கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 45
08/05/2020, வெள்ளி
காலை மணி 10 : 00
ஒரே நாள்தான். டாஸ்மாக்கில் 150 கோடிகளுக்கும் மேல் விற்பனை. 45 நாட்கள் செலவுக்கு மேல் செலவு செய்தபின்னும், சாமானிய மக்களிடையே இந்தளவு பணம் புழுங்கினால், இதைக் கொண்டே நாட்டின் நிதி நிலைமையை அளக்கும் காவிப் பொருளாதார மேதைகள் என்ன நினைப்பார்கள் ? மக்கள் கார், பைக், ஆட்டோ என செல்வச்செழிப்பாக இருப்பதால்தான் ரோட்டில் ட்ராஃபிக்கே உண்டாகிறதென்றவர்கள் அல்லவா ?
ஆனால், இந்த வணிகத்தின் பின் விளைவு என்னவாக இருந்தது தெரியுமா ? க்ரைம் ரேட் ஒரே நாளில் சர்ர்ர்ரென்று மேலேறி, குற்றச்சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்தன !
இவ்வளவு நாள் கட்டுப்பாட்டுடன் இருந்த கணவன் குடித்து வந்து அடித்து அசிங்கப்படுத்தி விட்டானே என்று ஒரு தாயும், மகளும் தற்கொலை செய்துக் கொண்டார்கள் !
சொத்துத் தகராறில் காத்திருந்த தம்பி, மது அருந்திவிட்டு வந்து அண்ணன், அண்ணியைக் கொன்றான் !
மது குடிக்க காசு தர மறுத்த அம்மாவை மகன் கொன்றான் !
குடித்துவிட்டு தள்ளாடிய வாலிபர்களை முறைத்துப் பார்த்ததற்காக ஆட்களுடன் வந்து, கீழ்ச்சாதி பயகளுக்கு என்னடா முறைப்பு வேண்டிக்கிடக்கு என்று முறைக்காத யாரோ ஓர் அப்பாவி தலித்தை கும்பலாகச் சேர்ந்து சாதிவெறியர்கள் குத்திக் கொன்றிருக்கிறார்கள் !
இதுபோக, கார் கவிழ்ந்தது, மோதியது, பைக்குகள் இடித்துக் கொண்டன, சூறையாடல்கள், பொருட்களை சேதப்படுத்துதல் என ஒன்றுவிடாமல் நிகழ்ந்து விட்டது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பழனிச்சாமி என்று நம்மால் கேட்க முடியாது. அவர் ஆசைப்பட்ட தொகை இலக்கை விஞ்சி கிட்டிவிட்டது, ஆமாம். சென்னை போன்ற நகரங்களில் திறக்காமலேயே இத்தனை கோடிகள் எனில் ??
ஆனால், எதிர்பார்த்ததை விட அதிகமாக, பெண்கள் டாஸ்மாக் திறப்பிற்கெதிராக கிளர்ந்து, வீதிகளுக்கு போராட வந்தது எடப்பாடியே எதிர்பாராத ட்விஸ்ட் !
சாமானிய மக்களுக்கே தெரிந்திருக்கிறது, ஊரடங்கின் அவசியம் பற்றி பிரதமரும், முதல்வரும் நமக்கு அவ்வளவு பாடங்களெடுத்து விட்டு, இன்று அதேகாலத்தில் இப்படி குடிக்க மக்களைத் திரட்டினால் நோய் பெருகாதா ? அழிவு பெருகாதா ? ஒழுக்கம் குலையாதா ? அது ஏன் வெண்ணை திரண்டு வரும்போது பானையை இருவரும் சேர்ந்து உடைக்கிறார்கள் ? என்று கேள்வி மேல் கேட்டு பல டாஸ்மாக் கடைகளை மூடச் செய்தனர் !
அரச விசுவாசம் அதிகமிக்கச் சில காவலர்கள் அந்தப் போராட்டக்காரர்களை பெண்களென்றும் பாராமல் தாக்கியதெல்லாம் நிகழ்ந்தது. படமெடுத்த ஊடகக்காரர்களையும் பகிரங்கமாக அவர்கள் மிரட்டினார்கள். அப்பட்டமாக நிகழ்ந்த நீதிமன்ற நிபந்தனை மீறல்களைச் சுட்டிக்காட்டி, ஊரடங்கில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடவேண்டுமென பலர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள் !
மாலை மணி 03 : 00
புதன்கிழமையென நினைக்கிறேன். பெங்களூருவிலிருந்து ஜார்க்கண்ட் நோக்கி ஒரு சிறப்பு ரயில் புறப்பட இருந்தது. பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், அஸ்ஸாமைச் சார்ந்த புலம்பெயர்ந்த பல வட மாநிலத் தொழிலாளர்களுக்காக அந்த ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1500 பேர் வரை அன்று அதில் கிளம்ப முன்பதிவு செய்து காத்திருந்தனர் !
நீங்கபாட்டுக்கு புறநகர்களில் கட்டிட வேலைகளச் செய்யலாம்ன்னு சொல்லிட்டு, இவங்களையும் ரயில் ஏத்தி அனுப்பிட்டா கொளத்து வேல செய்ய இங்க எங்க ஆளிருக்கு ? போறவனுக அடுத்து எப்ப வருவானுகளோ ? முதல்ல வருவானுகளா – இல்ல வேறெங்கனா போய்டுவானுகளா ? என்று லோக்கல் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை முதலாளிகள், அரசிடம் சொல்லிப் புலம்ப, எடியூரப்பா அரசு என்ன செய்தது தெரியுமா ?
அந்த சிறப்பு ரயிலை எந்தக் காரணமுமில்லாமல் ரத்து செய்ய ஆணையிட்டது. அவர்களை அனுப்ப மாநில அரசின் முழு ஒத்துழைப்பு, நிதி ஆதாரம் நிச்சயம் தேவை என்பதால் ரயில்வே நிர்வாகமும் அரசுக்கு ஒத்தூத, ஓரிரு நாட்களில் தங்களின் தாய் மண்ணை மிதித்து விடுவோம் எனக் கனவிலிருந்த அந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அப்படியே மனமொடிந்து துவண்டு போய்விட்டனர். அடுத்து நிகழ்ந்ததுதான் அனைவரையும் திடுக்கிடச் செய்துவிட்டது. பெங்களூரு ரயிலடி தண்டவாளங்கள் வழியே தங்களின் மாநிலங்கள் நோக்கி அவர்கள் நடக்க ஆரம்பித்து விட்டார்கள் !
இதேபோல, மகராஷ்டிர மாநில ஜால்னாவின் உருக்கு ஆலை ஒன்றில் பணிபுரிந்த 20 க்கும் மேற்பட்ட மத்தியப்பிரதேசத்தைச் சார்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கினால் ஆலை செயல்படாமல் பணியும், உறைவிடமும், உணவுமின்றி வாட, ரயில் ஓடினால் ஊருக்குப் போவது எனக் காத்திருந்தனர்.
திடீரென்று யாரோ ஒருவர் நாளை அதிகாலை அவுரங்காபாத்திலிருந்து ஒரு ரயில் மத்தியப்பிரதேச வழியாக செல்லவிருப்பதாகச் சொல்ல, உடனடியாக கிளம்ப ஆயத்தமாகினர் !
ஜால்னா நல்ல விளைச்சல் பூமி. கோதுமை, கடுகு, துவரை, பாசிப்பயிறு, உளுந்து, சோளம், போன்ற பயிர்களை வருடம் பூராவும் விளைவிக்கும் மண் கொண்டது. அவுரங்காபாத் அதன் மாவட்டம். புராதான நகரம். அஜந்தா, எல்லோரா குகைகள் இங்கிருந்து நடை தூரம். ஜால்னாவிலிருந்து கிளம்ப அவர்களுக்கு எந்தப் போக்குவரத்துச் சாதனங்களும் இல்லை. அவர்கள் கேட்குமளவு வாடகை கொடுக்க இவர்களிடம் பணமுமில்லை. ஐம்பது கிலோ மீட்டர் தூரம்தானே, நடந்தே போய்விடுவோம் என, ஜால்னாவிலிருந்து அவுரங்காபாத் போகும் இருப்புப் பாதை வழியே நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள் !
நள்ளிரவைக் கடந்தும் அவுரங்காபாத் ரயிலடி வந்து சேரவில்லை. வந்தவர்களும் களைப்பில் அப்படி அப்படியே தண்டவாளத்திலேயே சரிய ஆரம்பித்திருக்கிறார்கள். அதான் நாட்டுல எங்கயுமே ரயிலே ஓடலையே என்பது அவர்களின் கணிப்பாக இருந்திருக்கலாம் !
” நான் மட்டும் கொஞ்சம் தள்ளி முட்புதரருகே படுக்கப் போனேன். அது பாதுகாப்பில்லை, பள்ளம், பாம்புகள் வரும், விஷ முள் குத்தும், எனவே எங்களுடன் தண்டவாளத்திலேயே படு என நண்பர் சொன்னார், நான்தான் கேட்கவில்லை ” என ஒருவர் அழுதுகொண்டே சொன்னார் !
இன்னும் ஓரிரு மணி நேரம் மட்டும் கடந்திருந்தால் அனைவரும் விழித்திருப்பார்கள். அசதியும், களைப்பும், கால் வலியும் போயிருந்திருக்கும். ஒரு மணி நேரத்தில் அவுரங்காபாத் ரயிலடியையும் அடைந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த துர்விதி, சரக்கு ரயில் மூலமாக முன்னதிகாலையில் வந்து சேர்ந்தது !
ரயில்வே அமைச்சகம் கூறுகிறது. அங்கே தண்டவாளத்தில் ஏகப்பட்ட பேர் படுத்திருந்ததை எங்கள் ஓட்டுநர் பார்த்துவிட்டார். தொடர்ந்து ஓசை எழுப்பினார். வழக்கமாக சரக்கு ரயில்கள் 25 – 30 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது. ஆனால், நாட்டில் ரயில் போக்குவரத்தே இல்லையென்பதால் வேகம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருந்தது. பிரேக் போட்டு நிறுத்துவதற்குள் யாவும் முடிந்து விட்டது. 16 உடல்கள் நொடிக்குள் கூழ் கூழாய்ச் சிதறின !
மகராஷ்டிர அரசே எங்கள் மக்களை நிர்க்கதியாக்கி அநியாயமாகச் சாகவிட்டு விட்டீர்களே ? எல்லாப் பாவமும் உங்களுக்குத்தான் என சபித்துப் புலம்பினார் சட்டீஸ்கர் அமைச்சரொருவர் !
எந்த முட்டாள்களாவது தண்டவாளத்தில் படுத்துத் தூங்குவார்களா எனக் கேட்கும் முட்டாள்கள், என்றேனும் தண்டவாளங்களுக்கருகில் இருக்கும் சேரிகளுக்குப் போய் பார்த்ததுண்டா ? இந்தியாவில் இன்றும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் தண்டவாளங்களில்தான் படுத்து உறங்குகிறார்கள். அப்புறம், இந்தக் கொளுத்தும் சித்திரை வைகாசி மாத வெய்யில், வேர்வையில் அவர்களால் வீட்டில் உறங்க முடியுமா ?
எனக்குத் தெரிந்து சென்னையில், பேசின் பிரிட்ஜ், கொருக்குப் பேட்டை, பென்சில் பேக்டரி, யானைக்கவுனி பகுதிகளில் இந்தக் கோடையில் மக்கள் தண்டவாளங்களிலும், சென்டர் மீடியனிலும், ப்ளாட்பாரங்களிலும்தான் உறங்குகிறார்கள். அது சட்டவிரோதமானச் செயல்தான், அவர்களை தண்டித்து என்ன ஆகப் போகிறது ? ரயிலே வராத தண்டவாளங்கள் என்கிற அடையாளங்கள் அவர்களுக்குத் தெரியும், அவ்வளவுதான்.
விடிந்தால், காலைக்கடன்களை கழிக்க, சில பிரத்யேகத் தண்டவாளங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள். இன்றளவுமுள்ளதா எனத் தெரியாது. ஆனால், நம்ம முதல்வர் என்ன சொன்னார் ? சென்னையில் நெருக்கமாக வசிக்கும் மக்களில் பலர் பொதுக் கழிப்பிடங்களையே பயன்படுத்துகிறார்கள், அதனால் தொற்றைக் குறைக்க இயலவில்லை, இதுதான் சாட்சி !
எனவே, தயைகூர்ந்து உங்களின் அழுக்கு மூளையை உபயோகித்துக் கேள்விகளை அப்பாவிகளை நோக்கி வீசாமல், அசுர பலம் கொண்ட, அவர்களை இப்படி அலையவிட்டு, நடக்கவிட்டு, தூங்கவிட்டுச் சாகடித்த அரசை நோக்கி கேளுங்கள் !
இரவு மணி 09 : 00
தூங்கப் போகும் போது ஒரு நல்ல சேதி, ஒரு கெட்டச் சேதி. முதலில் நல்ல சேதி. மக்கள் நீதி மய்யம் போட்ட வழக்கு வெற்றி. டாஸ்மாக் நாளை முதல் மூடப்படுகிறது, வாங்க எல்லோரும் கொண்டாடுவோம் என அழைத்திருந்தார் கமல்ஹாசன். அடடா, ஒரு புதுக்கட்சி என்னமா சாதிச்சிருச்சி பாரேன் என்றேன் மனைவியிடம். அடுத்து அந்தக் கெட்டச் சேதி.
ஏம்பா ஏய் கேஸப் போட்டது நாங்க, தீர்ப்பு கொடுக்கப்பட்டதும் எங்களுக்குதேன், நீ ஏன் குறுக்கா மறுக்கா ஓடி வர ? ஓரமாப் போய் விளையாடுங்கய்யா, வந்துட்டீங்க என்று வழக்கறிஞர் ராஜேஷ் முழு தரவுகளுடன் அந்த வழக்கைப் பற்றி விளக்க, ஒளியுமிழ்ந்த டார்ச் லைட் கைதவறி கீழே விழுந்ததில், அதன் பல்ப் சுக்குநூறாகிப் போனது !!!
தொடரும்
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
- ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
- காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
- மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
- ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
- ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
- ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
- விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
- ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
- யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
- கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
- எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
- தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
- பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
- இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
- புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
- குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
- பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
- மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
- தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
- அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
- ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
- இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
- இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
- இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
- செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
- உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
- ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்
- மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
- கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
- யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
- என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
- '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
- ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
- ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
- டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
- திடீர் தீபாவளி இரவில்......
- ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
- விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
- கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்