கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 39

02/05/2020,  சனிக்கிழமை

காலை மணி 10 : 00

எப்போதும் ஹமாரே சாத்தியோங் என வாய் நிறைய அழைத்து அல்வா கொடுத்துவிட்டுப் போகும் மோடி வரவில்லை !

தனித்திரு, விழித்திரு, கேள்வி மட்டும் கேட்டு குறுக்கே வராதிரு என ஓதும் எடப்பாடி  வரவில்லை !

ஜவ்டேகர் வரவில்லை, பீலா வரவில்லை, விஜயபாஸ்கர் வரவில்லை, ரா கி வரவில்லை, யாரோ ஒருவர் தலையில் முக்காடு போட்டபடியே வந்து, மேலும் பதினான்கு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு என அறிக்கை தந்துவிட்டு மாயமானது போல், ஸ்க்ரோலிங் மட்டும் அனைத்துச் செய்தி தொலைக்காட்சிகளின் கீழ் பளீர் செய்தியென ஓடிக்கொண்டிருந்தது !

ஏன், என்னாச்சு ?  ஒரு நாள் ஊரடங்கை முதன்முதலாகத் தோன்றி சொல்லியபோது,

“அது கொரோனாவுக்கு எதிரான போர், வீட்டுக்குள் இருங்கள், மாலையானதும்  தட்டுக்களை ஓங்கித் தட்டி, நம் பலத்தைக் காட்டினால், மகாமாரி போயே போய்விடும் ” என்றெல்லாம் ஆத்தியபோது என்னவாய் வடக்கன்கள் உணர்ச்சிப் பெருக்கில் சாவு மணி அடித்துக் கொண்டு ஊரை வலம் வந்தனர் ?  அடுத்தடுத்த நீட்டிப்பு நடவடிக்கைகளையெல்லாம் முதல்வர்களும், பிரதமரும்தானே அறிவித்தார்கள் ?  பிறகேன் இந்த மூன்றாவது நீட்டிப்பை மட்டும் யார் அறிவித்ததென்றே தெரியாமல் ரகசியம் ?  பயம்தானே ?

வெறும் கையால் முழம் போட்டு பூ முடிக்க முடியாதென்பதை இன்றுதான் நடுவண் ஒன்றிய அரசு உணர்ந்தது போல ?  டிவியில் தோன்றி மீண்டும் நீட்டிப்பு என்றால், ‘ஏன் தொற்றுக்கள் எங்களை வீட்டில் முடக்கியும் அதிகரிக்கிறது ?’ எனக் கேட்பார்களே என்கிற பயம்தான் !

‘வெறும் 500 ரூபாயும், புழுத்துப் போன அரிசி / கோதுமையும் வீட்டில் அனைவரும் ஒண்டிக் கிடக்க, அது குடும்பத்துக்கு காணுமா ?’ என விளக்கு பிடித்த மரமண்டைகளும் கேட்குமே என்கிற பயம்தான் !

‘நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் குறியீட்டு எண் பூஜ்யத்துக்கும் கீழிறங்கி மைனசில் போகவிருக்கும் சூழலில், 20000 கோடிகளுக்கு புது நாடாளுமன்றம், கார்ப்பரேட்களுக்கு கடன் மற்றும் தள்ளுபடிகள், பிரதமருக்கு பல்லாயிரம் கோடிகளில் தனி சொகுசு விமானங்கள் என்றெல்லாம் ஆடுவீர்களே அன்றி, மக்களுக்காக சிறிதும் இறங்கி வராமல் இதையெல்லாம் எப்படி சரிக்கட்டுவீர்கள் ?’ எனக் கேள்விகள் கிளறுமே என்கிற பயம்தான் !

பிற்பகல் மணி 02 : 00

ராகுல்காந்தியும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும், காணொளி மூலம், நாட்டுநிலை பற்றிப் பேசிக்கொண்டது மிகவும் உவப்பான ஒன்று !

“இரண்டாவதாக ஊரடங்கை நீட்டித்தபோதே நீங்கள் தோற்றுவிட்டீர்களென அர்த்தம்.  இதற்கிடையே இப்படி நடுவில் திறப்பது, பிறகு மூடுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு, கொரோனா எனும் நரியை நம் வீட்டுக் கோழிக் கூண்டுக்குள் பாதுகாவலனாக வைப்பதற்குச் சமம்.  200 லட்சம் கோடிகள் ஆண்டு வருவாய் சுழற்சி கொண்ட நாட்டில் 65000 கோடிகளை முதற்கட்ட நிவாரணத்துக்கு ஒதுக்குவதில் எந்தச் சிரமமுமில்லை.  அப்படிச் செய்து, மக்கள் அனைவருக்கும் உதவி, இந்த நீட்டிப்பை கொண்டுச் சென்றிருந்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும்” என்றார் ரகுராம் ராஜன் !

மாலை மணி 05 : 00

மே 17 வரை ஊரடங்கு நீடிக்குமென பிள்ளையை நறுக்கென கிள்ளி விட்டுவிட்டு, வரும் திங்கள் முதல் பல்வேறு தொழிற்சாலைகள், சிறு வணிகங்கள், சுய தொழில் புரிவோர் வழக்கம் போலச் செயல்படலாமென தொட்டிலையும் ஆட்டி விட்டிருக்கிறார்கள் !

படு குழப்பமான கட்டுப்பாடுகளை பட்டியலிட்டு, பொதுப் போக்குவரத்து இயங்காது, நீங்களா வண்டி வச்சு அழைத்து வரலாம், ஆனா 25 % ஆட்களோடு இயங்கணும், இத்தனை மணிக்குள்ள மூடிடணும், இது அடுக்கடுக்கா அப்படியே நீண்டுகிட்டேப் போகுது.  எதற்காக இந்தக் குழைவு ?

1.) எங்களால் உங்களுக்கு இனியும் பண உதவி செய்யமுடியாது !

2.) உணவும் வழங்க முடியாது !

3.) தொற்றுகளின் எண்ணிக்கையும் கட்டுப்படாமல் பெருகிக் கொண்டே போகிறது !

4.) வரி வருவாய், பண சுழற்சி, இதர அரசுத்துறை ஈட்டும் வருமானம், யாவும் நின்று கடும் நிதி சிக்கலில் தவிக்கிறோம் !

5.) இப்படி அனுமதித்து சுமூகச் சூழலை உருவாக்குவதன் மூலம் டாஸ்மாக்கையும் விரைவில் திறக்க முடியும் !

விழித்திரு, விலகியிரு என்றவர்களின் பேச்சுக்கு அடங்கி, தியாகம் செய்த மக்களுக்கு இனி செய்ய எதுவும் மிஞ்சவில்லை என்கிற கைவிடப்பட்டச் சூழலில், தமிழக அரசு இந்த அதிரடி முடிவை எடுத்ததாய்ப் படுகிறது.  வரவேண்டிய சரக்கு & சேவை வரிக்கான பங்கையே நடுவண் அரசு விடுவிக்காததில், இனி இவர்கள் இதற்கு மேல் பேரிடருக்கான நிதியை தனியே ஒதுக்குவதற்குள் அதோகதியாகிப் போவோம் என தெரிந்துக் கொண்ட மாநில அரசு,  ஏமாந்து தடுமாறிப் போனதன் பின் விளைவை நாம் அனுபவிக்க இருக்கிறோம் !

இனிதான் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  இனி சுற்றுச் சூழல் அதிக மாசுபடும்.  மக்கள் நெருக்கம் சகட்டுமேனிக்கு அதிகரிக்கும்.  இதுவரை ஆரோக்கியமாக தாங்கிவிட்ட உடல் கூட, வெய்யில் சூடு, புழுதியால் இனி சீர் கெடும் !

ஆனால், பணமில்லாத வெறுமைச் சூழலுக்கு முன் இதெல்லாம் தூசுதான்.  அதிக எச்சரிக்கையுடன் தனிமனித விலகல், முகக்கவசம் மற்றும் கையுறை சானிடைசர் சகிதம், எதிர்கொள்ளவிருக்கும் கடுமையான நாட்களை கடப்போம் !

 

தொடரும்