அத்தியாயம் – 1
4 டிகிரி குளிரில் அறையின் சில்லிப்பைத் தழுவியபடியே பாலித்தீன் கவரில் அடைப்பட்ட அந்த குவியல்களைக் கடந்து கருப்புத் திரையிட்ட அந்த அறையின் இரும்பு தகட்டின் மேல் அவனா அதுவா என்று யோசித்து துடிப்புகள் அடங்கிய நிலையில் தன் காரணமறியா இறப்பிற்கு காரணத்தை தேடி காத்திருந்த PM-365A பழுப்பு நிற ஸ்டிக்கியை கட்டைவிரல் வெற்றிமாலையாய் அணிந்திருந்தவனின் உடல் தற்போது பிறப்பு நிலையில் இருந்தது. என் உடல் உண்மையை மட்டுமே உறைக்கும் அதை கூர்நிலை கத்தியின் மூலம் புரிந்து கொள்வது உன் கைகளில் உள்ளது என்று சவால் விடுவதைப் போல விறைப்புடன் கிடந்தது.
அழுந்தத் துடைத்தாற் போன்ற உணர்வுடன் முகத்திற்கும் உடலிற்கும் கவசமணிந்து சட்டமடித்து பாதுகாப்பான மேஜையின் இழுப்பறையின் கர்ப்பத்தில் இருந்து ஒரு கையுறை உருவி தன் விரல்களை மறைத்துக் கொண்டான் பாலா. தயாராய் காத்திருந்த மற்றொரு கவசமனிதனிடம் ஒற்றைத்தாளை நீட்டி, “அப்ரூவல்” என்று உரைத்தபடியே ஸ்டீல் டிராலியில் இருந்து அந்த கூர்மையான கத்தியை எடுத்தான்.
தலைக்குமேல் கவிழ்ந்தபடி தொங்கியிருந்த நான்கு முனை வெளிச்ச விளக்குகள் அவ்வுடலை இன்னும் வெளுப்பாய் காட்டியது. பற்கள் கிட்டித்துப் போயிருக்க தலையில் இடப்பக்கம் இருந்து கழுத்துவரையில் நீண்டிருந்த ரத்தக்கோடு இப்போது உறைந்திருந்தது. விபத்தில் மரணம் என்று அறிக்கையில் படித்திருந்தான், இருந்திருந்து 40வயதிற்குள்தான் இருக்கும்.
“சீக்கிரம் வந்திடறேன்” என்று மனைவியிடம் சபதம் செய்திருந்தானோ அல்லது “சாயங்காலம் வெளியே போகலாம்பா ப்ளீஸ்” என்று கழுத்தைக் கட்டிக் கொஞ்சிய மழலையின் தந்தையோ யார் என்று தெரியவில்லை அல்லது யாருமற்ற உறவிலியோ?! இந்த மாதத்திலேயே இது அடையாளம் தெரியாத பத்திருபது பிணங்களில் ஒன்று. முகத்தில் அத்தனை சிதைவில்லை இந்நேரம் சோசிஷயல் மீடியாவில் இவனைப் பற்றிய விவாதங்கள் கூட இருக்கலாம். சட்டென்று நேற்று வாசித்த அந்த த்ரில்லர் புத்தகத்தின் வரிகள் மனதில் வந்தது.
மெல்ல மெல்ல முட்களைப் பதித்து கொண்டு மாலையிடத் தயாராகிறது அந்த கோரப் பிசாசின் கரங்கள். நெற்றி கீறி அதில் துளிர்க்கும் ரத்தத்தை வகிடுவரை தெளித்து குங்குமத் தீற்றலாய் வழியவிடுகிறது நகம் நீண்ட விரல்கள்.
குழிக்குள் பதுங்கியிருக்கும் அந்த அடர்சிவப்பு கண்கள் வெளிப்படுத்துவது என்ன காதலா? இருபுறமும் நீண்டிருக்கும் கோரப்பற்களின் நுனி கூர்மையான கண்ணாடித் துண்டைப் போல இதட்டோர முத்தத்திற்காய் சுகித்த வேதனையின் முத்தத்தில் நரகத்தின் சாயல். சேகரித்துக் கொண்டு இருக்கிறேன் தேடிப்பிடித்த அந்த பிசாசின் காலடிகளை ஈரமணலில் குருதி சேர்த்து அவன் பாதங்களின் சுவடுகளை அந்த கடற்கரை ஒரத்தில் புதைத்து விட்டுப் போயிருக்கிறான். கடலலைகள் கூட நனைத்து கலைத்திட்டால் கடலையே கருஞ்சிவப்பாய் மாற்றிவிடுவானோ என்று பயந்து தனக்குள்ளேயே அலைகளைப் புதைத்துக் கொள்கிறது.
என்ன சார் யோசனை எதிர்புறக் கேள்வியில் நிமிர்ந்த பாலா சிந்தனைகளை தள்ளிவைத்துவிட்டு கழுத்தின் கீழ் பகுதியில் இருந்து இடுப்புச்சதைவரையில் சற்றும் பிசகாமல் நேர்கோடு இழுத்தான். சற்றே சில்லிட்டு இருந்த ரத்தப்பகுதி இன்னும் சற்று நேரத்தில் உறையப்போகிறேன் என்ற எக்களிப்போடு உறையணிந்திருந்த விரல்களில் காதலாய் பூசிக்கொள்ள பாலா இயந்திரத்தனமாய் உரைத்ததை கொண்டு பிணவறிக்கை தயாராகிக்கொண்டு இருக்க….?! அவன் வெளியேறினான் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வர போன் அழைத்தது
“ஹாய் டெட்பாடி டாக்டர்….” துளசியின் குரல் செவிப்பறையில் காதலும் சற்றே கலாட்டாவுமாய்…
“ஏய் … ரெளடிபோலீஸ் என்ன கலாய்கிறீயா? எங்கேயிருக்கே ஒரே ஊர்லே இருக்கோன்னுதான் பேரு ஆனா மீட்பண்ணியே நாளாச்சு.” அவனின் பெருமூச்சிற்கு துளசி கலகலத்தாள்.
“சரி சரி மீட் பண்ணலாம் நைட் டின்னர் ஓ.கேவா நான் வரவா நீ வந்து பிக்கப் பண்ணிக்கிறியா?”
“நீயே வா எனக்கு டீன் கூட ஒரு மீட்டிங் இருக்கு முடிச்சிட்டுப் போகலாம்….” தொடர்பு துண்டிக்கப்பட்ட செல்போனை சட்டென பாக்கெட்டிற்குள் நுழைத்தான். மீண்டும் அழைப்பொலி “சார் அடுத்து ரெடி ஆரம்பிக்கலாமா?” என்று
இதோ… பாலாவின் கால்கள் மீண்டும் அவ்வறைக்குள்…..?!
சுற்றிலும் இருட்டின் சாயல்கள் அந்த இருட்டு பயத்திற்குப் பதில் மயக்கத்தைக் கொடுத்தது. ஆழமான மெல்லிய இசை நேரம் செல்ல செல்ல தன் அதிர்வலைகளைக் கூட்ட தன் முன் பிறப்பில் குழந்தையின் உருவத்தில் ஒரு இரும்பு ஊக்கியின் உதவியில் தலையுயர்த்திப் பார்க்கும் அளவிற்கு உயரமாய் தலைகீழாய் அவனோ அதுவோ தொங்கிக்கொண்டு இருந்தது…! உதட்டின் சிகரெட்டின் ஜீவாலைகள் முணுக்முணுக் என்று எரிய அரைச்சிரிப்புடன் இசைக்கு ஏற்ப நடமாடியபடியே அதன் இடுப்பில் இருந்து கத்தியாய் ஒரு இடைக்கோடு கிழித்தான் அவன். உரையணிந்த கைகள் இரண்டும் குவளையில் இருந்து கோந்தை வாரியெடுப்பதைப் போல சரிந்திருந்த அந்த உடலின் இடுப்புச்சதையில் இருந்து கழுத்து வரையில் தோலைபிய்த்தது.
அதிக சிரமப்படுத்தாமல் வெளிவந்த தோல் உடனே ஒரு குளிர்ப்பெட்டியில் பதப்படுத்தப்பட தொங்கிக்கொண்டு இருந்த அது இப்போது தன் வெள்ளை நிறத்தை அடர்சிவப்பாய் மாற்றியிருந்தது. ச்சே ஆணோ பொண்ணோ தோல்தான் அழகு… என்று நினைத்தபடியே சட்டென்று திரும்பினான்.
உரையின் அழுக்குகள் களையப்பட்டன இரு கரங்கள் நீட்டிய கோப்பைத் தண்ணீரில், “நேத்து உரிச்சதோடு இதையும் சேர்த்து அனுப்பிடு! கவனம்.” வேறு தைத்து… அறையின் மறுகோடியில் தோலைப் போலவே உள்ள ஒரு அடர்துணியினை சுற்றி மெல்ல தைக்கத் தொடங்கினான் அந்த கெச்சலான ஆசாமி. சற்றே கைகளில் தள்ளாட்டம் உள்ளிறக்கிய சரக்கின் உபயமாகக் கூட இருக்கும். இனி அவன் பார்த்துக்கொள்வான் என்று நிம்மதியோடு வெளியேறினான் தன் சிகரெட்டை அணைத்தபடியே?!
“பாலா சார் டீன் கூட பேசணுன்னு சொன்னீங்க தைரியமா சிகரெட் பிடிச்சிட்டு இருக்குறீங்க” வாட்பாய் கேட்க,
“கொஞ்சம் டென்ஷன் இன்னைக்கு போஸ்மார்டம் பண்ண பாடி கொஞ்சம் காம்பிளிகேஷன் ரிப்போர்ட் ரெடி பண்ணனும் அதான் ரிலாக்ஸ்.”
“காப்பித்தண்ணி ஏதாவது சூடா வாங்கியாரவா?”
“வேண்டாம் நீ உன் வேலையைப் பாரு.” பாலா… தன்னை மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்தபடியே அந்தஅறையை ஓரப்பார்வைப் பார்த்தபடியே டீனின் அறையை நோக்கி நடந்தான்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
- நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் :4 - லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்