கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 50

13/05/2020, புதன்

பகல் மணி 10 : 00

வெற்றிகரமான ஐம்பதாவது நாள்.  இப்படி ஒரு நீளமான  லாக்டவுன் நிலையை,  நம் வாழ்நாளில் என்றேனும் சின்னக் கற்பனையாவது பண்ணிப்  பார்த்திருப்போமா ?

ஆனால், 2015 நவம்பர் – டிசம்பர் மாதங்கள் கடுமையான மழைக்காலம்.  வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது.  நவம்பர் ஒன்றாம் தேதியே மழை பிய்த்துக்கொள்ள, இரண்டாம் தேதி சென்னை உட்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்தார்கள் !

மகனை எழுப்பி, இன்னிக்கு உனக்கு ஸ்கூல் லீவாம்டா டிவில சொல்லிட்டாங்கன்னவுன்ன அவன முகத்தில் ஒளிவெள்ளம் பரவுனதப் பார்க்கணுமே ?  அன்று இரவும் மழை விடாமல் பெய்யவே, என்னப்பா நாளைக்கு லீவா இருக்குமோ ?  எதுக்கும் நியூஸ பாருங்கன்னு பார்த்தா, லீவாத்தான் இருந்தது.  அப்போதிலிருந்து மழை பெய்தாலே மாணவர்கள் வானிலைச் செய்திகளைப் பார்க்கப் போய்விடுவார்கள் !

இப்படி விடாமல் பெய்த அந்த மழை, அந்தப் பருவத்தில் பல சாதனைகளைச் செய்தது.  சென்னையில் மட்டுமே 25 செ மீ மழையை சில மணி நேரத்தில் கொட்டிச் சென்ற கதையெல்லாம் நிகழ்ந்தது.  உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கார்கள் கூட பல மணி நேர போக்குவரத்து நெருக்கடியில் மழை & வெள்ளத்தால் சிக்கி, தாமதமாக வீடு சேர்ந்தன !

இதனால் அந்த நவம்பரின் பெரும்பாலான நாட்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலூர் மாவட்டங்களின் அனைத்துப் பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறைகளே கிட்டின.  உச்சகட்டமாக நவம்பர் 30 லிருந்து டிசம்பர் 2 வரை ஒரு நீண்ட அசுரத்தனமான மழை.  ஒரே நாளில் 50 செ.மீ.  ஊற்றித் தள்ளியது.  செம்பரம்பக்கம் வெள்ளம் நொடிக்கு 33000 கன அடி வேகத்தில் சென்னை நோக்கி வந்தது !

வெள்ளம், வெள்ளம் வடிய ஆன நாட்கள், நிவாரணங்களுக்கு உதவ பள்ளிகள் தேவை என்கிற ரீதியில் அந்த டிசம்பர் மாதத்தின் பெரும்பாலான நாட்களும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையிலேயே கழிந்தன.  30 நாட்களிலிருந்து 45 நாட்கள் வரை, ஒரு சில வெள்ளம் வடியாத பகுதிகளிலிருந்த பள்ளிகளுக்கெல்லாம் இரண்டு மாதங்கள் வரை விடுமுறை விடப்பட்டன !

பள்ளிகளுக்கு அவ்வப்போது இதுபோன்ற விடுமுறைகள் வரக்கூடுமென்பதால் அது பெரிதாக வியப்பிலாழ்த்தவில்லை.  ஆனால், வேலை வெட்டி பார்க்காமல் சேமிப்பை மட்டும் வைத்து, வீட்டுக்குள்ளேயே முடங்கித் தின்ன, இப்படி ஒரு பெருந்தொற்று காலம் வரும் என்பதை ஒரு நாளும் கற்பனை செய்ததில்லை.  எவரேனும் சொல்லியிருந்தால் கூட நம்பாமல், அதெல்லாம் சாத்தியமா எனச் சிரித்திருப்போம் !

மாலை மணி 04 : 30

நேற்று பிரதமர் முன்மொழிந்த 20 லட்சம் கோடி பேக்கேஜ் விவரங்களைப் பற்றி வழிமொழிந்துக் கொண்டிருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.  உங்களுக்கு இத்தன ஆயிரம் கோடிகளுக்கு அரிசி கொடுத்தோம், இத்தனை ஆயிரம் கோடிகளுக்கு நிதி அளித்தோம் என தற்பெருமைகளை ஆத்திக் கொண்டிருந்தார் !

தொழில்வளம் நசிந்து விடக்கூடாதென்பதற்காக 3 லட்சம் கோடிகள் வரை வங்கிகள் மூலம் கடன் கொடுக்கப் போகிறோம் என்றார்.  ஒரு சின்ன கேள்வி.  இவர் குறிப்பிடும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் ஓர் ஆண்டுக்கு எவ்வளவு கடன் தொகைகளை தந்துக் கொண்டுள்ளன என ஆராய்ந்தாலே இந்தளவு தொகை வரத்தானே செய்யும் எனும்போது இவர்கள் நிவாரணமாக நமக்குச் செய்வதுதான் என்ன ?  ஒன்றுமேயில்லை !

ஒரு வங்கியின் கிளை மேலாளர்,  உங்களின் நிறுவனம் மீது நன்னம்பிக்கை கொண்டாரெனில் உங்களுடைய வரவு செலவுகளை தொடர்ந்து ஆய்ந்து திருப்தியுற்றாலே உங்களுக்கு ஒரு லட்சம் முதல் பத்து லட்சங்கள் வரை, எந்தக் கொலட்ராலும் இல்லாமலேயே கடனளிக்க உரிமை உண்டு.  வங்கியின் வளர்ச்சியை நாடி உறுதியாகச் செயல்படும் வங்கி அதிகாரிகளால், இப்படி  வெகுவாக வளர்ந்தவர்கள் பல லட்ச சிறு குறு வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் உண்டு என்பதுதான் வரலாறு !

ஆக, இது கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது இந்தியா உலகமயமாக்கலுடன் கலந்ததில் விளைந்த விளைவிது.  எந்தவித சொத்துப் பாதுகாப்புமில்லாமலேயே நல்ல நிறுவனங்களுக்கு கடனுண்டு எனும் போது, இவர்கள் அதிலென்ன இப்போது புதிதாகச் செய்திருக்கிறார்கள் ?

திவாலாகும் நிலையில் நன்மதிப்பை இழந்த நிறுவனங்களுக்கும் இதில் கடன் கிட்டும் என இவர்கள் சொன்னது மட்டுமே புதுமை.  ஓடுகாலிகளுக்கு எந்த வங்கிகளுமே கடன் தராது.  அந்த வண்டி அடுத்து ஓடவே ஓடாது என ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்களெனில் அவர்களுக்கு கருப்பு முத்திரை குத்தி, சிபில் ஸ்கோரைத் தரை தட்ட வைத்திருப்பார்கள்.  மோடி அரசு தன் பேக்கேஜில் அவர்களுக்கும் அள்ளிக் கொடுங்க என்றிருக்கிறது.  யெஸ், இந்த ஒன்றுதான் மிகச் சிறப்பாக கயவர்களுக்கு உதவப் போகிறது !

மற்றபடி, மக்களுக்கு இழப்பீடு தருவோம், GST வரிகளைக் குறைத்து தொழில் முடக்கத்தைப் போக்குவோம், வருமான வரியைக் குறைத்துக் கொள்வோம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளைக் கொண்டே பொருளதவி, பயணக் கட்டணமில்லா போக்குவரத்து உறுதி….. மூச்.  இப்படி எதுவும் அந்தப் பேக்கேஜில் கிடையாது !

இந்த இந்த நிதி ஆதாரங்கள் இதோ, இதை ஆங்காங்கு தருகிறோம் என்றெல்லாம் சொல்லவில்லை.  வெறும் எண்ணிக்கையில் அலங்காரச் சொற்களாக நிரப்பிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.  இதை நம்பி வங்கிகளுக்கு கடன் கேட்டுப் போனால் மேலாளர் காச் மூச்சென நம்மிடம் எரிந்து விழுந்தால் அது அவர் பிழை அல்ல !

அந்திமாலை 06 : 30

எடப்பாடி பழனிச்சாமியும் தன் பங்குக்கு நேரலையில் வருகிறேன் என அடிக்கடி வந்து சாதாரண சேதிகளைச் சொல்லிச் செல்வதால் அவருடைய விளம்பரங்களுக்காக அவரைப் போற்ற விழையும் ஊடகங்கள் கூட, சலிப்போடு அந்தச் சேதிகளைத் தொடர்ந்து சொல்வதில் சுணக்கம் காட்டுகின்றன !

இன்று ஆறு மணிக்கு வந்தவர், கோயம்பேடு வியாபாரிகளை ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்டினார்.  தொற்று பெருக அவர்களுடைய ஒழுங்கீனமும், பிடிவாதமும்தான் காரணம் என ஒரு முதல்வரே சொல்வது அருவருப்பாக இருந்தது !

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை திறக்க, அவர்கள் அவ்வளவு முன்னேற்பாடுகளும், போலிஸ் காவலும் போட முடியுமெனில், கோயம்பேட்டில் அப்படிச் செய்திருக்க முடியாதா ?  அதை வியாபாரிகளோ, பொதுமக்களோ மீறியிருந்தால் ஆதாரங்களுடன் அவர்களை கைது செய்திருக்க முடியாதா ?  ஆதாரமிருந்தால் இதர மக்கள் அந்தக் கைதுகளை ஆதரிக்கத்தானே செய்திருப்பார்கள்.  அதையெல்லாம் விடுத்து, நோய் பரவ அவர்கள்தான் காரணமென்பது எவ்வளவு அநியாயமானது ?  இப்படித்தானே தப்ளிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மீதும் பழி போட்டு, சிங்கிள் சோர்ஸ் எனப் பரப்பி அவமதித்தீர்கள் ???

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  5. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  6. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  7. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  8. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  9. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  10. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்