கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 30
23/04/2020, வியாழன்
காலை மணி 10 : 00
இப்படி ஒரு மாதமாய், எந்த வேலையையுமே செய்யாமல், அதாவது சம்பாதிக்காமல், வீட்டுக்குள்ளேயே அடைந்துக் கிடந்ததுண்டா என நினைத்துப் பார்த்தேன் !
டீன்ஏஜ் முடிந்ததுமே வேலைக்குப் போய்விட்ட இளம்பிராயத்தில் ஒருமுறை திடுக்கென இப்படி நிகழ்ந்திருக்கிறது. வேலை பார்த்தவிடத்தில் வாக்குவாதமொன்று முற்றி, கம்பெனி ஓனர்கள் மனம் கசந்து ஒரே வார்த்தையில், “நாளைலருந்து நீ வேலைக்கு வேணாம்” என்று விட்டார்கள் !
ஆனால் அப்ப கூட அதிகபட்சம் ஒரு வாரம் சும்மா இருந்திருப்பேன், இப்படி ஒரு மாதத்தை தாண்டியெல்லாம் அது நீளவில்லை. நீள, குடும்பச் சூழல் அனுமதிக்கவில்லை !
அன்று இப்போதிருப்பது போல் ஆளுக்கொரு அறை இருக்கும் வீடு வாய்க்கவில்லை. சமையலறை இருக்கும் அறையின் இன்னொரு மூலைதான் படுக்கை அறை. அதில், அப்பா சம்பாத்தியத்தில் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்குவதெல்லாம் நரகத்தில் உழல்வதற்கொப்பாக இருக்கும். நண்பர்கள் வீட்டுக்கும் போக முடியாது. கல்லூரிக்கோ, வேலைக்கோ போயிருப்பார்கள். அது இன்னும் உறுத்தும். கையாலாகாமல் இருக்கிறோமோ, வாழ்க்கை முழுவதுமே இப்படி தண்டச்சோறாகவே கடப்போமோ என்று அந்த இளம்வயது எதிர்காலத்தை எண்ணி கடுமையாக அஞ்ச ஆரம்பித்தது !
ஒரு ரூபாயைக் கூட ஈட்டடாமல், வீட்டிலிருப்பது ஒவ்வொரு நொடியும் குற்றவுணர்ச்சியில் புழுவைப் போல் நெளிய வைத்துக் கொண்டிருந்தது. என்ன வேலை என்றாலும் செய்யப் போவோம் என ஒரு ராட்சத ஆலையில், ட்ராலி தள்ள தற்காலிகமாகப் போனேன். கடும் உழைப்புக்கு ஏற்ற சம்பளமெல்லாம் இல்லை. ஆனால், வீட்டில் சும்மா இல்லை. அதுவே துன்பத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தது. சில நாட்களில் மீண்டும் பழைய வேலைக்கே போய்விட்டேன். ஆனால், வீட்டிலிருந்த அந்த ஒரு வாரம் போல் வாழ்வில் இனி ஒரு நாள் கூட வரக்கூடாதென வேண்டிக் கொண்டேன் !
வேண்டுதல் பொய்த்து, மோடிஜி, எடப்பாடிஜி ஆட்சியில் கொரோனாஜி அவதாரத்தால் அந்தக் கொடுமை இவ்வளவு நீட்டமாக வந்து தொலைத்துவிட்டது. அன்று நான் இருந்த நிலையில், இன்று நாட்டில் பல கோடி மக்கள் மன உளைச்சலில், கடும் நெருக்கடியில் இருப்பார்கள். அவர்களை தேற்றவும் ஆளில்லை. சீக்கிரம் இந்த அவல நாட்கள் மறைந்து, சக்கரம் பழையபடி சுழல்வதொன்றுதான் தீர்வு !
மாலை மணி 05 : 00
சுய புராணத்தில் நாட்டு நடப்பை சொல்லாமலிருக்கக் கூடாது. இன்று அண்ணாசாலை முழுவதற்குமே சீல் வைத்து விட்டார்களாம். அடுத்த சேதியாக, நாளை முதல் 33 விழுக்காடு ஊழியர்களுடன் பிரதான அரசு அலுவலகங்கள் இயங்கும். அப்புறம் அரசு ஊழியர்களெல்லாம் எந்த வழியா வேலைக்கு வருவாங்க ? குரங்கு கையில் கிடைத்த பேனா பேப்பர் போல தன்னிஷ்டத்துக்கு கிறுக்கி, அதுதான் தீர்வென முடிவுகளை ஒவ்வொரு துறையும் எடுப்பதாய்ப் படுகிறது, பாவம் இந்த நாடும், மக்களும் !
இரவு மணி 09 : 00
NDTV யின் பிரணாய் ராய், வினோத் துவா, (பிறகு சன் டிவியின் ரபி பெர்னாட்) போன்ற ஊடகவியாளர்களையெல்லாம் தூர்தர்ஷன் காலத்திலிருந்தே ரசித்திருக்கிறேன். நான் முற்றிலும் வெறுக்கும் ஊடகவியளார்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள் என்றாலும், அந்தக் கூட்டத்தின் லீடர் அர்னாப் கோஸ்சாமி !
அவருடைய உடல் மொழியும், அதிகாரத் தொனி ஆர்ப்பரிப்பு பேச்சுக்களும் அருவருப்பானவை. ஆனால் அதை வீரமென ரசிக்கும் கூட்டமுண்டு, அட அத்தகைய மூடர்கூட்டம் என்றுமே, எங்குமே உண்டுதானே ?
இந்த மனிதன் திடுக்கென தான் தாக்கப்பட்டு விட்டதாய், இன்று ரிபப்ளிக் டிவியில் ஒரு நாடகம் போட்டார். நடுவண் அரசின் Y பாதுகாப்பில் இருக்கும் அந்த மனிதர், தன் மனைவியுடன் காரில் பயணித்த போது, இளைஞர் காங்கிரசார் அவரைத் தாக்கி விட்டார்களாம். சொல்வதெல்லாம் பொய், மெய்யென்று ஏதுமில்லை ரகக் குற்றச்சாட்டு, அது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியப் பத்திரிக்கையாளர் சங்கம் அவர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறது. அடடே என்றுதானே வியப்போம் ? அங்கதான் ஒரு ட்விஸ்ட் !
“ஏங்க அந்தாள் டுபாக்கூர்தான், மோசமான பத்திரிக்கையாளன்தான் அதுக்காக தாக்கிடறதா ? ரொம்பத் தப்புங்க” என்று எடப்பாடித்தனமாக அந்தக் கண்டன அறிக்கை நீள,
“சாச்சிபுட்டாய்ங்க மச்சான்” என்று அர்னாப் அமித்ஷாவிடம் புலம்பித் தள்ளி விட்டாராம் !!!
தொடரும்
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
- ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
- காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
- மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
- ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
- ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
- ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
- திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
- விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
- ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
- யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
- கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
- எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
- தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
- பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
- இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
- புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
- குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
- பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
- மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
- தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
- ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
- இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
- இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
- இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
- செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
- உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
- ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்
- மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
- கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
- யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
- என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
- '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
- ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
- ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
- டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
- திடீர் தீபாவளி இரவில்......
- ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
- விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
- கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்