அத்தியாயம் – 9
மெக்கானிக் ஷெட் ஆயில் அழுக்குகளை ஆடையாய் போர்த்திக்கொண்டு இருந்தது. தேர்தல் அறிக்கைகள் பொய்த்துப்போய் மக்கள் முன் பல்லிலிக்கும் அரசாக்கத்தின் இயலாமையைப் போல கைதேர்ந்த விற்பனையாளனின் மிகைப்படுத்திய சொற்களைப் பொய்யாக்கியதால் வெட்கத்துடன் தன் கதவுகளை இறுக மூடிக்கொண்டு இருந்தன சில கார்கள்.
தலைகீழாக தொங்கிக்கொண்டு இருக்கும் சலைன் பாட்டில்களைப் போல இரண்டு கார்களின் பேனட் வாய்பிளந்து இருக்க, வெளிச்சப்புள்ளிகளில் தன் மினுமினுத்த உடலை காட்டியபடி இருந்த காரின் அடிப்புறம் இருந்து துளசியின் குரலுக்கு எட்டிப்பார்த்த அந்த அழுக்கு கையில்லாத முன்பக்கம் தாராளமாய் கிழிந்து தொங்கிய பனியன் போட்ட
பதிமூன்றின் பிராயத்தில் சிறுவன் எட்டிப் பார்த்தான்.
போலீஸ் உடையைக் கண்டதும் சட்டென்று வண்டியின் அடிப்பகுதியில் இருந்து தன்னை வெளியில் எடுத்தவன். “சொல்லுங்கம்மா” ! என்றான். முகம் வியர்த்துப் போயிருந்தது.
“இது கார்மேகம் மெக்கானிக் ஷெட்தானே….? “
“ஆமாம்மா… ! “ போலீஸ் உடையினைப் பார்க்கவும் அவனுக்கு சற்று பணிவு வந்தது.
“எத்தனை நாளா நீ இங்கே வேலை பார்க்குறே ? உன் பேரு
என்ன ? “
“எம் பேரு உசைன். போனவருஷந்தான் வேலைக்குச் சேர்ந்தேன். அப்பா செத்துப்போயிட்டாங்க வள்ளியக்காகிட்டே எங்கப்பா கடன் வாங்கினாங்க, கட்டமுடியலை அதான் இங்கன வேலைக்கு சேர்த்துவிட்டாங்க ?! “
“ம்…! நீ கார்மேகத்தை எப்போ பார்த்தே ? “ அவன் முகத்தில் ஒரு சின்ன சிணுங்கல் சொல்லலாமா வேண்டாமா என்பதைப் போன்ற தயக்கம்.
“இரண்டுநாளா ஷெட் பூட்டிக்கிடந்ததுங்க இன்னைக்கு பெரியவரு வந்திட்டாருன்னு தெரிஞ்சி நான் வேலைக்கு
வந்தேன். “
“பெரியவர்னா பில்டிங் ஓனர்தானே ?! “ அவன் தலையசைக்க
“எங்கே ? “ என்ற கேள்விக்கு அந்த ரூம்லே இருக்காரு என்று பதில் சொல்லிவிட்டு தனக்கு அதற்கு மேல் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல மீண்டும் வண்டியின் அடியில் தஞ்சம் புகுந்து கொண்டான்.
அந்த பையன் கைகாட்டிய அறையை ஒட்டி இடதுபக்க மூலையில் சின்ன சாமிப்படம் அழுக்கேறிப்போன ஒரு விளக்கு அதன் அருகிலே ஒரு பென்சின்மேல் ஏதோவொரு காரின் பின்பக்க சீட்டு தன் மேலாடையை பாதிகிழித்துக் கொண்டு கவர்ச்சியாய் உள்ளே பஞ்சுசதை பிதுங்க கிடந்தது. அந்த பென்சின் அடியில் சில மது பாட்டில்கள், துளசி சுற்றிலும் பார்வையால் அளந்தபடியே அந்த அறையை நோக்கிப் போனாள். அவர்களுக்கு முன்பாகவே யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் அந்த 40வயதான மனிதர்
“வண்டி சரியாயிடுச்சான்னு எனக்குத் தெரியாது தம்பி ? நான் ஊரிலே இல்லை, நாலு நாளா ஷெட் பூட்டியிருந்திருக்குன்னு பையன் சொல்றான். இப்போதைக்கு டெம்பரவரியா ஒரு மெக்கானிக்கை வரச்சொல்லியிருக்கேன். உங்களுக்கு சரின்னா இன்னும் இரண்டுநா பொறுத்துக்கோங்க !? “ என்றவர் பேச்சின் இடையில் உள்ளே நுழைந்த துளசியையும் 401 யையும் பார்த்ததும் எழுந்து மரியாதை தந்தார்.
“உட்காருங்க ! “ என்று நாற்காலியைக் காட்டினார். அதுவரையில் முதுகுகாட்டிக்கொண்டு இருந்த டிரைவர் துளசியைப் பார்த்ததும் பவ்யமாய் “வணக்கம் மேடம் “என்றான்.
“நீ…?! “
“என்ன மேடம் மறந்துட்டீங்களா ? நான்தான் தூரிகைநேசன் அய்யாவோட கார் டிரைவர். அன்னைக்கு கூட ராத்திரியிலே கார் ரிப்பேர் ஆகிட்டதுன்னு நீங்க அய்யாவை பிக்கப் பண்ணிகிட்டீங்களே ? “அவன் நினைவூட்டவும்.
“அன்னைக்கு உங்க கூட மெக்கானிக் கார்மேகமும் இருந்தான் இல்லை. ?“
“ஆமா மேடம். “ “நம்ம வழக்கமா இங்கனதான் கார் சரிபாக்க விடறது. கார்மேகம் நல்ல வேலைக்காரன் பாவம் திடீர்னு விபத்துலே போயிட்டான்னு பேப்பரில் பார்த்தேன் அய்யா கூட ரொம்ப வருத்தப்பட்டாங்க ! “
“ஓஹோ..!.கடைசியா நீங்க கார்மேகத்தை எப்போ பார்த்தீங்க ? “
“அன்னைக்கு ராத்திரிதான் மேடம். அய்யா உங்க வண்டியிலே வந்திட்டதுதானலே நானும் கார்மேகமும் வண்டியை டோப் பண்ணிட்டு ஷெட்டுக்கு வந்திட்டோம் இரண்டு நாள்லே நானே சரிபார்த்து காரை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டறேன்னு சொன்னான். “
“ ஆனா வரலை, காலையிலே கார்மேகம் விபத்துலே செத்திட்டான்னு பேப்பர்லே பார்த்ததும் மனசுக்கு ஒருமாதிரியாயிடுச்சி. சரி கார் என்ன கண்டிஷன்ல இருக்குன்னு பார்த்திட்டு போகலான்னு வந்தேன். “
“ வெளியிலே அந்த சின்னப்பையன் அய்யா வந்திருக்காங்கன்னு சொன்னான். அதான் பழுது பார்க்கலைன்னாலும் பரவாயில்லை நான் எடுத்துட்டுபோறேன்னு சொல்லிட்டேன் அடுத்து வேற நல்ல மெக்கானிக்கிட்டே கொடுக்கணும்.! “
துளசி அந்த பில்டிங் உரிமையாளரைப் பார்த்தாள். “கார்மேகம் இறந்தது உங்களுக்குத் தெரியாதா ? “
“தெரியாது மேடம் தம்பி பொண்ணுக்கு கல்யாணத்திற்காக சொந்த ஊருக்குப் போய் ஒரு வாரமாச்சு அதுக்கு முன்னாடி கார்மேகத்தைப் பார்த்தது. நேத்து ஒரு போன்கால் வந்தது. மெக்கானிக் ஷெட் உரிமையாளர் நீங்கதானே இறந்து போன கார்மேகம் விஷயமா உங்ககிட்ட விசாரிக்கணுன்னு அட்ரஸ் கேட்டாங்க, குடும்பம் மொத்தமும் விசேஷத்திலே இருக்கு கார்மேகத்தைப் பற்றி கேட்டதும் மனசு ஆறலை அதனால நான் மட்டும் வந்தேன். “
“இந்த காரேஜ்யோட சாவி….யார்கிட்டே இருக்கும் ?! “
“இரண்டு சாவியிருக்கு ஒண்ணு என்கிட்டே இன்னொன்னு கார்மேகத்துக்கிட்டே ? “
“கார்மேகம் ஆள் எப்படி ? அவருடைய குடும்பம் ? உறவினர்கள் நண்பர்கள்னு உங்களுக்கு யாரையாவது தெரியுமா ? “
“நல்ல மனுஷன் எந்த கரைச்சலும் கிடையாது இந்த ஷெட் ஆரம்பிச்சி பத்து வருஷமாச்சி சின்னபிள்ளையிலே இங்கனயே வேலை கத்துகிட்டவன்தான் அவனோட உழைப்பு இந்த ஷெட்டையே எடுத்து நடத்திற அளவுக்கு உயர்ந்தான். நல்ல பையன்தான் குடும்பம் குட்டி கிடையாது கேரேஜிலேயே தங்கிடுவான். “
எப்போது சொன்னார் ? என்று தெரியவில்லை சூடாக டீ வந்தது. 401 ஆர்வமாய் கோப்பையை உதட்டருகே கொண்டு செல்ல தேநீரைவிடவும் சூடான பார்வையை பார்த்தாள் துளசி.
“மாதத்திற்கு ஒருமுறை வாடகை வாங்கத்தான் நான் இங்கே வருவேன் மேடம். கார்மேகம் இந்த மெக்கானிக் ஷெட்டில் சேரும்போது பதினைந்து வயது 20வருடத்திற்கு மேல எனக்கு பழக்கம் எனக்கு தெரிந்தவரையில் அவன் யாரிடமும் பேசினது கூட கிடையாது. அவனுன்டு அவன் வேலையுண்டு இருப்பான். ஏம்பா கல்யாண வயசு வந்திட்டதே நான் வேணா பொண்ணுபார்க்கவான்னு ? கூட சிலசமயம் கேட்டு இருக்கிறேன். சிரிச்சிகிட்டே நகர்ந்திடுவான். வேற எதுவும் எனக்கு அவனைப்பத்தி தெரியாதுங்கம்மா ?! “
“ஸார் நீங்க எப்போ விசாாரணைக்கு கூப்பிட்டாலும் ஒத்துழைப்பு தரவேண்டியிருக்கும், கார்மேகத்தைப் பற்றி வேற தகவல்கள் கிடைத்தால் எனக்கு கூப்பிடுங்க ! “ தன்னுடைய எண்ணைக் குறித்துக் கொடுத்தவள் எழுந்து கொண்டாள்.
அவர் தயங்கியபடியே, “மேடம் கார்மேகத்துக்குன்னு யாரும் இல்லை அவனோட பாடியைத் தந்தீங்கன்னா சொந்தப் பிள்ளையா நினைச்சி ஈமக்கிரியைகள் செய்திடுவேன் ! “. என்று தயங்கித் தயங்கி கேட்டார்.
“எதுக்கு ஸார் பொண்ணோட கல்யாண வேலைகளை வைச்சிட்டு நாங்க பார்த்துக்கிறோம். “ என்று சொல்லிவிட்டு கூலிங்கிளாஸை அணிந்தபடி வெளியே வந்தாள் துளசி. தூரிகைநேசனின் கார் அந்த இடத்தில் இல்லை அந்த சின்னபையன் கைகளில் பத்தும் இருபதுமாய் நோட்டுக்கள்.
“ ஏன் தம்பி இங்கேயிருந்த கார் எங்கே ? “
“அதுல பெரிசா ஒண்ணும் பிரச்சனையில்லை மேடம் கொஞ்சம் அடைப்பு இருந்தது அன்னைக்கே சரியாகி அண்ணே அதையெடுத்துட்டு சர்வீஸ் கூட போனாரே.! “
“நீ எப்போ உங்க அண்ணனைப் பார்த்தே ? “
“இரண்டு நா முன்னாடி நைட்டு வள்ளியக்கா வந்துச்சி வீட்டுத் திண்ணையிலே படுக்கிறதுக்கு எங்கூடவே இருடான்னு சொல்றே அண்ணே எப்போ வள்ளியக்கா வந்தாலும் என்னை அனுப்பிடும் அன்னைக்கு அக்கா வந்துச்சி நான் கிளம்பி வீட்டைப் பார்த்துட்டு போயிட்டேன் அதுக்கு மறுநா காலையிலே அண்ணே இல்லை ஷெட்டும் பூட்டிக்கிடந்தது அய்யா வீட்டுக்கும் போனேன் அங்கணயும் பூட்டிக்கிடந்தது. வழக்கம் போல இன்னைக்கு வந்து பார்த்தேன் திறந்திருந்தது வேலையப் பாக்குறேன். “
“கார்மேகம் இறந்து போனது உனக்கு தெரியுமா ?! “
“ம்… ! “ “இப்போதான் அய்யாவும், இதோ இந்த நோட்டு கொடுத்தவரும் சொல்லிட்டுப் போனாங்க. பாவங்க என்னை நல்லாப்பார்த்துக்கிடுச்சி. எங்க ஆத்தா சொல்றாமாதிரி எல்லாம் விதி ! “ என்று தலைகவிழ்ந்தான். துளசி தன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் எடுத்து கொடுத்தாள்.
“வள்ளியக்கா யாரு ? எங்கேயிருக்காங்க…! “
“அது … ! அடிக்கடி வரும் அண்ணாவைப் பார்க்க பக்கத்து குப்பம்தான். அவங்க வட்டிக்கு காசு கொடுப்பாங்க. வீடு கூட தெரியும் சில சமயம் அண்ணா ஏதாவது பலகாரம் வாங்கி அதுக்கு கொடுத்துட்டு வரச்சொல்லும். “
“சரி வா எனக்கு அந்த வீட்டைக் காமி…. ?!“
“அய்யாகிட்டே சொல்லிட்டு வர்றேன். “ என்று அவன் ஓட துளசி அவனுக்காக தன் ஜீப்பில் காத்திருந்தாள். “இந்த வள்ளி யாரு ? “ என்ற கேள்வியுடன்.
கார்மேகத்தின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை மீண்டும் படித்தாள். சுமார் எட்டு மணியளவில் எண்ணூர் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் கிடைத்த ரத்த மாதிரிகள் அது உறைந்திருந்த நிலை இவற்றை வைத்து கணித்திருந்தார்கள் மருத்துவர்கள்.
ஒரு கனரக வாகனம்தான் அவனை விபத்துக்குள்ளாக்கி இருக்கவேண்டும். முகம் கழுத்து தவிர கால்களிலும் பலத்த அடி தலையின் மேல்பாகம் இலேசாகப் பிளந்து ரத்தம் உறைந்திருக்கிறது. ஸ்தலத்திலேயே மரணம் சம்பவித்திருக்கிறது.
ரிப்போர்ட்டின்படி எட்டு மணிக்கு விபத்து நடந்திருந்தாலும் அவனின் பாடி மருத்துவமனைக்கு போலீஸ் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து மதியம்தான் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைப் பற்றிய தகவல்கள் ஏதுவும் குறிப்பிடப்படவில்லை. பெரும்பாலும் மணல் அல்லது லோடு ஏற்றிச்செல்லும் லாரிகள் தான் அந்தப்பக்கம் வருகிறது அப்படியெனில் இரண்டுகிலோமீட்டர் தள்ளி உள்ள டோல்கெட்டில் அந்த வண்டியின் எண் பதிவாகியிருக்கும்
அப்படியெந்த வண்டியும் அந்நேரத்தில் பதிவாகவில்லை என்று காவல்துறையின் கணிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அப்படியானால் அந்த கனரகவாகனம் எங்கிருந்து வந்திருக்கும்.
ஏரியா லிமிட் அதிகாரிகளால் கொண்டு வரப்பட்ட பாடி போஸ்ட்மார்ட்டம் செய்த பிறகு யார் மூலம் வாங்கிச் செல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும் என்று துளசிக்குத் தோன்றியது.
அதற்கு முன்னால், “இந்த வள்ளியக்கா யார் ? “ என்று தெரிந்து கொள்ளலாம் “அவளுக்கும் கார்மேகத்திற்கும் என்ன
தொடர்பு ? “ விபத்து நடந்து முதல்நாள் இரவு அவனுடன் கழித்திருக்கிறாள் என்றால் கார்மேகத்தின் விபத்தில் அவளுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமா ? அந்த பையன் வந்து அமர்ந்துகொள்ள மெக்கானிக் ஷெட்டுடன் உறவை முறித்துக்கொண்டு நகர்ந்தது ஜீப்.
பூத்தூரலாய் சர்ரென்று பீய்ச்சிய நீர் அந்த பச்சைநிற கூட்டத்தை நனைத்தது. கார்டனிங்கின் நடுவில் பவுண்டேஷனில் நீர் நிறம் மாறிமாறி கண்களுக்கு குளுமை அளிக்க. சிறு சிறு சதுர டைல்ஸ்களுக்கு நடுவில் குட்டிகுட்டியாய் மரம் போல் குரோட்டன்ஸ் செடிகள் குவிந்திருந்தது.
ஒருபக்கம் விதவிதமான பூக்களும், பெயர் தெரியாத வண்ண செடிகளும் அணிவகுக்க மற்றொருபுறம் இரண்டு தடுப்புகள் அமைத்து ஒவ்வொரு தடுப்பிலும் மணல் தொட்டிகள் வரிசைப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களைப் போல சிரித்தது. மாடித்தோட்டம் போன்ற அமைப்பில் கொடிகள் சுவரோடு கொஞ்சிக் கொண்டு இருந்தது.
சிறு சிறு பாத்திகளாக பால்கனியைப் போன்ற தோற்றமளித்து கண்களை உறுத்தாத அளவிற்கு நிறம் சேர்த்து ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு ஆஷா வடிவமைத்திருந்தாள்.
தினமும் காலையும் மாலையும் சில மணிநேரங்களில் இங்கே செலவிடுவதில் அவளுக்கு ஒரு இதம் அதிலும் அவ்வப்போது தூரிகைநேசனுடன் அவள் கழிக்கும் நிமிடங்களுக்கு சாட்சியாக உள்ளது இத்தோட்டம் மட்டுமே. வெண்சங்குகளை போல தோற்றம் அளித்து ஒரு பெண்சிலையை வைத்திருந்தாள்.
அந்த சங்குகளில் மணல் பரப்பி அழகான செடிகளை வளர்த்திருந்தாள். தினமும் சீராக வெட்டப்பட்ட புல்வெளி காலை அழுத்தாமல் மெத்தென்று இருக்க அடர்சிகப்பு நிற ரோஜா ஒன்று செடியைத்தாண்டி நின்றிருந்ததைப் போல இருந்தது அவள் நின்றிருந்த நிலை.
எங்கிருந்தோ மெல்லிய இசை காற்றோடு கலந்து வர அந்த ரம்மியமான நிலையில் இந்நேரம் தூரிகைநேசனின் அணைப்பில் தான் இருந்தால்…என்ற நிலை அவளை வெட்கச்செய்ய, அந்த அமைதியைக் கலைப்பதைப் போல ஒரு கார் வேகமாய் வந்திறங்கியது.
அதிலிருந்து தூரிகைநேசன் இறங்க கூடவே சாகித்யா பளபளவென்ற ஒப்பனையில் அவனை நெருங்கியபடியே தோட்டத்தின் முன் நின்ற ஆஷாவை நோக்கி இருவரும் வந்தனர். இருவரையும் ஒன்றாய் பார்த்த அவளின் மனம் துணுக்குற்றது.
தொடரும்…..!
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
- நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் :4 - லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்