கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 38

01/05/2020,  வெள்ளி /பகல் மணி 08 : 00

தெருவில் ஏதோ பரபரப்பான பேச்சுக்களும், அதிக வண்டிப் போக்குவரத்தின் இரைச்சலும் ஒருசேர தூக்கத்தைக் கெடுத்தன.  யாரோ இடைவிடாமல் வெளியே கேட்டைத் தட்டிக் கொண்டிருக்கும் சத்தமும் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது !

என்ன ஆச்சோ என டீ ஷர்ட்டை போட்டுக் கொண்டு கீழே ஓடினேன்.

” சார், யாரும் வெளியே வராதீங்க, உங்க வீட்டுக்கு எதிர்ல சில பேருக்கு கொரோனா தொற்றிருக்குன்னு சந்தேகப் படறாங்க.  அதனால அந்த வீட்ல இருக்கிற ஆளுங்க எல்லோருக்கும் டெஸ்ட் பண்ண கூப்டுட்டு போயிருக்காங்க.  ஃபுல்லா மருந்தடிக்க போறோம்.  நாங்க அடிச்சி முடிச்சவுன்ன வீட்டுக்கு ஒரே ஒரு ஆள், மாஸ்க் போட்டுட்டு தேவையான சாமான வாங்கி வச்சிக்கோங்க.  கன்ஃபர்ம் ஆகிடுச்சின்னா தெருவ தகடு போட்டு அடைச்சிடுவோம் ” என்று மாநகராட்சி ஊழியர் ஒருவர் கனிவுடன் சொன்னார் !

டிவியில் சுகாதாரத் துறை செயலாளர், அமைச்சர் பேட்டிகளில் பார்த்தது, கேள்விப்பட்டதே தவிர, கொரோனாவை இவ்வளவு அருகில் சந்திப்போமென நினைக்கவே இல்லை.  கொஞ்சம் திகிலானது.  ஆனால், இன்னும் உறுதிப்படுத்தப்படாத சேதிதான் என்றது கொஞ்சம் ஆறுதல் !

மொத்தக் குடியிருப்பும் பதட்டத்திற்குள்ளாகி என்ன பொருட்களை வாங்க வேண்டியிருக்குமென பட்டியலிட ஆரம்பித்து விட்டன.  நானும் என் பங்குக்கு மஞ்சப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.  அடடா கடை வாசலில் காத்திருந்த பெண்களிடம் இந்தச் சம்பவ கதைக்கு கை கால் வால் முளைத்து அது புது வைரஸாய் வளர்ந்துக் கொண்டிருந்தது !

தெரு முழுக்க ப்ளீச்சிங் பவுடரும், லாரிகள் மூலம் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டன.  பாதுகாப்பு உடைகளுடன் பல அரசு ஊழியர்கள் சாலையெங்கும் அதச் செய் இதச் செய் என உத்தரவு கொடுத்துக் கொண்டே சென்றனர்.  சில நிமிடங்களிலேயே அந்த வீட்டிலிருந்து சோதனைக்குப் போனவர்களில் ஓரிருவரைத் தவிர பெரும்பாலோர் திரும்பிவிட்டனர்.  எந்த அறிகுறியுமில்லையென அனுப்பி விட்டதாய்ச் சொல்லினர்.  ஆனாலும் தெருவின் ஒரு பகுதி முழுக்க அடைக்கப்பட்டது !

காலை மணி 10 : 00

வீட்டுக்கு வந்து குளித்து பின் தேதியைக் கிழிக்கப் போனால் மே 1.  மார்ச்சாவது தேவலை.  கடைசி ஒரு வாரம் மட்டும்தான் வீணாப் போச்சு.  ஆனால், ஏப்ரலில் ஒரே ஒரு நாள் கூட உபயோகமில்லாமல் வீணாய்ப் போனது.  30 நாட்களும் துளி வருவாய் இல்லை.  போன மாதம் சம்பளம் கொடுத்தவர்கள் கூட இந்த மாதச் சம்பளத்தை எப்படி வழங்குவார்கள் ?  வலைத்தளங்களில் நேற்றே பலர் தங்களுக்கு சம்பளம் கணக்கில் வரவானதைச் சொல்லி மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தனர்.  அதில் பலரும் அரசு ஊழியர்கள், IT துறை ஊழியர்கள்.  Work from Home செய்தவர்கள்.  மிஞ்சி மிஞ்சிப் போனால் 5 விழுக்காடு இருப்பார்கள்.  மிஞ்சியவர்கள் இம்மாத வாடகை, இம்மாத பால், கேஸ், மின் கட்டணம், உணவு, கேபிள் டிவி, சீட்டு, EMI, பாவம்.  தொடர்ந்து இதையேக் கிளற சலிப்பாய் இருக்கிறது.  ஏனெனில் யதார்த்தம் சகிக்க மாட்டாமல் போய்க்கொண்டிருக்கிறது !

மாலை மணி 04 : 00

வருவாய்த் துறை செயலாளராக இருந்த முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் இ ஆ ப, அவர்களை கொரோனா தடுப்பு சென்னை மண்டல சிறப்பு அதிகாரியாக  நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிற சேதி ஓடியது !

பேரிடர் பொழுதுகளில் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது, இதுவே தாமதமான ஆனால் நல்ல முடிவு என பலரும் வரவேற்றிருந்தார்கள்.  கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் போது, அப்போது அங்கு ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன், தன் மனைவியுடன் விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததையும், அந்த விபத்துக்கு காரணமாக இருந்தவர்களை விடாது துரத்தி, வழக்கில் நன்கு சிக்கவைத்து தப்பிவிடாமல், நீதிக்கு துணை நின்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, ஆறுதல் அளித்ததையும் தொடர் செய்திகளாக வாசித்தவன்.  அதன் பின் சுனாமியின் போதும் பம்பரமாகச் சுற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைச் செய்தவர்.   அவருடன் சுழன்ற இன்னொரு இ ஆ ப ககன்தீப்சிங்.  சைலேந்திரபாபு இ கா ப போன்றவர்களும் !

ஆனால், அதே ராதாகிருஷ்ணனா இப்போதும் இருக்கிறார் ?

ஆழ்துளைக் குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த மணப்பாறை குழந்தை சுஜீத் மீட்பு விஷயத்தில், அதிகார வர்க்கம் பொய்க்கு மேல் பொய்களாகச் சொல்லி மீடியா புகழ் வெளிச்சத்துக்காக நாடகத்தையும் நான்கு நாட்களுக்கு நீட்டி, கடைசியில் அது தோல்வியில் முடியவும் ஒரு காரணத்தை அடுக்கி, முழுக்க அரசியல்வாதிகளின் பக்கம் நின்று அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றியதும் இதே ராதாகிருஷ்ணன் சார்தான் !

இன்று கொரோனா விஷயத்திலும் அரசுத் தரப்பில் சிறிதும் வெளிப்படைத்தன்மை கிடையாது.  தொற்றாளர்களைக் கண்டறிவதில் முதல் கோணலாக சிங்கிள் சோர்ஸ் என ஆரம்பித்தது, ரேபிட் கிட் எண்ணிக்கை, வருகை தேதி, விலை என  அனைத்திலும் ஒளிவு மறைவு, ஊழல்.  ஒருவேளை இதைச் சொதப்பாமல், சாமர்த்தியமாய் நகரத்தி சமாளிக்க  ராதாகிருஷ்ணனின் உதவி தேவையாயிருக்குமோ எனச் சந்தேகம் எனக்கு கிளம்புகிறது.  குறைந்தபட்சம் இந்தச் சந்தேகமாவது பொய்க்க வேண்டுமென்பதே அவா !

இரவு மணி 08 : 00

வரும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்கள், உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு நன்னாள்.  அவர்களுக்கு வானத்திலிருந்து பூமழை பொழிந்து வாழ்த்தவிருக்கிறது நம் விமானப் படை.  கப்பற்படையும் நடுக்கடலில் அணிவகுத்து சங்கூதப் போகிறது.  இந்த ராஜமரியாதையை அவர்கள் பெற்றதும், அவர்கள் வீட்டில் தேனாறு பெருக்கெடுத்து வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாற்றில் கலக்கும் !

ராஜ்நாத் சிங் முப்படைகளுடன் ஆலோசனை என சேதி வந்தவுடன், அடடா ராணுவத்தை வைத்து, அல்லலில் இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும், உள்ளூரில் தவிக்கும் பிற மாநில மக்களையும் மீட்கப் போகிறார்கள், உணவு, ரேஷன் வழங்கலை சீராக்கி பட்டினிச் சாவில்லாமல் ஆக்கப்போகிறார்கள், அவசரகால பிரம்மாண்ட மருத்துவமனைகளை நிர்மாணிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்தால், இதற்குத்தான் ஆலோசனையாம் !

கடைசிவரை அவர்களுக்கு தட்டு ஒலியும், விளக்கு காட்டுவதுமே போதுமென நினைத்து விட்டார்கள் போல ?  தரமான முகக் கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு உடைகளை வழங்குங்கள் போதும், எங்கள் சாவாவது தள்ளிப் போகும் எனக் கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பூத்தூவல் எரிச்சலை இன்னும் அதிகரிக்கச் செய்யப்போகிறது.  மூடர்களால் ஆளப்படும் நாட்டின் சிந்தனை, இதை விஞ்சி ஆரோக்கியமாக இருக்கும் என நம்புவதே அறிவீனம்தான் !!!

தொடரும

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
 2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
 3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
 4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
 5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
 6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
 7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
 8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
 9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
 10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
 11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
 12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
 13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
 14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
 15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
 16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
 17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
 18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
 19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
 20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
 21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
 22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
 23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
 24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
 25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
 26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
 27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
 28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
 29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
 30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
 31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
 32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
 33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
 34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
 35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
 36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
 37. திடீர் தீபாவளி இரவில்......
 38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
 39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
 40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
 41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
 42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
 43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
 44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
 45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
 46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
 47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்