அத்தியாயம் -7
“அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம். இறந்தவர்களின் உடல்களுக்கு நேரும் அவலம் ? பிரேத பரிசோதனை அறிக்கைகளின் தாமதம் ? கடைநிலை ஊழியர்கள் கத்தியை தூக்கும் நிலைக்கு காரணம் என்ன ?! குற்றங்கள் எங்கிருந்து ஆரம்பிக்கிறது அறிந்து கொள்ள நம்மோடு இணைந்திருப்பவர்கள் ஓய்வுபெற்ற மருத்துவர் டிகால். சமூக ஆர்வலர் சசிகரன், இப்பிரச்சனையை சமூகத்தின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நமது நிருபர் வாகீசன் மற்றும் நெறியாளர் கிருஷ்ணா. வணக்கத்துடன் விவாதத்திற்கு போகலாம்.”
“வணக்கம் டாக்டர் பிரேதப் பரிசோதனையின் பங்கு என்ன ? யார் யார் பரிசோதனைகளை செய்யலாம் ?”
“மனித உடல் சார்ந்த குற்றத்தை கண்டுபிடிக்கும் ஓர் எளிய வழி பிரேதப் பரிசோதனை. எம்.பி.பி.எஸ். படித்த யாரும் பிரேதப் பரிசோதனை செய்யலாம் அதற்கு அனுமதி உண்டு. பெரும்பாலும் மருத்துவர்கள் அதை செய்வதில்லை, கடைநிலை ஊழியர்கள் அல்லது பயிற்சி மருத்துவ மாணவர்கள் தான் செய்கிறார்கள். இது தவறு என்றாலும் நடைமுறைச் சிக்கல் இவற்றில் மிகவும் அதிகம்.”
“டிவியில் பார்த்தீங்கள்ளே ? மருத்துவமனைக்கு ஒரு பிணம் கூட நம்பிப் போக முடியலை. பொதுமக்கள் தான் இதில் அதிகமா பாதிக்கப்படறாங்க. விபத்திலோ, அக்கம்பக்கத்தினர் சந்தேகிக்கும் மரணங்களிலோ இந்த போஸ்ட்மார்ட்டம் இன்றியமையாததாகிப்போய் விடுகிறது. எந்த நம்பிக்கையிலே எங்க உடலை நீங்க கூறு போடறீங்க ? மருத்துவர்களின் அலட்சியத்திற்கு இதுவும் ஒரு உதாரணம்.”
“பச்சிளம் குழந்தைக்கு டிரிப்ஸ் போட்டு ட்யூப்பை அகற்றும்போது அதன் சுண்டுவிரலை வெட்டிய செய்தியையும் இதே சேனலில்தானே காட்டினாங்க ?! எயிட்ஸ் பேஷண்ட்டோட ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏத்தியது ஆக்ஸிஜன் குறைபாட்டால் குழந்தைகள் இறந்தது. இன்னும் எத்தனையோ சொல்லிட்டுப் போகலாம். செத்தபொணத்திற்கு கூட சரியான வைத்தியம் பார்க்காத நிலை இதற்கு மருத்துவத்துறை என்ன பதில் சொல்லப்போறாங்க ?! சமூக ஆர்வலரின் ஆக்ரோஷமான கேள்விக்கு பிறகு பொதுமக்களின் மனக்குமறல்களை வெகு அழகாக வெளிப்படுத்தினார் சசிகரன் இதற்கு டாக்டரின் பதில் என்ன ? ஒரு இடைவெளிக்குப் பிறகு விளம்பரங்களின் அணிவகுப்பிற்குப் பிறகு,”
“பொதுவாக மருத்துவமனைகளை மட்டும் நாம் குற்றம் சொல்கிறோம் ஆனால் நடைமுறைச் சிக்கல்களையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறைகளில் உடலின் ஒவ்வொர் அடுக்கையும் வெட்டும் போது வேறுவேறு கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும் அனால் அமது நடைமுறையில் இல்லை, அழுக்குக்கையால் ஒரு மாதிரியை எடுத்தால் துல்லியமான முடிவு எங்கிருந்து கிடைக்கும். பல வருடங்களாக ஒரே உடைகளை எப்படித் துவைத்துப் பயன்படுத்த முடியும்.”
“என்ன ஸார் கதை விடறீங்க ? இப்போதான் டிஸ்போஸபிள் வந்திட்டதே மார்கெட்லே ஒரு டிஸ்போஸபிள் செட் 100 க்கு கூட கிடைக்குது.”
ஒத்துக்கறேன். ஆனா அதை யார் வாங்கித் தர்றது. அரசு தரப்பில் கொடுக்கப்படும் நிதி ரொம்பவும் குறை புதிதா ஒரு கத்திரிக்கோல் வாங்க எத்தனை பார்மாலிட்டிஸ் இருக்கும் தெரியுமா ? ஒரு பரிசோதனை செய்யும் அரசு மருத்துவருக்கு 500 ரூபாய் கூட உதவித்தொகை கிடைக்காது. சமீப காலம் வரை ஒரு பிரேதபரிசோதனைக்கு 150 ருபாய் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கு. ஊழியர்களுக்கு அதைவிடவும் குறைவுதான்.”
“டாக்டர் ஒரு பிரேதபரிசோதனை செய்யும் அறை எப்படியிருக்க வேண்டும்?”
“பிணவறைக்குள்ளேயே உடைமாற்றும் அறை, ஷவருடன் இருக்க வேண்டும். குளிர்சாதன வசதி நீர் உடனடியாக உலரும் வகையில் வழுக்காத தரைகள், சடலங்களைப் பார்வையிடும் அறை ஆகியவை அவசியம். சாதாரண வீட்டின் சமையலறையிலேயே சிம்னி வசதி வேண்டும் என்கிற காலம் இது. ஆனால் பிரேதப் பரிசோதனை அறையில் சிம்னி கிடையாது. சடலத்தைத் திறக்கும்போது எத்தனை அழுக்குகள் கிருமிகள் வெளிவரும். அதை உறிஞ்சி மேல அனுப்ப சிம்னி வேண்டாமா ? வெளிநாடுகளில் அந்த வசதிகள் பக்காவாக இருக்கின்றன. நமக்கு இல்லையே ? இன்னும் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளது.”
“அப்போ இந்த மருத்துவமனையில் நடந்தது சரின்னு பேசறீங்களா ? அது சரி நீங்கள் மருத்துவர் இனம்தானே அதனால்தான் ஒரே மாதிரி பேசறீங்க.” என்று காட்டமாய் சமூக ஆர்வலர் பேச வெறுப்புடன் டிவியின் திரையை அணைத்தார் டீன் சதாசிவம்.
இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமானவன் பாலா அவன் நிம்மதியாய் பெத்தடின் எடுத்துக்கொண்டு படுத்து கிடக்கிறான். நானில்லை பதில் சொல்லணும் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க… அதே நேரம் கதவைத் தட்டிவிட்டு போலீஸ் உடையில் உள்ளே நுழைந்தாள் துளசி.
டாக்டர் சதாசிவம் தன் நெற்றியைத் தடவியபடியே ?! துளசியை வரவேற்றார். சுற்றிவளைக்காமல் நேராகவே விஷயத்திற்கும் வந்தார்.
“பாலா கொஞ்சநாளாகவே அப்நார்மலா இருக்கார் துளசி இதை நீங்க எப்படி நோட்டீஸ் பண்ணாம விட்டீங்க ?” பெத்தடின் ஊசியின் மயக்கத்தில் இருந்த பாலாவினைப் பார்த்துவிட்டு தன் எதிரில் அமர்ந்திருந்த துளசியிடம் கேள்வி எழுப்பினார் அவர்.
“இன்னைக்கு அவரோட நடவடிக்கைகளில் நிறைய மாறுதல்கள் இருந்ததா கூட இருந்தவங்க சொன்னாங்க. இரவு நேரங்களில் அவர் சரியா தூங்குவதில்லைன்னு நினைக்கிறேன். இந்த மீடியாக்காரர்கள் பண்ணின குழப்பத்தில் நானும் அவரை கொஞ்சம் கடிஞ்சிப் பேசிட்டேன். அதுவும் கூட அவரோட இந்த மன அழுத்தத்திற்கு காரணமா இருக்கலாம்.”
ஒரு கணம் நான்சியின் அறிக்கையைப் பற்றி சதாசிவத்திடம் பேசலாமா என்று தோன்றிய எண்ணத்தை உடனே அழித்தாள் துளசி. இன்னமும் அவளுக்கே நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகிறதே ?! எனவே அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள் மெளனமாய்.
“அன்னைக்கு ஆஸ்பிட்டலுக்கு போஸ்ட் மார்ட்டத்திற்கு வந்த பிணங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15க்கும் மேல் எல்லாமே ஒருவித பிரஷரைஸ் அதிலும் குறிப்பிட்ட இந்த ஆறுபேர் விபத்தில் வந்தவங்களுக்கு உடனே ரிப்போர்ட் கேட்ட உங்க காவல்துறை, மீடியா, சம்பந்தப்பட்ட அரசியல்வாதின்னு நாலுப்பக்க நச்சரிப்பு ஆனா எங்ககிட்டே டாக்டர்ஸ் ரொம்பவும் கம்மிதான்.
உண்மையில் மருத்துவதுறையில் பிணக்கூறாய்வு செய்யும் துறையினைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் வெகு குறைவு, மாணவர்கள் எல்லாருமே இதை ஒரு மோசமான துறையா நினைக்கிறாங்க. இறந்தவங்களை அறுக்கிற இந்த மருத்துவருக்கு மரியாதையும் குறைவுதான். அப்படியிருக்கும் போது பயிற்சி மாணவர்கள், பகுதிநேர மருத்துவர்கள், சில நேரங்களில் ஊழியர்கள் கூட அந்த பணியினை மேற்கொள்ள வேண்டி வருகிறது.
இந்திய சடங்கில் உடலைக் கூறு போடுவதை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை, எதிர்பாராத விபத்து மற்ற சந்தேகப்படும்படியான மரணங்களுக்குத்தான் அந்த விதி இருக்கும்போது அதற்கான மருத்துவர்களை ஏற்படுத்தியும் தர வேண்டும். ரத்தமும் சதையுமா அழுகல் நாற்றத்தோடு வர்ற பிணங்களை கூறுபோடும் பிரேத பரிசோதனை அறைகள் கவிச்சி வாடையடிக்காமல் எப்படியிருக்கும் ?!
அரசு மருத்துவமனைகள் மட்டும் இல்லை நிறைய பிரைவேட் மருத்துவமனைகளில் கூட இந்த சிக்கல்கள் இருக்கிறது. ஏற்கனவே பிரேத பரிசோதனைகளை வீடியோவில் பதிவு செய்யவேண்டுன்னு மதுரை ஐகோர்ட்டுல் 2020 ல் ஒரு கேஸ் கூட நடந்தது. நிறைய பரிசோதனைகளின் போது புகைப்படங்கள் கூட எடுத்து வைக்கப்படும்.” சதாசிவத்தின் இந்த பதிலில் நிமிர்ந்தாள் துளசி
“டாக்டர் எல்லா பிரேதபரிசோதனையின் போதும் நீங்க புகைப்படங்கள் எடுப்பீங்களா ?”
“சந்தேகப்படும் மரணங்கள், விபத்து, கொலை போன்ற பரிசோதனைகளில் எடுப்போம் ஏன் துளசி கேட்கறீங்க ?”
“டாக்டர் இப்போ நான் உங்களுக்கு சில உண்மைகளைச் சொல்ல போறேன்.” நான்சியின் குறிப்புகளையும் அன்று நடந்த நிகழ்வுகளையும் துளசி சொல்ல சதாசிவம் வாயடைத்துப் போயிருந்தார். அவர் கண்களிலும் ஒருவித பயம் எட்டிப்பார்த்தது.
“இதெல்லாம்தான் பாலாவோட மனசில குழப்பத்தைக் கொண்டு வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன்.”
“துளசி நீங்க சொல்றதைக் கேட்கும்போது எனக்கு இப்போதான் பயம் அதிகமாகுது. பிணம் எப்படி எறிந்தது ? சிகப்பு பாஸ்பரஸ்க்கு இங்கே வேலையே இல்லையே ?! அதிலும் அந்த பிணத்தின் உடலில் இருந்த எலும்புகள் காணோம்ன்னு என்ன நடக்குது என் கண்களுக்குத் தெரியாமல்? ஏற்கனவே மீடியாகாரங்க போட்டு உலுக்கிட்டு இருக்காங்க இன்னும் இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்தால் ?” அவர் முகத்தில் தென்பட்ட கலவரத்தைக் கண்டதும்
“அமைதியா இருங்க டாக்டர் இந்த விவரம் என்னையும் பாலாவையும் தவிர வேற யாருக்கும் தெரியாது. நான்சி நிச்சயம் வெளியே பேச மாட்டாங்க. ஆனா இங்கே ஏதோ தப்பு நடக்குது. அதை முதல்ல கண்டுபிடிக்கணும். பாலாவுக்கு கொஞ்சநாள் விடுப்பு கொடுத்து ரெஸ்ட்ல இருக்கச் சொல்லலாம் எனக்கு இந்த மருத்துவமனையை அன்அபிஷியலா சோதனை போட பர்மிஷன் கொடுங்க. நடக்கிற குற்றம் என்னன்னு தெரியலை அதை கண்டுபிடிச்சாத்தான் யார் குற்றவாளின்னும் அவங்க மோட்டிவ் என்னன்னும் தெரியும் அதனால நாம சர்வ ஜாக்கிரதையா இருக்கணும். ஒரு ரகசிய விசாரணைதான் உண்மைகளை வெளியே கொண்டு வரும்.”
“நீங்க எடுக்கிற எந்த நடவடிக்கைக்கும் நான் சம்மதம் தெரிவிக்கிறேன் துளசி. எனக்கு இந்தப் பிரச்சனையில் இருந்து சரியான தீர்வு கிடைக்கணும்.” அதே நேரம் சதாசிவத்தின் அறைக்கதவு தட்டப்பட்டது. ஒரு ட்யூட்டி டாக்டர் உள்ளே நுழைந்தான். அவன் பார்வை துளசியைக் கண்டு சற்று நிதானித்து பின்,
“ஸார் நேத்து போஸ்ட்மார்ட்டம் பண்ண மெக்கானிக் கார்மேகத்தோட பாடிய வாங்க அவங்க அட்டெண்டர்ஸ் வந்திருக்காங்க நீங்க சைன் பண்ணிட்டா மத்த பார்மாலிட்டிஸ் நான் பார்த்துக்கறேன்.” என்றான் சதாசிவம் கையெழுத்து இடவும்,
“நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் இங்கே அதைப்பற்றி பேச வேண்டான்னு தோணுது. நான் பாலாவைக் கூட்டிட்டுப் போகலாமா ?!”
“அவர் இன்னைக்கு இங்கேயே இருக்கட்டும் துளசி. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும் நாளைக்கு காலையிலே நீங்க அவரைக் கூட்டிப் போகலாம்.” என்றதும் சதாசிவத்திடம் இருந்து விடைபெற்ற துளசி பாலாவின் அறைப் பக்கமாக வெளியேறினாள்.
பாலாவின் மேஜைக்கு அடியில் பொட்டலமாய் சுருண்டிருந்த சிகப்பு பாஸ்பரஸ் தன்னுடைய அடுத்த இரைக்காக வெளியே போக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பதை அவள் அப்போது அறியவில்லை.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
- நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் :4 - லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்