ல வண்டியின் அருகில் வந்தான் கறுப்பு நிற ஸ்டிக்கரினால் வண்டியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை உள்ளே நிழலாய் கார் டிரைவிங் சீட்டில் அமர்ந்திருப்பதைப் போல தோன்றியது. தியா டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டு இருக்க, தன் சட்டையின் மேல்பகுதியில் இருந்த செல்போனில் 100 அழுத்தினான்.
தன் முன் ஆறிப்போகும் பக்குவத்தில் இருந்த ஆடையேறிய காபியினை நிர்வாணமாக்கி அருந்தினார்கள் தூரிகைநேசனும், துளசியும். பாலா அவனின் கட்டிலில் மயக்கத்தில் இருந்தான். “எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு நேசன் எல்லா விஷயத்திலும் பாலா கனெக்ட் ஆகிறார். அவரை எப்படி இதிலிருந்து வெளியே கொண்டு வரப்போறேன்னு தெரியலை”.
“நீ சொல்றதெல்லாம் கேட்கிறதுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியா இருக்கு ?! நம்ம கேலரி தொடங்கி பத்து வருடங்கள் முடியப்போகுது அதை கொண்டாடுவதற்காக ஒரு சின்ன விழா ஏற்பாடு செய்திருக்கிறேன் உன்னையும் பாலாவையும் அதற்கு அழைக்கத்தான் போன் பண்ணினேன். பாலாவோட போன் ஸ்விட்ச் ஆப்ன்னு வந்தது”.
“வாழ்த்துகள் நேசன். நல்ல விஷயம் சொல்ல வந்து இருக்கிறீங்க ஆனா என்னாலே அதுக்கு ரியாக்ட் பண்ண முடியலை. ஒரு கேஸா இதை ஹாண்டில் பண்ணியிருந்தா இந்நேரம் ஏதாவது க்ளூ கிடைச்சிருக்குமோ என்னவோ ? பாலாவும் இதில் இன்வால்வ் ஆகியிருக்கிறதால கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகுது ”.
“ பாலாவுக்கு எதனால இந்த மனநிலை மாற்றம் ?”
“பாலா சில நேரங்களில் ஓவரா தன்னை இம்பேக்ட் செய்துக்குவார் அதாவது தான் படிக்கிற புத்தகங்கள் பார்க்கிற சினிமாக்கள் இதிலெல்லாம் அவரே இருப்பதைப் போல, அப்படித்தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ரியாக்ட் ஆகியிருக்கிறார். நடந்த நிகழ்வுகள் அவரை அப்படி ரியாக்ட் செய்ய வைத்திருக்கலான்னு டாக்டர் சொல்றார். ஒரு சைக்கார்ட்ரிஸ்ட்கிட்டே ட்ரீட்மெண்ட் எடுக்கலான்னு இருக்கேன் பாலாவோட டீன் சதுர்வேதி சஜஸ் பண்ணியிருக்கார். நேத்து நடந்த நிகழ்வுக்குப் பிறகு பாலா ஆஸ்பிட்டலில் இருக்கிறது அத்தனை நல்லதா படலை அதனாலதான் வீட்டுக்கு கூட்டி வந்திட்டேன்”.
“எல்லாம் சரி துளசி இந்த பிளாட்லே பாலா மட்டும்தானே தனியாத் தங்கியிருக்கான். இந்த நிலைமையில் அவனைக் கவனிக்க ஆள் இருக்கணுமே ”.
அதே நேரம் டீக்கோப்பைகளை சுத்தம் செய்ய வந்த பெண்மணி ,
“துளசி வீட்டையெல்லாம் சுத்தம் செய்தாச்சு அடுக்களையைக் கூட்டிப் பெருக்கி கொஞ்சம் மிளகுரசமும் மல்லித்துவையலும் அரைச்சிருக்கிறேன் வேற ஏதாவது செய்யவா ? ”
“வேண்டாம்மா, இதே போதும் பாலாவுக்கு லைட் புட்தான் தரச்சொல்லியிருக்கிறார் டாக்டர். அவனைத் தொந்தரவு செய்யாதீங்க அவன் தூங்கட்டும் ”.
“ நான் ஏம்மா தொந்தரவு செய்யப் போறேன், நல்ல பிள்ளை நைட்டெல்லாம் கண்முழிச்சிட்டு ஏதேதோ புஸ்தகம் எல்லாம் படிக்கும் சில நேரம் எனக்கு கூட கதை சொல்லும் பூரா பேய் கதை புஸ்தகம்தான். அதையெல்லாம் நிறுத்தச் சொல்லு எல்லாம் சரியாகிவிடும் ” என்று சொல்லிவிட்டு புழக்கடைப் பக்கம் கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டியது இருக்கு என்று அவர் நகர,
“ இவங்க வேணி பாலா வீட்டுலே வருஷக்கணக்கா வேலை செய்யறவங்க வேண்டியதை கவனிப்பாங்க பாலாவுக்கும் வேணியம்மான்னா ரொம்ப இஷ்டம், அதனால சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை, பாலாவை தனிப்பட்ட முறையில் கவனிக்க ஒரு ஆண் நர்ஸை ஏற்பாடு செய்வதாய் டாக்டர் சதுர்வேதி சொல்லியிருக்கார். அவரும் நாளையில் இருந்து ஜாயின் பண்றார். ஸோ நோ பிராப்ளம். ஆஸ்பிட்டல்ல இருக்கிறதை விடவும் இங்கேயிருந்தா பாலாவோட மனநிலை கொஞ்சம் ஸ்டேபிள் ஆகுன்னு நினைக்கிறேன் ”.
“ ம்…நல்ல முயற்சிதான். ஆனா எனக்கு ஒரு யோசனை தோணுது துளசி”
“என்ன ?”
“பாலாவை என்னோட கேலரிக்கு நீ கூட்டிட்டு வந்திடேன். அங்கே ஆள் நடமாட்டம் இருக்கு. என் செகரட்டரி ஆஷா இருக்காங்க, ஷி வில் பி மேனேஜ். கூடவே என் கூட இருக்கும் போது அவனுக்கு வேற எந்த நினைப்பும் வராது. தனியா ஒரு அறைக்குள்ளே பேஷண்ட் கவனிக்க நர்ஸ்ன்னு படுக்கையில் இருந்தா மே பி இன்னமும் அவனோட மனசு டிஸ்டர்ப் ஆகும் ” தூரிகை நேசன் சொல்ல துளசிக்கும் அதுதான் சரியென்று பட்டது.
“எனக்குமே நீங்க சொல்றது சரின்னு படுது, தேங்யூ நேசன் ஆனா உங்களோட விழா ஏற்பாடுகளுக்கு நடுவில பாலாவை நீங்க எப்படி கவனிக்க முடியும் ”.
“என்ன துளசி, பாலாவும் நீயும் என் நண்பர்கள் உங்களின் நலனை விடவா எனக்கு மற்றதெல்லாம் முக்கியம். என்கூட இருக்கும் போது பாலாவோட மனநிலையில் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் அதற்கு நான் கேரண்டி ஓகேவா… ”
“நான் நாளைக்கே அவனை கூட்டிட்டு வர்றேன். என்னதான் பக்கவா ஏற்பாடு செய்திருந்தாலும், பாலா இங்கே தனியா இருக்கும் போது நான் என் வேலைகளில் மூழ்கிப்போறது சற்றே அன்ஈசியாகத்தான் இருக்கும். அதே நேரம் எத்தனை சீக்கிரம் நான் இதை கண்டுபிடிக்கிறேனோ அத்தனை சீக்கிரம் பாலா பழைய நிலைமைக்கு வந்திடுவார்ன்னு நான் நம்பறேன் ” அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே,
பின்கட்டுப் பக்கத்தில் மெல்ல சலசலப்பு கேட்டது. ஏதோ தொப்பென்று விழும் சப்தம், இருவரும் வேகமாக எழுந்து ஓடினார்கள்.
மரத்தின் மீது மோதியிருந்த அந்த கருப்புநிற மாருதிவேனை திகைப்புடன் பார்த்தாள் திரிபுரசுந்தரி மகாபலிபுரம் போகும் சாலையில் ஒரு புளிய மரத்தின் மேல் தன் முகப்பு கண்ணாடி முழுவதையும் சிதற விட்டு இருந்தது அந்த வாகனம். உள்ளே இருபது இருபத்தைந்து கொண்ட ஒரு இளைஞன் நேசக்கரங்கள் என்று இடது பக்கம் எம்பிராய்டரி கொண்ட சீருடையை அணிந்து ஸ்டேரிங்கின் மேல் சாய்ந்தபடி நிறைய ரத்தம் சிந்தி இருந்தான். முகம் சரியாகத் தெரியவில்லை அவனை அதற்கு முன்பு அவள் பார்த்ததும் இல்லை.
ஆயுதம் இல்லாமலே அவன் கபாலத்தில் இருந்து முகத்தின் மேல் கண்களை மறைத்தவாறு வழிந்து சட்டையை நனைத்திருந்தது குருதி. சற்றே உறையும் நிலையில், திரிபுரசுந்தரி பின்பக்கமாய் வந்து நம்பர் ப்ளேட்டைப் பார்த்தாள் தன் ஆசிரமத்தின் வண்டி எண். ஆனால், இதே வண்டி தன் ஆசிரமத்தில் இளைப்பாறிக் கொண்டு இருக்க, இது யாருடையதாக இருக்கும் என்று கேள்வியோடு சற்று தள்ளி எஸ்.ஐ ஒருவரிடம் நடந்த விபத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்த இன்ஸ்பெக்டரிடம் வந்தாள்.
“ யார் விபத்தை முதல்ல பார்த்துக்கிறாங்க, பாரன்சிக் ஆட்கள் வந்தாச்சா ? ” என்ற கேள்வியை காதில் வாங்கியபடியே தோளில் கேமிரா அணிந்திருந்த ஒருவர் விபத்து நடந்த இடத்தையும் வண்டியையும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தார்.
“ ரொம்ப சேதம் ஸார். டிரைவர் ஸ்பாட் அவுட், இந்தப்பக்கமா கடைகள் ஏதும் இல்லாததால் விபத்தை யாரும் பார்க்கலை, மகாபலிபுரத்திற்கு போன ஒரு காதல் ஜோடிதான் இந்த விபத்தைப் பார்த்திருக்காங்க அவங்கதான் 100க்கு அடிச்சிருக்காங்க, தகவல் தெரிந்து நான் வந்தேன்”.
“ அவங்க எங்கே ?”
“ அதோ நம்ம ஜீப்புக்கு பக்கத்தில், பேசிய இன்ஸ்பெக்டர் திரிபுர சுந்தரியின் வரவில் கலைந்து, அவங்ககிட்டே அட்ரஸ் மட்டும் வாங்கிட்டு அனுப்பிடுங்க ”.
எஸ் ஸார். மிடுக்குடன் அந்த எஸ்.ஐ காதல் ஜோடியிடம் நகர அந்த மஞ்சள் சுடிதார் அணிந்த தியா ஏகத்திற்கும் வியர்த்திருந்தாள். “ இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் ராகுல் மகாபலிபுரம் எல்லாம் வேண்டான்னு நீ கேட்டியா ? பாரு இப்போ நல்லா மாட்டிக்கிட்டோம் ” சன்னமான குரலில் தன் காதலனைத் திட்டிக் கொண்டு இருந்தாள்.
தங்களை நோக்கி வந்த எஸ்.ஐ யிடம் “ சார், நாங்க இரண்டு பேரும் லவ்வர்ஸ் இன்னைக்கு இவளுக்கு பிறந்தநாள் ஜஸ்ட் செலிபிரேட் பண்ணலான்னு வந்தோம். வந்த இடத்திலே இப்படியொரு விபத்து பார்த்துட்டுப் போக மனசுவரலை அதான் போலீசுக்கு போன் பண்ணினேன். நாங்க காதலிக்கிறது எங்க வீட்டுக்கு தெரியாது, நான் இருக்கேன் ஸார் இவங்களை மட்டும் ”.
“ நீங்க இரண்டுபேருமே போகலாம், ஒரு விபத்து நடந்திருக்கு எனக்கென்னு போகாம போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணியிருக்கீங்களே அதுவரையில் சந்தோஷம். நானும் அக்கா தங்கச்சி கூட பொறந்தவன்தான் தம்பி, உனக்கு ஒரு அட்வைஸ் லவ் பண்றவங்க தைரியமா பெத்தவங்க கிட்டே சொல்லுங்க அதை விட்டுட்டு இப்படி பொண்ணைக் கூட்டிட்டு ஊர் சுற்ற வேண்டாம் ”.
“ காதல் கட்டிப்பிடிக்கிறதாலும், முத்தமிடுறதாலையும் வர்றது இல்லை, அது ஆத்மார்த்தமா வரணும். நீ காதலிக்கிற பொண்ணு, இங்கேயிருக்கிற சன்னமான கூட்டம் என்ன கற்பனையெல்லாம் பண்ணியிருப்பாங்க உங்களைப் பார்த்து, யாரோ பெத்த பொண்ணோட சுயமரிதையும், கேரக்டரையும் அழிக்க உனக்கு என்னப்பா உரிமையிருக்கு. அவர்கள் இருவரும் தலை குனிந்திருந்தார்கள். சரி நீங்க எல்லாம் அட்வைஸ் பண்ணா திருந்தவா போறீங்க, உங்க இரண்டு பேரு அட்ரஸையும் எழுதிக்கொடுங்க ”.
“ ஸார் என்னோட அட்ரஸ் வேணும்மா….!”
“ தேவைப்பட்டால் ஒழிய உங்களை கூப்பிடமாட்டோம் அம்மா, ஒரு சிறிய புத்தகத்தில் முகவரி பணிபுரியும் இடம், அலைபேசி எண் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு விசாரணைக்கு கூப்பிடும் போது வரணும் தம்பி ” என்று அவர்களை அனுப்பிவைத்தவர் எஸ்.ஐ. திரிபுரசுந்தரியிடம் பேசிக்கொண்டு இருக்கும் இன்ஸ்பெக்டரிடம் பார்வையைச் செலுத்திவிட்டு போட்டோகிராபரை நோக்கி நகர்ந்தார். அதற்குள் பாரன்சிக் அதிகாரிகள் வந்து பவுடர் தூவ ஆரம்பித்திருக்க,
“ மேடம் இது உங்க வண்டியில்லைன்னு எப்படி சொல்றீங்க, வண்டியோட நம்பர் உங்க ஆசிரமத்தின் பேரிலேதான் ரிஜிஸ்டர் ஆகியிருக்கு, விபத்தில் இறந்திருக்கிற ஆள் உங்க ஆசிரம யூனிபார்மைத்தான் போட்டு இருக்காரு நீங்க என்னடான்னா அவர் யாருன்னே தெரியாதுன்னு சொல்றீங்க ? ”
“ எனக்கும் அதுதான் ஸார் சந்தேகமா இருக்கு. இதிலே ஏதுவோ ஏமாற்றுவேலை இருக்கு, இரண்டு நாளுக்கு முன்னாடி இதே வேன் பொது மருத்துமனையில மார்ச்சுவரியிலே இருந்து, ஒருத்தரோட பிணத்தை கடத்திக் கொண்டு போயிருக்கிறாங்கன்னு துளசின்னு ஒரு இன்ஸ்பெக்டர் விசாரிச்சாங்க . அப்பவே என்னோட வேன் டிரைவர்ஸ் சம்பந்தப்பட்ட இந்த வேன் எல்லாமே ஆசிரமத்தில்தான் இருக்குன்னு அவங்களுக்கு நிரூபிச்சாச்சு ”.
“ இப்பவும் அந்த வண்டி உங்க ஆசிரமத்திலேதான் இருக்கா”.
“நிஜம்மா நம்பலைன்னா ஆசிரத்தில் இருக்கிற என்னோட செகரட்டரிகிட்டே இப்பவே வாட்ஸ்அப் வீடியோ கால் பண்றேன் நீங்களே பாருங்க”
திரிபுரசுந்தரி தன் வாட்ஸ்அப்பை உயிர்பெற வைக்க, சில நிமிடத் தகவல் பரிமாற்றத்திற்குப்பிறகு ஆசிரமத்தின் ஓரத்தில் மற்ற வண்டிகளுக்கு நடுவில் பதுசாக நின்றிருந்த அந்த மாருதி ஹோம்னி.
இன்ஸ்பெக்டர் ஒரு விநாடி யோசித்துவிட்டு, “ ஒருவேளை இந்த வண்டிக்கு பொய்யான நம்பர்பிளேட் மாற்றியிருக்கலாம், நான் விசாரிக்கிறேன் நீங்க உங்கிட்ட பேசின அந்த இன்ஸ்பெக்டர் நம்பர் தர்றீங்களா ? திரிபுரசுந்தரி சொல்லக் குறித்துக் கொண்டவர். நீங்க போகலாம் மேடம் ஏதாவது தேவைன்னா நானே நேரில் வந்து விசாரிக்கிறேன் ” என்று பாரான்சிக் ஆட்களைத் தேடி சென்றார்.
திரிபுரசுந்தரி ஒரு வித குழப்பத்தோடு காரை நகர்த்தினாள். கான்டாக்ட் லிஸ்ட்டில் துளசியின் நம்பரைத் தேடினார்.
என்ன சத்தம் அங்கே என்று வேகமாய் ஓடிய துளசியும், நேசனும் வேணி பின்கட்டுப் பக்கம் மல்லாந்து விழுந்து கிடந்ததைப் பார்த்து பதறினார்கள் அவளுக்கு மயக்கம் தெளிவிக்கும் பணியில் இருவரும் ஈடுபட “ என்னாச்சு வேணிம்மா ஏன் மயக்கம் போட்டு விழுந்துகிடக்கறீங்க ? ”
“ அம்மா அம்மா அந்தப்பக்கம் அந்தப்பக்கம்… ” என்று திகைப்போடு கத்தினாள் வேணி அவள் விரல்காட்டிய திசையில் துளசியின் பார்வை போனது அங்கே மூன்று நான்கு பைகள். தோலால் ஆனதைப் போல இறுகலாய் அதன் முடிச்சை இழுத்துப் பார்க்கையில், மூச்சை அடைத்தது இருவருக்கும்.
மூணு பைகள் முழுவதும், கை கால் எலும்புகள், காலின் கீழ் பகுதி எலும்புகள், கூடவே மனித முதுகெலும்புகள், அவற்றிலிருந்து மண்வாசனை
அவர்களின் நாசியை தொட்டுப் பார்த்தது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
- நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் :4 - லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்