18வது அத்தியாயம்
நான்சி தன் கையுறையைக் கழற்றி பிங்க் நிறத்தில் டிஸ்போஸிபிள் உடையணிந்த யூஸ்மீ ஸ்டிக்கர் ஒட்டிய டஸ்பினில் வீசியெறிந்தாள். 20-20 மேட்சில் பேட்ஸ்மேனின் பந்தை லாவகமாக கேட்ச் செய்யும் பவுலரைப் போல தன்னுள் வாங்கிக்கொண்டது.
வெள்ளை நிறத்தில் என்னிடம் எந்த கறையும் இல்லை என்று உரைப்பதைப் போல சுவர்கள் காட்சியளித்தன. ஆனால் மேஜையின் மேல் பலவண்ணக் கறைகளை ஆராய்ந்தே தீருவேன் என்று சபதமிட்டதைப் போல் குற்றமாதிரிகள் குவிந்து கிடந்தது. வெகு ஆர்வமாய் அதில் புதையல் தேடும் மனிதனைப் போல ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள் சீருடை ஆசாமிகள்.
“டொக்…டொக்…!” என்று கணிப்பொறியோடு ஒயர் கனெக்ட் செய்யப்பட்ட டிவிஎஸ் கீபோர்ட்டின் சப்தம் சில நொடிகள் நின்று, மீண்டும் தொடர்ந்தது. அது அந்த கீபோர்ட்டை இயக்கும் பெண் பரிசோதனையாளர் உள்ளே நுழைந்த துளசி மற்றும் இன்ஸ்பெக்டர் கர்ணனை பார்த்த இடைவெளியாக கணக்கில் கொள்வோம்.
நான்சி அவர்களை சற்று சந்தடியற்ற இடத்தில், நான்கு கண்ணாடித் தடுப்புகளைக் கொண்ட அறைக்குள் கூட்டிச் சென்றாள். அவர்கள் வருவதற்கு முன்பே சில வகை பிளாஸ்டிக் கவர்கள் கலர்கலரான ஸ்டிக்கி நோட்டி எவிடென்ஸ் 1,2,3 என்று பத்துவரையில் வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
“இதெல்லாம் நம்ம கேஸுக்கு உபயோகப்படும் மாதிரிகள். இது கார்மேகத்தின் போஸ்மார்ட்டம் ரிப்போர்ட். அதாவது நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த விபத்து. டாக்டர் பாலா ஆய்வு செய்தது. சம்பவ இடத்தில் கனரக வாகனம் மோதி மரணம். போராட்டம் நிகழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்திருக்கிறது. அவனுடைய உடலில் சிறு மணல்கள், தூசிகள் ஒட்டிக் கொண்டு இருந்திருக்கிறது!”.
“கார்மேகத்தின் விபத்து நடந்த இடத்திற்குப் பக்கத்தில் ஏதோ வீடு கட்டுவதற்காக மணல் செங்கல் குவித்து வைக்கப்பட்டு இருந்ததாக கேஸ் ரிப்போர்ட்டில் படித்த நினைவு!” துளசி சொன்னாள்.
“கரெக்ட் ! அந்த துகள்கள் அவனின் ஆடைகளில் இலேசாக ஒட்டி இருந்திருக்கிறது. கீழே சிந்திய ரத்தத்திலும் அது கலந்திருந்தது. இதில் அவனுடைய சிகை, ரத்தப்பிரிவு, கண்ணின் நிறம் இன்னபிற தகவல்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கார்மேகத்தின் உடல் என்று சொல்லும் அளவிற்கு அதற்கு இவற்றின் ஒற்றுமை உதவும். ஆனால்….?!”
“ஆனால்….இது கார்மேகத்தின் பாடி இல்லையா ? ஏதாவது ஆள் மாறாட்டமா ?”
“இது அவனுடைய பாடிதான். ஆனால் நிறைய செயற்கைத்தனம் கலந்துள்ள பாடி ?”
“புரியவில்லை நான்சி தெளிவாக சொல்லு?!”
“இரண்டு முறை விபத்து ஏற்பட்டு இறந்து போன கார்மேகத்தின் பரிசோதனையில் நிறைய ஒற்றுமைகளும் இருக்கு வேற்றுமைகளும் இருக்கு!”.
“முதல் வேற்றுமை அவருடைய தோல், ரத்தம். அவர் இறந்ததா குறிப்பிடப்படும் நேரம், பாடியின் விறைப்புத்தன்மை. உருவப்பட்ட முதுகெலும்புகள்!”.
“ஒற்றுமைகள் அவரின் கண் அமைப்பு, முடிஇழைகள், உடம்பில் கைபகுதியில் உள்ள மச்சம் போன்ற அமைப்புகள், முக்கியமா அவருடைய கைரேகைகள்!”.
“விபத்து இறப்பவர்களின் உடல்மாதிரிகள் சிலது ஏதாவது தேவைக்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். சிலநேரம் இது விபத்து இல்லை கொலை என்று சந்தேகப்பட்டு மீண்டும் அந்த கேஸ் பைல் திறக்கப்படும்போது அந்தக் குறிப்புகள் உதவ வாய்ப்பிருக்கிறது பெரும்பாலும், அப்படி எல்லா கேஸிலும் நடப்பதில்லை என்றாலும், சில அதற்கு விதிவிலக்கு. ஒரு கைதேர்ந்த பிணவறை மருத்துவர் தன் பரிசோதனை அப்படிப்பட்ட மாதிரிகளைச் சேமித்து வைப்பார் பாலாவும் அதை செய்து இருக்கிறார்!”.
“இது கார்மேகத்தின் முந்தைய தோலின் பயாப்ஸி ரிப்போர்ட், கொஞ்சநேரத்திற்கு முன்னாடி நான் மார்ச்சுவரியில் இருந்த பிணத்தின் மேலிருந்து வெட்டியெடுத்த தோலின் மாதிரியில் அது ஒரு மிருகத்தின் தோல் என்று தெரியவந்தது. அதாவது இறந்துபோன கார்மேகத்தின் உடலில் இருந்து தோலை வெட்டியெடுத்துவிட்டு அவரின் முதுகெலும்பு மற்றும் மூட்டு எலும்புகளைத் தோண்டிவிட்டு, செயற்கையான விலங்கின் தோலை ஒட்டியிருக்கிறார்கள்!”.
“அந்த ஒட்டல் விலகாமல் இருக்க நரம்பினால் ஒரு சிறு தையலும் அவ்வுடம்பில் போடப்பட்டு இருந்தது. இதோ நான் பாடியை செக்செய்யும் போது எடுத்த புகைப்படங்களில் அந்த நரம்பின் சிறுமுடிச்சி தெரியும். சூம் செய்து பாருங்கள்!” என்றாள். அவர்களும் பார்த்தார்கள். முதலில் ஸ்கிரீனை பிறகு ஒருவரையொருவர்.
“இது ஒரு விலங்கின் தோல் என்பதை எப்படி உறுதி செய்கிறீர்கள் ? மனிததோல் போலவேதானே தோற்றம் அளித்தது?!”.
“அதுதான் சயின்ஸ். மனித இனத்தின் தோல் அடுக்குகளோடு ஒத்திருப்பது பன்றியின் தோல் மற்றும் எலியின் தோல். இவற்றில் மூன்று அடுக்குகள் உள்ளது. பாலாவின் ஆய்வில் வெட்டிஎடுக்கப்பட்ட தோலின்மேல் இருக்கும் சிறுமுடிக்கும், இப்போ நாம கட்பண்ணி எடுத்துவந்த தோலின் மேலுள்ள முடிக்கும் உள்ள வித்தியாசம் இதற்கு சாட்சி!”.
“பொதுவாக மேல்தோலான ஹைப்போடெர்மிஸ். தோலின் வெளிப்புற அடுக்கு இது கெரடினோசைட்டுகளால் ஆனது. பன்றிகளும் மனித தோலைப் போல மேல்தோலைக் கொண்டுள்ளது. எலி போன்ற சிறிய பாலூட்டிகள் மிக மெல்லியத் தோலைக் கொண்டது!”.
“இது இரண்டு வகையா பிரிக்கப்படும். பாப்பில்லரி லேயர் & ரெட்டிகுலர்லேயர். மனிதத்தோல் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இழைகளால் ஆனது. ஹைப்போடெர்மிஸ் என்பது சப்டெர்மல்ங்கிற கொழுப்பு அடுக்கு இது மனிதர்களை விடவும் பன்றிகளில் அதிகமாக இருக்கும். இதைவைத்துதான் கார்மேகத்தின் உடலில் இருந்தது மனிதத்தோல் இல்லைன்னு முடிவு செய்தேன்”.
“கார்மேகத்தோட ஐந்து விரல்களின் ரேகைகள் தனித்தனியா பரிசீலனை செய்யப்ட்டு இருக்கு. இரண்டு கைரேகைகளும் ஒத்துப் போயிருக்கு. சாதாரணமா இரட்டைக் குழந்தைகளா பிறக்கிறவங்களுக்கு கூட இந்த கைரேகை ஒற்றுமை இருக்காது. ஒரு மனிதன் பிறந்தபின், அவன் இறக்கும் வரையில் அது மாறவாய்ப்பில்லை. எனக்குள்ளே ஒரே நெருடல். இப்போதைய விபத்து நடந்த இடத்தில் கார் கைப்பிடியில் அவனுடைய அதாவது கார்மேகத்தின் கைவிரல் ரேகைகளை ஒத்திருக்கு!”.
“இறந்து போனதா நீங்க சொல்ற கார்மேகம் மறுபடியும் உயிரோட வந்து மீண்டும் தனக்குத்தானே விபத்தை நடத்திக்கிறான்னு சொல்றீங்களா ?”
கர்ணனின் கேள்விக்கு நான்சி சிரித்தாள், “ எதிராளி நம்மைப் போலவே யோசித்து அந்த கைரேகைக்கு நகல் தயாரித்து உறை பயன்படுத்தியிருக்கலாமே. ஏமாற்றிச் சொத்துக்களை பெற நினைக்கும் ஒருவன் உரிமையாளரைப் போலவே கையொப்பம் போடுவதில்யைா ? அதைப்போலத்தான் இதுவும்.”
கர்ணன் மீண்டும் தன் சந்தேகத்தைக் கிளப்பினார். “விபத்து நடந்த இடத்திற்கு அந்த பிணத்தை கொண்டு வந்து விபத்துபோல் செட்டப் செய்திருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், இலேசாக உறைந்திருந்தாலும், ரத்தம் சிகப்பாகத்தானே காணப்பட்டது நேரம் கடந்ததால் பழுப்பிலோ அல்லது கறுப்பாகவோ காணப்படவில்லையே ?!”
“கர்ணன் ஸார் நீங்க ஒரு திறமையான போலீஸ் அதிகாரி. நீங்கள் எனக்கு விபத்து நடந்த இடத்தை புகைப்படத்தில் காண்பித்தீர்களே அதை மீண்டும் நீங்களே பாருங்கள். கார்மேகத்தின் சட்டையில் விழுந்துள்ள இரத்தத்துளிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்?!”.
“எப்படி ?”
“மாற்றிப்பாருங்கள் ! அதாவது சட்டையின் அடிப்பகுதியில் இருந்து மேல் புறத்தில் இரத்தம் வருவதற்கான காயம் இருக்கும் பகுதியில், கார்மேகத்தின் இடது பக்கத்தில், காரின் கண்ணாடி வழியாகவோ அல்லது காரின் கதவை திறந்து வைத்துக்கொண்டோ கைகளினால் அந்த ரத்தத்தை ஊற்றியிருக்கவேண்டும் !”.
“ஏனென்றால், கார்மேகத்தின் இடது பக்கத்தில் விழும் சொட்டுக்கள் உயர்ந்து அவன் தலையில் இருந்த காயத்தின் வழியே விழுவதைப் போல செட் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக 20 அங்குல உயரத்தில் இருந்து விழும் ரத்தம் உருண்டை வடிவத்தில் இருக்கும்.”
“ஆனால் காரின் சீட்டுக்கும் தரைக்கும் நான்கரை அடி உயரத்திற்குள் இருக்கும் அந்த காரின் உயரத்தில் இருந்து விழுந்ததால் இதோ இந்த புகைப்படத்தில் தரையில் ஊசிபோல் இரத்தக்கறைகள் படிந்திருக்கிறது!”.
“பென்டாஸ்டிக்…..?!” கர்ணன் வியந்து பாராட்டினார்.
“இந்த ரத்தமும் அதே விலங்கு வகையைச் சேர்ந்ததுதான். உயிருடன் இருக்கும்போது வெளிப்படும் ரத்தத்தில் உறைபுரதம் எனப்படும் FIBRIN இருக்கும். உலர்ந்தபின் அதை துண்டு துண்டாக வெட்டி எடுக்க முடியும். ஆனால் பதப்படுத்தப்பட்ட இரத்தத்தில் உறைந்துபோனாலும் கட்டித்தன்மை இருக்காது அதை பொடி போன்ற நிலைதான் இருக்கும். இன்னும் டீப்பா சொன்னா போரடிக்கும்.”
“எம்பிளாம்பிங் மூலமா கார்மேகத்தின் பாடி விறைப்பாகமாகல் இயல்புநிலையில் இருக்கவைக்கப்பட்டு இருக்கு. அப்போதே அவருடைய முதுகெலும்புகள் திருடப்பட்டு இருக்கு.”
“சயின்ஸ்படி அவர் இறந்து நான்கு நாளைக்கு முன்னாடிதான். ஸோ இந்த விபத்து ஒரு போலி நம்மைக் குழப்ப எதிராளி எடுத்துக் கொண்ட ஒரு ஆயுதம். என்வரையில் எல்லாமே சொல்லிட்டேன் இனிமே நீங்கதான் கண்டுபிடிக்கணும். பால் இப்போ உங்க வட்டத்துக்குள்ளே வந்தாச்சு!”
“இன்ஸ்பெக்டர் துளசி ! என்னையும் இந்த கேஸில் இணைத்துக் கொள்ளுங்கள் என் லிமிட்டில் நடந்ததால் இல்லை இந்த வழக்கில் எனக்கு ஒரு ஈடுபாடு வந்துவிட்டது.” கர்ணன் ஆர்வமாய் சொல்ல, துளசியும் தலையசைத்தாள்.
“உங்க எக்ஸ்பீரியன்ஸ் எங்களுக்கும் உதவும் மிஸ்டர். கர்ணன். ஆனா இந்த இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் ரகசியமா இருக்கிறது. நம்வரையில் நல்லது எந்த ஒரு மீடியா வெளிச்சமும் படாமல் பார்த்துக் கொள்ளணும். இல்லைன்னா எதிராளி நிச்சயம் உஷாராகி விடுவான்”.
“இப்போ நம்மோட அடுத்த நடவடிக்கை டாக்டர் சதாசிவத்தை பார்த்து மருத்துவமனையில் பிணவறையினையும், பாலாவோட அறையையும் சோதனை போடுவதுதான்!” என்று துளசி சொல்ல, மூவரும் தலையசைத்தார்கள்.
அங்கே மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கப் போவதையும் அதனால் பாலாவை கைது செய்யும் எண்ணத்திற்கு துளசி தள்ளப்படுவதையும் அப்போது அவள் அறிந்திருக்கவில்லை!
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
- நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் :4 - லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
- நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
- நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்