கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 42

05/05/2020,  செவ்வாய்

காலை மணி 09 : 00

பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப் பேச்சாளர்களில் ஒருவரான கே.டி. ராகவன் ஒரு பதிவிட்டிருந்தார்.

அவருடையக் கட்சியும், பிற இந்துமத இயக்கங்களும் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்ததால், அறநிலையத்துறை சார்பாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படவிருந்த பத்துக் கோடி ரூபாய் நிதியைப் பெற்றுக் கொள்ளாமல், அந்த நன்கொடையைத் தமிழக அரசு  தவிர்த்திருக்கிறது !

இந்தப் பெருமிதப் பதிவில், சிறிது கூட மனிதமில்லை என்பதை அந்த ஈரமில்லா மனசு அறியவில்லை.  அந்தத் தொகை அனைத்து வகை மக்களாலும் உண்டியலில் செலுத்தப்பட்ட,  கோயில் சொத்துக்கள் மற்றும் வணிக லாபத்தில் பெறப்பட்ட இதர வருவாய் ஆகும்.  இது மக்களின் சொத்து.  எந்த ஒரு மதத்துக்கோ, எந்த ஒரு இனத்துக்கோ மட்டுமே சொந்தமானது அல்ல.  ஏனெனில் இந்து அறநிலையத்துறை என்பது தமிழக அரசின் பல்வேறு துறைகளைப் போன்றதொரு துறை.  அந்தத் துறையால் வரும் வருவாய் இந்துக்களால் ஆனது, அதைத் தூக்கிக் கொண்டு போய் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யப் பயன்படுத்துவது அநீதி என்பதெல்லாம் அபத்தமானது.  மக்களாட்சி நடக்கும் ஒரு சமயச் சார்பற்ற நாட்டில், இப்படி ஒவ்வொரு வருவாயையும் பிரித்துப் பார்த்து, அது இந்த மதத்தாரின் வருவாய், இது அந்த இனத்தாரின் வருவாய் எனப் பகுக்க முடியாது / கூடாது !

முஸ்லீம், கிருத்துவ, சீக்கிய, ஜைன மக்கள் செலுத்திய வரிகளிலிருந்துக் கூடத்தான் அயோத்தியில் ராமனுக்கு அரசு கோயில் கட்டும், கும்பமேளா விழாக்களில் பல கோடிகளை இறைக்கும், மகாமகங்களுக்கு செலவழிக்கும், குடமுழுக்குக்களுக்கு பாதுகாப்பளிக்கும் !

நீ இந்துக்களுக்காக செலவழிக்கும் பணத்தில் என் வரிப்பணமிருக்கே அதச் செலவு செய்யாதே என அவர்கள் கோர முடியுமா ?

போக, அந்தப் பத்து கோடி ரூபாய் யாருக்காக செலவழிக்கப்பட இருந்தது ?  பேரிடரான பெருந்தொற்று நோய் கொரோனாவால் ஏற்பட்ட திடீர் செலவுகளுக்காகவும், உயிரைப் பணயம் வைத்து தொற்றாளர்களைச் சீராக்கப் பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், சோதனை அறியும் சாதனங்கள் வாங்கவும், பசியால் வாடும் பல லட்ச மக்களுக்குத் தேவையான உணவு, உணவுப் பொருட்களை வழங்கவும், உபயோகிக்கப் போகிறார்கள்.  அதைப் போய் தடுப்பது எவ்வளவு பெரிய பாவம் ?    கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களின் சம்பளத்தில் கைவைக்கவில்லை.  அறநிலையத்துறை ரிசர்விலிருந்துதான் எடுக்கப் போகிறார்கள்.  அந்தப் பணத்துக்கும், அவர்களுக்கும் துளி சம்பந்தமில்லை.  அப்படியிருக்க அதற்கே தடைகோரி நீதிமன்றம் வரை போராடப் போய்விட்டார்கள் !

எது அவல நகைச்சுவை என்றால், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், காவலர்கள் போன்றவர்களெல்லாம் கால நேரம் பார்க்காமல், சாதி மதம் பார்க்காமல் நமக்காகப் பாடுபடுவர்கள்.  அவர்கள் அனைவருமே இந்தப் பேரிடர் நிவாரண நிதிக்காக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு அரசு கொடுக்கும் வெகுமதிகள் என்னென்ன தெரியுமா ?

அகவிலைப்படி உயர்வு ஒரு வருடத்திற்க்கில்லை !

விடுப்பு எடுக்காமல் பணியாற்றியக் காலங்களுக்கான பயன்கள் இல்லை !

இது சொல்லிவிட்டுச் செய்தது.  சொல்லாமல் செய்யப்போவது சம்பள உயர்வு சில வருடங்களுக்கு கிடையாது, பதவி மூப்பு பயன் கிடையாது, எங்கு வேண்டுமானாலும் மாற்றுவோம் கேட்கக் கூடாது !

ஆனால் அவர்கள் கூட துயர் படும் மக்களை வாடிவிடாமல் காக்க கை கொடுக்கிறார்கள்.  ஆனால் இவர்களுக்கோ அரசுப் பணம் தங்களின் பணம் என்பது போல படபடப்பு கூடிவிடுகிறது !

தமிழக அரசு ஏன் இந்தப் பணத்தை வேண்டாமென விட்டுக்கொடுத்தது ?  ஏன் வழக்கைச் சந்திக்கப் பயந்தது ?  ஏனெனில் நடந்துக் கொண்டிருப்பது அப்பட்டமான இந்துத்துவா ஆட்சி !

நீதிமன்றத்தில் மிக எளிதாக தனக்கு ஆதரவாக தீர்ப்பைப் பெற்றிருக்க முடியுமெனத் தெரிந்தும், தமிழக அரசு  வழக்கிலிருந்து பின் வாங்கியிருப்பது வெட்கக் கேடானச் செயல்.

இரவு மணி 09 : 00

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப, அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கே அனுப்பி வைக்கும் விஷயத்தில், அவர்களிடமே அதிக கட்டணங்களை வசூலித்த மத்திய அரசை, ஒருவர் மல்லாக்கப் படுத்துக் கொண்டு துப்பியிருக்கிறார்.  அந்த வித்தியாச சீலரின் பெயர் சுப்ரமணியசாமி.  அவரை அக்கட்சியில் உதிர்ந்த ரோமமளவு கூட யாரும் மதிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், அதற்காக கரடியே காறி துப்புமளவுக்கா ஆட்சி செய்வது ?

இதேவேளையில் இங்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் அடிப்படையில், மினி அரசாங்கமாய் அசுர வேகத்தில், சமூகத் தொண்டுகள் புரிவது வியப்பளிக்கிறது.  பலருக்கும் ஆனந்தக் கண்ணீரை அது பெருக்கெடுக்கச் செய்துள்ளது என்றால் துளி மிகையில்லை !

இந்த அழகில்தான்,  போர் விமானம், ஹெலிகாப்டர், போர் கப்பல் மூலம் பூபோட்டு விளையாடிய நிகழ்வுக்கு 200 கோடிகள் வரை செலவாகியிருப்பதாய் ஒரு சேதி கண்டு திடுக்கிட்டேன்.  பாராட்ட வேண்டுமாயின் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கு 5000 ரூபாய்கள் போட்டிருந்தால் கூட, இந்தத் தொகையில் நாலு லட்சம் பேருக்குக் பகிர்ந்தளித்திருக்க முடியும்.  ஏராளமான ஆற்றலும் மிச்சப்பட்டிருக்கும், சுற்றுச் சூழலும் கெட்டிருக்காது.

சார் நீங்க புடுங்கறது பூரா தேவையில்லாத ஆணிகள்தான் சார் !!!

தொடரும்

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
 2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
 3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
 4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
 5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
 6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
 7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
 8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
 9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
 10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
 11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
 12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
 13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
 14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
 15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
 16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
 17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
 18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
 19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
 20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
 21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
 22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
 23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
 24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
 25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
 26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
 27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
 28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
 29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
 30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
 31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
 32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
 33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
 34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
 35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
 36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
 37. திடீர் தீபாவளி இரவில்......
 38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
 39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
 40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
 41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
 42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
 43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
 44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
 45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
 46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
 47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்