02/04/2020 வியாழன்
அதிகாலை மணி 05 : 59
வீட்டில் தின்பண்டங்கள் எல்லாம் காலி. கொஞ்சம் மளிகை பொருட்கள், முட்டை வாங்க வேண்டும். துணி துவைத்துக் காயப் போட வேண்டும். புதிய செடிகள் ஊன்ற வளமான மண்ணை பக்குவப்படுத்தி, ரெண்டு மூன்று தொட்டிகளைத் தயார் படுத்த வேண்டும். இதெல்லாம் நேற்றிரவு இடப்பட்ட கட்டளைகள். அதற்காக விரைவில் எழ மொபைலில் அலார்ம் செட் செய்துப் படுத்தேன்.
அது எழுப்பிவிட்டது !
காலை மணி 08 : 00
வாஷிங் மெஷினில் ஊறவைத்திருந்த துணியைப் போட்டு நன்கு அலசும் Mode ல் செட் செய்துவிட்டு, கடைக்கு கிளம்பினேன் !
எட்டு மணி காலை, இயல்பான மக்கள் நடமாட்டத்தை தெருவில் கொண்டுவந்து விடுகிறது. பள்ளி, பீக் ஹவர் இல்லாததால் நெரிசல் குறைவு. சாலையில் வண்டி போக்குவரத்து மிகக் குறைவு. ஆனால் காய்கறிகள், மளிகைகள் வாங்கவாவது வெளியே போய்வருவோம் என அனைவரும் வெளியே பாதுகாப்பு கவசங்களோடு வருகிறார்கள், ஓரளவு சமூக விலகல் விதிகளைக் கடைபிடிக்கிறார்கள் !
எதிர்பார்த்ததைப் போலவே மளிகைப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்திருந்தன. ஆனால் யாருமே அதையெதிர்த்து கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள் அல்லது அஞ்சுகிறார்கள். ஒரே வார்த்தையில் அவர்களுக்கு வேறெந்த பொருட்களுமே கிடையாது என்று முகத்திலறைந்தார் போல கடைக்காரர்களால் எளிதாக விரட்டிவிட முடிகிறது. பொதுவாக கடனில் வாங்கி மாதச் சம்பளம் வந்தவுடன் கடனடைக்கும் பலருக்கு அது இல்லை இது இல்லை என்கிற தட்டிக்கழிப்புகள் அதிகம் நேர்ந்ததாக பலர் சொன்னார்கள் !
உண்மையில் அவர்களுக்குத்தான் மேலும் சிக்கல் அதிகரிக்கவிருக்கிறது. வளமான நம் மாநிலத்திலேயே அதுபோன்ற மக்கள்தான் அதிகம். கடைக்காரர்களைப் பொறுத்தவரை இந்தப் பதினைந்து நாட்கள் செம செம வியாபாரம். கனிவோடு அவர்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து இந்த மக்களை அரவணைக்க வேண்டும் என்பது என்னுடையத் தாழ்மையான வேண்டுகோள் !
காலை மணி 10 : 00
மொட்டை மாடியில் துணிகளை உலர்த்துதல், புதுத் தொட்டிகளுக்கான தயாரிப்புகள் அனைத்தும் முடிந்தவுடன் பெரிய கடமைகளை முடித்துவிட்ட திருப்தி ஏற்பட்டது. ஆனால், ஏப்ரல் வெய்யில் வறுத்தெடுத்துவிட, வியர்வை அருவியாய் உடல் முழுக்கப் பெருகி, சமூகத்தை தலைதெறிக்க என்னிடமிருந்து விலக்கி வைத்தது !
நண்பகல் மணி 12 : 15
வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. வீட்டுக்கடனுக்கான கெடுதேதி இம்மாதம் 15. ரிசர்வ் வங்கி சொல்பேச்சைக் கேட்டு, மூன்று மாதங்களுக்கு தவணை ஏதும் கட்டத்தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள் போல என்று ஆசையாசையாக வாசித்தேன்.
தேன் தடவிய வார்த்தைகள் இப்படி போனது.
” எங்களிடம் வீட்டுக்கடன் வாங்கி மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அன்பான வாடிக்கையாளரே, கடந்த சில நாட்களாக, கோவிட் 19 நோய் தொற்று பீதியால், நாடே பேரிழப்பைக் கண்டிருந்தாலும், நீங்கள் அதில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லையென நம்புகிறோம். இருந்தாலும் நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியின் வேண்டுகோளை ஏற்று, ஒருவேளை நிதி இக்கட்டினால் உங்களுக்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு தவணையைச் செலுத்த முடியாத நிலையிருந்தால்,
‘ ஆமாம் முடியாது ‘ என்கிற சேதியை எங்களுக்கு இந்த நம்பரில், எங்களிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்கள் போனிலிருந்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி உறுதி செய்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அவ்வாறு அனுப்பவில்லை எனில், குறிப்பிட்ட கெடு தேதியில் தவணைத் தொகையை உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என நீங்கள் கூறியதாக அர்த்தப்படுத்திக் கொள்வோம். தவணைகளை நீங்கள் செலுத்த முடியாத காலங்களுக்கு எந்த அபராதத் தொகைகளும் உங்களுக்கு விதிக்கப்படாது. ஆனால் தவணை விடுபட்டக் காலங்களுக்கான வட்டியைக் கணக்கிட்டு பிரத்யேகமாக நீங்கள் அதிகம் செலுத்த வேண்டி வரும்,
நன்றி ”
மார்ச்சுக்கான தவணையை இன்னுமாடா எடுக்காம வச்சிருக்கீங்க ? உங்க கருணைல தீய வைக்க என்று எரிச்சல்தான் கிளம்பியது. பெரும்பாலோர்க்கு இந்தக் குறுஞ்செய்தி மார்ச் 30, 31, ஏப்ரல் 1, 2 தேதிகளில்தான் வந்திருக்கிறது. ஆக, எவருக்கேனும் EMI கெடு தேதி, அந்த நாளில் இருந்திருந்தால் மட்டுமே அது கழிக்கப்பட்டிருக்காது. ஒருவேளை மார்ச் 29 ல் இருந்திருந்தால் கூட, ECS மூலமாக AUTO DEBIT ஆகியிருக்கும். பணம் இல்லாது போயிருந்தால், அபராதம், தனிவட்டி, வங்கிக் கட்டணம் என்று பிடுங்கியெடுத்து விடுவார்கள். பாவம் எத்தனை வாடகை கார்காரர்கள், வாடகை ஆட்டோக்காரர்கள், வாடகை சரக்கு வண்டிக்காரர்கள், சிறு தொழில் கடன் பெற்றோர் பாதிக்கப்பட்டார்களோ ?
வங்கிகளின் இந்தச் சொதப்பலுக்கு யார் காரணமென நினைக்கிறீர்கள் ? சாட்சாத் வெறும் கையில் முழம் போடும் நம்ம நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியின் கவர்னரும்தான் !
இவ்வளவு ஒரு மோசமான சூழலில் எப்படியெப்படி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமெனக் கூடவா தெரியாது ? கோமாளிகள் கூட நாட்டை இதைவிடச் சிறப்பாய் ஆளமுடியுமென்பதுதான் என் கூற்று
இதே வங்கிகளை, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்தக்.கடனை வசூலிக்கும் போது மட்டும் இந்த நிதி அமைச்சகம் எப்படியெல்லாம் கட்டுப்படுத்தும் தெரியுமா ? மேல் வட்டித் தள்ளுபடி, அபராதம் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, அசலில் பாதித் தள்ளுபடி, அப்புறம் அந்த அசலே தள்ளுபடி. இப்ப அந்த பழைய கம்பெனி கடனை Bad Debts ல போட்டு Write off பண்ணிட்டு, புது பெயர்ல ஒரு பத்தாயிரம் கோடிகள கொடு என்பது வரை வளைவார்கள். ஒழுங்காக வட்டியும், அசலும் செலுத்தி, வங்கிகளை வாழ வைக்கும் கூட்டமென்றால்தான் இளக்காரம் !
மாலை மணி 05 : 00
இந்தாங்க மாங்கா தேங்கா வெங்காயம் போட்டுத் தாளிச்ச சுண்டல். கொதிக்க, மணக்க இருந்த அது, அந்த மாலைப் பொழுதை குதூகலப்படுத்தியது. நடுத்தர வர்க்கத்தினரின் கண நேர சொர்க்கத்திற்குப் பின், நீள் நரகம் உடன் விளையுமென்பது எழுதப்பட்ட விதி !
இப்ப ஹவுஸ் ஓனரிடமிருந்து குறுஞ்செய்தி.
” வழக்கம் போல் வாடகையை ஐந்து தேதிக்குள் வங்கியில் NEFT செய்துவிடுமாறும், அதை புது வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கான விவரங்களை இத்துடன் கொடுத்திருக்கிறோம் ” என்றும் நீண்டது !
ஆக, வாடகைக்கு நெருக்காதீர்கள் என மாநில அரசு ச்சும்மா லுல்லுலாயிக்குச் சொல்லியிருக்கிறது. உண்மைதான். இந்த வீட்டு வாடகை சம்பந்தமாக முதல்வர் ஓர் அறிவிப்பைத் தர, தலைமைச் செயலாளர் சண்முகம் முதல்வர் அறிவிப்புக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாத இன்னொரு விளக்கத்தை அளித்திருக்கிறார். அதன்படி வாடகைதாரர்கள் வாடகையை இப்போது தரமுடியாதென்றுவிட்டால், அதை அடுத்தடுத்த மாதங்களில் சேர்த்துப் பெற்றுக் கொள்ளுமாறு just அறிவுரை நல்கியிருக்கிறார் !
ஏன் இந்த மார்ச், ஏப்ரல் மாத வாடகைகளை விட்டுக் கொடுக்க அதிரடியாக உத்தரவிட்டால்தான் என்ன ? மாறாக அவர்களுக்கு வீட்டுவரியில் கொஞ்சம் கழித்துக் கொள்கிறோம் என்று சொன்னால், எத்தனையோ லட்சம் குடும்பங்கள் நிம்மதி பெருமூச்சு விடாதா ? வங்கிகளும், வீட்டு முதலாளிகளும் துளி நட்டம் கூட அடைந்துவிடக் கூடாது, சாமானியர்கள் எக்கேடு கெட்டால் என்ன ?
அதுசரி, தலை எப்படி சிந்திக்குமோ அதற்கேற்பத்தானே வால் ஆடவேண்டும் ??
பின்னிரவு மணி 10 : 30
தமிழகம் கொரோனா நோயாளிகளின் பட்டியலில் இரண்டாமிடத்தை அடைந்துவிட்டது என்கிற ரணகளச் சேதியுடன் இன்றைய நாள் முடிகிறது. டெல்லி மாநாட்டுக்கு போய் வந்தவர்களை சோதிப்பதின் மூலமாகவே, இந்தியாவில் தொற்று பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது பலத்த சந்தேக வினாக்களையும் எழுப்புகிறது !
எது நடக்கிறதோ மதம் பிடித்தவர்கள் ஆளு நாட்டில் அது தப்பாக நடக்கிறது, எது நடக்கவிருக்கிறதோ, அதுவாவது சரியாக நடந்துத் தொலையட்டும் !
தொடரும்…..
நாள் # 9
தேதி 02/04/2020, வியாழக்கிழமை
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
- ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
- காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
- மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
- ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
- ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
- ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
- திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
- விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
- ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
- யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
- கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
- எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
- தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
- பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
- இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
- புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
- குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
- பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
- மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
- தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
- அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
- ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
- இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
- இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
- இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
- செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
- உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
- ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்
- மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
- கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
- யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
- என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
- '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
- ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
- ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
- டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
- திடீர் தீபாவளி இரவில்......
- ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
- விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
- கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்