மூன்றாம் நாள்.  27/03/2020 வெள்ளி காலை 7 மணி

‘’பரவால்ல, இன்னிக்கு நீங்களாவே எழுந்திருச்சிட்டிங்க.’’

‘’இன்னிக்கு கடைக்கு போகணும்ன்னு சொன்ன, எனக்கும் பேங்க் வேலையிருக்கு.  வேலை இருக்குன்னு தெரிஞ்சதுமே மூளை ஆட்டோமெட்டிக் அலாரமா மாறி எழுப்பி விட்டுருது. ஏ என்ன இவ்ளோவ் நீள லிஸ்ட்டு ?’’

‘’எப்படியும் கேக்கறதுல பாதி கிடைக்காது.  இருக்கிற வரைக்கும் வாங்கிட்டு வாங்க !’’

காலை எட்டு மணி

தங்கபுஷ்பம் மளிகைக் கடைக்கு வெளியே பச்சை சதுரக் கட்டங்களை மாநகராட்சியினர் நேர்த்தியாக  வரைந்து வைத்திருந்தனர் !

கடை பலகை அருகே ஏற்கனவே இரண்டு பெண்கள் நின்றிருந்ததால், நாகரீகமாக அந்தப் பெட்டிக்குள் நின்று பெருமை பொங்க சாலையைப் பார்த்தேன்.  நைட்டியில் வேக வேகமாக வந்த அக்கா ஒருவர் என்னை அலட்சியமாக பார்த்துவிட்டு, ‘’அண்ணாச்சி இந்த நம்பருக்கு ஒரு ஈசி பண்ணிவிடு.’’

‘’யக்கோவ், அதான் ரெண்டு பேர் நிக்கிறாங்க இல்ல, கீழ போய் அந்த அண்ணன் பக்கத்துல நிக்கிற கட்டத்துல நில்லுக்கா’’

‘’அய்ய நடு ரோட்ல போய் நிப்பாங்க வா,  ஈசி பண்ணிவிடு அண்ணாச்சி.’’

‘’ம்க்கும், எந்த ஈசியும் வேல செய்யல, இனி ஏப்ரல் 14 வரைக்கும் யார்கிட்டயும் பேசாத.  அவுங்களாவது நிம்மதியா இருக்கட்டும் !’’

‘’அந்தப் பெண் ஏமாற்றத்துடன் சென்றார்.  போகும்போது ஏதோ நான்தான் அந்த நெட்வொர்க்கையெல்லாம் பிடுங்கி விட்டாற்போல ஒரு கோப லுக்.  ஏம்மா போய் நிம்மி மாமிய கேளும்மா, நானே நொந்து போய்க் கெடக்கேன் ?’’

மேலே ஒரு பெண் பொருட்களைப் பெற்றுக் கொண்டு கீழே இறங்கியதும், என் முறை வந்தது !

‘’அண்ணாச்சி ப்ரெட் ஒரு பாக்கெட்’’

‘’வர்லைண்ணே, எங்கயும் தேடாதீங்க கிடைக்காது, வேற ?’

‘’ராகி சேமியா பாக்கெட் ரெண்டு’’

‘’என்னன்னு தெர்ல, நேத்துலருந்து வர்றவங்க எல்லாம் சேமியா, ரவைன்னே காலி பண்ணிட்டாய்ங்க.  ஆர்டர் போட்டிருக்கேன்.  வருமான்னு தெர்லைங்கிறான்.  பழைய பாக்கியப் போடு, புதுசுக்கு அட்வான்ஸ்சயும் சேத்துப் போடுங்கிறான்.  எங்க போறது …. வேறண்ணே ?’’

‘’சேமியா இல்லைங்கிறதுக்குத்தான் இவ்வளவு பெரிய கதையாய்யா ? பீன்ஸ் காக்கிலோ..’

‘’இந்தாங்க தட்டு அந்தா இருக்கு பாருங்க’’

‘’என்ன பீன்ஸ் கேட்டிங்க, கொத்தவரங்காவ அள்ளிட்டு வந்திருக்கீங்க ?’’

அருகிலிருந்தப் பெண் களுக்கென்று சிரித்ததைப் போலிருந்தது.  அடடா இந்த ராஜேந்திரகுமார் காலத்து வர்ணனையை எழுதும் போது எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கு, ஆனா நான் அடைந்தது அங்கு அவமானம்.

‘’ஹிஹி பீன்ஸ் பக்கத்துல வச்சிருந்தீங்களா கன்பீஸ் ஆகிட்டேன்.’’

‘’இல்லண்ணே இந்தா இங்கிட்டுதான்  இருக்கு பாருங்க பீன்ஸ்’’

‘’சமாளிக்க விடுறானா பார்.’’

‘’காக்கிலோதானக் கேட்டிங்க, இன்னும் அள்ளுங்கண்ணே, அம்பது கிராம்தான் இருக்கு’’

‘அடுத்து லத்திய எடுத்து முதுகுல விளாசுவான் போல ?  கொஞ்சம் அள்ளி எடுத்ததில் அது அரைக்கிலோவுக்கு வந்து….  எப்பா சாமீ, மெட்ரிக் டன்ல வியாபாரம் பார்க்கிறவனுக்கு இந்த அசிங்கம் தேவைதானா என்பது போலமைந்தது அந்த மளிகை கொள்முதல் அனுபவம் !

‘’தயவு செஞ்சு இந்த காய்கறி வாங்கிற வேலைய மட்டும் எனக்கு கொடுக்காதடியம்மா !’’

‘’நீஙகதான் எல்லாம் நான் பாத்துப்பேன்னு சீனப் போட்டீங்க.  ஒரே நாள்லயேவா ?’’

‘’ஆமா எதக் கேட்டாலும் இல்லைங்கிறான்’’ (எப்படியும் கொத்தவரங்கா அள்ளினத போட்டுக் கொடுக்காம விடமாட்டான்)

காலை பத்து மணி 

கையில் ஒரு மருந்துச் சீட்டை எடுத்து மேல் சட்டைப்பையில் செருகிக் கொண்டு கிளம்பினேன்.  அடி பெறுவதற்குள் அதைக் காண்பித்து மருந்து வாங்கப் போவதாய்ச் சொல்ல வேண்டும்.  வங்கி வேலைதான், ஆனால் அதற்கான சல்லான், செக் புக் எல்லாம் அலுவலகத்தில் இருந்தன.  இப்ப நான் முதலில் அங்கு போவதற்காகவாவது இந்த மருந்துச் சீட்டு பயன்படலாம்.  ஹெல்மெட், முகக்கவசம் என்று பாதுகாப்பு அம்சங்களை சரியாக உபயோகப்படுத்தினேன் !

உண்மையில் ஊரடங்கு பிரமிக்கத்தக்க வகையில்தான் இருந்தது.  காய்கறிக் கடைகள், மருந்துக் கடைகள், மளிகைக் கடைகளைத் தாண்டி வேறெந்தக் கடைகளுமில்லை.  சாலையிலும் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்தது.  பேரிகாட் அருகே நின்ற காவலர்கள் என்னை எங்கும் நிறுத்தவில்லை !

காலை 11 மணி

அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே கண்களில் நீர் திரையிட்டது.  கண்ட்ரோல், கண்ட்ரோல் என்று சிவாஜி கணேசன் நெஞ்சில் குத்திக் கொள்வது போல குத்திக்கொண்டேன் !

நண்பகல் 12 : 10

வங்கியில் வங்கிப் பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் ஒருசேரக் குறைவாக இருந்தனர்.  உள்ளே நுழையும்போதே சானிடைசரை கையில் தீர்த்தம் போல் தெளித்தார் செக்யூரிட்டி !

‘’என்ன சார் ?’’

‘’ஒரு நெப்ட் பண்ணனும்.’’

‘’இந்தாங்க.  சீக்கிரம் சார்.  க்ளோஸ் பண்ணனும்.’’

‘’டைம் இருக்குல்ல ?’’

‘’இல்ல, ஸ்டாப்ங்க இல்லாததால ஒரு மணி நேரம் முன்னவே க்ளோஸ் பண்ணச் சொல்லிட்டாங்க.’’

பிற்பகல் மதியம் 3 மணி

‘’ஊர் சுத்திட்டு வந்தாச்சா ?  கை கால அரை மணி நேரம் கழுவிட்டு வாங்க.’’

‘பையன் கூட மட்டும் விளையாடுனா போதுமா ?’’

‘’ஆஹா ?’’

‘’அய்ய மூஞ்சப் பாரு, ச்சும்மா போன், டிவி புக்குன்னு மட்டும் இருக்காம என்கிட்டயும் பத்து நிமிஷம் பேசுங்கங்கிறேன் !’’

‘’அவ்வளவுதான ?  இப்பவே சாப்பிட்டு பேசிடுவோம் !’’

மாலை 4 மணி

‘’பேசுவோமா ?’’

கண்ணைப் பார்த்து பேசுவதையே நீண்ட நாள் கைவிட்டிருந்ததால், இன்று  செவ்வானம் அவள் முகத்தில் தென்பட்டது !

‘’அடுத்த மாசம் ஸ்கூல் ஃபீஸ் கட்டணுமே, கட்டிடுவீங்களா ?’’

‘’ப்ச், இதுதான் எப்பவும் பேசறதாச்சே ?’’

‘’சரி பசங்களுக்கு சம்பளம், வீடு, ஆஃபிஸ் வாடகைல்லாம் எப்படி ?’’

‘’சம்பளம் போட்டுத்தான் ஆகணும், ஆனா  வாடகைல்லாம் மூணு மாசத்துக்கு தர வேணாம்ன்னுட்டாங்களே ?’

‘’ஆங், போங்கு அது லோன் ஈ எம் ஐக்கு மட்டும்தான். நீங்க வீட்ல பொழுதன்னிக்கும் செய்தி சேனல் பாக்கறதால எனக்கும் அந்த நோய் ஒட்டிக்கிச்சு.’’

‘’நல்லதுதானே ?’’

‘’ஆனாலும் சாமி சத்தியமா அந்த விவாதம் மட்டும் பாக்க மாட்டேம்பா, த்தூ, மீன் சந்தைல கூட அவ்வளவு சத்தம் இருக்காது !’’

‘’நான் என்ன சொல்றேன்னா இந்த நிதிச்சுமைய எல்லாம் நீ ஷேர் பண்ணிக்க ட்ரை பண்ணாத.  பாத்துக்கலாம்.  எனக்கென்னமோ ஏப்ரல் மொத வாரத்தை மட்டும் கடந்துட்டேன்னா மே மாசம் படுத்தாது.’’

‘’எப்படி ?’’

‘’பழகிடும்.’’

‘’சரி, உங்க வாழ்க்கைல இது போல ஊரடங்க பார்த்திருக்கீங்களா ?’’

‘’வா,இப்பத்தான் நம்ம ஏரியாவுக்கு வந்திருக்க ?’’

‘’அய்யோ சாமி அறுக்காதீங்க, அதயெல்லாம் ஃபேஸ்புக்கோட வச்சிக்கங்க.’’

‘’சரியானக் கேள்வியக் கேட்டிருக்க பிள்ள, ஒரு நிமிஷம்.  போன மாசம் இதே நேரத்துல கூட ஊரடங்கு இருந்திருச்சி தெரியுமா ?’’

‘’இங்கயா ?’’

‘’இங்க இல்ல.  ஆனா இந்தியாவுல.  அதுவும் தலை நகர் டெல்லில.  அதுவும் அதே டெல்லில அமெரிக்க அதிபர் வந்திருந்தப்ப.   சக மனுஷனே மனுஷன வெட்டிக் கொன்னு சுட்டுக் கொன்னு சாக்கடைக்குள்ள தள்ளி விட்டானுக.  எதுக்குச் சொல்ல வர்றேன்னா அங்கெல்லாம் இந்த ஊரடங்கு சகஜம்.   ஆனா இங்க ?  ரொம்ப அரிதா  நிகழும் ! ‘’

‘’பாபர் மசூதிய இடிச்சி கலவரம் வெடிச்சி, இந்தியாவே அல்லோகலப்பட்டுக்கிட்டிருக்கும் போது, இங்க சின்ன சலசலப்பு கூட இல்லை.  இத்தனைக்கும் கரசேவைக்கு செங்கல் அனுப்பி வச்ச வைரமங்கை ஆட்சிதான் அப்ப இருந்தது !’’

‘’பாகிஸ்தான் இந்தியா போர் அப்ப இப்படி.வீட்டுக்குள்ள போக வச்சு, கரண்ட கட் பண்ணி, சிம்னி விளக்கக் கூட பொருத்த விடாம டோட்டல் ப்ளாக் ஆக்குவாங்கன்னு அப்பா சொல்லிக் கேட்ட கதைதான் தெரியும் !’’

‘’இந்த மனுஷன் ஆட்சிலதான் புதுப்புது அனுபவமா கிட்டுதுல்ல ?’’

;ஆமா இன்னும் ரெண்டு தடவ தேர்ந்தெடுத்தா மண்ணில் நரகத்தை காட்டிர மாட்டாரு ?’’

‘’ம்க்கும், இப்ப என்ன சொர்க்கத்திலயா வாழுறோம் ?’’

‘’சொர்க்கம்தான் செல்லம், இப்படி நாம பேசி பத்து வருஷமாகியிருக்காது ?’’

தொடரும்….

நாள் # 3

27/03/2020, வெள்ளி

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
 2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
 3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
 4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
 5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
 6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
 7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
 8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
 9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
 10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
 11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
 12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
 13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
 14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
 15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
 16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
 17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
 18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
 19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
 20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
 21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
 22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
 23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
 24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
 25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
 26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
 27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
 28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
 29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
 30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
 31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
 32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
 33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
 34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
 35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
 36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
 37. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
 38. திடீர் தீபாவளி இரவில்......
 39. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
 40. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
 41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
 42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
 43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
 44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
 45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
 46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
 47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்